என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6986
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“கள்ள புத்தூஸே, பேசாம இரு!”
அதே நேரத்தில் அவள் மனதில் கவலையும் உண்டானது.
ஆயிஷா கேட்டாள்:
“உனக்கு என்ன ஆச்சு?”
“எனக்கு நெஞ்சு வலி.”
அவளுக்கு இதற்கு முன்பு இப்படியொரு நிலை வந்ததில்லை. அவளுக்கே என்னவோபோல இருந்தது. தனியே இருந்து அழத்தோன்றும். அப்போதே சிரிக்க வேண்டும் போலவும் இருக்கும். அழுவதைவிட அவளுக்கு சிரித்துக்கொண்டிருப்பதுதான் ரொம்பவும் பிடிக்கும். சிரிப்பு என்றால் உரத்த குரலில் அல்ல- எதையாவது நினைத்து புன்னகைப்பது. அப்போது விக்கி அழ வேண்டும்போலவும் இருக்கும். நிஸார் அஹமது தன்னைப் பார்க்கிறபோது, “என்னை ஏன் பாக்குறீங்க?” என்று கேட்டால் என்ன என்று நினைத்தாள். ஆனால், அதற்குப் பிறகு நிஸார் அஹமது தன்னை ஏறிட்டுப் பார்க்காமலே இருந்துவிட்டால்...? அவன் இதுவரை அவளை அப்படி பார்த்ததில்லை. அவளை அவன் பார்க்க வேண்டுமென்று அவள் நினைத்தாள். அவன் தன்னைப் பார்க்கக்கூடிய இடமாகப் பார்த்து அவள் போய் நிற்பாள். “நான் சுள்ளிவிறகு பொறுக்குறதுக்காக இங்கே வந்தேன்” என்று அவள் சொல்லுவாள். ஏதாவது காரணத்தை உண்டாக்கிக்கொண்டு அவள் பக்கத்து வீட்டைத் தேடிப் போவாள். “தீ” ஒரு முக்கிய காரணமாக இருக்கும். இல்லாவிட்டால் “உப்பு”. அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறாள் -ஆயிஷா. அவள் என்ன காரணத்தைச் சொல்லி அங்கு போனாலும், அவள் போகும் நேரத்தில் நிஸார் அஹமது அங்கு இருக்க மாட்டான். ஒன்று அவன் முற்றத்தைச் சுத்தம் செய்து கொண்டிருப்பான். இல்லாவிட்டால் மரங்களுக்கு நீர் விட்டுக்கொண்டிருப்பான். முற்றத்தில் பொன் என மணல் விரிக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் நிறைய பூச்செடிகள் வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் முடிந்தால் ஏதாவது படிக்க உட்கார்ந்து விடுவான். “இவர் என்ன படிக்கிறார்?” அவள் தனக்குத்தானே கேட்டுக்கொள்வாள்.
ஒருநாள் குஞ்ஞுபாத்தும்மா பார்த்தபோது, ஒரு மரத்திற்குக் கீழே நிஸார் அஹமது படுத்திருந்தான்- சாய்வு நாற்காலியில். அவன் மடியில் ஒரு புத்தகம் இருந்தது.
அவளின் இதயம் சுகமான வெப்பத்துடன் உருகிக் கொண்டிருந்தது. நிஸார் அஹமதுவின் கண்கள் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன. மேற்கில் வானம் பல வண்ணங்களைக் கொண்டிருந்தது. பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகள்மேல் சிவப்பு வண்ணம் தெரிந்தது.
அவள் நிலை கொள்ளாமல் இருந்தாள். அவள் வெள்ளை ஆடைகளை எடுத்து அணிந்தாள். நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்ததால், அந்த வெள்ளை ஆடைகள் அவளின் உடம்பை “சிக்” என பிடித்தது. தலையில் மென்மையான துணி இருந்தது. தான் இந்த அளவிற்கு கவனம் எடுத்து ஆடை அணிந்தது எதற்கு என்று அவளுக்கே தெரியவில்லை. கண்ணாடி முன் நின்று தன்னையே அவள் நீண்ட நேரம் பார்த்தாள். கண்களில் மெல்லிய ஒரு நீல நிறம் தெரிந்தது. கன்னத்தில் இருந்து கறுப்பு மரு பொட்டு வைத்ததைப்போல “பளிச்” என தெரிந்தது. தன் பெரிய விழிகளால் தன்னை அவள் பார்த்தாள். அவள் புன்னகைத்தாள். அவளுக்கு அழுகை வந்தது. அவள் சிரித்தாள்.
முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அவள் பக்கத்து வீட்டை நோக்கிப் போனாள். அவளின் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
நிஸார் அஹமதுவின் பார்வை அவள்மீது பதிந்தது. அந்தப் பார்வையில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.
அவள் தீ வாங்கினாள். ஆயிஷாவுடனோ அவளின் தாயுடனோ பேசுவதற்காக குஞ்ஞுபாத்தும்மா அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. போன வேகத்தில் அவள் திரும்பிவந்தாள்.
