என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
அது பொதுவாக ஊரில் சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். பணக்காரர்களின் அல்லது பிரபலம் பெற்றவர்களின் பெயர்களை அவை இரண்டும் இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் ஒன்றும் கிடையாது. அப்படியாவது செல்வமும் மதிப்பும் கிடைக்காதா என்ற எண்ணம்தான் காரணம்.
குஞ்ஞுபாத்தும்மாவிற்கு அது சரியான செயலாகத் தெரியவில்லை. காரணம் என்னவென்றால் உலகத்திலேயே அவள் ஒருத்தி மட்டுமே குஞ்ஞுபாத்தும்மா. அவளின் தந்தை உலகத்திலேயே இருக்கும் ஒரே ஒரு வட்டனடிமை! உலகத்திலேயே இருக்கும் ஒரே ஒரு குஞ்ஞுதாச்சும்மா அவளின் தாய்தான். அவளின் தாத்தாதான் உலகத்திலேயே இருக்கும் ஒரே ஒரு யானை மக்கார்!
விஷயம் இந்த விதத்தில் போய்க்கொண்டிருக்க, அவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தை குஞ்ஞுபாத்தும்மா எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. அவள் இந்த விஷயத்தை அங்கிருந்த எல்லாப் பெண்களும் கேட்கும்படி தன் தாயிடம் சொன்னாள். சொன்னதோடு நிற்காமல் கோபத்துடன், கவலையுடன் கேட்கவும் செய்தாள்:
“நம்ம பேரை அவங்க ஏன் பயன்படுத்தணும்?”
இதைக்கேட்டு அவளின் தாய் சிரித்தாள். இதைப்பற்றி மற்ற பெண்கள் என்ன நினைத்தார்கள் என்பது குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. அவளிள் தாய் சொன்னாள்:
“கல்யாணம் ஆகப்போற பெண்ணாச்சே! கவலைப்பட்டா நல்லதா?” என்று சொன்ன அவளின் தாய், “இங்க பாரு...” என்று கூறியவாறு அவள் கன்னத்தில் இருந்த கறுத்த மச்சத்தைத் தொட்டாள். அப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது. நான்கோ ஐந்தோ வயதுடைய எந்த ஏழை குஞ்ஞுபாத்தும்மாவிற்கும் கன்னத்தில் கறுப்பு மச்சம் இருப்பதாக அவள் இதுவரை கேட்டதில்லை. அவளின் தாய் இதைப்பற்றி மற்ற பெண்களிடம் கேட்க, அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். எப்படி கறுப்பு மச்சம் இல்லாமல் போனது?
அவளின் தாய் கேட்டாள்:
“அதோட நிறம் என்ன?”
கறுத்த மச்சத்தின் நிறம் கறுப்புதான். குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“கறுப்பு...”
அம்மா கேட்டாள்:
“உன் தாத்தா வளர்த்த யானையோட நிறம் என்ன?”
குஞ்ஞுபாத்தும்மா இதுவரை அந்த யானையைப் பார்த்தது இல்லையென்றாலும், அவள் நினைத்துப் பார்த்தாள். சாதாரணமாக யானையின் நிறம் கறுப்புதான். அவள் சொன்னாள்:
“கறுப்பு...”
அவளின் தாய் கேட்டாள்:
“உன்னோட நிறம் என்ன?”
குஞ்ஞுபாத்தும்மா நல்ல வெண்மை நிறம் கொண்டவளாயிற்றே! அவள் சொன்னாள்:
“வெள்ளை!”
அம்மா கேட்டாள்:
“வெளுத்த உன்னோட கன்னத்துல எப்படி கறுப்பு மச்சம் வந்துச்சு?”
குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இப்போது விஷயம் புரிந்துவிட்டது. பழைய வரலாறு, செல்வம், சரித்திரத்தின் வெளிப்பாடு. சர்வ ரகசியங்களும் இதோ திறந்து கிடக்கின்றன. அவளுக்கு மகிழ்ச்சியும் பெருமையுமாக இருந்தது. கிரீடமும், செங்கோலும், சிம்மாசனமும், மகா சாம்ராஜ்ஜியங்களும் இருந்ததைப்போல் அவள் உணர்ந்தாள். அவள் சொன்னாள்:
“எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது!”
அவளின் தாய் மிதியடியைத் தொட்டவாறு சொன்னாள்:
“பெரிய ஒரு ஆண் யானை!”
2
இப்லீஸ் என்ற பகைவன்
குஞ்ஞுபாத்தும்மாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடந்துகொண்டிருந்தன. எல்லா வேலைகளும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்க, அவள் இரண்டு விஷயங்களைக் கேட்க நேர்ந்தது.
தாத்தாவுக்குச் சொந்தமான அந்தப் பெரிய ஆண் யானை ஆறு பேரைக் கொன்றுவிட்டது. அதைக்கேட்டு உண்மையிலேயே அவளுக்கு வருத்தமாக இருந்தது. சொல்லப்போனால் யானைமேல் அவளுக்குக் கோபம் உண்டானது.
