கனவு ராஜாக்கள் - Page 9
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9293
கே.பாலசந்தர் அறிமுகப்படுத்த, பி.வாசு உயரத்தில் உட்கார வைத்தார்!
சுரா
நம் நடிகர்கள் சிலரிடம் நடிப்புத் திறமையைத் தாண்டி சில அபூர்வ திறமைகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் மார்த்தாண்டன். அவர் வரைந்த பல ஓவியங்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். 'இவரால் எப்படி இந்த அளவிற்கு உயிர்ப்புடன் ஓவியங்களை வரைய முடிகிறது!' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர் இன்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு நடிகராக இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம்- ஓவியம் வரையும் திறமைதான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால், அதுதான் உண்மை.
நெல்லை மாவட்டம் ரொந்தை கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படித்திருந்த மார்த்தாண்டன் ஓவியத்தின் மீது கொண்ட தீவிர காதலால், நெல்லையில் இருந்த ஒரு ஓவியப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றார். அதற்குப் பிறகு ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக சில மாதங்கள் பணியாற்றினார். தொடர்ந்து மும்பைக்குச் சென்றுவிட்டார். அங்கு இந்திப் படங்களுக்கு விளம்பர டிசைன்கள் செய்து கொண்டிருந்த சி.மோகன் என்பவரிடம் இரண்டு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றினார்.
மும்பையில் கிடைத்த அனுபவங்களுடன் சென்னைக்கு வந்தார். 1980ஆம் ஆண்டு அது. அப்போது மிகவும் பிஸியான சினிமா டிசைனராக இருந்த உபால்டுவிடம் உதவியாளராக அவர் சேர்ந்தார். ஐந்து வருடங்கள் அங்கு இருந்தார். அப்போது மார்த்தாண்டனுக்கு இயக்குநர் மெளலி அறிமுகமானார். தான் இயக்கிய 'நன்றி மீண்டும் வருக', 'ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது' படங்களுக்கு விளம்பர டிசைன்கள் பண்ணும் வேலையை அவருக்குத் தந்தார் மெளலி. தன் ஓவியத் திறமை செயல் வடிவில் வந்தது குறித்து மார்த்தாண்டனுக்கு ஏக மகிழ்ச்சி.
தொடர்ந்து ராஜசேகர் இயக்கிய 'காலமெல்லாம் உன் மடியில்', 'கழுகுமலைக் கள்ளன்' படங்களுக்கு விளம்பர டிசைனராக மார்த்தாண்டன் பணியாற்றினார். வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் நடிகர்களையும், நடிகைகளையும், இயக்குநர்களையும் ஓவியமாக வரைந்து அவர்களிடம் அவர் நேரில் கொண்டு போய்க் கொடுப்பார். அதன் மூலம் பலரின் பாராட்டுகளும் மார்த்தாண்டனுக்குக் கிடைத்தன.
அந்த வகையில் கே.பாலசந்தரை ஓவியமாகத் தீட்டிக் கொண்டு போய் அவரிடம் மார்த்தாண்டன் தந்தார். ஓவியத் திறமையால் கவரப்பட்ட கே.பி., 'புதுப் புது அர்த்தங்கள்' படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என்னதான் ஓவியராக இருந்தாலும், படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை மண்ணில் கால் வைத்தவர் மார்த்தாண்டன். பள்ளியில் படிக்கிற காலத்திலேயே அவர் நிறைய நாடகங்களில் நடித்திருந்தார். உபால்டுவின் உதவியாளராகப் பணியாற்றும்போது, அங்கு வரும் எல்லா இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் பார்த்து வாய்ப்பு கேட்பார். யாரும் தரவில்லை.
முதல் நடிப்பு வாய்ப்பைக் கொடுத்தவர் கே.பாலசந்தர்தான். ஆனால், இதில் சோகம் என்னவென்றால், 'புதுப் புது அர்த்தங்கள்' திரைக்கு வந்தபோது, மார்த்தாண்டன் நடித்த காட்சி படத்தில் இல்லாமல் போய்விட்டது. நீளம் காரணமாக அது நீக்கப்பட்டுவிட்டது. அதை மார்த்தாண்டனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கே.பி.யைப் பார்த்து அழுதிருக்கிறார். மார்த்தாண்டனுக்காக வருத்தப்பட்ட கே.பி. 'ஒரு வீடு இரு வாசல்' படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்தை அவருக்குத் தந்தார். ஒரு ஓவியராகவே அவரை பாலசந்தர் அந்தப் படத்தில் இடம் பெறச் செய்திருந்தார். மார்த்தாண்டன் ஓவியம் வரைவதை படத்தில் அப்படியே காட்டியிருந்தார். படம் பார்த்தவர்கள் மார்த்தாண்டனின் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அந்தப் படத்தில் மார்த்தாண்டன் பேசப் பட்டார்.
அதற்குப் பிறகு மார்த்தாண்டனுக்கு வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தை உண்டாக்கிக் கொடுத்த இயக்குநர் பி.வாசு. 'சின்னத் தம்பி' படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தைத் தந்து, மார்த்தாண்டனை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தவர் வாசு. அதற்கு பிறகு மார்த்தாண்டனுக்கு ஏறுமுகம்தான். தொடர்ந்து 'வால்டர் வெற்றிவேல்', 'பாளையத்தம்மன்', 'மனைவி ஒரு மந்திரி', 'பொண்ணு வீட்டுக்காரன்', 'சாதி சனம்', 'இது நம்ம பூமி', 'ராஜா ராஜாதான்', 'பூ வேலி', 'குருவம்மா', 'கோவை எக்ஸ்பிரஸ்', 'கிழக்கு வீதி', 'தெனாலி', 'செவ்வந்தி', 'பரட்டை என்ற அழகுசுந்தரம்', 'தொட்டால் பூ மலரும்' 'வேல்', 'பெருமாள்', 'பசுபதி', 'பிறகு', 'மாட்டுத் தாவணி' என்று பல படங்களிலும் நடித்து விட்டார். கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்து முடித்துவிட்டார் மார்த்தாண்டன்.
தன் வாழ்க்கைக்கு உயர்வு தந்தவர்கள் என்று கே.பாலசந்தர், பி.வாசு, இராம.நாராயணன் ஆகியோரைக் குறிப்பிடும் மார்த்தாண்டன், நடிகர்கள் விவேக், வடிவேலு இருவரும் தனக்குச் செய்துவரும் உதவிகளை வாழ்க்கையில் மறக்க முடியாது என்கிறார். 'ஷாஜகான்', 'சரவணா', 'தேவன்', 'செந்தூர தேவி' படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்குக் காரணம் விவேக். அதே போல வடிவேலு செய்த சிபாரிசால் '6.2', 'கோவை பிரதர்ஸ்', 'தலைமகன்', 'தொட்டால் பூ மலரும்' ஆகிய படங்களில் மார்த்தாண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
நடிப்பு வாய்ப்பையும் தாண்டி மார்த்தாண்டனுக்கு வேறொரு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறார் நடிகர் விவேக். மார்த்தாண்டனின் ஓவியத் திறமையை ஆரம்ப காலத்திலிருந்தே நன்கு தெரிந்திருந்த விவேக், அவரை ஒரு ஓவியக் கண்காட்சி வைக்கும்படி கூறியிருக்கிறார். அதற்கான பொருளாதார வசதி மார்த்தாண்டனிடம் இல்லை என்பது தெரிந்ததும், அந்த கண்காட்சிக்கான முழு செலவையும் விவேக்கே ஏற்றுக் கொண்டார். சென்னை 'சோழா' ஹோட்டலில் நடைபெற்ற அந்த ஓவியக் கண்காட்சிக்கு பல நடிகர்களையும், நடிகைகளையும் வரும்படி விவேக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜோதிகா, ரம்பா, ரோஜா, பி.வாசு, பார்த்திபன், பிரபுதேவா என்று பலரும் வந்து மார்த்தாண்டன் வரைந்த ஓவியங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதன் மூலம் மார்த்தாண்டனுக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைத்தது. விவேக் செய்த அந்த உதவியைச் சொன்னபோது மார்த்தாண்டனின் கண்கள் கலங்கி விட்டன.
மார்த்தாண்டனை நான் 'ஒரு வீடு இரு வாசல்' தயாரிப்பில் இருந்தபோது பார்த்தேன். அப்போது ஆரம்பித்த நட்பு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். திறமை படைத்த ஒருவர் வாழ்க்கையில் முத்திரை பதிக்கும் சாதனைகளைச் செய்கிறபோது சந்தோஷப்படுவது இயல்புதானே!
'வாழ்க்கையில் இதுவரை கிடைத்த வாய்ப்புகள் திருப்தி தந்திருக்கின்றனவா?' என்று நான் கேட்டதற்கு, 'நிச்சயமாக' என்றார் மார்த்தாண்டன்- சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டே.