என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்ததுபோல் இருக்கிறது. அதாவது- நான் சொல்ல வருவது என்னவென்றால் சிறு பிள்ளையாய் இருந்த காலம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு என்பதைத்தான். அதற்குப் பிறகு வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் நடந்துவிட்டன. அவை எல்லாவற்றையும் ஒரு விளையாட்டு என்பது மாதிரியேதான் இப்போதும் குஞ்ஞு பாத்தும்மா நினைத்துப் பார்க்கிறாள். வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன என்பது சொல்லப்போனால் அவளுக்கே தெரிய வில்லை. உண்மையிலேயே அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். எதுவும் யாரின் பிடியிலும் இல்லை அல்லவா? என்ன செய்வது? தேம்பி அழவேண்டும் போல் தோன்றும். இதயத்தைத் திறந்து குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வேண்டும்போலவும் இருக்கும். அழுவதைவிட சிரிப்பதுதானே நல்லது! அதை எண்ணி எண்ணி அவள் தனக்குத்தானே புன்னகைப்பாள்.
யாரையும் இந்த நிமிடம் வரை குஞ்ஞுபாத்தும்மா வேதனைப் படுத்தியதில்லை. ஒரு எறும்புக்குகூட அவள் கெடுதல் செய்ததில்லை என்று எங்கு வேண்டுமானாலும் சத்தியம் பண்ணி கூறலாம். ரப்புல் ஆலமீன் தம்புரானின் படைப்புகளில் ஒன்றைக்கூட அவள் இதுவரை வெறுத்ததில்லை. சிறு வயதிலிருந்தே எல்லா உயிரினங் கள்மீதும் அவளுக்கு விருப்பம் அதிகம்தான். அவள் முதன்முதலாக அன்பு வைத்தது ஒரு யானை மேல்தான். ஒருமுறைகூட அந்த யானையை அவள் பார்த்ததில்லை. இருந்தாலும் அதன்மீது அவள் அன்பு வைத்தாள். அதைப்பற்றி அவள் கேட்க நேர்ந்தது இப்படித்தான்:
அப்போது அவளுக்கு சுமார் ஏழு வயது இருக்கும். இல்லா விட்டால் எட்டு இருக்கும். அதற்குமேல் நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் அவளுக்கு ஒரு கட்டுப்பாடு போடப்பட்டிருந்தது. கட்டுப்பாடு விதித்தது அவளின் தந்தை அல்ல. தாய். விஷயம் வேறொன்றுமில்லை. முஸ்லிம்களாக இருந்தாலும் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடக் கூடாது- இதுதான் அவளுக்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடு. சுருக்கமாக சொல்லப்போனால் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் அவள் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி கட்டுப்பாடு விதித்ததற்குக் காரணம் என்ன? உலக பிரசித்தி பெற்ற அந்த ரகசியத்தை அவளின் தாய் அவளிடம் கூறினாள்:
“என் தங்கம் குஞ்ஞுபாத்தும்மா... நீ யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாக்கும்! உன்னோட தாத்தாவுக்கு சொந்தமா ஒரு யானை இருந்தது. பெரிய ஒரு ஆண் யானை!”
“என் செல்ல யானையே!” என்று அன்று முதல் தினமும் தனக்குத் தானே, நூறு முறையாவது கூறிக்கொள்ள ஆரம்பித்தாள். யானை யுடன் விளையாடித்தான் குஞ்ஞுபாத்தும்மா வளர்ந்ததே. அதாவது- அந்த யானையைப் பற்றிய நினைவுடன் அவள் அந்த ஓடு வேய்ந்த பெரிய கட்டடத்தின் நடு முற்றத்தில் அமர்ந்து விளையாடுவாள். அவளின் கழுத்திலும், காதிலும், கையிலும், காலிலும் தங்க நகைகள் ஜொலித்துக் கொண்டிருக்கும். எப்போதும் அணிந்திருப்பது பட்டாடைதான். பட்டாலான முண்டும் பட்டாலான சட்டையும் அணிந்திருப்பாள். தலையில் நெசவு செய்த துணியைச் சுற்றியிருப்பாள்.
அவள் வெளுத்தவளாக இருந்தாலும், அவளிடம் கறுப்பாக ஒன்று இருக்கவே செய்தது. யாரிடமும் அதைச் சொல்லவில்லை என்றாலும், அவளுக்கு என்னவோ அது வேதனையைத் தரக்கூடிய ஒன்றாகத்தான் இருந்தது. அவளின் கன்னத்தில் ஒரு சிறிய கறுப்பான மரு இருந்தது.
அது ஒரு அதிர்ஷ்ட மரு என்பதை குஞ்ஞுபாத்தும்மா தெரிந்து கொண்டதே அவளுக்கு பதினான்கு வயது நடக்கும்போதுதான். அப்போது அவளைத் திருமணம் செய்து கொள்ள ஏகப்பட்ட பேர் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னை யார் திருமணம் செய்யப்போவது என்ற விஷயமே அவளுக்குத் தெரியாது. யாராக இருந்தால் என்ன?
“அப்பா... நான் வெத்தலை சாப்பிடுவேன்.” குஞ்ஞுபாத்தும்மா மனதிற்குள் கூறிக்கொண்டாள். திருமணமாகாத ஒரு முஸ்லிம் பெண் வெற்றிலை போடக்கூடாது என்பது விதிமுறை. அல்லாவும் அல்லாவின் தூதரான முஹம்மது நபியும் இது விஷயமாக ஏதாவது கூறியிருக்கிறார்களா என்பதெல்லாம் குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. இருந்தாலும் நாட்டில் நிலவிக்கொண்டிருந்த சில விதிமுறைகளை வைத்து வெற்றிலை போடக்கூடாது- அவ்வளவு தான். பிற ஆண்கள் முன்னாலும் முஸ்லிம் பெண்கள் நடந்துபோகக் கூடாது. சின்ன பெண்ணாக இருந்த சமயத்தில் குஞ்ஞுபாத்தும்மா போயிருக்கிறாள். அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. பிற ஆண்களை அவள் பார்த்திருக்கிறாள் என்பது மட்டுமே உண்மை. அவர்களில் யாரைப் பற்றியும் இப்போது அவள் ஞாபகத் தில் இல்லை. அப்படியே ஞாபகத்தில் ஏதாவது இருந்தாலும், அதுகூட பெண்களைப் பற்றிய நினைவுகள் மட்டுமே.
“அவங்க எல்லாம் காஃப்ரிச்சிகள்.” அவர்களைப் பற்றி குஞ்ஞுபாத்தும்மாவிற்குச் சொல்லத் தெரிந்தது அவ்வளவுதான். உலகத்தில் இருப்பதே இரண்டு வர்க்கங்கள்தாம். இஸ்லாமும் காஃபிரும். பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் இறந்துபோன பிறகு காஃபிரெல்லாம் நரகத்திற்குப் போவார்கள். அவர்கள் அனைவரும் தப்பு செய்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமியர்கள் அவர்களைப் பின்பற்றினால் நரகத்திற்குப் போவதைத் தவிர வேறு வழியே இல்லை. குஞ்ஞுபாத்தும்மா பார்த்த காஃப்ரிச்சிகள் பள்ளிக்கூட ஆசிரியைகளாக இருந்தனர். அவளின் தந்தை அவளை நதியில் குளிப்பாட்ட அழைத்துச் செல்லும் போதுதான் அவர்களை அவள் பார்த்தாள். நகரங்களில் இருந்து வந்திருக்கும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளையும் குஞ்ஞு பாத்தும்மா பார்த்திருக்கிறாள். அவர்கள் யாரிடமும் குஞ்ஞு பாத்தும்மாவிடம் இருந்த அளவிற்குத் தங்க நகைகள் இல்லை. பலரும் தன்னைப் பொறாமை மேலோங்கப் பார்ப்பதையும் அவள் அறியவே செய்தாள். அவளைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பெண் குழந்தை யாருடையது?” என்று கேட்பதையும் அவள் கேட்டிருக் கிறாள். அந்த மாதிரியான நேரங்களில் பயபக்தியுடன், மரியாதை யுடன் யாராவது சொல்வார்கள்:
“வட்டனடிமைக் காக்காவோட மகள்... குஞ்ஞுபாத்தும்மா. யானை மக்காரோட மகளோட மகள்...”
“நம்ம குஞ்ஞுதாச்சும்மாத்தாதோட மகளா?” என்றும் சிலர் சொல்வார்கள்.
“நீ கொஞ்சம் சிரி, குஞ்ஞுபாத்தும்மா...” என்று கூறியவாறு பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியைகள் அவளைச் சுற்றிலும் நின்றிருப்பார்கள். அவர்களை குஞ்ஞுபாத்தும்மாவிற்கும் மிகவும் பிடிக்கும். அவர்கள் காஃப்ரிச்சிகளாக இருந்தாலும், அவர்களிடம் நல்ல வாசனை இருந்தது. அவர்கள் எல்லாரும் ப்ளவுஸ் என்ற சட்டையை அணிந்திருந்தார்கள். அதற்கு உள்ளே பாடீஸ் என்றழைக்கப்படும் மெல்லிய உள்ளாடைகளையும் அணிந்திருந் தார்கள். பிறகு... அவர்கள் தலையில் பூ சூடியிருந்தார்கள். சிலர் குஞ்ஞு பாத்தும்மாவின் தலைமுடியில் பூக்களை அணிவிப்பார்கள். அவர்களில் சிலர் அவளின் கன்னத்தில் இருக்கும் கறுத்த மச்சத்தைக் கிள்ளி எடுப்பதைப்போல நடிப்பார்கள். அதனாலொன்றும் அவர்கள் மேல் அவளுக்கு ஈடுபாடு உண்டாகவில்லை. அவர்கள் அணிந்திருப்பதைப்போல புடவையும், ப்ளவுஸும், அதற்கு உள்ளே மெல்லிய பாடீஸும் தானும் அணிய வேண்டும் என்று ஆசைப் பட்டாள்.