என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
தாயின் கையில் தண்ணீரை மொண்டு ஊற்றவில்லை என்றால், தாய் சாப்பிடமாட்டாள். அப்படியே உட்கார்ந்திருப்பாள். அவள் தந்தை கோபத்துடன் பார்ப்பார். குஞ்ஞுபாத்தும்மா தாயின் கையில் தண்ணீரை ஊற்றுவாள். தாய் சொல்லுவாள்:
“உங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது. பெரிய ஒரு ஆண் யானை!”
அவளின் தந்தை எதுவுமே பேசமாட்டார். தாயின் பேச்சு அதிகமாக ஒரு எல்லையைத் தாண்டிப் போனால், அவர் மெதுவாகக் கூறுவார்:
“அடியே, உன் நாக்கை அடக்குறியா இல்லியா?”
தாய் கேட்பாள்:
“இல்லேன்னா மேல வந்து என்ன பாய்ஞ்சிடுவீங்களா? நான் யானை மக்காரோட செல்ல மகளாக்கும். எனக்கு லையினஸ் உண்டு!”
அவளின் தாய்க்கு என்ன பேசுவதற்கும் லைசன்ஸ் இருக்கிறது!
“என் பொன்னு அம்மாவே... கொஞ்சம் சும்மா இருக்கக்கூடாதா?” குஞ்ஞபாத்தும்மா சொல்லுவாள்.
“என்னைப் படைச்ச கடவுளே... நீதான் எல்லாத்துக்கும் காரணம்.” அவளின் தாய் கூறுவாள்.
“அப்படியானால் அப்பிராணி இப்லீஸ்ல குற்றவாளி!”
குஞ்ஞுபாத்தும்மா நினைத்துப் பார்த்து மனதிற்குள் புன்னகைப்பாள். இருந்தாலும், அவளால் அதிக நாட்கள் அப்படி புன்னகைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளின் மனதிற்குள் பயம் நுழைய ஆரம்பித்தது. தன் தந்தை எப்போது தாயைக் கொல்லுவார்?
5
காற்று வீசியது; இலை விழவில்லை
மனிதர்கள் இப்படி ஆவதற்கான காரணம் என்ன? எவ்வளவு நேரம் உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தாலும் குஞ்ஞுபாத்தும்மா விற்கு புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் இது. ஒரு குறிப்பிட்ட வயது வந்தபிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்க்கக்கூட பிரியப்படாததற்கான காரணம் என்ன? உலகத்தில் உள்ள எல்லா தாய்- தந்தைகளும் இப்படித்தானா? ஒருவரை யொருவர் கடித்துக் கிழித்து விடுவதைப்போல் இப்படி ஏன் இவர்கள் இருக்கிறார்கள்? ஒருவருக்கொருவர் இனிமையான வார்த்தைகள் இல்லை. தேவையில்லாமல் கடுமையான வார்தை களைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தைகளில் வன்முறை தான் கலந்திருக்கிறது. அவர்களுக்கிடையே சிறிதளவில்கூட அன்போ, பாசமோ கிடையாது. அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சில வேளைகளில் குஞ்ஞு பாத்தும்மாவிற்கு சிரிப்பு வரும். ஆனால், அவள் சிரிப்பதில்லை. வாழ்க்கை, ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறபோது சீராக இல்லை. தாறுமாறான பாதைகளில் போய்க்கொண்டிருக்கிறது. அது இப்படி ஆனதற்கான மூல காரணம் யார்? இப்படி அது போய்க் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? இதை யாரிடம் கேட்பது? அந்தந்த நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை. அணியும் ஆடைகள் விஷயத்தை எடுத்துக்கொண்டால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அணிந்திருக்கும் ஆடையையே மீண்டும் மீண்டும் அணிந்து... அதையே திரும்பத் திரும்ப சுத்தமாக்கி... எல்லாமே வண்ணம்போய்... இதற்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்லுவது?
இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்பதுதான். யாராலுமே கவனிக்கப் படாத மூன்று உயிர்கள்! நல்ல வசதியுடன் இருந்த காலத்தில் அவர் களைச் சுற்றி எத்தனை பேர் இருந்தார்கள்! ஊரில் இருந்த எல்லா ருமே ஏதாவதொரு விதத்தில் தாங்கள் இவர்களுக்குச் சொந்தம் என்பது மாதிரி பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லித் திரிவார்கள்.
“நான் உனக்கு மாமா” என்றோ “நான் உனக்கு சித்தப்பா” என்றோ சிலர் வந்து சொல்வார்கள்.
