கனவு ராஜாக்கள் - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9293
பாக்யராஜுக்கு கராத்தே கற்றுக் கொடுத்த மாஸ்டரின் வாழ்வில் ஆயிரம் சோகங்கள்...
சுரா
சிலரிடம் உண்மையாகவே மிகச் சிறந்த திறமைகள் இருக்கும். எனினும், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போவதால், அவர்களின் திறமை வெளியே தெரியாமலே போய்விடும். படவுலகில் இப்படிப்பட்ட விஷயத்தை கடந்த 30 வருடங்களாக நான் நிறையவே பார்த்து வருகிறேன். அத்தகைய ஒரு மனிதரைப் பற்றித்தான் இப்போது நான் கூறப் போகிறேன்.
அந்த மனிதரின் பெயர் ஜே.வி.எஸ். பாவா. எனினும், 1979ஆம் ஆண்டில் எனக்கு அவர் சென்னையில் அறிமுகமாகும்போது, அவரது பெயர் நெல்லை செல்வம். திருநெல்வேலியில் இருக்கும் பேட்டை பகுதியைச் சேர்ந்த அவர் ஒரு கராத்தே மாஸ்டர். கராத்தே, குங்க்ஃபூ, அக்கிடோ, பாக்ஸிங், சிலம்பம் ஆகிய விஷயங்களை முறையாகக் கற்றிருந்தார் அவர். அவர் செய்த சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சிகளை அமெரிக்காவிலிருக்கும் ஆரேகான் பல்கலைக்கழக்கத்திற்காக அரைமணி நேரம் வரக்கூடிய ஒரு விவரணப் படமாகக் கூட எடுத்திருக்கின்றனர்.
பலருக்கும் கராத்தே, சிலம்பம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், நான் அவரை ஒரு நடிகராகத்தான் பார்த்தேன். கலைஞர் வசனம் எழுதிய 'கண்ணம்மா' படத்தை இயக்கிய எஸ்.எஸ். விக்ரம் 1977ஆம் ஆண்டில் 'ஒட்டுமாங்கனி' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ஜெய்கணேஷ், பிரமீளா நடித்த அந்தப் படத்தில் செல்வம்தான் வில்லன். முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் என்ன காரணத்தாலோ திரைக்கு வரவில்லை.
நான் பார்க்கும்போது செல்வம் 'பச்சை சிரிப்பு', 'இடம் மாறிய பூக்கள்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். எனினும், சரியான பொருளாதார வசதி இல்லாத பட நிறுவனங்கள் தயாரித்த படங்களாக இருந்த காரணத்தால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்தப் படங்கள் வளராமல் நின்று விட்டன். 'நினைவுகள் மறைவதில்லை' என்ற படத்தில் ராஜீவ், கீதா நடிக்க, முக்கியமான பாத்திரத்தில் செல்வம் நடித்தார். அந்தப் படத்தில் அறிமுகமானவர்தான் ஊர்வசி. அந்தப் படம் முற்றிலும் முடிவடைந்தும், ஏனோ திரைக்கு வரவில்லை.
இதைத்தான் விதியின் விளையாட்டு என்று கூறுகிறார்களோ என்னவோ? முறையான சண்டைப் பயிற்சிகளைக் கற்றிருந்த ஒரு இளைஞர் தன் கலையுலகப் பயணத்தில் கால் வைத்த அத்தனை படங்களின் நிலைமையும் இப்படி ஆனதும், உண்மையாகவே அதிர்ந்து போய்விட்டார். எனினும், சோர்ந்து போய்விடவில்லை. நிச்சயம் சரியான வாய்ப்பு கிடைக்கும், படவுலகில் வெற்றிகரமாக பவனி வந்துவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.
