கனவு ராஜாக்கள் - Page 10
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9293
சூப்பர் ஸ்டாரின் குருநாதரான குள்ள நடிகர்!
சுரா
வந்தவாசிக்கு அருகில் உள்ள வரதராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிங்காங்கின் உண்மையான பெயர் சங்கர். விவசாயியின் மகனான கிங்காங்கிற்கு ஒரு அக்கா, மூன்று தங்கைகள். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இவர், ஊரில் இருக்கும்போதே அங்குள்ள ஒரு நாடகக்குழு நடத்திய பல நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு படத்துறையில் நுழைய வேண்டும் என்ற வேட்கையுடன் 1986ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து விட்டார். அப்போது கிங்காங்கின் உயரம் ஒன்றே முக்கால் அடிதான். உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி, படங்களில் நடிக்க முயற்சித்திருக்கிறார். நாளிதழ்களில் வரும் திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட செய்தியைப் படித்து விட்டு, அந்தப் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எங்கே இருக்கின்றன என்று கோடம்பாக்கம் தெருக்களில் அலைவதுதான் அவரின் அன்றாடச் செயலாக இருந்தது.
அப்படி ஒவ்வொரு படியாக ஏறி இறங்கியதற்கு பலன் கிடைக்காமல் போய்விடவில்லை. 'மீண்டும் மகான்’ படத்தில் எஸ்.வி.சேகருடன் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தை உத்தமன் என்பவர் இயக்கினார். எனினும், கிங்காங்கை எல்லோருக்கும் தெரிய வைத்தவர் இயக்குநர் 'கலைப்புலி' ஜி.சேகரன்தான். தான் இயக்கிய 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்' படத்தில் கிங்காங்கை படம் முழுக்க வரும்படி செய்தார் அவர். சங்கர் என்ற பெயரை கிங்காங் என்று மாற்றி வைத்தவரும் அவர்தான். 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்' படத்தில் கிங்காங்கிற்கு நல்ல பெயர். 'யார் இந்த குள்ள நடிகர்?' என்று படம் பார்த்த ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தார்கள்.
அந்தப் படத்தை அடுத்து கிங்காங்கிற்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. 'பட்டிக்காட்டுத் தம்பி', 'நெத்தியடி', 'அதிசயப் பிறவி', 'மகராசன்', 'சின்ன பசங்க நாங்க', 'சின்ன ஜமீன்', 'ஜமீன் கோட்டை', 'கிழக்கு கரை', 'தங்கக் கிளி', 'வீரப் பதக்கம்', 'பாஞ்சாலங் குறிச்சி', 'பேண்ட் மாஸ்டர்', 'சாமுண்டி', 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி', 'கருப்பசாமி குத்தகைதாரர்', 'போக்கிரி', 'என்னைப் பார் யோகம் வரும்' என்று கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து கிங்காங் நடிக்கிறார். இதுவரை அவர் நடித்திருக்கும் படங்கள் 150.
தமிழ் தவிர 11 தெலுங்குப் படங்களிலும், 10 கன்னடப் படங்களிலும், 2 மலையாளப் படங்களிலும், 4 இந்திப் படங்களிலும் கூட கிங்காங் நடித்திருக்கிறார். 'கூங்கட்' என்ற இந்திப் படத்தில் கிங்காங் மிகவும் சிறப்பாக நடனம் ஆடியிருப்பதைப் பார்த்து இந்தி நடிகர் கோவிந்தா ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டி இருக்கிறார்.
'வா அருகில் வா' படத்தில் எல்லோரையும் பழி வாங்கும் பொம்மையாக நடித்தவர் கிங்காங்தான். படத்தை இயக்கிய கலைவாணன் கண்ணதாசன், ஆரம்பத்திலேயே பொம்மை வேடத்தில் நடிக்க, கிங்காங் மட்டுமே பொருத்தமானவர் என்று உறுதியான குரலில் கூறிவிட்டாராம்.
'அதிசயப் பிறவி' படத்தில் குருவாக கிங்காங் நடிக்க, சிஷ்யனாக ரஜினி நடித்திருந்தார். கதைப்படி ரஜினிதான் குரு. கிங்காங்தான் சிஷ்யன். ரஜினி அதை மாற்றி விட்டிருக்கிறார். படம் முழுக்க கிங்காங்கை 'குருவே குருவே... ' என்றுதான் ரஜினி அழைப்பார். படப்பிடிப்பிற்கு வெளியே பார்க்கும்போது கூட 'என்ன குருவே?' என்றுதான் ரஜினிகாந்த் அழைப்பாராம்.
விவேக்குடன் 'பாஸ் மார்க்' படத்தில் காமெடி நடிப்பில் கலக்கிய கிங்காங், 'போக்கிரி', 'வாத்தியார்', 'கருப்பசாமி குத்தகைதாரர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வடிவேலுடன் சேர்ந்து 'பிறகு', 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினிகாந்துடன் 'சந்திரமுகி' படத்தில் கிங்காங் நடித்தும், நீளம் காரணமாக அந்த காட்சி படத்தில் இடம் பெறாமல் போய்விட்டது. அது குறித்து கிங்காங்கிற்கு அதிகமான மனவருத்தம் இருக்கிறது.
'பெஸ்ட் டான்ஸ்' என்ற பெயரில் 30 நபர்களைக் கொண்ட ஒரு நடனக்குழு வைத்திருக்கிறார் கிங்காங். அதன் மூலம் பல இடங்களுக்கும் சென்று நடன நிகழ்ச்சிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை 5000 மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கும் கிங்காங் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, துபாய் ஆகிய நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.
'சின்ன பசங்க நாங்க' படத்தின்போது நான் கிங்காங்கைச் சந்தித்தேன். உயரம் குறைவான மனிதராக இருந்தாலும், கிங்காங்கிடம் ஒரு அபார திறமை மறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு நெருப்பும், முழுமையான ஈடுபாடும் எப்போதும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மேடைகளில் எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம் கிங்காங் மிகவும் சிறப்பாக நடனம் ஆடுவதைப் பார்த்து என்னை மறந்து நான் கைகளைத் தட்டி இருக்கிறேன்.
நடிகராக ஆன பிறகு, கிங்காங் தன் பெற்றோரையும், மூன்று தங்கைகளையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். எம்.ஜி.ஆர். நகரில் சொந்தத்தில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் கிங்காங்கிற்குத் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
கிங்காங்கைத் தவிர, வீட்டில் யாருமே குள்ளமானவரில்லை. அதற்கான காரணம் என்ன என்பதுதான் கிங்காங்காலேயே புரிந்து கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.
‘இந்த உயரக் குறைவையே மூலதனமாக வைத்து பிழைத்துக் கொள்ளட்டும்' என்று இயற்கை நினைத்து விட்டிருக்குமோ?' என்று நான் கேட்டதற்கு, 'இருக்கலாம்' என்றார் கிங்காங்- ஒரு அழகான சிரிப்புடன்.
மூன்றே முக்கால் அடி உயரமே உள்ள கிங்காங்கின் முயற்சியும் உழைப்பும், பலரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். நான் கூற விரும்புவதும் அதுதான்...