கனவு ராஜாக்கள் - Page 13
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
தயாரிப்பாளருக்கே தெரியாமல், படத்தை இயக்கினார் பாலுமகேந்திரா!
சுரா
1980ஆம் ஆண்டில் பாலுமகேந்திரா இயக்கிய 'அழியாத கோலங்கள்' பார்த்து பல வருடங்களுக்குப் பிறகு ஷ்யாம்சுந்தர் எனக்கு நெருக்கமாக அறிமுகமானார். அந்தப் படத்தில் பார்த்த அதே புன்னகையுடன் தன் அலுவலகத்தில் என்னை அவர் வரவேற்றார். திரைப்படத்தில் சிறுவனாக அவரைப் பார்த்த எனக்கு முன்னால் ஒரு திருமணமான இளைஞராக உட்கார்ந்திருந்தார் ஷ்யாம்சுந்தர். நான் சந்தித்தபோது அவர் 'விநாயகர் விஜயம்' என்ற புராண தொடரை தொலைக்காட்சிக்காக இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தார் 'யந்த்ரா மீடியா' என்ற பெயரில் அவரே சொந்தத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்திருக்கும் நடிகை மைனாவதியின் மகன்தான் ஷ்யாம்சுந்தர். பண்டரிபாய் அவருடைய பெரியம்மா.
'யார்' படத்தில் பேயாக நடித்தவர் ஷ்யாம் சுந்தர்தான். கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து கர்நாடக அரசாங்கத்தின் சிறந்த நடிகருக்கான பரிசைக்கூட பெற்றிருக்கிறார். பல படங்களில் நடித்த ஷ்யாமிற்கு, பின்னர் நடிக்கும் ஆசை இல்லாமற் போய்விட்டது. அதற்குப் பதிலாக தயாரிப்பாளராக மாறிவிட்டார். அவர் டி.வி. தொடர் தயாரித்தபோது, வாரம் ஒரு முறையாவது அவரை நான் சந்திப்பேன். மிகப் பெரிய திட்டங்கள் பலவற்றையும் மனதிற்குள் அவர் வைத்துக் கொண்டிருப்பதை என்னால் அப்போதே உணர முடிந்தது.
அந்தத் தொடருக்குப் பிறகு சில வருடங்கள் நான் ஷ்யாமைச் சந்திக்கவில்லை. திடீரென்று ஒருநாள் மலையாள நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, கேரளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'ஸ்தீரீ' மெகா டி.வி. தொடரைப் பற்றி அவர்கள் 'ஆஹா ஓஹோ' என்ற புகழ்ந்தார்கள். ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்தத் தொடர் கேரளப் பெண்களை வீட்டிற்குள் கட்டிப் போட்டு விட்டது என்றார்கள். அந்தத் தொடரில் கையாளப்பட்டிருந்த கதையைப் பார்த்து, பெண்கள் அந்தத் தொடரை விட்டு விலகாமல் இருக்கிறார்கள் என்றார்கள். 'அந்தத் தொடரைத் தயாரிப்பவர் யார்?' என்று கேட்டதற்கு ஷ்யாம்சுந்தரின் பெயரைச் சொன்னார்கள்.
எனக்கு அது ஆச்சரியத்தைத் தந்தது. கேரளத்தில் பொதுவாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவ்வளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டு விட மாட்டார்கள். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ஷ்யாம் சுந்தருக்கு ஏசியாநெட் எப்படி வாய்ப்பைத் தந்தது... அவரால் கேரளத்தில் எப்படி கொடி நாட்ட முடிந்தது என்று உண்மையிலேயே நான் வியப்படைந்தேன். 'ஸ்த்ரீ' தொடர் 400 நாட்கள் ஒளிபரப்பாகி சாதனை புரிந்தது. அந்தத் தொடரைத் தொடர்ந்து, பல மெகா தொடர்களையும், வாரத் தொடர்களையும் மலையாளத்தில் தயாரித்தார் ஷ்யாம். எல்லா தொடர்களும் ஏசியாநெட் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பாயின. மலையாள தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களில் முடிசூடா மன்னராக விளங்கினார் ஷ்யாம்சுந்தர் என்பதுதான் உண்மை. அவருடைய 'யந்த்ரா மீடியா' நிறுவனம்தான் மலையாள டி.வி. தொடர்கள் தயாரிப்பதில் முதலிடம் வகித்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் கேரளத்தில் நல்ல நிலைமையில் இருப்பதை தெரிந்து, நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷ்யாம்சுந்தர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூடினார். சந்தித்தோம். அப்போது கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் அவருடைய அலுவலகம் இருந்தது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நிறைய டி.வி. தொடர்களைத் தயாரித்துக் கொண்டிருந்த அவர் தமிழில் 'பயணம்' என்ற மெகா தொடரைத் தயாரிக்க இருப்பதாகச் சொன்னார். பார்த்த கணத்திலேயே ஷ்யாம் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.
