என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6987
முஸ்லியார் மீண்டும் கேட்டார். மூன்றாவது முறை பிரம்புதான் கேட்டது. அதற்குப் பிறகு அவளுக்கு எதைப் பற்றியும் ஞாபகத்தில் இல்லை. முஸ்லியார் பத்து முறையோ பன்னிரண்டு முறையோ அடித்தார். அவள் அழுதாள். வாய்விட்டு அழுதாள். பிரம்பைப் பிடுங்கி அவள் ஒடித்தாள். ஒடித்த பிரம்பை தீக்குள் போட்டு எரித்தாள். எங்காவது அவளுக்கு ஓடிப்போக வேண்டும்போல் இருந்தது. ஆனால், அவள் ஓடவில்லை. எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்குப் பக்கத்தில் நிஸார் அஹமது நின்றிருந்தான்.
நிஸார் அஹமது அவளைப் பிடித்து தூக்கினானா? இல்லா விட்டால் நிஸார் அஹமதுவின் அருகில் அவள் ஓடிச் சென்றாளா?
நிஸார் அஹமதுதான் அவளைத் தாங்கிப்பிடித்து வராந்தாவில் ஏறி வீட்டுக்குள் கொண்டு வந்து பாயில் படுக்க வைத்தான். அவள் கண்களைத் திறந்து பார்த்தபோது நல்ல பகல் நேரமாகிவிட்டி ருந்தது.
பாய்க்குப் பக்கத்தில் ஆயிஷா உட்கார்ந்திருந்தாள். ஆயிஷாவின் தாயும் இருந்தாள்.
குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் எதையோ அரைத்துக்கொண்டு வந்து நெற்றியில் பூசினாள். அதைப் பூசிய பிறகு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அவளின் மூக்கிலிருந்து வெளியே வந்த காற்று மிகவும் வெப்பமாக இருந்தது. அது தீயாக இருக்குமோ!
அவளின் தந்தை அந்த அறைக்குள் வந்தார். ஆயிஷாவும் அவளின் தாயும் எழுந்து நின்றார்கள்.
“மகளே, கஞ்சி சாப்பிடுறியா?”
ஒன்றுமே வேண்டாம். பசி, தாகம் எதுவுமே இல்லை!
“என் மகள் ஒழுங்காக சாப்பிட்டு எவ்வளவு நாட்களாயிடுச்சு!” அவளின் தந்தை கவலையுடன் சொன்னார். எதற்காக அவர் கவலைப்பட வேண்டும்? அவள் இறக்கப்போகிறாள். காற்று வீசத் தொடங்கியது. இலை இப்போது கீழே விழும். உண்மையாகவே காற்று பலமாக வீசுகிறது. இலைகள் பறக்கின்றன. மரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. மரணத்தின் காற்றாக இருக்கலாம். மரணத்தின் தூதன் வந்து சேர்ந்து விட்டானா? உலகம் முடியப் போகிறது. இஸ்ராஃபீல் என்ற மலக் ஸுர் என்ற குழலை ஊதத் தொடங்கியிருக்கலாம். இறுதி நாள் நெருங்கிவிட்டது. மரங்கள் அடியோடு பெயர்ந்து கீழே விழுகின்றன. மலைகள் குலுங்கி தகர்ந்து பொடிப் பொடியாகின்றன.. பூமியே ஒன்றும் இல்லாமல் ஆகப் போகிறதா என்ன?
மழை பெய்து கொண்டிருக்கிறது. புது மண்ணின் வாசனையை உணர முடிகிறது. ஆட்கள் என்னென்னவோ பேசிக்கொண்டு சிரித்தவாறே போகிறார்கள். நல்ல பகல் நேரம். பருந்தின் ஓசை கேட்கிறது. அதைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அது ஆகாயத்தில் தன் சிறகுகளை விரித்துக் கொண்டு எந்தவிதமான அசைவும் இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறது. அறைக்குள் இரவு- பகல் எதையும் உணர முடியவில்லை. அவள் அசையாமல் கிடந்தாள். உடலில் பயங்கர வேதனை இருந்தது. யாரோ அவளை கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டதுபோல் இருந்தது. பத்தாயிரம் துண்டுகளாக தன்னை வெட்டிப் போட்டு விட்டதைப்போல் அவள் உணர்ந்தாள். கிளிகளுக்கு அவளை இரையாகப் போட தீர்மானித்திருக்கலாம். கிளிகள் அப்படி போடப்படும் துண்டுகளைக் கொத்தி விழுங்கி கூட்டம் கூட்டமாகப் பறந்து போகும். பிறகு...?
“குஞ்ஞுபாத்தும்மா...” யாரோ அழைக்கிறார்கள். யாராக இருக்கும்? அவள் கண்களைத் திறந்தாள். அப்போது அவளின் இதயமே ஆடிப்போனது. நிஸார் அஹமதுவின் தந்தை! அவர் வந்து அறையில் நின்றுகொண்டிருந்தார். அவர் சொன்னார்:
“அறைக்குள் காற்றும் வெளிச்சமும் வரணும். அந்த ஜன்னலை ஏன் அடைச்சு வச்சிருக்கீங்க?”