படவாய்ப்பு கூறிக்கொள்கிற மாதிரி கிடைக்கவில்லை என்பதற்காக எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா? கையில் இருக்கும் தொழிலை பிறருக்கு பயனாக இருக்கும் வண்ணம் பயன்படுத்துவோமே என்று படவுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு கராத்தே, குங்க்ஃபூ போன்றவற்றை கற்றுத் தர ஆரம்பித்தார். அவரிடம் இந்த வகை சண்டைப் பயிற்சிகளை கற்றுக் கொண்டவர்கள் சில்க் ஸ்மிதா, பிரமீளா. மாஸ்டர் ஸ்ரீதர், அலெக்ஸ் பாண்டியன், சக்ரவர்த்தி, அபர்ணா, எம்.எஸ்.வசந்தி, 'சட்டம் என் கையில்' கதாநாயகி எலிசபெத் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்களை செல்வத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன். அவர் செல்வத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தன் பெயரை மாடர்னாக தினேஷ் என்று வைத்துக் கொண்டார் செல்வம். அப்போது பாக்யராஜ் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தை ஆரம்பிக்கும் நிலையில் இருந்தார். அதில் பாக்யராஜ் கராத்தே சண்டைகள் போடுவது மாதிரியெல்லாம் காட்சிகள் இருந்தன. அதற்காக தனக்கு தனிப்பட்ட முறையில் கராத்தே கற்றுத்தர ஒருவரைத் தேடினார் பாக்யராஜ். அதற்கென போய்ச் சேர்ந்தவர்தான் செல்வம். பாக்யராஜுக்கு கராத்தே பயிற்சி கொடுத்ததுடன், படத்தில் அவருடன் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து 'சம்சாரமே சரணம்', 'என் இதயராணி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.
நானும் செல்வமும் அவ்வப்போது பார்ப்போம். எப்போது பார்த்தாலும் மணிக்கணக்கில் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். இந்த சந்திப்பில் ஒரு நீண்ட இடைவெளி விழுந்தது. அதற்குக் காரணம்- செல்வம் ஆன்மீகப் பாதையில் நடைபோடப் போய்விட்டார். ஜே.வி.எஸ். பாவா என்று தன் பெயரை மாற்றி கொண்டு 'சர்வ சமய ஆலயம்' ஒன்றை திருநெல்வேலியில் ஆரம்பிக்கப் போவதாகக் கூறி, அதற்கு அடிக்கல் கூட நாட்டிவிட்டார். அந்த விழாவிற்குச் சென்றவர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நான் செல்வம் என்ற தினேஷை, ஜே.வி.எஸ். பாவா என்ற பெயரில் சந்தித்தேன். சிறந்த திறமையை வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தாமல் இருப்பதற்காக நான் அவரை செல்லமாகக் கோபித்தேன்.
சொன்னதோடு நிற்காமல் 'நிறங்கள்' என்ற பெயரில் சன் டி.வி.யில் ஒளிபரப்பான மெகா தொடரில் ஒரு அருமையான கதாபாத்திரத்தை பாவாவிற்கு நான் வாங்கிக் கொடுத்தேன். அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் தந்திருப்பதைப் பார்த்து ஏவி.எம். தயாரித்த 'திக் திக் திக்' என்ற தொடரில் ஒரு நல்ல பாத்திரத்தை அவருக்குத் தந்தார் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர். மங்கை, வம்சம், வாரிசு, சூலம், சின்ன பாப்பா பெரிய பாப்பா என பல தொடர்களில் அதற்குப் பிறகு பாவா நடித்தார்.
மீண்டும் பாவாவின் கலையுலக வாழ்க்கையில் ஒரு இடைவெளி. மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவியையும் மூத்த மகனையும் உடன் இருந்து கவனிப்பதற்கும், தன் இளைய மகனைப் படிக்க வைப்பதற்கும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மகன்களுக்கு சமையல் செய்து கொடுத்து, பார்த்துக் கொள்வதே பாவாதான். இந்த நிலைமையில் எப்படி நடிக்க முடியும்? படிப்பு முடிந்து பாவாவின் இளையமகன் வேலைக்குப் போகத் தொடங்கினார். இனி தன் கலையுலகப் பயணத்தைத் தொடரலாம் என்று தலையை உயர்த்தி பாவா பார்க்கும்போது, அவருடைய வயது 60ஐ தாண்டிவிட்டது. நடிப்பிற்கு வயது தடையா என்ன?
பாவாவின் கலைப் பயணம் மீண்டும் தொடர ஆரம்பித்தது. மேஜிக் ராதிகா தயாரித்த இயேசு பிரான் பற்றிய ஒரு ஆல்பத்தில் இயேசு கிறிஸ்துவாக நடித்ததே பாவாதான்.
