என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
அந்தப் பந்தலில் அமர்ந்திருந்தபோதுதான் குஞ்ஞுபாத்தும்மா சைத்தானான இப்லீஸ் என்ற பகைவனைப் பற்றி கேட்க நேர்ந்தது. முஸ்லிம்களின் பள்ளி வாசலில் நடக்கும் இரவு பிரசங்கங்களின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பெரும்பாலும் தெரிந்துகொள்வது. முஸல்யார் உரத்த குரலில் இப்லீஸைப் பற்றி முழங்கினார். அது முழுவதும் குஞ்ஞுபாத்தும்மாவிற்கு நன்றாகவே ஞாபகத்தில் இருக்கிறது.
இப்லீஸ் என்ற பகைவன் ஆரம்பத்தில் பிரசித்தி பெற்ற ஒரு மலக் ஆக இருந்தான். தேவதூதன். ரப்புல் ஆலமீன் தம்புரானின் திருச் சந்நிதியில், சொர்க்கத்தில் இருக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது.
பூமியும், மற்ற உலகங்களும் படைக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற சம்பவம் அது. கதை இப்படிப் போகிறது. எல்லாவற்றுக்கும் முன்பு அல்லாஹு முஹம்மது நபியின் ஒளிவைப் படைத்தார். இந்த விஷயம் எங்கே இருந்து கிடைத்தது? குர்ஆனில் இது இல்லை. முஸ்லியாக்கன்களிடம் இது பற்றி கேட்டதும் இல்லை. காதால் கேட்டதை நம்புவார்கள். எது எப்படியோ- ஒளிவின் படைப்பிற்குப் பிறகு எத்தனையோ கோடி யுகங்கள் கடந்து போய்விட்டன. பிறகு பூமியையும் நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தார். எல்லா பிரபஞ்சங்களை யும். முஹம்மது நபியின் ஒளிவின் மூன்று துளி வியர்வையில் இருந்து மற்ற உயிரினங்களைப் படைத்தார். அதில் உண்டான முதல் மனிதன்தான் ஆதாம் நபி.
முஹம்மது நபியின் ஒளிவு ஆதாம் நபி வழியாக, கோடிக்கணக்கான தூதர்கள் மூலமாக நுஹ், இப்ராஹிம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்கள் வழியாக அப்துல்லாவின் முதுகைப்போய் அடைந்தது. அப்துல்லா, ஆமீனா ஆகியோரின் மகனாக முஹம்மது பிறந்தார் என்பது ஐதீகம். இந்த ஐதீகம் எப்படி உண்டானது? முஹம்மது நபிக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? பூமியில் மனிதப் பிறவி உண்டான பிறகு, கோடிக்கணக்கான தூதர்கள் உருவாகி இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் முஹம்மது நபி. “நான் உங்களைப்போல ஒரு மனிதன்- அவ்வளவுதான்” என்றே முஹம்மது நபி சொல்லியிருக்கிறார். அவருக்கென்று தனித்துவம் எதுவும் இல்லை. அப்படியென்றால் இந்த ஆதி சிருஷ்டியைப் பற்றிய ஐதீகம்...? இதை யாரிடம் போய் கேட்பது? முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புகிறார்கள். அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித கேள்வியும் இல்லை. என்ன காதில் கேட்டார்களோ, அதை அவர்கள் நம்புகிறார்கள். குஞ்ஞுபாத்தும் மாவும், அவளின் தாயும், தந்தையும் அதை நம்புகிறார்கள்.
ஆதாமைப் படைத்துவிட்டு மற்ற எல்லா உயிரினங்களையும், கூட்டத்தில் இருந்த மலக், ஜின்னா ஆகியோரையும் பார்த்து ஆதாமை வணங்கும்படி சொன்னார். அதில் அந்த மலக் மட்டும் வணங்கவில்லை. காரணம்- மலக்குகளை படைத்தது நெருப்பால். மனிதனான ஆதாமைப் படைத்தது மண்ணைக்கொண்டு.
மண்ணைக்கொண்டு படைக்கப்பட்ட ஆதாமை நெருப்பை வைத்து படைக்கப்பட்ட மலக் வணங்குவது சரியா? இதுதான் அந்த மலக் தன் சார்பாக வாதிட்ட விஷயம். எது எப்படியோ- சரியாக அனுசரித்துப் போகவில்லை என்பதற்காக ரப்புல் ஆலமீன் தம்புரான் அந்த மலக்கைத் தண்டித்தார். சொர்க்கத்தை விட்டு அவன் வெளியேற்றப்பட்டான்.
அவன்தான் சைத்தானான இப்லீஸ்முன் என்ற பகைவன்.
குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இப்லீஸைப் பற்றி வேறு சில விஷயங்களும் தெரியும்.
முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு அவன் ஆதி தாய்- தந்தையர்களான ஆதாம் நபியையும், ஏவாள் நபியையும் பூமியில் தவறான வழியில் போகும்படி முயற்சித்தான். அதற்குப் பிறகு எல்லா உயிரினங்களையும்- முக்கியமாக முஸ்லிம் மக்களை தவறான வழிகளில் கொண்டுபோய் காஃரிகளாக மாற்றி அவர்களை நரகத்திற்குப் போகும்படி செய்து கொண்டிருக்கிறான். அவன் பலவித வேடங்களிலும் திரிவான். எல்லா மொழிகளையும் பேசுவான். எந்த வடிவத்தை வேண்டுமானாலும் அவன் எடுப்பான். அவன் பக்கமும் ஆட்கள் இருக்க வேண்டும். அது மட்டுமே அவன் குறி. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
இந்த விஷயம் குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை சொல்லி அவளுக்குத் தெரியும். முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியான வேஷம் இருக்கிறது அல்லவா? ஆண்களாக இருந்தால் கட்டியிருக்கும் வேஷ்டியை இடது பக்கம் வைத்து கட்ட வேண்டும். தலை மொட்டையடித்து இருக்க வேண்டும். வயலுக்கு வரப்பு இருப்பது மாதிரி தாடியை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மழித்து நிறுத்த வேண்டும். பெண்ணாக இருந்தால் காது குத்தி கம்மல் அணிய வேண்டும். முடியை வாரலாம். ஆனால், வகிடு எடுத்துப் பிரிக்கக் கூடாது.
இதற்கு எதிராக அப்போது ஒரு முஸ்லிம் இளைஞன் செயல்பட்டான். அவன் தலைமுடியை வளர்த்து, க்ராப் வெட்டி இருந்தான். அதை வகிடு எடுத்துப் பிரித்திருந்தான்.
குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை அந்த இளைஞனை அழைத்து நாவிதரைக்கொண்டு முடியை வெட்டச் செய்தார். எதற்காக? முடியைப் படைத்தது யார்? எதற்காக அது படைக்கப்பட்டது? யாரும் இதைக் கேட்கவில்லை. முடியை நீக்கிய பிறகு வட்டனடிமை சொன்னார்:
“வட்டனடிமையோட உயிர் இருக்கும்வரை படைச்சவனின், முத் நபியின் கட்டளையை மீறி இஸ்லாம் கட்டுப்பாட்டை யாராவது மீறி நடந்தா, வட்டனடிமையான நான் நிச்சயம் அதற்குச் சம்மதிக்க மாட்டேன்...”
சொல்ல வந்தது என்னவென்றால் முடியை வளர்த்து க்ராப் வெட்டியிருப்பது இப்லீஸின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. காஃப்ரிகள்! அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவன் தலையின்மீது ஏறி அமர்ந்திருக்கலாம். அதற்காகத்தான் குல்லா. குல்லா இல்லை என்றால், தலையைக் கட்டியிருந்தாலேபோதும். ஒன்றுமே இல்லையென்றாலும், தலையைக் கட்டுவது என்பது மதிப்பான ஒரு தோற்றத்தைத் தரும்; தகுதியைக் காட்டும்!
அதற்காக குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை குல்லா அணிவதோ தலையைத் துணியால் கட்டுவதோ கிடையாது. தொழுகை நடத்தும்போது மட்டும் அவர் தலையைத் துணியால் மறைப்பார். மற்ற நேரங்களில் இப்லீஸ் அவளின் தந்தையின் தலையில் ஏறி இருப்பானா? இப்படிப்பட்ட சந்தேகமெல்லாம் தேவையே இல்லை.
வட்டனடிமைக்கு அருகில் வரும் அளவிற்கு இப்லீஸுக்கு தைரியம் இருக்கிறதா என்ன?
எது எப்படியோ- குஞ்ஞுபாத்தும்மா எப்போதும் தலையை மறைக்கவே செய்வாள். அவளின் தாயும் தலையை மறைப்பாள். தலையை வாரினால்கூட காஃப்ரிச்சிகளைப்போல வகிடு எடுத்து வாருவதில்லை.
முஸ்லியாக்கன்கள் இரவு பிரசங்கங்களில் சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொண்டு எல்லாரும் “நுண்ணிஃபத்தில்” வாழ்ந்து கொண்டிருந்தனர். யாரும் எதைப்பற்றியும் சிந்தித்துப் பார்த்ததில்லை. எழுதவும் தெரியாது. படிக்கவும் தெரியாது. நூல்கள் இருக்கின்றன. அது இருப்பது அரேபிய மொழியில். அரேபிய மொழி தெரிந்தவர்கள்தாம் முஸ்லியாக்கன்மார். அவர்கள் கூறுவதை நம்ப வேண்டும். அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொல்லித் தருவார்கள். அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தை குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை கூறினார். அது பசியைப் பற்றியது. அவர் சொன்னார்: