என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
பெண்களுக்கு அடக்க ஒடுக்கம், நாணம் எதுவும் இல்லாமற் போகும். யாரையும் யாருக்கும் மதிக்கத் தோன்றாது. யாரையும் யாரும் நம்ப மாட்டார்கள். அன்பு என்ற ஒன்றே இல்லாமற் போகும். பகை பெருகும். வன்முறை அதிகரிக்கும். மன்னர்களும் ஆட்சி செய்பவர்களும் கொடூர குணம் கொண்ட மனிதர்களாக இருப்பார்கள். உலகத்தை அடக்கி ஆளும் மோகம் பெருகும். சர்வ நாசசக்தி படைத்த ஆயுதங்களை வைத்து பயங்கரமான போர்கள் நடக்கும்... அப்போதும் உலகம் அழியாது. இதை அழிக்க அல்லாஹுவால் மட்டுமே முடியும். க்யாமம் நெருங்குவதற்குச் சில வருடங்களுக்கு முன்பு மனிதர்களுக்கு மறதி என்ற நோய் உண்டாகும்... அப்போது ஒருநாள் சூரியன் உதித்தவுடன் மனிதர்கள் அவரவர்களின் வேலைகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு நிற்கிறபோது, திடீரென்று ஒரு உரத்த ஒலியை உலகமெங்கிலும் உள்ள மக்கள் கேட்பார்கள்.
“அடடா... இதென்ன ஒலி?” என்று அவர்கள் வியந்து நிற்பார்கள். அதுதான் உலக முடிவைக் காட்டும் “ஸூர்.”
இஸ்ராஃபீல் என்ற மலக்தான் அந்த ஒலியை உண்டாக்குவது. அந்த ஒலி வருவது ஒரு குழலின் மூலமாக. அந்தக் குழலில் உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களின் எண்ணிக்கையையும் அனுசரித்து துவாரங்கள் இருக்கும்... அந்த ஒலியைக் கேட்டதும் மனிதர்கள் ஒவ்வொரு திசைகளில் இருந்தும் வந்து ஒரு இடத்தில் கூடி கலக்கத்துடன் கேட்பார்கள்:
“இந்த ஒலி எங்கேயிருந்து வருது?”
அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இடி இடிப்பதைப் போல பெரிதாகும். உயிரினங்கள் பைத்தியம் பிடித்து அலையத் தொடங்கும். ஒலி மேலும் மேலும் பெரிதாகி ஒலிக்க ஆரம்பிக்கும். மனிதர்களும் மற்ற உயிரினங்களும் ஒவ்வொன்றாகவும் கூட்டம் கூட்டமாகவும் இறந்து கிடப்பார்கள். பூமி குலுங்கும். அது சிதறி வெடிக்கும். கடல்கள் பிளந்து நாட்டுக்குள் நீர் புக ஆரம்பிக்கும். மலைகளும், மலைச்சிகரங்களும் லட்சம் லட்சம் துண்டுகளாகச் சிதறும். கொடுங்காற்று உண்டாகி வீசும். உலகத்தில் நெருப்பு என்ற ஒன்று எங்கும் இல்லாமல் போகும். நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் குளிர்ந்து தகர்ந்து கரியாய் போகும். எல்லாம் அழியும். எல்லா கிரகங்களும் தகர்ந்து பொடிப் பொடியாகும். கடைசியில் ஒரே இருட்டு... ஒரே இருட்டு... இறுதியில் ரப்புல் ஆலமீன் தம்புரான் மட்டுமே இருப்பார். அப்போது அவர் சொல்லுவார்:
“நான் நானென்று அகங்காரத்துடன் சொல்லித் திரிந்த மன்னர்களும் மற்றவர்களும் எங்கே?”
இருட்டு... ஒரே இருட்டு...
இந்த விதத்தில் கோடிக்கணக்கான யுகங்கள் அவர் மட்டுமே இருப்பார்... மீண்டும் பூமியைப் படைப்பார். நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் உண்டாகும். எல்லா ஆத்மாக்களும் மீண்டும் உலகத்திற்குள் கொண்டு வரப்படும். பிறகு தண்டனை, அதிலிருந்து தப்பித்தல்... எல்லாவற்றையும் விளக்கமாக குஞ்ஞுபாத்தும்மா கூறுவாள். அவளுக்கு இந்த விஷயங்களெல்லாம் மனப்பாடமான மாதிரி.
இவ்வாறு கேள்விகள் கேட்பதும் அவளைச் சோதனை பண்ணி பார்ப்பதும் அவளைப் பார்க்க வருவதும்... மகனுக்காக அல்லது சகோதரனுக்காக!
