கனவு ராஜாக்கள் - Page 7
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9293
ஜூஸ் கடையில் தங்கியவர் இயக்குனர் ஆனார்!
சுரா
பெரியகுளத்திற்கு அருகில் இருக்கும் பங்களாப்பட்டிதான் ராஜவர்மனின் சொந்த ஊர். மதுரையில் பிறந்ததால் அவரின் தந்தை ராஜவர்மனுக்கு 'மதுரை ராஜ்' என்று பெயர் வைத்தார். பெரியகுளம் விக்டோரியா மகாராணி உயர்நிலைப் பள்ளியில் அவர் படிக்கும்போது, அதற்கு அடுத்து இருந்தது ரஹீம் திரையரங்கு. அங்கு திரையிடப்படும் படங்களின் வசனம் எப்போதும் வெளியே கேட்டுக் கொண்டேயிருக்கும். அதன் விளைவாக சினிமா மீது ஒரு மிகப் பெரிய மோகம் உண்டானது ராஜவர்மனுக்கு, சிவாஜி என்றால் அவருக்கு உயிர், அவரைப்போல சாதனை புரிய வேண்டும் என்று விரும்பிய அவர் பருத்தி விற்று வீட்டில் வைத்திருந்த பணத்தை பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயிலேறி விட்டார். அப்போது மதுரையிலிருந்து சென்னைக்கு 19 ரூபாய் கட்டணம்.
ஏற்கெனவே தனக்கு நன்கு தெரிந்திருந்த ஜெயகுமார் என்பவர் புரசைவாக்கத்தில் வைத்திருந்த ஒரு ஜூஸ் கடையின் ஒரு அறையில் தங்கிக் கொண்டு சினிமா கம்பெனிகளின் படிகளில் ஏறி இறங்க ஆரம்பித்தார் ராஜவர்மன். 'சித்ராலயா' அலுவலகத்திற்குப் போய் கோபுவைப் பார்த்தார். கே.பாலசந்தரை வீட்டில் போய் சந்தித்து உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டார். 'கல்லுக்குள் ஈரம்' கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜாவை ரஞ்சித் ஹோட்டலில் போய்ப் பார்த்தார். 'இப்போது என்னிடம் வாய்ப்பு இல்லை. எனினும், மனதைத் தளரவிடாமல் முயற்சி செய்' என்று தோளில் கையை வைத்து தட்டிக் கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. அதற்குப் பிறகு எஸ்.பி.முத்துராமனைப் போய்ப் பார்த்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கவில்லை.
புரசைவாக்கத்தில் ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்திருந்த சித்ரா ராமமூர்த்தி, சித்ரா மணி சகோதரர்கள் மூலம் எழுத்தாளர் ராண்டார் கையின் உதவியாளராகும் வாய்ப்பு ராஜவர்மனுக்கு கிடைத்தது. ராண்டார் கை எழுதித் தரும் படைப்புகளை குங்குமம், அஸ்வினி போன்ற பத்திரிகைகளுக்குக் கொண்டுபோய் கொடுப்பதுதான் அவருடைய வேலை. அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய இருப்பிடத்தை அவர் வடபழனிக்கு மாற்றிக் கொண்டார்.
பள்ளியில் படிக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜவர்மன் ஆண்டிபட்டிக்கு அருகில் இருந்த சேவா நிலையத்தில் சேர்ந்து உடல் நலம் பெற்றார். அதை நடத்திக் கொண்டிருந்த டோரா ஸ்கார்லெட் என்ற ஆங்கிலேயப் பெண்மணி, அவருக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டார். அந்த ஜேம்ஸ் என்ற பெயருடன்தான் ராஜவர்மன் சென்னையில் உலாவிக் கொண்டிருந்தார்.
வடபழனி கோவிலுக்கு அருகில் 35 ரூபாய் வாடகையில் குடியேறிய நேரத்தில் 'பூம்பூம் மாடு' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அடைக்கலவன் என்பவர் படத்தை இயக்கினார். சந்திரசேகர் கதாநாயகனாக நடித்த படம். தொடர்ந்து சுரேஷ், விஜி நடித்த 'வளர்த்த கடா', பாண்டியன் நடித்த 'மண்சோறு', பாண்டியன், ஜெயஸ்ரீ நடித்த 'கோயில் யானை' படங்களிலும் ராஜவர்மன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது எஸ்.எஸ்.சந்திரன் அவருக்கு அறிமுகமானார். எஸ்.எஸ்.சந்திரன், இராம நாராயணனிடம் அவரை உதவியாளராகச் சேர்த்து விட்டார். இராம நாராயணனிடம் திரைக்கதை உதவியாளராக வீரன் வேலுத்தம்பி, வீரன் ஆகிய படங்களில் ராஜவர்மன் பணியாற்றினார்.
