கனவு ராஜாக்கள் - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9293
எத்தனையோ கதைகள் கூறிய இயக்குனர் எய்ட்ஸ் நோயில் இறந்தார்!
சுரா
விருதுநகரைச் சேர்ந்த அவரின் உண்மைப் பெயர் ராஜேந்திரன். அந்த பெயர் சாதாரணமாக இருந்ததால், அவர் தன் பெயரை ஜெயராஜேந்திரன் என்று வைத்துக் கொண்டார். அந்தப் பெயருடன்தான் தமிழகமெங்கும் நடைபெற்ற பல நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அவரே நாடகங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருக்கிறார், இயக்கியிருக்கிறார்.
கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் ஜெயராஜேந்திரனுக்கு உண்டு. அந்தப் பெயரிலேயே சங்கிலி முருகன் தயாரித்த இரண்டு படங்களுக்கு கதை, வசனம் எழுதவும் செய்திருக்கிறார். முரளி கதாநாயகனாக நடித்த, 'நானும் இந்த ஊருதான்' படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும் இவரே.
எனக்கு ஜெயராஜேந்திரன் அறிமுகமானது 1991ஆம் ஆண்டில். பாண்டியராஜனை கதாநாயகனாகப் போட்டு, 'நல்ல மனசுக்காரன்' என்ற படத்தை அவர் இயக்கினார். அப்போது பல இடங்களிலும் அவர் என் பார்வையில் படுவார். தான் இயக்கும் படத்தின் வளர்ச்சியைப் பற்றி, அவ்வப்போது கூறுவார். நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த அந்தப் படம், திரைக்கு வந்த நேரத்தில் படாத பாடு பட்டது. பல சிரமங்களையும் தாண்டி வெளிவந்து ஒரு வாரம் கூட ஓடவில்லை.
சில மாதங்கள் கழித்து ஜெயராஜேந்திரனை தேனாம்பேட்டை சிக்னலுக்கு அருகில் இருக்கும் ரோஸ்லேண்ட் லாட்ஜில் பார்த்தேன். என்னை அவர் தான் இருந்த அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார். ஒரு படத்திற்கு கதை வசனம் எழுதுவதற்காக அறை போட்டிருப்பதாகச் சொன்னார். தான் இயக்க இருக்கும் அந்தப் புதிய படத்தின் கதையைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னிடம் சொன்ன அவர், படத்தின் பெயரைக்கூட சொன்னார். அந்தப் பெயர் ஞாபகத்தில் இல்லை. எனினும், அதற்குப் பிறகு அந்தப் படத்தை ஜெயராஜேந்திரன் இயக்கவில்லை.
அந்தச் சந்திப்பு நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவரை பேருந்தில் சந்தித்தேன். விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். ஆனால் அப்போதும் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை.
எனினும், அவ்வப்போது ஜெயராஜேந்திரன் என் கண்களில் பட மட்டும் செய்வார். அமைச்சர்களின் உதவியாளர்கள் அணிந்திருப்பதைப் போல சஃபாரி அணிந்து டிப்டாப்பாக காட்சியளிக்கும் ஜெயராஜேந்திரனின் கையில் எப்போதும் ஒரு ப்ரீஃப் கேஸ் இருக்கும். அதற்குள் டைரி, புகைப்படங்கள், கதை எழுதிய பேப்பர்கள் என்று எதையாவது வைத்திருப்பார்.
வருடங்கள் கடந்தோடின. ஒருநாள் சாலிகிராமத்தில் இருந்த என்னுடைய அலுவலகத்தைத் தேடி வந்தார் ஜெயராஜேந்திரன். வழக்கமான சஃபாரி உடை சகிதமாகத்தான். ப்ரீஃப் கேஸும் கையில் இருந்தது. அவரின் தோற்றத்தைப் பார்க்கும்போது, எனக்கு அந்தக் காலத்தில் பிரபல நடிகராக இருந்த கள்ளபார்ட் நடராஜன்தான் ஞாபகத்தில் வந்தார். அந்த அளவிற்கு அவர்கள் இருவருக்குமிடையே ஒரு உருவ ஒற்றுமை இருந்தது.
