கனவு ராஜாக்கள் - Page 8
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9293
நடக்க முடியாத சிவாஜியைக் கைபிடித்து அழைத்துச் சென்ற தயாரிப்பாளர்!
சுரா
திரைப்பட உலகத்திற்கு சம்பந்தமே இல்லாத படிப்பைப் படித்துவிட்டு, சிலர் படத் துறையில் ஏதாவது முத்திரை பதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் காலடி எடுத்து வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் - கே.சொக்கலிங்கம்.
ஆரணியைச் சேர்ந்த இவர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜியில் பி.டெக். பட்டம் பெற்றவர். படித்து முடித்துவிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கும் பெரிய துணி ஆலைகளில் நிர்வாகியாகப் பணிபுரிந்தார். அடிப்படையிலேயே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த சொக்கலிங்கத்திற்கு தான் பணி புரிந்த வேலையிலும் நல்ல சம்பளம் கிடைத்தது. எனினும், அதையும் தாண்டி அவரிடம் கலையின் மீது ஒரு தீவிர ஈடுபாடும், மிகப் பெரிய ஆர்வமும் இருந்தது.
சென்னைக்கு வந்து, 'கண்ணீரில் எழுதுகிறேன்', 'பூஜைக்கு வராத பூக்கள்' என்ற பெயர்களில் அவர் கதை, வசனம் எழுதிய நாடகங்களை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். அவருடைய இந்த நாடகங்கள் சென்னையில் பல சபாக்களிலும் நடைபெற்று மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 'அவள் கல்லறையில் நான்' என்றொரு நாடகம். அதற்கு கதை, வசனம், இயக்கம் எல்லாமே சொக்கலிங்கம்தான். அந்நாடகத்திற்குத் தலைமை தாங்குவதற்காக 80களில் பிரபலமாக இருந்த ஒரு திரைப்பட இயக்குநரை சொக்கலிங்கம் அழைத்திருக்கிறார். அந்த இயக்குநரும் வந்திருந்து முழு நாடகத்தையும் பார்த்திருக்கிறார். அவருக்கு நாடகம் மிகவும் பிடித்து விட்டது. நாடகத்தை 'ஆஹா ஓஹோ' என்று பாராட்டியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு அந்த இயக்குநர் இயக்கிய ஒரு திரைப்படம் திரைக்கு வந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. போய்ப் பார்த்தால் அந்தக் கதை சொக்கலிங்கம் நாடகமாக நடத்திய கதை. அதைப் பார்த்து சொக்கலிங்கம் அதிர்ச்சியடைந்து விட்டார். நேராக அந்த இயக்குநரைப் பார்த்து தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு அந்த இயக்குநர் ஏதோ சமாதானம் கூறியிருக்கிறார். இருந்தாலும், சொக்கலிங்கம் சமாதானம் ஆகவேயில்லை. அது மாறாத வடுவாக அவர் மனதில் தங்கிவிட்டது.
பிரமீளா, எம்.ஆர்.ஆர். வாசு, ஐ.எஸ்.ஆர்., 'அய்யா தெரியாது' ராமாராவ், என்னத்தெ கன்னையா, வி.எஸ்.ராகவன், தாம்பரம் லலிதா என்று பலரும் சொக்கலிங்கத்தின் நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.
தன்னுடைய நாடகத்தின் கதையை திரைப்பட இயக்குநர் திருடிய நிகழ்ச்சி, சொக்கலிங்கத்தின் மனதில் ஒரு தீவிர எண்ணத்தை உண்டாக்கியது. அது- திரைப்படத் துறைக்குள் நுழைய வேண்டும் என்பதுதான். பல முறை அவர் படத்துறைக்குள் காலடி எடுத்து வைக்க முயற்சித்தார். ஆனால், உடனடியாக பலன் கிடைக்கவில்லை. நினைத்தவுடன் படத் துறைக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து விட்டால், படத் துறைக்கு எப்படி மதிப்பு இருக்கும்? அதற்காக சொக்கலிங்கம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்.
அதற்கு 1990ஆம் ஆண்டில் பலன் கிடைத்தது. நடிகர் ஐ.எஸ்.ஆர்., சொக்கலிங்கத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் சொக்கலிங்கத்தை இயக்குநர் வி.சி.குகநாதனிடம் அறிமுகம் செய்து வைத்தார். தன்னுடைய படவுலக கனவையும், அதற்காக தான் பல வருடங்களாக முயற்சி பண்ணிக் கொண்டிருப்பதையும் சொக்கலிங்கம் அவரிடம் கூறினார். அத்துடன் தானே ஒரு படத்தைச் சொந்தத்தில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அப்போது உருவான படம்தான் 'முதலாளியம்மா'. அப்படத்தை சொக்கலிங்கம் 'திருமுருகன் கம்பைன்ஸ்' என்ற பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க, வி.சி.குகநாதன் இயக்கினார்.
சொக்கலிங்கத்தின் நாடகங்களில் அவர் மிகவும் சிறப்பாக வசனம் எழுதியிருந்ததைப் பார்த்த குகநாதன், சொக்கலிங்கமே 'முதலாளியம்மா' படத்திற்கு வசனம் எழுதலாம் என்று கூறிவிட்டார்.
முதலாளியம்மாவாக அப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர் பிரமீளா. முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் எதுவுமே தெரியாத அப்பாவியாக பானுசந்தர் நடிக்க, ஊரையே ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் கொடூர குணம் கொண்ட பிரமீளாவின் கொட்டத்தை அடக்கும் பெண்ணாக கனகா நடித்திருந்தார்.
எனக்கு சொக்கலிங்கம் அறிமுகமானது 'முதலாளியம்மா' தயாரிப்பில் இருந்தபோதுதான். அப்போதே சொக்கலிங்கம் என்னுடைய நெருங்கிய நண்பராக ஆகிவிட்டார். தான் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை அவர் படித்துக் காட்டுவார். அவரிடம் நல்ல திறமை இருப்பதை உணர்ந்தேன். அதை வீணாக்காமல், நல்ல முறையில் பயன்படுத்தும்படி அவருக்கு ஆலோசனை கூறுவேன். 'முதலாளியம்மா' படப்பிடிப்பில் வசனம் அடங்கிய பேப்பர்களுடன் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பார் சொக்கலிங்கம்.
'முதலாளியம்மா' திரைக்கு வந்து 50 நாட்களைத் தாண்டி ஓடியது. எல்லோருக்கும் படத்தைப் பிடித்திருந்தது. இயக்குநர் வி.சி.குகநாதன், வசனகர்த்தாவும் தயாரிப்பாளருமான சொக்கலிங்கம் இருவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
தொடர்ந்து வி.சி.குகநாதன் இயக்கிய 'முதல் குரல்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் சொக்கலிங்கம். அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்ட அப்படத்தில் நியாயத்திற்காகப் போராடும் பத்திரிகையாளர் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தார். அப்போது மத்திய அரசாங்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவராக சிவாஜி இருந்தார். 'முதல் குரல்' படம் முடிவடையும் நிலையில் இருந்தபோது, சிவாஜிக்கு உடல் நிலையில் பாதிப்பு உண்டானது. அமெரிக்காவிற்குச் சென்று சிகிச்சை செய்துவிட்டு சிவாஜி திரும்பிய பிறகு, மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்தது. அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சொக்கலிங்கம், தான் இன்னும் மறக்காமல் இருக்கும் ஒரு விஷயத்தைக் கூறினார்.
''சிவாஜி கதாநாயகனாக நடித்த 'முதல் குரல்' முற்றிலும் முடிவடைந்துவிட்டது. முழுப் படத்தையும் பார்ப்பதற்காக நடிகர் திலகம் தி.நகரில் இருக்கும் தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டருக்கு தன் மனைவியுடன் வந்திருந்தார். படம் ஓடிக் கொண்டிருக்கும்போது, சிவாஜி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறவே, படம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. நடிகர் திலகம் என் தோளில் கைபோட, நான் அவரை பின்னால் இருந்த பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றேன். உடல் நலம் பாதிக்கப்பட்டு, நடக்கவே மிகவும் சிரமப்பட்டார் சிவாஜி. பாத்ரூமிற்குள் அவர் சிறுநீர் கழிக்க, நான் மிகவும் அருகில் இருந்து உதவினேன். என் தோளில் கையைப் போட்டுக் கொண்டே அவர் சிறுநீர் கழித்தார். 'யார் பெத்த பிள்ளையோ... நீ எனக்கு உதவியா இருக்கே! நீ நல்லா இருக்கணும்' என்று சிவாஜி அப்போது என்னை வாழ்த்தினார். எல்லோரையும் தன் அபார நடிப்பால் அழவைத்த அந்த நடிப்பு மேதையின் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த நிலையைப் பார்த்து, என் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது'' என்று சொக்கலிங்கம் கூறியபோது, அவருக்கு பேச்சே வரவில்லை. அதைக் கேட்கும்போது, எனக்குள்ளும் இனம் புரியாத சோகம் படர்ந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொக்கலிங்கம் மீண்டும் தயாரிப்பாளராக இப்போது காலடி எடுத்து வைத்திருக்கிறார். 'இதயத்தின் கதை' என்ற பெயரில் ஒரு படத்தை விரைவில் தயாரிக்க இருக்கும் சொக்கலிங்கம், மதுவினால் வரும் கெடுதல்களையும், அதனால் குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதையும் மையமாக வைத்து 'மயக்கமா கலக்கமா' என்ற பெயரில் தனித்தனிக் கதையாக உருவாக்கிய டி.வி. தொடர் ஒன்றையும் கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார். சொக்கலிங்கத்தின் கலையுலகக் கனவு இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது சந்தோஷமான விஷயம்தானே!