பாண்டிபஜாருக்கு அருகில் இருந்த ஒரு தெருவில், ஒரு சிறிய அறையில் பாவா வாடகைக்கு தங்கியிருந்தார். நான் மாதத்திற்கு ஒருமுறையாவது அந்தப் பக்கம் செல்லும்போது, அவரைப் போய் பார்ப்பேன். நான் மொழிபெயர்க்கும் இலக்கிய நூல்களின் மீது அவருக்கு தீவிரமான ஈடுபாடு எப்போதும் உண்டு. அந்தக் கதைகளைப் பற்றியும், அதில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றியும் மிகவும் ஆர்வத்துடன் என்னுடன் உரையாடுவார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
இடையில் சில மாதங்கள் பாவா தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் திருநெல்வேலியிலிருந்து தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்ட அவர், நான் ‘ஆனந்த விகடன்’ இலவச இணைப்பாக எழுதியிருந்த ‘நலம் தரும் நல்லெண்ணெய்’ என்ற நூலை மிகவும் பாராட்டிப் பேசினார். இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அவர் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்த அவருடைய இளைய மகன் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் நல்ல ஒரு சம்பளத்தை வாங்கிக் கொண்டு பணியாற்றியிருக்கிறார். புனே கிளையில் பணியாற்றிய அந்த இளைஞருக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் உண்டாகியிருக்கிறது. தன்னுடைய சொந்த நாட்டிற்குச் சென்ற அந்த பெண், காதல் விஷயத்தில் தன் பெற்றோரின் சம்மதத்துடன் சில நாட்களில் திரும்பி வருவதாக அந்த இளைஞனிடம் கூறியிருக்கிறார். நாட்கள் கடந்தோடியிருக்கின்றன. அந்த இளைஞன் எதிர்பார்த்த சாதகமான பதில் அந்த இளம் பெண்ணிடமிருந்து வரவில்லை. அந்தப் பெண்ணின் வீட்டில் அந்தக் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. அந்தக் காதல் தோல்வியை அந்த இளைஞனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் வேலை, தன் பெற்றோர், தன் சம்பாத்தியம்- எதைப் பற்றியும் கவலைப்படாத அவர் ஒருநாள் தூக்கில் தொங்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்டார். தான் உயிருக்குயிராக வளர்த்த தன் அருமை மகன் இப்படி காதலில் சிக்கி தன் உயிரை போக்கிக்கொண்டு விட்டானே என்பதை நினைத்து அந்த அன்புத் தந்தை கதறிக் கதறி அழுதிருக்கிறார். என்னுடன் தொலைபேசியில் இந்தச் செய்தியை அப்படி அழுது கொண்டேதான் கூறினார் பாவா. அந்தச் செய்தியை கேட்டபோது, எனக்கே மிகவும் அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. என் அருமை நண்பரை வார்த்தைகளால் தேற்றுவதைவிட, வேறு என்ன என்னால் செய்துவிட முடியும்?
அதற்குப் பிறகு மாதங்கள் எவ்வளவோ கடந்தோடிவிட்டன. ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் தொலைபேசியில் என்னிடம், நான் சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கூறினார். அது – என் நண்பர் பாவா ஒரு மாதத்திற்கு முன்னால் சொந்த ஊரான திருநெல்வேலியில் மாரடைப்பில் மரணத்தைத் தழுவி விட்டார் என்பதுதான்.
குடும்பத்தில் உண்டான பல பிரச்சனைகளால் மன கவலைகளில் மூழ்கியிருந்த பாவாவிற்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை- அவருடைய இளைய மகன்தான். ஆனால், அந்த இளைஞனும் மரணத்தைத் தேடிச் சென்றுவிட்டதால், மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார் அவர். அந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியே பாவாவின் மரணம்.
திரையுலகில் மிகப் பெரிய கதாநாயகனாக வலம் வர வேண்டும் என்ற வேட்கையுடன் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வந்த நெல்லை செல்வம் என்ற கராத்தே மாஸ்டர் பின்னர் தினேஷ் என்றும் ஜே.வி.எஸ். பாவா என்றும் தன் பெயரை வேண்டுமானால் பல வகைகளில் மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால், அவருடைய திரையலக வாழ்க்கையில் பெருமையாகக் கூறிக் கொள்கிற அளவிற்கு பெரிய மாற்றங்கள் எதுவும் உண்டாகிவிடவில்லை. சொந்த வாழ்க்கையிலோ பிரச்சனைகள்... சோகங்கள்... அதிர்ச்சிகள்... எதிர்பாராத ஏமாற்றங்கள்... தாங்கிக் கொள்ள முடியாத இழப்புகள்...
எப்படியோ வந்திருக்க வேண்டிய ஒரு திறமை வாய்ந்த இளைஞரின்... என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்திருந்த ஒரு அருமையான நண்பரின் வாழ்க்கை, எந்தச் சாதனையும் புரியாமலே முடிந்துவிட்டது. அந்த வருத்தம் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையில், என் மனதில் என்றென்றைக்கும் இருக்கும்.