என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
அந்த மிதியடிகளைப் போட்டுக் கொண்டுதான் எப்போதும் குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் நடப்பாள். எப்போது பார்த்தாலும் அவள் “கலபலா” என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
அவளின் தந்தை வெற்றிலை போடுவதில்லை. திடீரென்று அவருக்கு நரைக்க ஆரம்பித்துவிட்டது. அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. எங்கு என்றில்லாமல் எங்கோ தூரத்தை நோக்கி அவரின் பார்வை இருந்து கொண்டே இருக்கும். நினைத்து அசை போடத்தான் எவ்வளவோ விஷயங்கள் இருக்குமே! பெரிய சாம்ராஜ்ஜியமே கையை விட்டுப்போன மாதிரி எத்தனைச் சம்பவங்கள்!
“அதெல்லாம் படைச்சவனோட, முத்நபியோட, நேர்ச்சக்காரோட விருப்பம்.” அவளின் தந்தை கூறுவார்: “ஒரு நேரம்கூட நான் தொழாம இருந்தது இல்ல. ஒரு நோன்பைக்கூட விட்டது இல்ல...”
பிறகு எப்படி இவ்வாறு நடந்தது? குஞ்ஞுபாத்தும்மாவிற்குப் புரிந்தது. ஒன்றுமே நடக்கவில்லை. இல்லாவிட்டால் சம்பவத்திற்குக் காரணகர்த்தா யார்? தன் தந்தையைக் குற்றம் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. தன் தாயையும் அத்தைமார்களையும் மாமாமார்களையும் குற்றக்காரர்களாக அவள் நினைக்கவில்லை. பரிசுத்த நூலான குர்ஆனைத் தொட்டு கள்ள சாட்சி சொன்ன மனிதர்களையும் எப்படி குற்றக்காரர்கள் என்று சொல்ல முடியும்? சொல்லப்போனால் மனிதர்கள் யாரிடமும் குஞ்ஞுபாத்தும்மா குற்றம் கண்டுபிடிக்க விரும்பவில்லை. உண்மையான குற்றவாளி சைத்தானான இப்லீஸ் என்ற பகைவன்தான்.
குஞ்ஞுபாத்தும்மா எப்போதும் தொழுவாள்:
“ரப்புல் ஆலமீன் தம்புரானே... இனியாவது எங்களை இப்லீஸ் என்ற பகைவன் செய்ற தொல்லைகள்ல இருந்து காப்பாற்று...”
இதைத்தவிர அவள் என்ன செய்ய முடியும்? இப்லீஸ் இப்படியொரு காரியத்தைச் செய்துவிட்டானே!
குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை தன் கைவசம் வைத்து அனுபவித்துக் கொண்டிருந்த தென்னந்தோப்புகளும், நெல் வயல்களும் அவருக்குச் சொந்தமானவை அல்ல. அந்தப் பெரிய வீடும், மற்ற சொத்துகளும் அவளின் தந்தைக்கும் அவரின் ஏழு சகோதரிகளுக்கும் சொந்தமானவை.
“ராத்திரிக்கு ராத்திரியே உம்மாவைக் காளை வண்டியிலே கச்சேரிக்குக் கொண்டு போயி எங்களோட அண்ணன் வட்டன டிமை, எங்களுக்குச் சேரவேண்டிய சொத்தையும் வாங்கிட்டார்” என்று ஏழு அத்தைமார்களும் ஒன்று சேர்ந்து அவளின் தந்தைக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்கள்.
“அது என்னோட உம்மா எனக்கு எழுதித் தந்தது” என்று குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை வாதிட்டார். வழக்கு பல வருடங்கள் நடந்து கொண்டே இருந்தது. இரண்டு பக்கங்களிலும் பணம் ஏராளமாக செலவு செய்யப்பட்டது. பெயர் பெற்ற வக்கீல்கள் வாதாடினர். இரண்டு பக்கத்தைச் சேர்ந்தவர்களும் வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் போய் நேர்ச்சைகள் செய்தார்கள். புண்ணிய ஆத்மாக்களின் கல்லறை களுக்குச் சென்று தொழுதார்கள். பணம் தந்தார்கள். பள்ளிவாசல் களில் கொடி குத்தலும், சந்தனக் குடமும் நடத்தினார்கள். இவை போதாதென்று இரண்டு பக்கங்களிலும் பெரிய மனிதர்கள் பலர் கள்ள சாட்சிகளாக வந்தனர். சொல்லப்போனால் வழக்கு வட்டனடிமைக்கு சாதகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஒரு குழப்பம் வருகிறது.
வட்டனடிமையின் தாய்க்கு பைத்தியம் இருந்தது! நிலையான புத்தியுடன் அவள் அதை எழுதித் தரவில்லை. இருந்தாலும், இறந்து மண்ணுக்குக் கீழே போய்விட்ட அந்தக் கிழவியை அழைத்து திரும்ப கொண்டு வந்து கூண்டில் ஏற்றி விளக்கம் கேட்க முடியுமா? சாட்சிகள் வந்தார்கள்.
