கனவு ராஜாக்கள் - Page 6
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9293
டாக்டர் ராமதாஸை மிரட்டிய படத் தயாரிப்பாளர்!
சுரா
பட தயாரிப்பாளர்கள் கதை அறிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் ஏவி. மெய்யப்பச் செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜெமினி எஸ்.எஸ். வாசன் போன்றவர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதற்கு கதை பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது கூட ஒரு காரணம்.
இப்போது நம்மிடையே இருக்கும் படத் தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோருக்கு இந்த அறிவு சிறிதும் இல்லை என்பதே உண்மை. அவர்களுக்கிடையில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்கள் சிலரும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஞானவேல்.
அவரை எனக்கு இருபது வருடங்களுக்கு முன்பே தெரியும். தயாரிப்பாளர் காஜா மைதீன் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். தொழில் ரீதியான நண்பர்கள் அவர்கள். முரளியுடன் சேர்ந்து காஜா மைதீன் 'புதிய காற்று' படத்தைத் தயாரித்தபோது, காஜாவைப் பார்ப்பதற்காக ஞானவேல் வருவார். அவரை நான் பார்த்தது அங்குதான். நல்ல கதை அறிவு கொண்டவராக அவர் இருப்பதை அப்போதே நான் தெரிந்து கொண்டேன். பல படங்களின் கதைகளைப் பற்றியும் அவர் நுணுக்கமாக அலசிப் பேசுவார். ஞானவேலிடம் இருந்த கதை அறிவைப் பார்த்த இயக்குநர் கார்வண்ணன் அந்தப் படத்தின் கதை விவாதத்தின்போது அவரைத் தன்னுடன் வைத்துக் கொண்டார்.
'புதிய காற்று' படத்தின் கதை விவாதத்தில் பங்கு பெற்றதுடன் நின்றுவிடாமல், அந்தப் படத்தில் முதலமைச்சர் பாத்திரத்தில் ஞானவேல் நடிக்கவும் செய்தார். கம்பீரமான தோற்றத்துடன் அவர் முதலமைச்சர் கெட்-அப்பில் நடித்ததைப் பார்த்தபோது, அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் சரியாகப் பொருத்தியிருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். படம் முழுக்க வரும் ஒரு பெரிய கதாபாத்திரம் அது. ஞானவேல் அந்தப் பாத்திரத்திற்கு தன் திறமையால் சிறப்பு சேர்த்திருந்தார் என்பதுதான் உண்மை.
அதற்குப் பிறகு தான் இயக்கிய 'தொண்டன்' என்ற படத்திலும், கார்வண்ணன் ஞானவேலுக்கு ஒரு பெரிய கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார். தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் பாத்திரம் அது.
முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்காகப் போராடுபவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடித்திருந்தார். தொழிலதிபர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகளுக்கு குறைவான சம்பளத்தைக் கொடுத்து, அவர்களை தங்களின் தொழிற்சாலைகளில் வேலைகளில் ஈடுபடச் செய்வார்கள். கல்வி கற்க வேண்டிய வயதில் அவர்கள் வேலை பார்ப்பதா என்று கொதித்தெழும் டாக்டர் ராமதாஸ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார். தொழிலதிபர்களுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டம் சட்டமன்றத்தில் பேசப்படும். டாக்டர் ராமதாஸால் தொழிலதிபர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்று எண்ணும் அமைச்சர் ஞானவேல், டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்துப் பேசுவார். ஆரம்பத்தில் கனிவாகப் பேசும் ஞானவேல், படிப்படியாக எச்சரிக்கும் தொனியில் பேசுவார். 'தேவையில்லாமல் இந்த விஷயத்தில் தலையிட்டால், பின்னர் மோசமான விளைவு ஏற்படும். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்பார். அதற்கு டாக்டர் ராமதாஸ் அடிபணிந்து விடுவாரா என்ன?
இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது நான் அருகிலேயே இருந்தேன். எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் ஞானவேல், டாக்டர் ராமதாஸுடன் இயற்கையாக நடித்ததைப் பார்த்து நான் மனதிற்குள் அவரைப் பாராட்டினேன். 'தொண்டன்' படத்தில் டாக்டர் ராமதாஸுடன் ஞானவேல் நடித்த அந்தக் காட்சியையும், மிகவும் இயல்பாக அவர் வசனம் பேசி நடித்ததையும் படம் பார்த்த எல்லோரும் மனம் திறந்து பாராட்டினார்கள்.
ஞானவேல் நடித்த இன்னொரு படம் 'மாநகர் குற்றம்'. சமூக விரோதச் செயல்களைச் செய்யும் மனிதராக அவர் நடித்திருந்தார். ராஜன் சர்மா இயக்கிய அந்தப் படம் முற்றிலும் முடிவடைந்து விட்டது. எனினும், வியாபாரம் ஆகாததால், கிடப்பில் போடப்பட்டு விட்டது. படப்பிடிப்பின்போது ஞானவேலைப் பார்த்த நான் அந்தக் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக அவர் பொருந்தியிருப்பதாகச் சொன்னது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
நண்பர்களான ஞானவேல், காஜா மைதீன், ஜெயப்ரகாஷ் மூவரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம்தான் ரோஜா கம்பைன்ஸ். ஆரம்பத்தில் சில படங்கள் எடுக்கப்படும் வரையில் ஞானவேலும், ஜெயப்ரகாஷும் அந்நிறுவனத்தில் இருந்தார்கள். ஞானவேல் அந்நிறுவனத்தில் இருக்கும் வரையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றன. அதற்கு ஞானவேலின் கதை அறிவும், கதையைத் தேர்வு செய்யும் திறமையும்கூட காரணங்களாக இருந்திருக்கலாம்.
கருத்து வேறுபாடு காரணமாக காஜா மைதீனை விட்டு, தனியாகப் பிரிந்து வந்து 'ஜி.ஜே. சினிமா' என்ற பேனரில் பல படங்களை ஞானவேல் தன் நண்பர் ஜெயப்ரகாஷுடன் இணைந்து தயாரித்தார். 'செல்லமே', 'ஏப்ரல் மாதத்தில்' போன்ற படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றன. 'ஜூலி கணபதி' வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும், அது ஒரு மாறுபட்ட படைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
சில வருடங்களுக்கு முன்பு ஞானவேலுடன் சுமார் ஒரு மணி நேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குச் சொந்தமாக எழும்பூரில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில்தான் அந்தச் சந்திப்பு நடந்தது. ஞானவேலுவின் நல்ல ரசனையை அந்தச் சந்திப்பின்போது நான் உணர்ந்தேன். தனக்குப் பிடித்த இயக்குநர்கள் என்று அவர் மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாசில் ஆகியோரின் பெயர்களைக் கூறியபோது, எனக்கு அவர்மீது உயர்ந்த மதிப்பு தோன்றியது.
ஞானவேலுவின் திறமைக்கு அவர் இன்னும் உயரத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எனினும், நல்ல ரசனையும், கதை அறிவும் கொண்ட விரல் விட்டு எண்ணக் கூடிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த அவர், கடந்த சில வருடங்களாக படங்களெதையும் தயாரிக்கவில்லை. எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய அவருக்கு, படவுலகின் தற்போதைய ‘கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டிற்குள் ஓடும்’ போக்கு சிறிதும் பிடிக்காமல் போயிருக்கலாம். ஞானவேல் படங்களை தயாரிக்காவிட்டாலும், அவருடைய நண்பர் ஜெயப்ரகாஷ் இன்று பல வெற்றிப் படங்களிலும் நடித்து, முத்திரை பதித்து ஒரு மிகச் சிறந்த முன்னணி நடிகராக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். படங்களைத் தயாரித்து, கையில் இருக்கும் பணத்தை இழப்பதை விட வெறுமனே இருந்து கொண்டு நமக்கென்றிருக்கும் தொழிலில் முழுமையான கவனத்தைச் செலுத்துவோம் என்று நினைக்கும் ஞானவேலின் மன ஓட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு நல்ல ‘பிஸினஸ்மேன்’ அப்படித்தான் நடப்பார்!