ராஜவர்மன் சொன்ன ஒரு கதை சங்கிலி முருகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தக் கதைதான் 'எங்க ஊரு காவக்காரன்'. ராமராஜன், கவுதமி நடித்த அந்தப் படத்தை டி.பி.கஜேந்திரன் இயக்கினார். ராஜவர்மன் கதை எழுதிய அந்தப் படம் 1988 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. அதில்தான் 'ராஜவர்மன்' என்ற பெயர் இடம் பெற்றது. அவருக்கு அந்தப் பெயரை வைத்தவர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவருடைய அக்கா. அந்தப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
தொடர்ந்து கார்த்திக், நிரோஷா நடித்த 'பாண்டி நாட்டுத் தங்கம்' படத்துக்கு கதை எழுதினார் ராஜவர்மன். அது 175 நாட்கள் ஓடியது. அதற்கடுத்து சங்கிலி முருகன் தயாரித்த 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன' படத்திற்கு சங்கிலி முருகன் கதை எழுத, அதற்கு வசனம் எழுதினார் ராஜவர்மன். அதுவும் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து 'கும்பக்கரை தங்கையா' படத்திற்கு சங்கிலி முருகன் கதை எழுத, ராஜவர்மன் வசனம் எழுதினார். அந்தப் படமும் 100 நாட்கள் ஓடியது. அதற்கடுத்து சங்கிலி முருகன் தயாரித்து, அர்ஜுன் நடித்த 'எங்க ஊரு சிப்பாய்' படத்திற்கும் ராஜவர்மன் வசனம் எழுதினார். சங்கிலி முருகன் தயாரித்த இந்த அனைத்துப் படங்களிலும் அசோசியேட் இயக்குநராகவும் ராஜவர்மன் பணியாற்றினார்.
மூர்த்தி என்பவர் மூலம் ராஜவர்மனுக்கு இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொல்லி 'யாகவா புரொடக்ஷன்ஸ்' என்.ஆர். தனபாலன் தயாரித்த 'தங்க மனசுக்காரன்' படத்தை ராஜவர்மன் இயக்கினார். முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தின் மூலம்தான் சிவரஞ்சனி கதாநாயகியாக புகழ் பெற்றார். இளையராஜா தன்னுடைய மிகச் சிறந்த பாடல்கள் மூலம் உயிரூட்டிய அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து அதே நிறுவனத்திற்கு ராஜவர்மன் இன்னொரு படத்தை இயக்கினார். அதுதான் 'மணிக்குயில்'. முரளி, சாரதாப்ரீதா நடித்த அதுவும் வெற்றிப் படமே. அதே கால கட்டத்தில் ஏ.ஜி.எஸ். மூவீஸ் தயாரித்த 'தங்கக் கிளி' என்ற படத்தையும் ராஜவர்மன் இயக்கினார். முரளி கதாநாயகனாக நடித்தார். இந்த இரண்டு படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.
அந்தப் படம் திரைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, படவுலகில் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் நடந்த வேலை நிறுத்தத்தில் படத்துறை ராஜவர்மனை மறந்துவிட்டது. வேலை நிறுத்தத்திற்குப் பிறகு பல முயற்சிகளையும் அவர் செய்து பார்த்தார். எதுவும், சரியாக அமையவில்லை.
எனினும், ராஜவர்மன் வெறுமனே இருக்கவில்லை. செயல்பட்டுக் கொண்டே இருந்தார். செல்வா, செண்பகா நடித்த 'ஓடி வந்த மாப்பிள்ளை' என்ற இரண்டு மணி நேர டெலிஃபிலிமை அவர் இயக்கினார். சன் டி.வி.யில் அது ஒளிபரப்பானபோது, அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
அதற்குப் பிறகு 'பரிகாரம்' என்ற பெயரில் 2 மணி நேர டெலிஃபிலிம் ஒன்றை ராஜவர்மன் இயக்கினார். அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் நடித்தார்.
மிக விரைவில் 'மூங்கில் காடு' என்ற பெயரில் ஒரு படத்தை ராஜவர்மன் இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார்.
ராஜவர்மன் இயக்க இருக்கும் இன்னொரு படம் 'பாளையக்காரன்' பிரபல முன்னணி நடிகர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு நல்ல ஒரு தயாரிப்பாளரை ராஜவர்மன் தேடிக் கொண்டிருக்கிறார். கதையை ராஜவர்மன் கூறினார். கதையைக் கேட்கும்போதே, பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று மனதில் பட்டது. திறமை இருப்பவர்கள் தொடர்ந்து படத்துறையில் இயங்கிக் கொண்டே இருக்கலாம். அதற்கு ராஜவர்மனே உதாரணம்.