இப்போது தன்னுடைய பெயரை ராஜேஷ்வர்மா என்று நாகரீகமாக மாற்றிக் கொண்டு இருப்பதாக ஜெயராஜேந்திரன் சொன்னார். இனிமேல் தன் பெயர் ஜெயராஜேந்திரன் இல்லை என்றார். அதனால் இனி நாமும் அவரை ராஜேஷ்வர்மா என்றே அழைப்போம்.
தான் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக ராஜேஷ்வர்மா கூறினார். படத்தின் பெயர் 'ராயல் பேமிலி' என்றும், படத்தின் நாயகனாக நடிக்கிறவர் சரவணன் என்றும் சொன்னார். கிறிஸ்டி என்ற புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துவதாகக் கூறினார். அதற்கு அடுத்த வாரமே படத்திற்கான அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. நேசக்குமாரன் என்பவர் எல்லாப் பாடல்களையும் எழுதினார்.
தொடர்ந்து 'ராயல் பேமிலி' படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்தது.
படம் எதுவும் இல்லாமல் வெறுமனே வீட்டில் இருந்த சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக அந்தப் படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரவளி. வி.கே.ராமசாமி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போதுதான் எனக்கே தெரிய வந்தது- ராஜேஷ்வர்மா வி.கே.ராமசாமியின் நெருங்கிய உறவினர் என்ற விஷயம்.
படப்பிடிப்பின் போது படு உற்சாகமாக இருப்பார் ராஜேஷ்வர்மா. ‘’இந்தப் படம் முடிவடைந்ததும், இன்னொரு கதையை இயக்க இருக்கிறேன். அதில் கதாநாயகனாக நடிக்க போகிறவர் விஜயகாந்த். அவருக்கு இரட்டை வேடம். இதுவரை அவர் இப்படியொரு கதையில் நடித்ததே இல்லை. மிகச் சிறந்த படமாக அது வரும். அதற்குப் பிறகு வேறொரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியவர் விக்ரம்தான். அஜீத்திற்கு ஏற்ற ஒரு கதையையும் தயார் பண்ணி வைத்திருக்கிறேன்’’ என்றார் என்னிடம். அவர் சொன்ன இந்த விஷயங்கள் எதுவுமே நடைமுறையில் சாத்தியமில்லாதவை என்று எனக்கு நன்றாக தெரியும். எனினும், அதைச் சொல்லி அவருடைய ஆர்வத்தை ஏன் குறைக்க வேண்டும் என்று வாயை மூடிக் கொண்டேன். இத்தனை வருடங்கள் படத்துறையில் வலம் வந்தும், நடைமுறை சிந்தனையே இல்லாமல் இருக்கிறாரே ராஜேஷ்வர்மா என்று அப்போது நான் நினைத்துக் கொள்வேன்.
'ராயல் பேமிலி' படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. அந்தச் சூழ்நிலையில் ராஜேஷ் வர்மாவிற்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு மாத காலம் படுத்த படுக்கையாகக் கிடைந்தார். எய்ட்ஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். எங்கிருந்து அவருக்கு இந்த நோய் வந்ததோ தெரியவில்லை. ஒரு மாத காலம் நோயின் பிடியில் சிக்கிக் கிடந்த ராஜேஷ்வர்மா, ஒரு நாள் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார். அவர் மரணத்தைத் தழுவிய அதே நள்ளிரவு நேரத்தில். 'ராயல் பேமிலி' படத்தின் இசையமைப்பாளர் கிறிஸ்டி கிண்டிக்கு அருகில் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தது ஒரு எதிர்பாராத ஒற்றுமை என்றுதான் சொல்ல வேண்டும்.
'ராயல் பேமிலி' முதல் பிரதி தயாராகி வருடங்கள் பல கடந்துவிட்டன. எனினும், வியாபாரம் ஆகாததால், படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜெயராஜேந்திரன் என்ற ராஜேஷ்வர்மா என்ற ராஜேந்திரன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், ‘சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, பரத், கார்த்தி எல்லோருக்கும் ஏற்ற கதைகள் என்னிடம் இருக்கின்றன’ என்று கட்டாயம் என்னிடம் கூறியிருப்பார்.