இப்போது அப்படிக் கூறுவதற்கு யாருமே இல்லை. இந்த அகன்ற பிரபஞ்சத்தில், அவர்கள் மூன்று பேர் மட்டும் தனி. ஆனால், இந்த மூன்று பேர்களுக்குள்... குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தையை தாய்க்கு பார்ப்பதற்கே பிடிக்கவில்லை. தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுகிறாள். அதுவும் மெதுவான குரலில் அல்ல. தெருவில் போவோர் வருவோர் எல்லாருக்கும் கேட்கும்படிதான். ஊரில் உள்ள அத்தனை பேரும் இதைக் கேட்டு கிண்டல் பண்ணுவார்கள். சிரிப்பார்கள். என்ன செய்வது? குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தைக்கு ஏதாவது புதிய பட்டப்பெயர் கண்டுபிடிப்பதிலேயே அவள் தாயின் மனம் எப்போதும் ஈடுபட்டிருக்கும். அப்படித்தான் “செம்மீன் அடிமை” என்றொரு பட்டப் பெயரை அவருக்கு அவளின் தாய் வைத்தாள்.
அவளின் தந்தை எந்தக் காலத்திலும் செம்மீன் வியாபாரம் செய்தது இல்லை. அதிகமாகப் பணம் முதலீடு தேவைப்படாத தொழில்களாகப் பார்த்துதான் அவர் எப்போதும் செய்வார். நடுவில் ஒருமுறை கருவாடு வியாபாரம் பண்ணிப் பார்த்தார். அந்த வியாபாரம் அவளின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. கருவாடு வியாபாரம் பண்ணும் அவரின் உடல்மேல் எப்போது பார்த்தாலும் பயங்கர நாற்றம் இருக்கும். அதோடு நிற்காமல் கருவாடு இருக்கும் பகுதி முழுவதும் அந்த நாற்றத்தின் ஆக்கிரமிப்பு இருக்கும். பறவை, மீன், சுறா, ஐலை, சாளை என்ற மத்தி- இப்படிப் பல கருவாடுகள். அவற்றை ஒரு கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு போய் அவளின் தந்தை எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு சந்தையில் வைத்து விற்பார். ஊரில் பெரிய மனிதராக இருந்த வட்டனடிமை. கருவாடு விற்கும்போதுகூட, அவரின் நடவடிக்கையில் அந்த ராஜ களை தெரியவே செய்யும். வியாபாரம் முடிந்து திரும்பி வருகிறபோது, அரிசியும் குழம்பு வைப்பதற்கு மீனும் வாங்கிக் கொண்டு வருவார். முன்பு குஞ்ஞுபாத்தும்மா மீன் குழம்பு என்றால் விரும்பி சாப்பிடுவாள். மாமிசம் என்றாலும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். காலப்போக்கில் அவை இரண்டையும் சாப்பிடுவதை அவள் விட்டே விட்டாள். இப்போது அவள் சாப்பிடுவது காய்கறியை மட்டுமே.
தாமரைக் குளத்தில் விரால் அட்டையை விழுங்குவதைப் பார்த்த பிறகுதான் அவள் மீன் சாப்பிடுவதையே நிறுத்தினாள். அவளின் தந்தை மீன் வியாபாரத்தை நிறுத்திவிட்டு ஆட்டு மாமிசம் விற்பனை செய்ய ஆரம்பித்த பிறகு, அவள் அதைச் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டாள். அறுத்து தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆட்டுத் தலையின் மூடாத அந்தக் கண்கள்... அதில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அதைப் பார்க்கும்போது மனதில் இனம்புரியாத ஒரு சோகம் உண்டாகும். மீனோ மாமிசமோ- எதுவாக இருந்தாலும் அவற்றை வேக வைத்து சமையல் பண்ணி கொடுப்பதில் அவளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், அவள் உப்பு பார்க்கமாட்டாள் என்பதுதான் விஷயமே. ஒரு குறிப்பிட்ட அளவை மனதில் வைத்துக்கொண்டு அவள் அவற்றைச் சமைத்துத்தர நாளடைவில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டாள். அவளின் தந்தை பொழுது புலர்ந்ததும் எழுந்து பல் தேய்த்து காலை நேர தொழுகையான சுபஹ் முடிக்கிறபோது, அவள் ஒரு பாத்திரம் நிறைய பால் கலக்காத தேநீர் தயார் பண்ணி வைத்திருப்பாள். அவர் அதைக் குடித்து முடித்து “பிஸ்மீம்” சொல்லி கடவுளை மனதிற்குள் நினைத்தவாறே உடலை நேராக நிமிர்த்திக்கொண்டு நடந்துபோவார்.