என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
“அரேபியா, துர்க்கி, இரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, ஆப்ரிக்கா, மதராஸ், ஜெர்மனி, அமெரிக்கா, சிங்கப்பூர், டெல்லி, கராச்சி, லாகூர், மைசூர், இங்க்லாண்ட், கெய்ரோ, ஆஸ்திரேலியா, கல்கத்தா, சிலோன்.. இப்படி உலகத்துல இருக்குற எவ்வளவோ இடங்கள்ல இருந்து கேட்கலாம்...”
குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இப்போதுகூட ரேடியோவைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும், அந்தப் பெண் கொஞ்சம் வசதியானவள் என்பது தெரிந்துவிட்டது. அவள் ஆயிஷாவைப் பார்த்துக்கேட்டாள்:
“உங்க வீட்ல புளிய மரம் இருக்கா?”
“இல்ல...”
“அப்படியா? புளியம்பழம் எவ்வளவு முக்கியம்?” குஞ்ஞபாத்தும்மா கேட்டாள்:
“கள்ள புத்தூஸே... உங்க வீட்ல யானை இருந்துச்சா?”
“இல்ல...”
குஞ்ஞபாத்தும்மா பந்தாவான குரலில் சொன்னாள்:
“எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்துச்சு... பெரிய ஒரு ஆண் யானை!”
ஆயிஷா ஆர்வத்துடன் சொன்னாள்:
“எங்க தாத்தாக்கிட்ட ஒரு மாட்டு வண்டி இருந்துச்சு. அவர் அதுல கூலிக்கு சாமான்களை ஏற்றிக்கிட்டு போயி கடைகள்லயும் வீடுகள்லயும் போடுவாரு. அதுல கிடைக்கிற பணத்தை வச்சு எங்க வாப்பாவை அவர் எம்.ஏ. வரை படிக்க வச்சாரு. ஆமா... அந்தப் பெரிய ஆண் யானை இப்போ எங்கே இருக்கு?”
“அது மரணமடைஞ்சிடுச்சு...” அது முஸ்லிம் யானையாக இருந்ததால் மரணமடைந்துவிட்டது என்றோ மவுத்தாகிவிட்டது என்றோதான் கூற வேண்டும். முஸ்லிம் இறக்கும்போது
“மரணமடைந்துவிட்டார்” என்றும் காஃபிர் இறக்கும்போது, “செத்துவிட்டார்” என்றும் சொல்ல வேண்டும்.
ஆயிஷா கேட்டாள்:
“அது செத்துப் போச்சா?”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“மரணமடைஞ்சிடுச்சு. அது நாலு காஃப்ரிகளைக் கொன்னுச்சு...”
“வெறும் நாலு பேரையா? முஸ்லிம்கள்ல எவ்வளவு பேரைக் கொன்னுச்சு?”
“ஒரு ஆளைக்கூடக் கொல்லல. அது ஒரு முஸ்லிம் யானை...”
“நீ சொல்றது உண்மையா இருந்தா...” ஆயிஷா சிரித்தவாறே கூறினாள்: “சொர்க்கத்துல அந்த ஆண் யானைக்கு கல், பொன், முத்து, மாணிக்கத்தாலான நாலு வீடுகள் கிடைக்கணுமே!”
அவள் சொல்ல வருவது என்னவென்றால் இந்த உலகத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு மேல் உலகத்தில் பல சுக சௌகரியங்கள் கிடைக்கும். ஐதீகத்தில் கூறப்பட்டிருப்பதன்படி பார்த்தால் காஃப்ரியைக் கொல்வதுகூட ஒரு புண்ணியச் செயலே!
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்.
“நாங்க ரொம்பவும் வசதியா இருந்தோம்.”
“அதெல்லாம் எங்கே போச்சு?”
“போச்சு...” அவ்வளவுதான் அவளால் சொல்ல முடிந்தது.
“உங்க வாப்பாவுக்கு என்ன வேலை?”
“வியாபாரம்.”
“என்ன வியாபாரம்?”
“நினைக்கிறது எல்லாம்தான்...”
“வாப்பாவோட பேரு?”
“வட்டனடிமை!”
“உம்மாவோட பேரு?”
“குஞ்ஞுதாச்சும்மா...”
ஆயிஷா சொன்னாள்:
“என்னோட வாப்பா காலேஜ்ல பேராசிரியர். பேரு ஸைனுல் ஆபிதீன். உம்மாவோட பேரு ஹாஜறா பீவி. அண்ணனோட பேரு நிஸார் அஹமது. அவர் ஒரு கவிஞர். அவர் நிறைய கவிதைகள் எழுதியிருக்காரு. பூக்கள், காய்கள், கிழங்குகள், மரங்கள்- எல்லாவற்றைப் பற்றியும் அவர் கவிதைகள் எழுதுவார்!”
இப்படி ஆயிஷாவிற்கு நிஸார் அஹமதுவைப் பற்றி ஏராளமாக சொல்வதற்கு இருந்தன. அவள் தொடர்ந்தாள்: “பிரபஞ்சங்கûயும், அதில் இந்த பூமியையும், பூமியில் தற்போது இருப்பவைகளையும், இருக்கப் போவதையும்- எல்லாவற்றையும் அவர் ரொம்பவும் விரும்புவார். சொல்லப்போனால் மிகவும் நல்ல- அதே நேரத்துல பயங்கரமான ஒரு மனிதரும்கூட அவர்...”
குஞ்ஞுபாத்தும்மாவிற்கு அவள் கூறியதில் அப்படியொன்றும் ஆர்வம் எதுவும் உண்டாகவில்லை. குறிப்பாக அந்தப் பெயர்கள்... ஸைனுல் ஆபிதீன், நிஸார் அஹமது... இந்தப் பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக அவளுக்குத் தோன்றவில்லை. மக்கார், அடிமை, அந்து, கொச்சுபரோ, குட்டி, கொச்சுண்ணி, குட்டியாலி, பாவா குஞ்ஞாலு, பக்கரு, குஞ்ஞு, மைதின், அவரான், பரீத், பரீக்குட்டி, பாவக்கண்ணு, ஸைதாலி, சேக்கு, மயிது, பீரான், குஞ்ஞிகொச்சு, அத்தில்- இப்படிப் பல பெயர்களை அவள் கேள்விபட்டிருக்கிறாள். ஆனால், நிஸார் அஹமது..! சிவந்துபோய் கூர்மையாகப் பார்க்கும் கண்களையும் நன்றாக முறுக்கிவிடப்பட்ட மீசையையும், நெஞ்சு முழுக்க கறுப்பு முடிகளையும், தடிமனான தேகத்தையும், நல்ல உயரத்தையும் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அவள் கற்பனை செய்து பார்த்தாள். அவள் கேட்டாள்:
“உன் அண்ணன் எப்போ இங்கே வருவாரு?”
“நாளைக்கு இல்லாட்டி நாளை மறுநாள்... அது எப்படியோ, உன் உம்மாக்கிட்ட இப்பவே சொல்லி வச்சிடு... எங்க முன்னாடி வந்து உட்கார்ந்து மலம் இருக்கக்கூடாதுன்னு, நாற்றம் அடிக்கும்ல? அண்ணன் வந்துட்டா, பிறகு பெரிய சண்டையே வந்திடும்...”
குஞ்ஞுபாத்தும்மா அவள் சொன்னதைக் கேட்டு நடுங்கினாள். தன் தாயிடம் அவள் எப்படி இதைச் சொல்லுவாள்? எப்படி சொல்லாமல் இருப்பாள்? அவள் தன் மனதிற்குள் தொழுதாள். “கடவுளே... துட்டாப்பியோட அண்ணன் வரக்கூடாது. வந்தா பெரிய சண்டை வந்திடும்.”
அந்த பயங்கர மனிதன்!
ஆயிஷா கேட்டாள்:
“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“எனக்கு இன்னும் ஆகல. துட்டாப்பி, உனக்கு ஆயிடுச்சா?”
“கள்ள புத்தூஸே.. லுட்டாப்பின்னு சொல்லு. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. பி.ஏ. பாஸான பிறகுதான் கல்யாணம். என்னோட அண்ணனுக்கு கல்யாணமான பின்னாடிதான் எனக்குக் கல்யாணம். அவருக்குப் பொருத்தமா இருக்குற மாதிரி ஒரு பொண்ணு இதுவரை கிடைக்கல. எத்தனையோ சம்பந்தம் வந்துச்சு. நான்தான் சொன்னேன்ல- அவரு ஒரு சுத்தம் பாக்குற ஆளுன்னு. பொண்ணு மட்டுமல்ல- வீடும் ரொம்ப சுத்தமா இருக்கணும்னு நினைக்கக்கூடிய ஆளு அவர். அவருக்காகப் பேசிக்கிட்டு இருந்த பி.ஏ. படிச்ச ஒரு பொண்ணோட வீட்டுக்கு ஒரு முறை அவர் போயிருந்தாரு. அவருக்குக் குடிக்க தண்ணி தந்த டம்ளர்ல மீன் நாற்றம் வந்திருக்கு. அதனால அந்தத் திருமண பந்தமே நடக்காமப் போச்சு!”
குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:
“துட்டாப்பி, உன்னோட அண்ணன் மீன் சாப்பிட மாட்டாரா?”
“அவர் பொதுவா காய்கறி சாப்பிடுற ஆளுதான். சில நேரங்கள்ல மாமிசமோ மீனோ சாப்பிடுறது உண்டு. அப்படிச் சாப்பிட்டா, கையை சோப்பு போட்டு கழுவுவாரு. அந்த வீச்சம் வீட்ல இருக்கக் கூடாதுன்றதுல ரொம்பவும் பிடிவாதமா இருப்பாரு. நான்தான் சொன்னேன்ல- அவர் எல்லா விஷயங்கள்லயும் சுத்தம் பார்க்கக்கூடிய ஆளுன்னு. முஸ்லிம் என்றாலே சுத்தம் என்றும் அர்த்தம் இருக்குன்னு அவர் அடிக்கடி சொல்வாரு. அதோட நின்னா பரவாயில்ல... தான் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு இப்படித்தான் இருக்கணும்னு சில எண்ணங்கள் அவர்கிட்ட இருக்கு. அவள் சவரம் செய்ய தெரிஞ்சவளா இருக்கணும். நடனம் ஆடத் தெரிஞ்சிருக்கணும். துணி துவைக்க தெரிஞ்சிருக்கணும். இசை, ஓவியம், இலக்கியம், குழந்தை வளர்ப்பு- இவை எல்லாவற்றையும் அவள் தெரிஞ்சிருக்கணும்.