என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 22
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
“கற்பனை பண்ணிக்கிட்டேன்!”
“சரி... இப்போ கேளு...” அவள் பாடினாள்:
“ஹோ... ஹோ... ஹோ...
குத்தினி ஹாலிட்ட வித்தாப்போ
சஞ்சினி பாலிக்க லுட்டாபி
ஹாலித்த மாணிக்க லிஞ்ஞல்லோ
சங்கர பாஹ்ன துலிபி
ஹுஞ்சினி ஹீலத்த ஹுத்தாலோ
ஃபானத்த லாக்கிடி ஜிம்பாலோ
ஹா... ஹா... ஹோ...!”
தொடர்ந்து ஆயிஷா சொன்னாள்:
“நான் இப்போ சொல்வது எல்லாம் சரின்னு நான் சொல்லல. சில வார்த்தைகள் விட்டுப் போயிருக்குன்னு எனக்குள்ளேயே ஒரு சந்தேகம் இருக்கு. இதுல ஏதாவது விட்டுப் போயிருந்தா, அவர் நம்மளை உதைப்பாரு!”
குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:
“துட்டாப்பி, உன் அண்ணனுக்கு இது எப்படித் தெரியும்?”
“அவருக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்னு கேக்குறியா? சரிதான்... அவர் இங்கே வந்த உடனே என்னைக் கூப்பிடுவாரு: “லுட்டாப்பி! இங்கே வா. இந்தக் கோட்டுக்கு உள்ளே நில்லு!” அப்படின்னுவாரு. நான் அவர் வரைஞ்ச கோட்டுக்கு உள்ளே நிற்பேன். அப்போ அண்ணன் சொல்வாரு: “பாடு...” அவர் சொன்னபடி நான் பாடலைன்னா, என்னைத் துண்டு துண்டா போட்டுடுவாரு. ரெண்டாயிரம் துண்டா அறுத்து ரெண்டாயிரம் கிளிகளுக்கு இரையா போட்டுவாரு. அதற்குப் பிறகு அந்தக் கிளிகளை எல்லாம் அண்ணன் வெட்டிக் கொல்வாரு. பிறகு... அவற்றைப் பொரிச்சு சாப்பிடுவாரு...”
“அறுத்து சாப்பிட வேண்டாமா?”
பிஸ்மி சொல்லி அறுத்து துண்டு துண்டாக ஆக்கி அதற்குப் பிறகுதான் அதைச் சாப்பிட வேண்டும்!
“புத்தூஸே!” ஆயிஷா சொன்னாள். “என்னைப்போல உள்ள ஒரு நல்ல பொண்ணைக் கொல்ற விஷயத்தைப் பற்றி நான் பேசிக்கிட்டு இருக்கேன். முஸ்ஹஃப் சொல்றவனுக்கு ஒஸு வேண்டுமா என்ன?”
வேதநூலான குர்ஆனைத் திருட வேண்டுமென்றால் உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன? இப்படிப் பல விஷயங்களை ஆயிஷா கூறுவாள். சில நேரங்களில் சில பத்திரிகைகளைக் கொண்டு வருவாள். அவற்றில் வந்திருக்கும் பயமுறுத்தக்கூடிய செய்திகளை அவள் குஞ்ஞுபாத்தும்மாவிற்கு வாசித்துக் காட்டுவாள். அந்தத் தாளில் அந்த அளவிற்கு பயங்கரமான சம்பவம் இருக்கிறது என்பதை குஞ்ஞுபார்த்தும்மா வால் நம்பவே முடியாமல், அப்படியே சிலை என நின்றுவிடுவாள். ஆயிஷா அந்த இடத்தை சுட்டிக்காட்டி மீண்டும் ஒருமுறை படிப்பாள். குஞ்ஞுபாத்தும்மா அதை ஆச்சரியத்துடன் பார்ப்ப தோடு, அதைக் கூறவும் செய்வாள். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிஷா கேட்டாள்:
“குஞ்ஞுபாத்தும்மா, உன்னை ஏன் படி.க்க வைக்காம விட்டுட்டாங்க? உங்க வீட்லதான் ஏராளமான சொத்து இருந்துச்சில்ல...?”
சரிதான். ஏராளமாக சொத்து இருந்தது உண்மைதான். முஸ்லிம் கட்டாயம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அப்போது ஒரு பிரச்சினையும் இல்லை. அன்று எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால்... இன்று ஆயிஷாவைவிட குஞ்ஞுபாத்தும்மா அறிவு உள்ளவளாக இருந்திருப்பாள்... எல்லா விஷயங்களிலும் இன்று இருப்பதைவிட ஒரு மிகப்பெரிய மாற்றம் இருந்திருக்கும். அவளின் தந்தையும் தாயும் அவளை ஏன் படிக்க வைக்கவில்லை?அவர்கள் ஏன் எழுதவும் படிக்கவும் கற்றிருக்கவில்லை? ஆண் யானை சொந்தத்தில் வைத்திருந்த யானை மக்கார் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாரா? பாமரத்தனமான தலைமுறைகள்!
அன்று இரவு அவள் அதை நினைத்துப் பார்த்தாள். என்ன காரணத்தால் அவளை அவர்கள் கல்வி கற்கச் செய்யவில்லை? பாயில் படுத்தவாறு, இருட்டுக்கு மத்தியில் அவள் தன் தந்தையிடம் கேட்டாள்.
“ஏன் வாப்பா, என்னை நீங்க படிக்க வைக்கல?”
அவளின் தந்தை ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார். அவ்வளவு தான். அவளின் தாய் சொன்னாள்:
“எழுத படிக்க வச்சு உன்னை காஃபர் ஆக்காதது ஏன்னு நீ கேக்குறியா?”
எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால்... அறிவு உண்டாயிருந்தால்... முஸ்லிமாக வாழ முடியாது! இது சரியான விஷயமா? படிக்க வேண்டும்! இந்த வாக்கியம்தானே குர்ஆனில் முதலில் வந்தது!
சிந்திக்கக் கூடாதா? மறுநாள் குஞ்ஞுபாத்தும்மா ஆயிஷாவிடம் கேட்டாள். ஆயிஷா அதைக் கேட்டுச் சிரித்தாள்! அறிவில்லாமை யால் இப்படி ஒரு கேள்வி... அறிவில்லாமை வளர்ந்து கொண்டிருக் கிறது- அறிவு வளர்வதைப்போலவே! வளர்த்தால் வேண்டியது, வேண்டாதது எல்லாம் வளரத்தான் செய்யும். ஆயிஷா சொன்னாள்:
“இங்க பார்... முஸ்லிம்களுக்கு அறிவு கட்டாயம் இருக்கணும். அறிவில்லாதவங்க ஹம்கிங்கள்!”
இஸ்லாம் முட்டாள்தனமான கழுதையா? இல்லை என்பது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும்... அவள் கேட்டாள்:
“காஃப்ரிகளுக்கு நேர்மாறா நடக்க வேண்டாமா?”
காஃப்ரிகளுக்கு நேர் எதிராக நடக்க வேண்டும்!
“உண்மைதான்.” ஆயிஷா சொன்னாள்: “காஃபர் கால்களால் நடக்குறப்போ முஸ்லிம் தலையால் நடக்கணும். காஃபர் குளிக்கிறாங்க. பல் விளக்குறாங்க. அதனால முஸ்லிம் குளிக்கக் கூடாது. பல் தேய்க்கக்கூடாது. காஃபர் வாயால் சாப்பிடுறதால், முஸ்லிம்...”
“சும்மா இரு துட்டாப்பி...” குஞ்ஞுபாத்தும்மா பதைபதைப்புடன் சொன்னாள்: “ஏன் இப்படியெல்லாம் சொல்ற?”
“புத்தூஸே... கள்ள புத்தூஸே... அல்லாஹுவும் முஹம்மது நபியும் சொல்வதில் இந்த “நேர் எதிரா” நடக்குறது இல்லவே இல்லை...”
குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:
“ஆரம்பத்துல அல்லாஹு யாரைப் படைச்சாரு?”
“தெரியாது...” ஆயிஷா சொன்னாள்: “மனிதர்கள்னா ஆதாம் நபியையும் ஏவாள் பீபியையும்...”
“முஹம்மது நபியை இல்லியா?”
“இது யார் சொன்னது? குர் ஆன்ல சொல்லப்பட்டிருக்குறது என்ன தெரியுமா? ஆதாம் நபியைத்தான் முதல்ல படைச்சதா சொல்லப்பட்டிருக்கு. நாம அதைத்தான் நம்பணும். காதால கேட்ட கதைகளையெல்லாம்- கண்டபடி கற்பனை பண்ணி சொல்றதை யெல்லாம் நாம நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது. முஸ்லிமாக வாழணும். நல்ல மனிதனா இருக்கணும். சுத்தமான மனிதனா இருக்கணும். ஆரோக்கியம் உள்ள ஆளா இருக்கணும். வாழ்க்கை யில் அழகுணர்வு இருக்கணும். மற்றவர்களைத் துன்புறுத்தக்கூடாது. பகை, வன்முறை- இவற்றைத் தவிர்க்கணும். உண்மையான மனிதனா நடக்கணும். பிரபஞ்சங்களைப் படைத்த அல்லாஹுவை முழுமையா நம்பணும். அல்லாஹுவின் தூதனான நபியை நம்பணும். மனிதர்களுக்கு ஆத்மா என்ற ஒன்று இருக்கிறது என்பதையும், தெய்வ தூதர்கள் இருக்கிறார்கள் என்பதையும்... இப்படிப் பல விஷயங்கள் இருக்கு... தீமை தரும் விஷயங்களுக்கு நேர்எதிரா நிற்கணும். இதை உண்மையா செய்றவங்கதான் முஸ்லிம்கள். கருணையை அடிப்படையாகக் கொண்ட மதம் இஸ்லாம். கள்ள புத்தூஸ்... இனிமேலும் உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“துட்டாப்பி, முஸ்லிம்கள் பூ...”
“ஏன்? கூடாதா? ஏன், பூ வச்சா கருகிப் போவாங்களா? கள்ள புத்தூஸே... கண்ணும் மூக்கும் இருக்குறவங்களுக்காக உள்ளதுதான் பூக்கள். முஸ்லிம்களும் பூக்களை முகர்ந்து பார்க்கலாம். தலையில் சூடலாம். இதற்குமேல் ஏதாவது தகவல் வேணும்னா என்னோட அண்ணன் வந்து சொல்வாரு!”