என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
அதனால் ஒருநாள் குஞ்ஞுபாத்தும்மா நினைத்தாள்- தாமரைக் குளத்தில் குளிக்கலாம் என்று. யாரும் பார்க்கமாட்டார்கள். பிற்பகலைத் தாண்டியிருக்கும் நேரம். வெயில் “சுள்” என்று காய்ந்து கொண்டிருந்தது. அவள் ஒரு துண்டை கையில் எடுத்துக்கொண்டு போனாள். சட்டையை அவிழ்த்து புல்லின் மேல் இட்டாள். பிறகு... துண்டைக் கட்டிக் கொண்டு, முண்டை அவிழ்த்து சட்டையின்மேல் போட்டாள்.
மெதுவாக தண்ணீருக்குள் இறங்கினாள். மார்புவரை நீரில் மூழ்கினாள். இரண்டு மூன்று முறை நீருக்குள் மூழ்கிவிட்டு, உடலைத் தேய்க்க ஆரம்பித்தாள். எதேச்சையாக தண்ணீரைப் பார்த்தபோது, சுருங்கிப்போய் நீளமாக இருந்த- தடிமனாக இல்லாத- கறுப்பான ஏதோ ஒன்று அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
“கடவுளே... அட்டை!”
குஞ்ஞுபாத்தும்மா வேகமாக கரைமேல் ஏறினாள். தொடையில் என்னவோ கறுப்பாக... பார்த்தபோது அவள் நடுங்கிவிட்டாள். உடல் “கிடு கிடு”வென்று ஆடியது. ஒரு அட்டை அவளின் தொடையைக் கடித்துக்கொண்டிருந்தது. இரண்டு தலைகளாலும்!
“உம்மா... உப்பா... ஓடி வாங்க. என்னைக் கடிச்சு கொல்லுது! ஓடி வாங்க... எல்லாரும் ஓடிவாங்க” என்று கத்தவேண்டும்போல் இருந்தது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு. ஆனால், அவள் சட்டையை இன்னும் போடாமல் இருந்தாள். முண்டையும் கட்டாமல் இருந்தாள். என்ன செய்வது?
அவள் என்ன செய்வது என்று தெரியாமல் விறைத்துப்போய் நின்றிருந்தாள். அட்டை கொஞ்சம் கொஞ்சமாக வீங்கிக் கொண்டி ருந்தது. அது ஒரு முனையை விட்டு தொங்கிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு என்னவோபோல் இருந்தது. இலேசாக அசைகிறபோது அது நிர்வாணமான தொடையில் உரசியது. ஹோ... அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். அட்டை ஒரு உருண்டையாகக் கீழே விழுந்தபோது, அவள் பயந்து நடுங்கி விட்டாள்.
தொடையில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவள் ஒரு கையால் நீரை எடுத்து ரத்தத்தைக் கழுவினாள்.
அட்டையை என்ன செய்வது?
அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. அதோடு அருவருப்பும். அதைக் கண்டபடி திட்ட வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. என்ன சொல்லித் திட்டுவது?
“இப்லீஸே! என் ரத்தம் முழுவதையும் நீ குடிச்சிட்டே!” என்று சொல்லியவாறு அவள் அதைக் கொல்ல நினைத்தாள். ஆனால், அவளால் அது முடியாது. அட்டையை அவளின் தாயும் தந்தையும் பார்ப்பார்கள். அட்டை ஆணா பெண்ணா என்பது அவளுக்குத் தெரியாது. மக்களும் பார்ப்பார்கள். அல்லாஹ் படைத்தது அந்த அட்டை. குஞ்ஞுபாத்தும்மாவைப் படைத்ததும் அல்லாஹுதான். அப்படியென்றால்... அதைக் கொல்லுவதற்கில்லை. கொல்வது பாவம். ஒரு உயிரைத் துன்புறுத்துவது கூடாது.
எது எப்படியோ... அட்டை போய்க்கொள்ளட்டும். அதன் வீட்டை நோக்கிச் செல்லட்டும். தப்பித்துப் போகட்டும். போ...
“அட்டையே... இனிமேல் நீ யாரையும் கடிச்சு ரத்தத்தைக் குடிக்கக்கூடாது. தெரியுதா? ரத்தத்தைக் குடிச்சியன்னா, நீ செத்துப் போன பிறகு உன்னை கடவுள் நரகத்திற்கு அனுப்பிடுவாரு. பார்த்துக்கோ...” என்று சொன்ன அவள் அடுத்த நிமிடம் ஒரு கம்பை எடுத்து அதற்கு வலி எதுவும் உண்டாகாத வகையில் அதைத் தூக்கி தண்ணீருக்குள் விட்டாள். அது விழுவதற்காகக் காத்திருந்ததைப் போல, “கப்” என்றொரு சத்தத்துடன் பெரிய ஒரு விரால் மீன் அதை விழுங்கி முடித்தது.