திரும்பி வந்தபோது நிஸார் அஹமது அவளை அழைத்தான்:
“ஓயி!”
அவன் குரல் அவள் மனதில் மின்னல் பாய்ந்ததைப்போல ஒரு உணர்வை உண்டாக்கியது. அதற்குமேல் அவளால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. அவள் அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பயம் தோன்ற ஆரம்பித்தது. மனதில் ஒரு பதைபதைப்பு உண்டானது. அதே நேரத்தில் மனம் சந்தோஷமாக இருப்பது மாதிரியும் தோன்றியது... எல்லா வகை உணர்வுகளுடனும் அவள் அவனைப் பார்த்தாள்.
நிஸார் அஹமது எழுந்து நின்றான்.
“எனக்கு எப்பவும் நீ வேணும்” என்று கூறியவாறு அவளிடமிருந்து தீக்கொள்ளியை அவன் வாங்கி, அதை வைத்து சிகரெட் பற்ற வைத்தான்.
“குஞ்ஞுபாத்தும்மா...” -நிஸார் அஹமது சொன்னான்: “நம்ம அந்த குருவி இல்லே... அது என் பக்கத்துல வந்து குஞ்ஞுபாத்தும்மா நல்லா இருக்காளான்னு கேட்டது. நான் சொன்னேன்: “ஏதோ இஃப்ரீத்தை விரட்டுறதுக்காக அவள் கழுத்துல ஒரு சூட்கேஸை தொங்கவிட்டுக் கொண்டு திரியிறா”ன்னு.”
“சரி... தீயைக் கொடுங்க...”
“குஞ்ஞுபாத்தும்மா...”
“ம்...”
“உனக்கென்ன ஆச்சு?”
“நெஞ்சு வலி.”
“அதற்கு கழுத்துல கட்டினா போதுமா?”
“சரி... தீயைக் கொடுங்க...”
“உனக்கு எழுத படிக்கத் தெரியாதா?”
“நான் படிக்கல...”
“நாளை முதல் ஆயிஷாகிட்ட படிப்பு சொல்லித் தரச்சொல். சொல்லுவியா?”
“துட்டாப்பி என்னைப் பார்த்து கிண்டல் பண்ணும்!”
“லுட்டாப்பி உன்னைக் கேலி பண்ணினா, நான் அவளை ரெண்டாயிரம் துண்டா ஆக்கி...”
“வேண்டாம். துட்டாப்பியை ஒண்ணும் செய்ய வேண்டாம். சரி... தீயைக் கொடுங்க!”
“லுட்டாப்பிகிட்ட நான் சொல்றேன். போதுமா?”
அவனிடமிருந்து நெருப்பை அவள் வாங்கினாள். அவளுக்கு வேகமாக ஓட வேண்டும்போல் இருந்தது. இருந்தாலும் மெதுவாகவே நடந்து சென்றாள். உலகமே ஒரு புது வெளிச்சத்தில் மூழ்கி இருப்பதைப்போல் அவள் உணர்ந்தாள். உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுக்குமே முன்பிருந்ததைவிட அழகு கூடிவிட்டிருப்பதைப்போல அவள் மனதிற்குப்பட்டது. அவளுக்கு எல்லாவற்றின் மேலும் அதிக வாஞ்சை உண்டானது. ஒரு எறும்பு அவளைக் கடித்தபோது வேதனையுடன் அவள் எறும்பைப் பார்த்துச் சொன்னாள்:
“நீ என்னைக் கடிச்ச மாதிரிதானே எல்லாரையும் கடிச்சிக்கிட்டு இருக்கே!” அவள் அதை எடுத்து கீழே போட்டாள். அவளுக்கு இரவு மிகவும் அழகானதாகத் தோன்றியது. அவளின் தந்தையும் தாயும் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவளுக்கு தூக்கமே வரவில்லை. அவள் நிஸார் அஹமதுவை மனதிற்குள் நினைத்து புன்னகைத்தாள். மனம் ஒரே பரபரப்புடன் இருந்தது. தலையணையைக் கிள்ளினாள். “வலிக்குதா?” அந்தக் கேள்வியை அவள் நினைத்தபோது அவள் கண்களில் நீர் நிறைந்தது. அடுத்த நிமிடம் அவள் புன்னகைத்தாள். அப்படியே அவள் உறங்கியும் போனாள். தூக்கத்தில் நிஸார் அஹமதுவைக் கனவில் கண்டாள். அவர்கள் இருவரும் ஒன்றாகக் கனவில் நடந்தார்கள்.
மறுநாள் பிற்பகல் நேரத்தில் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் குஞ்ஞுபாத்தும்மா நின்று கொண்டிருந்தபோது, ஆயிஷா கையில் பெரிய ஒரு பிரம்பையும் கையிடுக்கில் ஒன்றிரண்டு புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு வந்து பந்தாவான குரலில் குஞ்ஞுபாத்தும்மாவை அழைத்தாள்.