அவளுக்கும் ஒரு தம்பி இருந்திருந்தால்...! ஒருநாள் அவளும் இதே போன்று சில வீடுகளுக்குள் நுழைந்து சில கேள்விகள் கேட்டு “பெரிய மனுஷி” ஆக நடந்து காட்டியிருக்கலாம். ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டுமோ, அவை எல்லாமே குஞ்ஞுபாத்தும்மாவிற்கு தெரியும். முழுமையான ஈடுபாட்டுடன் அவள் குர்ஆன் ஓதுவாள். குர்ஆன் அல்லாஹுவின் வார்த்தைகள்தானே! குர்ஆனைத் தொட வேண்டுமென்றால் உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு ஒன்று குளிக்கவேண்டும். இல்லாவிட்டால் “ஓஸு” எடுக்க வேண்டும். அதற்கு சில அரேபிய வாக்கியங்களைக் கூறியவாறு கைகள், வாய், மூக்கு, முகம், காதுகள், நெற்றி, பாதங்கள்- எல்லாவற்றையும் மூன்று மூன்று முறைகள் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பிறகு... அவளுக்கு நிஸ்கரிக்கத் தெரியும். ஸுபஹ், ளுஹ்ர், அஸர், மக்ரிப், இசா- இப்படி ஐந்து முறை கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு முன்னால் நின்று கொண்டு தொழவேண்டும். இதுதவிர, “இஸ்லாம் காரியம்”, “ஈமான் காரியம்” எல்லாமே அவளுக்குத் தெரியும். அவளை இந்த விஷயத்தில் யாராலும் தோற்கடிக்க முடியாது. பெண் பார்க்க வந்தவர்களில் ஒரு பெண் கேட்டாள்:
“ஆயிஷா பீபின்றது யார்?”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“முத்நபியோட பீடர்.”
முஹம்மது நபியின் மனைவிமார்களில் ஒருவர் ஆயிஷா பீபி.
“ஆயிஷா பீபிக்கு காது குத்தி இருந்துச்சா?”
“குத்தி இருந்துச்சு!”
“காதுல என்ன போட்டிருந்தாங்க?”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“சொர்க்கத்துல இருந்து ஜிப்ரீல் (அனலஸ்ஸலாம்) முத்துச்சரம் கொண்டு வந்து ரஸூல் ஸல்லாஹு அலைஹி வஸல்லாமினோட கையில் கொடுத்து, முத்நபி அதை ஆயிஷா பீபியோட காதுல போட்டார்...”
அவளின் காதுகளில் முத்துச்சரம் எதுவும் அணிந்திருக்கவில்லை. இரண்டு காதுகளிலும் சேர்ந்து இருபத்தொரு தங்க வளையங்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றிலும் தங்கத்தாலான ஆல இலை போல இருபத்தொரு இலைகள். அவை காற்று படும்போது சிறிய ஓசையை எழுப்பி ஆடும்.
அவளின் காதுகளில் தங்கத்தாலான இரண்டு தக்கைகள் உண்டு. அதிலும் இரண்டு பொன்னாலான இலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். கழுத்தில் தங்க மாலை தவிர, தடிமனான ஒரு தங்க நெக்லெஸ் வேறு அழகு செய்யும். அவளின் தாயின் கழுத்தில் இருப்பது போன்ற தாலிக்கொடி இல்லை. அது திருமணத்திற்குப் பிறகே போடப்படும். அவளின் கைகளில் பொன்னாலான வளையல்கள் இருக்கின்றன. விரலில் மோதிரங்கள். அது அவளின் தந்தை அணிந்திருப்பதைப்போல அல்ல. இஸ்லாமியர்களான ஆண்கள் தனி தங்கத்தை உபயோகிக்கக்கூடாது.
குஞ்ஞுபாத்தும்மாவின் விரலில் இருக்கும் மோதிரம் கட்டித் தங்கத்தால் செய்யப்பட்டது. யானைக் கண்ணன் மோதிரம் அது. அவளின் இடுப்பில் பொன்னாலான ஆபரணம் உண்டு. அதில் ஏராளமான வேலைப்பாடுகள் இருக்கின்றன. பிறகு... அவளின் கால்களில் பொன்னாலான சிலம்பு இருக்கிறது. அதன் உட்பகுதி பொந்துபோல இருக்கும். அதற்குள் இருந்துதான் அவள் நடக்கும்போது ஓசை அதிகமாகக் கேட்கும். அதற்குள் என்ன இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. பொன் துகள்களோ, மண் துகள்களோ.... எதுவோ இருக்கின்றன.
அதுதான் நடக்கும்போது ஒருவித ஓசையை உண்டாக்குகிறது.
அவள் வெறுமனே அமர்ந்திருப்பாள். பசிக்காமலே சாப்பிடுவாள். உறக்கம் வராமலே படுத்திருப்பாள்.
அவள் அந்தப் பெரிய கட்டடத்தின் முற்றத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்கும் இரவு நேரங்களில் நின்று கொண்டிருப்பாள். மனதில் என்னவோ ஒரு கவலை அலைமோதிக் கொண்டிருக்கும். அந்தக் கவலைக்குக் காரணம் என்ன? குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. “நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” அவள் சில வேளைகளில் நினைத்துப் பார்ப்பாள். அவளிடம் வேண்டிய தெல்லாம் இருக்கின்றன.