
அம்மாவின் உடல்... யாராவது வந்து அவள் தாயின் உடலைக் குளிப்பாட்டி புதிய ஆடையில் “கஃபன்” சுற்றி உடலை வைக்கும் கட்டிலான “சந்தோக்”கில் வைத்து, “லா இல்லலாஹ்! லா இலாஹ இல்லாஹ்” என்று கூட்டமாக நின்று உச்சரித்தவாறு அந்த உடலைச் சுமந்துகொண்டுபோய், பள்ளிவாசலின் உடலடக்கம் செய்யப்படும் இடத்தில் அவளின் தாயின் உடலை அடக்கம் செய்வார்கள். பிறகு...? அவள் தனியாகி விடுவாள். அவளால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. குஞ்ஞுபாத்தும்மாவிற்கு கண்களை அடைத்துக் கொண்டு வந்தது. அவளால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவள் வாய்விட்டு அழுதாள். யா இலாஹி! தெய்வமே!
“வாப்பா... இப்படி பண்ணிட்டீங்களே!”
“மகளே...” அவளின் தந்தை சொன்னார்: “அழாதே. நீ போயி வெளியே உட்காரு...”
குஞ்ஞுபாத்தும்மா வாசலுக்குப் போய் அங்கிருந்த தூணைப் பிடித்து நின்றுகொண்டிருந்தாள். ஓசையே உண்டாக்காமல் அவள் அழுதாள். மனம் முழுமையாக அமைதியை இழந்துவிட்டிருந்தது. அப்படி நின்றுகொண்டிருந்தபோது அவள் “ஹஜ்ரத்துல் முன்தஹா”வைப் பற்றி நினைத்துப் பார்த்தாள்.
அது சொர்க்கத்தில். ஹஜ்ரத்துல் முன்தஹா என்பது அந்தப் பெரிய மரத்தின் பெயர். அந்த மரத்திற்குக் கீழ்ப்பகுதியில் இருந்து மூன்று நதிகள் புறப்படுகின்றன. சொர்க்கத்திலிருந்து புறப்படும் நதிகள்- நைல், டைக்ரீஸ், யுஃப்ரட்டீஸ். இவற்றை யெல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம்? மனதில் எண்ணிப் பார்க்கும்போது சுகமாகவே இருக்கிறது. எல்லா மதங்களிலுமே இத்தகைய கதைகள் இருக்கவே செய்கின்றன. பக்தர்களும் இந்தக் கதைகளை நம்பத்தான் செய்கிறார்கள். இந்தக் கதைகளை எல்லாம் அவள் பள்ளி வாசலில் நடக்கு “வ அஸ்” என்ற இரவுநேர பிரசங்கங் களில் கேட்டு மனதில் தங்க வைத்திருந்தாள். அந்த மரத்தின் இலைகளில் எல்லா உயிரினங்களின் பெயர்களும் இருக்கும். காற்று வீசுகிறபோது, அந்த இலைகளில் சில கீழே விழும். அப்படி விழும் இலைகளில் எழுதப்பட்டிருக்கும் பெயரைக் கொண்ட உயிர் மரணத்தைத் தழுவும். சில இலைகள் அதிக காலம் இருந்து பழுத்துப்போன பிறகுதான் கீழே விழும். சில இலைகள் பச்சை யாக இருக்கும்போதே விழும். சில இலைகள் ஆரம்ப நிலையிலேயே விழுந்துவிடும். தன் தாயின் பெயர் எழுதப் பட்டிருக்கும் இலை... இப்படி அவள் நினைத்துக்கொண்டு நின்றிருந்த நிமிடத்தில் உள்ளேயிருந்த அவளின் தாயின் குரல் கேட்கிறது:
“என்னைப் படைச்ச கடவுளே!” அவளின் தாய்தான். “எனக்குன்னு யாரும் இல்லியா? மைதீனே! (மைதீன் என்பது முஹையதீன் அப்துல் காதர் ஜிலானி. இவர் ஒரு புண்ணிய புருஷர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர் இறந்துவிட்டார். இவரின் கல்லறை பாக்தாத்திலோ எங்கோ இருக்கிறது. இதைப்போல வேறு சிலரும் இருக்கிறார்கள். இவர்களால் ஏதாவது செய்ய முடியுமா? குர் ஆனில் அல்லாஹ் சொல்கிறார்: “நான் யாருடைய சிபாரிசையும் கேட்கக்கூடியவன் அல்ல”) எனக்குன்னு யாருமே இல்ல...”
குஞ்ஞுபாத்தும்மாவின் கவலையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவள் எண்ணினாள்:
காற்று வீசியது- இலை விழவில்லை.