குஞ்ஞுபாத்தும்மா பார்த்தபோது- ஒன்றல்ல- இரண்டு மீன்கள் இருந்தன. “புருஷனும் பொண்டாட்டியும்.” அவை மட்டுமல்ல- “குழந்தைகளும்” இருந்தன. சிவப்பு நிறத்தில் சிறு குஞ்சுகள்! நீல வண்ண நீரில் அவை சிவப்பாக மின்னின.
“நீ எதுக்கு இந்த அட்டையைச் சாப்பிட்ட, விரால் மீனே? பாவம் இல்லியா?”
மீனைப்பிடித்து மனிதர்கள் தின்பது பாவமான ஒரு செயலாக குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியவில்லை. அவள் அந்த விரால் மீன் குடும்பத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அன்பை வெளிப் படுத்தாத கண்கள். இரண்டு செவிகள் வழியேயும் நீர் போய்க்கொண்டிருந்தது.
அவற்றில் அந்தத் தடிமனான விரால் மீன் அவளையே பார்த்தது. குஞ்ஞுபாத்தும்மாவே கிடைத்தால்கூட அவளை “கப்” என்று அது விழுங்கவே செய்யும்.
அவள் ஆடைகளை அணிந்து, தலையை வாரி முடித்து தாமரைக் குளத்தையே வெறித்துப் பார்த்தாள்.
பூக்களெல்லாம் முன்பு இருந்தது மாதிரி வெள்ளையும் சிவப்புமாகத்தான்... ஆனால், அதற்குக் கீழே மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கிற அட்டைகளும், அட்டைகளை முழுதாக விழுங்குகிற விரால் மீன்களும் இருக்க- தாமரைப் பூக்கள் எந்தவித அழகும் இல்லாமல் அவளைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரிப்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவள் அப்படி நிற்கிறபோது வருகிறான் தாமரைக் குளத்தில் வசிக்கும் இன்னொருத்தன்!
ஒரு பெரிய தண்ணீர் பாம்புதான்! இல்லாவிட்டால் புளுவன் பாம்பா? அடிப்பாகம் வெண்மை நிறத்தில் இருந்தது. ஒரு தாமரை இலையில் உட்கார்ந்து கொண்டு தலையை நீருக்குள் நீட்டிக் கொண்டிருக்கிறது. திடீரென்று எதையோ அது பிடித்து, தலையை உயர்த்தியது. ஒரு அப்பாவி விரால் மீன்! அது அழவில்லை. கத்தவில்லை. வளைவதும் வாலை அசைப்பதுமாய் இருந்தது. அதை எந்தவித தயக்கமும் இல்லாமல் விழுங்கிவிட்டு அந்த பாம்பு முன்பு மாதிரி அசைவே இல்லாமல் கிடக்கிறது. அடுத்தது எங்கே?
குஞ்ஞுபாத்தும்மா உன்னிப்பாகப் பார்த்தபோது வேறு சிலரும் அவளுக்குத் தெரிந்தார்கள். ஆமை, கரிமீன், தவளை- உயிரினங்கள் எப்படிப் பலவிததிலும் இருக்கின்றன!
தாமரைப் பூக்கள் வெறுமனே சிரித்துக்கொண்டிருந்தன. மொத்தத்தில்- ஒரே நேரத்தில் அழகு, பயங்கரம் இரண்டுமே அந்த குளத்தில் கலந்திருந்தது.
அதற்குப் பிறகு குஞ்ஞுபாத்தும்மா தாமரைக் குளத்தைத் தேடிப் போகிறாள் என்றால், தன்னை விரும்பவும் பயமுறுத்தவும் செய்கிற ஒரு சினேகிதியை நாடிப்போவது மாதிரிதான்.
அவளுக்கு வேலை என்று எதுவும் இல்லை. வேலை எதுவும் செய்யலாம் என்றால், எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. முன்பு இல்லாத சுதந்திரம் அவளுக்கு இருக்கிறது. இந்த சுதந்திரத்தை தேவையில்லாமல் எதற்கு இழக்க வேண்டும்? உணவு தயாரிக்கிறேன் என்று போனால், அவளுக்கு நெருப்பு வைப்பது எப்படி என்பதுகூடத் தெரியாது. அவளின் தாய்க்கும் இதில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது.
அவளின் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்கு ஏதாவது கொண்டு வரவேண்டும். அதை அவர்தான் சமைக்கவும் செய்ய வேண்டும்.
“பொண்ணா பிறந்தா அடுப்ப பத்த வைக்கவாவது தெரிஞ்சிருக்கணும்...” அவளின் தந்தை சொல்லுவார்.
அதைக் கேட்கிறபோது குஞ்ஞுபாத்தும்மா நாணத்தால் சுருங்கிப் போவாள். ஆனால், தந்தை கூறுவது அவள் தாயிடம்தான். தாய் அவளின் பழைய மிதியடிகளைப் போட்டுக் கொண்டு அதன்மேல் ஏறி, “க்டோ, ப்டோ” என்று நடந்தவாறே கூறுவாள்.
“நான் யானைமக்காரோட செல்ல மகளாக்கும்...”
அவளின் தந்தை எதுவுமே கூறமாட்டார்.