“வட்டனடிமையோட அம்மாவுக்கு பைத்தியம்!”
அவர்கள் இவ்வாறு சொன்னார்கள். பைத்தியம் இருந்ததோ இல்லையோ- வட்டனடிமையின் தாய்க்குச் சொந்தமான சொத்தில் அவரின் சகோதரிகளுக்கும் உரிமை இருக்கிறது அல்லவா? பலவித குழப்பமான விஷயங்களைக் கொண்ட அந்த வழக்கைப் பற்றி குஞ்ஞுபாத்தும்மாவிற்கு பெரிய அளவில் ஆர்வம் எதுவும் இல்லை. எல்லாமே சைத்தானான இப்லீஸ் என்ற பகைவனின் வேலை என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும். எது எப்படியோ- வழக்கு அவளின் தந்தைக்கு எதிராக அமைந்துவிட்டது. பள்ளிவாசல் பொறுப்பேற்கும் வழக்கிற்காகவும், இந்த வழக்கிற்கும் செலவழித்த பணம் வகையில் கை வசம் இருந்த நிறைய நிலங்கள் கைவிட்டுப் போயின. அவருக்கு கடைசியில் மீதி இருந்தது வழியோரத்தில் இருந்த அந்தச் சிறு இடம் மட்டுமே.
அந்த இடத்தில் அந்தச் சிறிய வைக்கோல் வேய்ந்த வீடும், நான்கு பாக்கு மரங்களும், ஒன்பது தென்னை மரங்களும், ஒரு கிணறும், ஒரு புளிய மரமும், அதற்கருகில் ஒரு தாமரைக் குளமும் இருந்தன. அதை முதலில் பார்த்தபோது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. தாமரைக் குளத்தை வாழ்க்கை யிலேயே முதல் முறையாக அப்போதுதான் பார்க்கிறாள் அவள். வெள்ளையும் சிவப்புமாக நிறைய பூக்கள் அங்கு மலர்ந்திருந்தன. அவள் அவற்றை எண்ணிப் பார்ப்பாள். ஒரு பக்கத்திலிருந்து அவள் பூக்களை எண்ணிக் கொண்டிருக்கும்போது அவளை தாயோ- தந்தையோ எதற்காகவாவது அழைப்பார்கள். எப்போதும் அவள் அதை எண்ணி முடித்ததே இல்லை. இருந்தாலும் அவளுக்கு அந்தக் குளத்தை மிகவும் பிடித்திருந்தது. அதையும் மீறி அதன் அருகில் ஒரு பயங்கரம்... ஒரு குரூரத் தன்மை... இது வெளியே தெரியவில்லை.
அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அதற்குப் பிறகு அவள் குளிக்கச் செல்வது பக்கத்து நிலத்தில் இருந்த கிணற்றைத் தேடித்தான். அங்கே ஒரு கட்டடம் இருந்தது. அதில் யாரும் வசிக்கவில்லை. குளிக்க வருபவர்கள் சில நேரங்களில் அந்தக் கட்டடத்தில் சிறிது நேரம் இருப்பார்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவள் அங்கே போகமாட்டாள். அந்தக் கிணற்று நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதையொட்டி இருந்த நிலத்தில் நிறைய முல்லைச் செடிகள் இருந்தன. அதில் ஏகப்பட்ட மணமுள்ள வெண்மையான மலர்கள். அவள் அதை குனிந்து பொறுக்கி எடுப்பாள். தலையில் வைப்பது இல்லை. முஸ்லிம் பெண்கள் பூவைத் தலையில் சூடலாமா என்பது அவளுக்குத் தெரியாது. இருந்தாலும், முல்லைப் பூவை அவளுக்குப் பிடித்திருந்தது. வெறுமனே அவள் அங்கே உட்கார்ந்து வாழை நாரில் முல்லைப் பூக்களை மாலையாகக் கட்டிக் கொண்டிருப்பாள். அங்கே உட்கார்ந்திருப்பதில் அவள் சுகம் கண்டாள். ஒருசிறு அசைவுகூட அங்கு இருக்காது. யாருமே வரமாட்டார்கள். முன்பக்கம் ஏறி இறங்கினால் சாலை. அதைத் தாண்டி நெல் வயல்கள். அதையும் தாண்டினால் தூரத்தில் நதி. அங்கே போய் குளிக்க வேண்டும் என்றால், ஒற்றையடிப் பாதை வழியே நடந்துபோக வேண்டும். திருமண வயதில் இருக்கிற ஒரு முஸ்லிம் பெண் எப்படி ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்ல முடியும்? பிறகு... இப்போது குடியிருக்கிற இடத்தில் உள்ள கிணறு என்று எடுத்துக்கொண்டால் அங்கு எந்தவிதமான மறைவிடமும் இல்லை.