அவர் ஜன்னலைத் திறந்தார். காற்றும் வெளிச்சமும் அறைக்குள் வந்தது. வெளிச்சத்திற்கு ஒரு வெளிச்சம்!
“குஞ்ஞுபாத்தும்மா.” அவர் மீண்டும் அழைத்தார். “ம்...” அவள் சொன்னாள். ஆனால், சத்தம் வெளியே வந்தால்தானே! அவர் வாசலுக்குச் சென்று அவளின் தந்தையிடம் என்னவோ கூறிக்கொண்டிருந்தார். என்ன கூறுகிறார்? அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கண்களைத் திறந்தபடி அவளால் படுத்திருக்க முடியவில்லை. உறக்கம் இல்லாமல் படுத்துக் கிடப்பதைவிட உறங்குவது எவ்வளவோமேல். உறக்கம் என்பது ஒரு கறுத்த கடலைப்போல. அவள் அதோடு இணைந்து சங்கமமாக முயன்றாள். அதுவும் முடியவில்லை. வெளிச்சம்! எங்கேயாவது ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். எந்தப் பற்றுதலும் இல்லாமல் வாழ்க்கையில் எப்படி வாழ முடியும்? அவளொரு மரத்தைப்போல, பூமியில் வேர் வீட்டு நின்று கொண்டிருக்கிறாள். பூமியெங்கும் வேர்கள்தான். கை, கால்கள் எல்லாம் மரத்தின் உச்சிகள். ஏராளமான இலைகளும், பூக்களும் உண்டாகத் தொடங்கி யிருக்கின்றன. இரண்டு பறவைகள் கூடு கட்டப் போகின்றன. அது எந்தப் பறவைகள்?
“குஞ்ஞுபாத்தும்மா...” யாரோ அவளை அசைத்து எழுப்பினார்கள். யார் அது? எங்கேயோ முன்பு கேட்டிருக்கும் குரல்தான். இலேசான களைப்புடன் அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். யார் அது? ஓ... நிஸார் அஹமது.
“குஞ்ஞுபாத்தும்மா!” நிஸார் அஹமது அழைத்தான்.
தொடர்ந்து அவன் சொன்னான்: “நீ எந்திரிச்சு முதல்ல இதைக் குடி. கசப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் இனிப்பா இருக்குறதா நினைச்சுக்கோ. ருசிச்சு பார்க்க வேண்டாம்...”
மருந்து வேண்டாமென்று சொல்ல வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. அதற்கு முன்பு நிஸார் அஹமது அவளை தலையைப் பிடித்துத் தாங்கினான். அவளை அவன் எழுந்திருக்கச் செய்தான். வெண்மைநிற கிண்ணத்தில் ஏதோ கறுப்பாக இருக்கும் ஒரு திரவத்தை அவள் வாயில் ஊற்றி, அவளைக் குடிக்கச் செய்தான். அதற்குப் பிறகு அவன் என்னென்னவோ சொன்னான். அதற்குப் பதில் சொல்லலாம் என்று அவள் பார்த்தால், அப்போது நிஸார் அஹமதுவை அங்கு காணோம். அவளின் தாய் குருணை அரிசியால் உண்டாக்கப்பட்ட கஞ்சியைக் கொண்டுவந்து அவளைக் குடிக்க வைத்தாள். அவளின் தாய் கேட்டாள்:
“ஆயிஷாவோட உம்மா கட்டுறது மாதிரி உனக்கு தலைமுடியைக் கட்டணுமா?”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“நான் சாகப்போறேன்!”
அவளின் தாய் சொன்னாள்:
“என் செல்ல மகளே... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உன் கல்யாண விஷயமெல்லாம் முடிவு செஞ்சாச்சு!”
குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:
“நான் இப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நான் சாகப்போறேன்!”
அப்போது சிரித்தவாறு உள்ளே வந்தாள் ஆயிஷா. அவள் கேட்டாள்:
“மருந்து இனிப்பா இருந்துச்சா?”
“போ துட்டாப்பி...”
“கள்ள புத்தூஸ் ஒரு ஆளு மருந்து கொடுத்தா மட்டும்தான் குடிப்பா...”
“சும்மா இரு துட்டாப்பி...” என்று சொல்லியவாறு அவள் படுத்துக் கிடந்தாள். இதயம் முழுக்க தேன் தடவியதுபோல் இருந்தது. மொத்தத்தில் அவள் சந்தோஷமயமாக மாறிவிட்டிருந் தாள். அவளுக்கு ருசி தோன்றியது. பசியும் தாகமும் உண்டாயின. யாருடைய உதவியும் இல்லாமல் அவளால் எழுந்திருக்க முடிந்தது. மெதுவாக நடக்கவும் செய்தாள். இப்படி இருக்கும்போது ஒருநாள் ஆயிஷா சொன்னாள்:
“கள்ள புத்தூஸ்... உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறது யார்னு தெரியுமா?”
“சும்மா இரு துட்டாப்பி...!”