என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
அவர்களில் இருபத்தைந்து தூதர்களின் பெயர்கள் மட்டுமே குர் ஆனில் கூறப்பட்டிருக்கிறது. பூமியில் உள்ள எல்லா வகை மக்களைத் தேடியும் ஒவ்வொரு தூதரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு உபதேசம் செய்த அவர்கள்: நுஹ், இப்ராஹிம், தாவுத், மூஸா, ஈஸா, முஹம்மது...
முஹம்மது நபி கடைசி தூதர். இனி நபிகள் யாரும் உண்டாகப் போவதில்லை. முஹம்மது நபியுடன் எல்லாம் முடிந்துவிட்டது.
முஹம்மது நபியின் மூத்த மகளின் பெயர் ஃபாத்திமா. பாத்தும்மா என்றும் ஆட்கள் அழைப்பார்கள். ஃபாத்திமா பீவியை கலீஃபா அலிக்கு திருமணம் செய்து கொடுத்தார் முஹம்மது நபி.
அலி ஒரு மிகப்பெரிய வீரராகவும், சூரராகவும், தைரியசாலியாகவும் இருந்தார். துல்ஃபக்கார் என்ற பெயரில் அழைக்கப்படுகிற ஒரு வாள் அலியிடம் இருந்தது. ரப்புல் ஆலமீன் தம்புரான் கூறியபடி அலி அந்த வாளை கடலில் வீசி எறிந்தார். கடலில் இருந்த எல்லா மீன்களின் கழுத்தையும் அந்த வாள் அறுத்தது. அதனால்தான் மீனின் கழுத்து இரண்டு பக்கங்களிலும் அறுத்ததுபோல் இருப்பதற்கான காரணம். அன்று முதல்தான் இஸ்லாமியர்களுக்கு மீன் “ஹலால்” ஆனது. கலீஃபா அலிக்கு முன்பு பூமியில் இருந்த கடல்களில் செவிகள் உள்ள மீன்கள் இல்லையா என்ன? கடலில் வாளை எறியச் சொன்னது தெய்வம்தான் என்றல்லவா சொல்லப்படுகிறது? தெய்வம் இப்படியெல்லாம் சொல்லுமா? இது ஒரு ஐதீகமாக இருக்கலாம். எது உண்மை, எது பொய்? குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இதெல்லாம் தெரியாது. பள்ளி வாசலில் நடக்கும் முஸ்லியாக்கன்களின் “வஅஸ்” என்ற இரவு பிரசங்கங்களில் அவள் கேட்ட விஷயங்களே இவை. இதெல்லாம் உண்மைதான் என்று அவளின் தாயும் சொன்னாள்.
குஞ்ஞுபாத்தும்மா எண்ணினாள்- தன்னைத் திருமணம் செய்ய வரும் இளைஞன் பெரிய “சுஜாஇ” ஆக இருப்பானோ என்று. அவளுக்கு என்ன தெரியும்? எதுவுமே தெரியாது. யாரிடம் இதைக் கேட்பாள்? இருப்பது ஒன்றே ஒன்றுதான். சொல்வதைக் கேட்பது, கொடுத்ததை ஏற்றுக்கொள்வது- இதுதான் முஸ்லிம் இளம் பெண்ணின் கடமை. இதைக் குஞ்ஞுபாத்தும்மா நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். இது விஷயமாக ரப்புல் ஆலமீன் தம்புரானும் அவரின் ரஸூலான முஹம்மது நபியும் என்ன சொல்லியிருக்கிறார்கள்? அர்த்தம் புரியவில்லை என்றாலும் அவள் குர்ஆன் ஓதியிருக்கிறாள். அவளின் தந்தையும் தாயும் ஓதியிருக்கிறார்கள். அவளின் தாத்தாவான யானை மக்காரும் குர்ஆன் ஓதியிருக்கிறார். என்ன அதில் சொல்லப் பட்டிருக்கிறது என்று அவர்கள் யாருமே இதுவரை புரிந்து கொண்டதில்லை. உலகத்திலுள்ள கடல்களையெல்லாம் மையாக ஆக்கி- குர்ஆனின் அர்த்தத்தை எழுதுவதாக இருந்தால் ஒரு அத்தியாயத்திற்குப் பொருள் எழுதுவதற்கு முன்பே மாமரங்கள் எல்லாம் தீர்ந்து போகும். கடல்கள் அனைத்தும் வற்றிப்போகும். குர் ஆன் ஒரு பரிசுத்தமான நூல். அதில் எல்லாமே இருக்கிறது. அதை யாரும் எழுதவில்லை. ரப்புல் ஆலமீன் தம்புரான் தெய்வ தூதனான ஜிப்ரில் என்ற மலக் வழியாக முஹம்மது நபியிடம் சொன்னதே குர்ஆன். நபிக்கு நாற்பது வயது ஆனபோது, மக்காவிற்கு அருகில் இருந்த மலையில் உள்ள ஹீரா என்ற குகையில் தியானத்தில் இருந்தபோதுதான் முதன்முதலாக ஜிப்ரில் என்ற தெய்வ தூதன் வந்து இதை அவரிடம் கூறுகிறான். படிக்க வேண்டும்- எழுதவும் வாசிக்கவும் படிக்க வேண்டும். அதுதான் குர்ஆனின் தொடக்கம். நபிக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருந்தது. இருந்தாலும் நபியின் தாய் மொழியில்தான் குர்ஆன் இருந்தது. அதாவது அரபு. நபி தன்னைப் பின்பற்றியவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுத்தார். ஒட்டகத்தின் வெண்மையான பாதத்திலும், ஈந்தப் பனையின் ஓலையிலும், தண்டிலும் அவற்றை அவர் எழுதி வைத்தார். அரேபியா என்றொரு நாடு இருக்கிறது என்பதை குஞ்ஞுபாத்தும்மா கேள்விப் பட்டிருக்கிறாள். அங்கே மக்கா, மதீனா என்ற இரண்டு புண்ணிய இடங்கள் இருக்கின்றன. மக்காவில் முஹம்மது நபி பிறந்தார். மரணமடைந்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் மதீனாவில். அங்கே முஹம்மது நபியின் கல்லறை இருக்கிறது. ஹஜ் யாத்திரைக்குச் செல்பவர்கள் அந்தக் கல்லறைக்குக் கட்டாயம் போவார்கள்.
குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தையும் தாயும் ஹஜ் யாத்திரைக்குச் செல்கிறபோது கட்டாயம் மதீனாவிற்கும் போவார்கள். அவர்களுடன் தான் செல்வதற்கு தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் சம்மதிப்பானா என்று எண்ணிப் பார்த்தாள் குஞ்ஞுபாத்தும்மா. இரவிலும் பகலிலும் இதைப் பற்றிய ஒரே சிந்தனைதான் குஞ்ஞபாத்தும்மாவிற்கு. நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்க, ஒருநாள் தன் தந்தை அதிக கோபத்துடன் இருப்பதாக குஞ்ஞுபாத்தும்மா உணர்ந்தாள். அவள் தந்தையின் கண்கள் மிகவும் சிவந்து போயிருந்தன. அவர் சிரித்தார்.
“விளையாடுறாங்க.” அவளின் தந்தை சொன்னார்: “வட்டனடிமைக்கிட்ட விளையாடிப் பாக்குறாங்க. படைத்தவனின், முத் நபியின், நேர்ச்சைக்காரர்களின் உதவிகளோட வட்டனடிமைக் கிட்ட அவங்க பாடம் படிப்பாங்க!”
என்ன விஷயம் என்று அப்போது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு புரியவில்லை. ஒரு புதிய வழக்கு அவளின் தந்தை பெயரில் கொடுக்கப்பட்டது. பள்ளி சம்பந்தப்பட்ட விஷயம் அது. சமுதாயத்தின் தலைவர் ஆகவேண்டும்! இதுதான் பிரச்சினையே. பள்ளியின் நடப்புக் காரியங்களைப் பார்க்க அவளின் தந்தைக்கு அதிகாரமில்லையாம்.
அப்படியென்றால் யாருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது? ஊரில் பெரிய மனிதராக இருப்பவர்தான் எங்கேயும் எப்போதும் பள்ளியின் முக்கிய பொறுப்பிலும் இருப்பார். ஊரில் பெரிய மனிதர் என்றால் அவரிடம் எப்போதும் பணம் இருக்க வேண்டும். குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தைதான் ஊரிலேயே பழமையான பணக்காரர். ஒன்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்கள் ஊரில் இருந்தால், பள்ளி பொறுப்பில் யார் இருப்பது என்பதற்கு போட்டி உண்டாக ஆரம்பிக்கும். அடிதடியும் கொலைகளும்கூட சில வேளைகளில் நடக்கும். பிறகு...? அது வழக்கில் போய் முடியும். நாட்கள் கணக்கில் அது நடக்கும். பள்ளி இருக்குமிடங்களில் எல்லாம் வழக்கும் கட்டாயம் இருக்கும். இவை எல்லாம் இப்லீஸ் என்ற பகைவனின் வேலைகள் என்பதை குஞ்ஞுபாத்தும்மா நன்றாகவே அறிவாள். இப்லீஸ் மட்டும் இல்லாமற் போயிருந்தால் உலகத்தில் எந்தவித குழப்பமும் நடக்காமலே இருந்திருக்கும். யார் இந்த இப்லீஸ் என்ற பகைவன்?
இப்லீஸ் என்ற பகைவனைப் பற்றி முதல் முறையாக குஞ்ஞுபாத்தும்மா கேட்டது பள்ளியில்தான். அன்று அவள் பள்ளி வாசலுக்கு தொழுவதற்காகப் போகவில்லை. முஸ்லிம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து பள்ளிவாசலுக்குப் போய் தொழக்கூடாதே! அன்று அவள் அங்கு சென்றது எப்போதும்போல “வஅஸ்” என்று சொல்லப்படும் இரவு பிரசங்கத்தைக் கேட்பதற்குத்தான். ஒரு முஸல்யார் “வஅஸ்” கூறிக்கொண்டிருந்தார். பள்ளிவாசலின் முன்னால் ஒரு பக்கத்தில் பந்தலொன்று இடப்பட்டிருந்தது. பெண்கள் அமர்வதற்காகத்தான். அங்கே அமர்ந்திருந்தால் எதையும் பார்க்க முடியாது.