'பயணம்' ஒளிபரப்பான சமயத்தில் நானும் ஷ்யாமும் அடிக்கடி சந்திப்போம். அதைத் தொடர்ந்து 'ஸ்ரீராமன் ஸ்ரீதேவி' என்ற மெகா தொடரை விஜய் டி.வி.க்காக ஷ்யாம் தயாரித்தார். 'பாரதி' என்ற புதிய சேனல் இங்கு வந்தபோது, அதில் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஸ்த்ரீ' தொடரை தமிழில் தயாரித்து 'அவள்' என்ற பெயரில் ஷ்யாம் வழங்கினார்.
சன் டி.வி.யில் புலனாய்வு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து 'நிஜம்' என்ற வாரத் தொடரை ஷ்யாம் தயாரித்தார். மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே மாதிரியான ஒரு தொடரை சூர்யா டி.வி.யில் 'க்ரைம்' என்ற பெயரில் மலையாளத்திலும் ஷ்யாம் தயாரித்தார். ஜெமினி டி.வி.யிலும் சில தொடர்களை ஷ்யாம் அப்போது தயாரித்தார்.
இடையில் ஜி.வி.அய்யரை இயக்குநராகப் போட்டு ஒரு கன்னட திரைப்படத்தை தயாரித்தார். தமிழில் பாலுமகேந்திராவை வைத்து 'ஜூலி கணபதி' படத்தை அவர் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக நிறைய பணத்தையும் அவர் செலவு செய்தார். பல ஹோட்டல்களிலும் கதை விவாதத்தை நடத்தினார் பாலுமகேந்திரா. இறுதியில், ஷ்யாமிற்கே தெரியாமல் அந்தக் கதையை 'ஜி.ஜே. சினிமா' நிறுவனத்திற்குக் கொடுத்து விட்டார் பாலுமகேந்திரா. அந்தப் பட முயற்சியில் சில லட்சங்களை தான் இழந்துவிட்டதாக என்னிடம் கூறினார் ஷ்யாம்சுந்தர்.
அதற்குப் பிறகு ராஜ் டி.வி.யில் ஷ்யாம்சுந்தர் தயாரித்த 'மீனாட்சி' என்ற மெகா தொடர் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏசியா நெட் கன்னடத்தில் ஆரம்பித்த 'ஸ்வர்ணா' என்ற புதிய சேனலுக்கு ஷ்யாம் தலைவராக ஆனார். தொடர்ந்து ஷ்யாமின் தலைமையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏசியா நெட் சேனல்களை ஆரம்பிப்பதாக இருந்தது. அதற்கான ஆரம்ப வேலைகள் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தன.
அனைத்தும் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தபோது, விதி அதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்குமா? ஷ்யாம்சுந்தரை அது நம்மிடமிருந்து தட்டிப் பறித்துவிட்டது. தன்னுடைய 44வது வயதில், மாரடைப்பு வந்து ஷ்யாம் மரணத்தைத் தழுவிவிட்டார். சிறிதும் எதிர்பாராமல் ஷ்யாமின் மரணச் செய்தியைக் கேட்டபோது, அதிர்ச்சியில் நான் உறைந்து போய்விட்டேன்.
மிகப் பெரிய சாதனைகள் பலவற்றையும் செய்ய இருந்த ஒரு திறமையான இளைஞர் நம்மை விட்டுப் போய் விட்டார் என்பதுதான் உண்மை. ஷ்யாம் மறைந்திருக்கலாம். ஆனால், 'அழியாத கோலங்கள்' படத்தில் நடித்த ஷ்யாமின் அந்த அழகான புன்னகையை நம்முடைய இதயங்களிலிருந்து யாரால் அழிக்க முடியும்?