குஞ்ஞுபாத்தும்மா வீட்டுக்குள் வந்தாள். அவளின் தாய் எழுந்து உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும், நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
“உம்மா... சும்மா இருக்கணும்...” என்று சொன்ன குஞ்ஞபாத்தும்மா தன் தாயின் அருகில் சென்றாள்.
அப்போது அவளின் தாய் என்னவோ முணுமுணுத்தாள். அது ஒரு பாட்டுபோல இருந்தது. அவளின் தாய் சொன்னாள்:
“தடவி விடுடி தடவு! மைதீனே தடவு. முத்நபியே தடவு! தடவி விடுடி தடவு!”
கடவுளின் தூதரான முஹம்மது நபிதான் முத்நபி!
எங்கே தடவுவது என்று குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் கேட்டாள்:
“எங்கே உம்மா தடவி விட...?”
அவளின் தாய் மெதுவான குரலில் சொன்னாள்:
“கையில, கால்ல...”
“நீ கொஞ்சம் தள்ளி நில்லு...” அவளின் தந்தை அருகில் சென்று அவளின் தாயைத் தடவினார். அவர் சொன்னார்:
“குஞ்ஞுபாத்தும்மா, நீ போயி வாசல்ல இரு...”
அவள் வாசலுக்குப் போனாள்.
உள்ளே அவர்களின் பேச்சு சத்தம் கேட்டது. இடையில் அவளின் தாய் கேட்டாள்.
“என்னைக் கொன்னுட்டு, வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்தீங்களா?”
அதற்கு தன் தந்தை என்ன பதில் சொன்னார் என்பதை குஞ்ஞுபாத்தும்மா கேட்கவில்லை. அவள் முற்றத்தில் இறங்கி வெறுமனே இங்குமங்கும் நடந்தாள். அப்போது சற்று குர உயர்த்தி தன் தந்தை சொன்னது அவள் காதில் விழுந்தது.
“நாம எல்லாரும் இன்னைக்கு தௌபா செய்யணும்...”
செய்த தப்புக்கு ரப்புல் ஆலமீன் தம்புரானிடம் மன்னிப்பு கேட்பது. இனிமேல் தப்பு செய்யாமல் இருப்பது. அது நல்ல விஷயம்தான். ஆனால், அந்த வீட்டில் தௌபா இல்லை. பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் அது கட்டாயம் இருக்கும். அது இருப்பது அரபியில். அரபி, மலையாளத்தில் முஸ்லிம்கள் எழுதி அச்சடித்து வீட்டில் வைத்திருப்பார்கள். ஏதாவதொரு வீட்டில் இருந்து அவளின் தந்தை அதை வாங்கிக்கொண்டு வருவார்.
குஞ்ஞுபாத்தும்மா வாசலில் நடந்துகொண்டிருந்தபோது அவளின் தாயும் தந்தையும் அங்கு வந்தார்கள். அவளின் தாய் சொன்னாள்:
“எண்ணெய்யும், குழம்பும், இஞ்சியும் வேணும்!”
அவளின் தந்தை அதை மவுனமாகக் கேட்டவாறு குஞ்ஞுபாத்தும்மாவிடம் சொன்னார்:
“மகளே... உம்மாவுக்கு குளிக்கிறதுக்கு நீ கொஞ்சம் வென்னீர் தயார் பண்ணு...”
அவளின் தந்தை வெளியே புறப்பட்டார்.
குஞ்ஞுபாத்தும்மா தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருக்கும் போது, அவளின் தந்தை எங்கிருந்தோ எண்ணெய், குழம்பு, இஞ்சி ஆகியவற்றுடன் வந்தார். அவளின் தாய் அவற்றை உடலில் தேய்த்து குளிக்க ஆரம்பித்தபோது, அவளின் தந்தை புறப்பட்டார்.
குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:
“உம்மா, நான் போய் குளிக்கட்டுமா?”
அம்மா சரி என்றாள். அவள் துண்டையும், குளித்து முடித்தபிறகு அணிவதற்கான ஆடைகளையும், வாளியையும், கயிறையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பினாள்.
அவளின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்பது அப்போது அவளுக்குத் தெரியாது. அவளின் தாய் சொன்னாள்:
“தாமதமாகாம சீக்கிரமா வந்திடு, என்ன?”
அவள் சொன்னாள்:
“இல்ல... நான் சீக்கிரம் வந்திர்றேன்...”
அவள் நடந்தாள். அப்போது...? அவள் நினைத்துப் பார்த்தாள்: காற்று வீசியபோது, இலை விழுந்திருந்தால்...?
அவள் மனதிற்குள் தொழுதாள்:
“ரப்புல் ஆலமீன் தம்புரானே! காற்று வீசினாலும் எங்க யாரோட இலையும் கீழே விழக்கூடாது...!”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook