என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
பொறாமையும் பகையும் எல்லார்கிட்டயும் இருக்கா என்ன? நல்ல பாதைக்கு அவங்களைத் திருப்பி விடறதுக்கு ஆள் வேணும். பிறகு... மற்றவர்கள் கெட்ட வர்கள் என்ற எண்ணத்தை மாற்றி, அவங்களை நல்லவங்களா மாற்ற நாம முயற்சிக்கணும்!”
அப்போது அவளின் தந்தைக்கு இன்னொரு சந்தேகம்.
“நல்ல பாம்பைத் திருத்த முடியுமா?”
“ஏன்?”
“அந்த மாதிரி விஷமுள்ள மனிதர்களும் இருக்கத்தான் செய்யிறாங்க. குள்ளநரி, புலி, குரங்கு- இந்த மிருகங்களோட குணத் தைக் கொண்ட மனிதர்களையும் நாம பார்க்கத்தானே செய்றோம்!”
“அந்த மிருகங்களைக்கூட மனிதன் தான் சொல்றபடி நடக்குற மாதிரி கொண்டு வந்திடுறானே!”
“இருந்தாலும்...?”
பிறகு அவர்கள் இரண்டு பேரும் எதுவுமே பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்து விடுவார்கள்.
ஒருநாள் அவளின் தாய் கேட்டாள்:
“அயம்மது... இந்தக் காட்டை எதுக்காக உண்டாக்கியிருக்கே?”
குஞ்ஞுபாத்தும்மா வாசல் கதவின் மறைவில் நின்று கொண்டு மனதிற்குள் சொன்னாள். “அயம்மது அல்ல... நிஸார் அஹம்மது...”
நிஸார் அஹமது சொன்னான்:
“இது ஒண்ணும் காடு இல்லியே! ரெண்டு மூணு வருடங்கள்ல உங்க எல்லாருக்கும் நல்ல மாம்பழம், கொய்யா, பலா, சப்போட்டா எல்லாம் இந்த மரங்கள் கொடுக்கும்...”
அவளின் தாய் கேட்டாள்:
“அயம்மது, உன்னோட உம்மா ஏன் இங்கே வரல?”
ஆயிஷா சொன்னாள்:
“உம்மாவுக்கு பயம்... அன்னைக்கு நடந்த சண்டைக்குப் பிறகு...”
எல்லாரும் அதை நினைத்து நினைத்து சிரித்தார்கள்.
அது நிஸார் அஹமது வந்த மறுநாளோ என்னவோ நடந்தது. அவன் வந்துவிட்டான் என்பது தெரிந்ததும் குஞ்ஞுபாத்தும்மா விற்கு பயம், சந்தோஷம் இரண்டுமே உண்டானது. முன்பு ஏற்கெனவே இருந்த தொண்டை வலி மேலும் அதிகமாகியது. அதோடு நிற்கவில்லை. சாப்பாட்டில் ருசி இல்லை என்பது மாதிரி இருந்தது அவளுக்கு. அவள் மிகவும் களைப்படைந்ததுபோல் இருந்தாள்... அப்படி அவள் இருக்கும்போதுதான் அது நடந்தது.
நிஸார் அஹமதும் ஆயிஷாவும் சேர்ந்து மரங்களுக்கும் மற்ற செடிகளுக்கும் நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.
அதைப்பற்றி கூர்மையாக கவனிக்காமல், அதேசமயம் சாதாரணமாக பார்த்தவாறு வாசலில் புல் பறித்தவாறு குஞ்ஞுபாத்தும்மா அமர்ந்திருந்தாள். நேரம் எவ்வளவு ஓடியது என்றே அவளுக்குத் தெரியாது. சூரியன் புளிய மரத்திற்கு நேர் மேலே இருந்தான். வழக்கம்போல மலம் கழிக்கப்போன அவளின் தாய் குளத்தைவிட்டு மேலே கரைக்கு ஏறினாள்.
நிஸார் அஹமது அழைத்தான்:
“கொஞ்சம் நில்லுங்க... ஒண்ணு சொல்லட்டுமா?”
அவளின் தாய் திரும்பி நின்றாள்.
நிஸார் அஹமது விஷயத்தைச் சொன்னான். அவர்களுக்கு முன்னால் இருந்து மலம் கழிப்பது நல்லது அல்ல. அது நாற்றமடிக்கும் ஒரு செயல் என்றான்.
அவளின் தாய் கேட்டாள்:
“நீ யார்கிட்ட இப்போ பேசுறேன்னு உனக்குத் தெரியுமா?”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“உம்மா... நீங்க போங்க...”
அவளின் தாய் நிஸார் அஹமதுவைப் பார்த்துக் கேட்டாள்:
“நீ எங்களை என்ன செய்வே?”
நிஸார் அஹமது சிரித்தான்.
அவளின் தாய் கோபத்துடன் கேட்டாள்:
“பொம்பளைங்கக்கிட்ட வேணும்னே சண்டை இழுக்கிறியா?”
அவளின் தந்தை வந்தபோது, தாய் சொன்னாள்: “நாசம் போயிட்டேன். மைதினே... நாசம் போயிட்டேன்...”
“என்ன விஷயம்?”
“ஒளிஞ்சிருந்து பார்த்தான். நான் அந்தக் குளத்தைவிட்டு வர்றப்போ ஒளிஞ்சிருந்து பார்த்தான். மைதினே... நான் நாசம் போயிட்டேன்...”
“யாரு பார்த்தது?” அவளின் தந்தையின் கண்கள் சிவந்தன.
அவளின் தாய் சொன்னாள்:
“அவன்!”
“எவன்?” அவளின் தந்தை அரிவாளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். “கழுத்தை நான் வெட்டிடுவேன். எவன் அவன்?”
“பக்கத்துல புதுசா வந்திருக்கிற பையன்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சலாம் இட்டவாறு வாசலில் வந்து நின்றான் நிஸார் அஹமது.
அவளின் தந்தை அவன் தலைமுடியையும் கட்டியிருக்கும் வேஷ்டியையும் பார்த்தார். இருந்தாலும் கடுமையான கோபத்துடன் சொன்னார்:
“வ அலைக்கு முஸ்ஸலாம்!”
நிஸார் அஹமது சொன்னான்:
“நாங்க உங்களுக்குப் பக்கத்துல வசிக்க வந்திருக்கோம். வாப்பா, உம்மா, என்னோட சகோதரி, பிறகு நான்...”
“நீங்க முஸ்லிமா?”
“ஆமா...”
“என்ன முஸ்லிம்?”
“மத சம்பந்தமா நாம பிறகு பேசுவோம். நாங்க யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்துக்கள்கூட வச்சுக்கங்க. இல்லாட்டி கிறிஸ்துவர்கள்னுகூட வச்சுக்கங்க. எதுவா இருந்தாலும், எங்களோட மூக்குக்குப் பக்கத்துல வந்து இருந்து...”
“இருந்தா ஒளிஞ்சிருந்து பார்ப்பியா?”
“வாப்பா...” குஞ்ஞுபாத்தும்மா உள்ளே இருந்து கூப்பிட்டாள்: “வாப்பா...”
“என்ன மகனே?”
“உம்மா சொன்னது...” என்று குஞ்ஞுபாத்தும்மா கூறி முடிப்பதற்கு முன்பே அவளின் தாய் அவளின் வாயைக் கையால் மூடினாள்:
“என்னடி.... என் மானத்தை வாங்கலாம்னு பாக்குறியா? நான் உன்னோட உம்மா... யானை மக்காரோட செல்ல மகள்...”
குஞ்ஞுபாத்தும்மா தாயின் கையை தன் கையால் விலக்கினாள்.
“உம்மா பொய் சொல்லுறாங்க...” அவள் உரத்த குரலில் சொன்னாள்.
“அய்யய்யோ... மைதினே... நான் இவளைப் பெற்றவளாச்சே!”
“என்ன நடந்துச்சு மகளே?” அவளின் தந்தை வீட்டுக்குள் வந்தார்.
“என்னால பொய் சொல்ல முடியாது.” குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்: “உம்மா பொய் சொல்றாங்க!”
“குஞ்ஞுபாத்தும்மா!” அவளின் தாய் சொன்னாள்: “உங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்துச்சு- பெரிய ஒரு ஆண் யானை...”
“இருந்தாலும் நான் கள்ள சாட்சி சொல்ல மாட்டேன்!”
“என்ன மகளே!” -அவளின் தந்தை கேட்டார்.
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“உம்மா பொய் சொல்றாங்க. பக்கத்து வீட்ல இருக்குறவங்க உம்மாவைக் கூப்பிட்டாங்க. எங்க மூக்குக்குப் பக்கத்துல வந்து இருந்து மலம் கழிக்கிறது நல்லதான்னு கேட்டாங்க. அதைக் கேட்டு உம்மாவுக்குக் கோபம் வந்திடுச்சு. இதுதான் உண்மையிலேயே நடந்தது!”
அவளின் தாய் சொன்னாள்:
“எனக்குன்னு யாருமே இல்ல... குஞ்ஞுபாத்தும்மா, உன்னை நான் துண்டு துண்டா ஆக்குறேன்... என்னைக் கொன்னுடுங்க... மைதீனே... எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்ல...”
அவளின் தாய் அழுதவாறே தரையில் உட்கார்ந்தாள். அவளின் தந்தை வெளியே சென்றார். நிஸார் அஹமதுவிடம் அவர் சொன்னார்:
“நாங்க ஏழைங்க. இப்ப என்ன செய்யணும்?”
நிஸார் அஹமது சொன்னான்:
“நாங்களும் ஏழைங்கதான். எங்களுக்கும் சொந்தம்னு சொல்ல ஒரு இடமும் இல்ல. நகரத்துல நாங்க இருந்தது வாடகை வீட்டில்தான். இப்போத்தான் நாங்க இடம் வாங்கியிருக்கோம். எனக்கு விவசாயத்துல ரொம்பவும் ஆர்வம்!”
அவளின் தந்தை சொன்னார்:
“நாங்க இருக்குற இந்த வீடும் நிலமும் எங்களுக்குச் சொந்தமானதுதான்.