“அறிவே இல்லாத யானை!” என்று அவள் கூறவும் செய்தாள். அதற்காக அவளின் கோபம் அதிக நாட்கள் நீடித்து நிற்கவில்லை. யானை கொன்ற அந்த ஆறு பேரும் காஃப்ரிகளான யானைக் காரர்களாக இருந்தார்கள். அது ஒரே ஒரு முஸ்லிமைக்கூட கொல்லவில்லை. இஸ்லாமான யானைப் பாகர்கள் அதற்கு இருந்தார்களா என்ற விஷயம் குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. அவளின் தாய் சொன்னாள்:
“அது எவ்வளவு நல்ல யானை தெரியுமா?”
அவளின் தாத்தாவின் கையில் இருந்து பழமும், சர்க்கரையும் வாங்கி அந்த யானை சாப்பிடும். அவளின் தாய் சொன்னாள்:
“உன்னோட வாப்பா என்னைக் கல்யாணம் பண்ணினதே அந்த யானையோட முதுகுல ஏறித்தான்...”
ஆச்சரியம்! குஞ்ஞுபாத்தும்மா நினைத்தாள். அவளைத் திருமணம் செய்ய இருக்கிற இளைஞன்... ஏதாவதொரு யானைமேல் ஏறித்தான் வருவானோ?
தன்னை யாருக்கு... எதற்காக... கட்டிக்கொடுக்க வேண்டும்? அப்படியெல்லாம் குஞ்ஞுபாத்தும்மா நினைத்துப் பார்க்கவில்லை. அவளைத் திருமணம் செய்து கொடுத்த கையோடு அவளின் தந்தை மக்காவிற்கு ஹஜ் யாத்திரை கிளம்பி விடுவார். அது அரேபியாவில் இருக்கிறது. அங்கே இருக்கிற மக்கா என்ற புண்ணிய இடத்தில்தான் முஹம்மது நபி பிறந்தார். அங்கே அப என்ற புண்ணிய ஆராதனை செய்யக்கூடிய ஆலயம் இருக்கிறது. இந்த உலகத்திலேயே முதன்முதலாகத் தோன்றிய பள்ளி அதுதான். எத்தனையோ வருடங்களாக இருக்கும் பழமையான பள்ளி அது. அதைப் புதுப்பித்துக் கட்டியது இப்ராஹிம் நபிதான். குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை பள்ளி எதையும் கட்டியதில்லை. ஹஜ் யாத்திரைக்குப் போய்விட்டு வந்தபிறகு அவரை “ஹாஜி வட்டனடிமை” என்றோ “வட்டனடிமை ஹாஜி” என்றோ அழைக்கலாம். குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:
“உம்மா, நீங்களும் போறீங்களா?”
அவளின் தாய் கேட்டாள்:
“எங்கே?”
“ஹஜ்ஜிற்கு...”
அவளின் தாய் சொன்னாள்:
“போறேன்!”
அது ஒரு புதிய செய்தியாக இருந்தது. குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“அப்போ நானும் வருவேன்!”
தாய் சிரித்தாள். அவள் சொன்னாள்:
“அதை உன்னைக் கல்யாணம் பண்ணப்போறவன்கிட்ட சொல்லு!”
அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் எதுவும் பேசவில்லை. ஆனால், அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் யார்? இளைஞனா இல்லாவிட்டால் வயதான மனிதரா? கறுப்பாக இருக்கும் ஆளா? இல்லாவிட்டால் வெள்ளையா? எதுவுமே அவளுக்குத் தெரியாது. யாரோ ஒரு ஆண் வரப்போகிறான். அது யார்?
பெண்ணாகப் பிறந்துவிட்டால் யாராவது ஒரு ஆணுக்குத் திருமணம் செய்து கொடுக்கத்தான் செய்வார்கள். முஹம்மது நபியின், அஸ்ஹாபிமாரின் காலம் முதற்கொண்டு இது வழக்கத்தில் இருக்கும் ஒன்று. அவர்களுக்கு முன்பும்கூட இதுதான் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு மனித குலத்தின் ஆரம்பத்தில் ஆதாம் நபி, ஏவாள் நபியைத் திருமணம் செய்தான். ஆதாம் நபிக்கும் ஏவாள் நபிக்கும் தாயும் தந்தையும் இல்லை. அதனால் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தது ரப்புல் ஆலமீன் தம்புரான்தான். ஆதாம் நபியும் ஏவாள் நபியும்தான் இன்று உலகத்தில் இருப்பவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும் முதல் தாயும் தந்தையும். அவர்களுக்கு முன்பு மனிதர்கள் இருந்ததில்லை. ஆதாம் நபியும் ஏவாள் நபியும் எத்தனைக்கோடி வருடங்களுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்தார்கள் போன்ற விஷயங்களெல்லாம் குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. ஆதாம் நபிக்குப் பின்னால் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான நபிகள் தோன்றிவிட்டார்கள்.