கனவு ராஜாக்கள் - Page 14
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
இவரை நடுவில் நிற்க வைத்து, எம்.ஜி.ஆர். ஓரத்தில் நின்றார்!
சுரா
'ஹெர்குலிஸ்' தங்கவேல்- எனக்கு இவர் 1982ஆம் ஆண்டில் அறிமுகமானார். தமிழக அளவில் 'ஆணழகன்' பட்டத்தை வென்றிருந்த அவர் அப்போதுதான் படங்களில் நடிப்பதற்காக, சென்னை மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தார்.
நல்ல உடலமைப்பைக் கொண்டிருந்த தங்கவேலுக்கு ஆரம்பத்திலேயே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் இயக்குனர் கே.பாக்யராஜைப் போய் பார்க்க, அவர் தான் இயக்கிய 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அருமையான ஒரு கதாபாத்திரத்தைத் தந்தார். சண்டை கற்றுத் தரும் பயில்வானாக நம்பியார் நடிக்க, அவருடைய சீடனாக தங்கவேல் நடித்தார். ஒரு சண்டைக் காட்சியில் நம்பியாருக்கு அவர் 'டூப்' போட்டிருக்கிறார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'ஆட்டோ ராஜா' படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை தங்கவேலுக்கு இயக்குநர் கே.விஜயன் கொடுத்தார். அதில் மிகச் சிறப்பாக தங்கவேல் நடிக்க, அதைத் தொடர்ந்து விஜயசாந்தி கதாநாயகியாக நடித்து, தான் இயக்கிய 'நீறு பூத்த நெருப்பு' படத்திலும் நல்ல ஒரு கதாபாத்திரத்தை அவருக்கு கே.விஜயன் அளித்தார்.
ரஜினிகாந்த் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் தங்கவேல் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்கவே மாட்டார்கள். அதில் ஒரு நாடகக் காட்சி வரும். அந்தக் காட்சியில் கிருஷ்ண தேவராயராக ரஜினிகாந்த் நடிக்க, தெனாலி ராமனாக பாக்யராஜ் நடிப்பார். மங்கோலிய நாட்டு மன்னராக 'ஹெர்குலிஸ்' தங்கவேல் வருவார். ரஜினிக்கும், தங்க வேலுக்குமிடையே, யார் பலசாலி என்ற போட்டி நடக்கும். இருவரும் தங்கள் கைகளை பயன்படுத்தி பலத்தை நிரூபிப்பார்கள். இறுதியில் ரஜினி போட்டியில் வெற்றி பெறுவார். ரஜினி நடித்த படம் என்பதால் அந்தப் படத்தை எல்லோரும் பார்த்தார்கள். டி.வி.யில் அந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் இப்போது கூட சாலையில் தங்கவேலுவைப் பார்த்தால், ஓடி வந்து கை குலுக்குகிறார்கள் என்றால், சில நிமிடங்களே வரும் அந்த கதாபாத்திரம் எந்த அளவிற்கு படம் பார்ப்போரின் மனங்களில் பதிந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
பாக்யராஜ் தான் இயக்கிய 'தாவணிக் கனவுகள்' படத்தில் ராதிகாவைக் கெடுக்க முயலும் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தை தங்கவேலுக்குத் தந்தார். அதில் அவருடைய தோற்றமே மனதில் பயத்தை உண்டாக்கும் அளவிற்கு இருக்கும். அந்தப் படத்தைப் பார்த்த நடிகர் சிரஞ்சீவி தங்கவேலுவை அழைத்து தான் நடிக்கும் பல தெலுங்குப் படங்களில் அவரை நடிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சிரஞ்சீவி நடித்த பல படங்களில் நடித்த தங்கவேல், பின்னர் நாகார்ஜுனா, கிருஷ்ணம் ராஜு, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என்று எல்லா முன்னணி தெலுங்கு கதாநாயகர்கள் நடித்த படங்களிலும் நடித்திருக்கிறார். சண்டை போட்டிருக்கிறார். தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லால் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்த பல மலையாளப் படங்களிலும் கூட தங்கவேல் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். சில இந்திப் பட வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. மிதுன் சக்ரவர்த்திக்கு தங்கவேல் மீது மிகுந்த பாசம் உண்டு. ஒரு ஆங்கிலப் படத்திலும் தங்கவேல் பல வகைப்பட்ட சண்டைபோடும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். கலைக்கு மொழி ஏது?
பாக்யராஜ், ராதா இணைந்து நடித்த, 'எங்க சின்ன ராசா' படத்தில் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் தங்கவேல் நடித்திருந்தார். அந்தப் படம் முடிவடைந்த பிறகு, படத்தைப் பார்ப்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். குட்லக் ப்ரிவியூ தியேட்டருக்கு வந்திருக்கிறார். படம் முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர். தங்கவேலுவின் கையை இறுகப் பற்றி மகிழ்ச்சியுடன் குலுக்கியிருக்கிறார். அவர் இறுகப் பிடிக்கும்போது, அவருடைய கையிலிருக்கும் பலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்று விட்டாராம் தங்கவேல். அப்போது, தங்கவேலுவை நடுவில் நிற்க வைத்து, தானும் பாக்யராஜும் இரு பக்கங்களிலும் நிற்க, ஒரு புகைப்படத்தையும் எம்.ஜி.ஆர். எடுக்கச் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அருகில் ஒரு புகைப் படத்திலாவது நிற்க மாட்டோமா என்று லட்சக்கணக்கான மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க, தன்னை நடுவில் நிற்க வைத்து தனக்கு அருகில் எம்.ஜி.ஆர். நின்று எடுத்த அந்தப் புகைப் படத்தை ஒரு பொக்கிஷமாகவே பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார் தங்கவேல்.
விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக், அர்ஜுன் என்று எல்லா கதாநாயகர்களுடனும் நடித்திருக்கும், சண்டை போட்டிருக்கும் 'ஹெர்குலிஸ்' தங்கவேல் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் 'முதல் குரல்'. வி.சி.குகநாதன் இயக்கிய அந்தப் படத்தில் ஒரு பிரபல பத்திரிகையின் செய்தியாளராக சிவாஜி வருவார். அதில் வில்லனாக நடித்தவர் ஜெய்கணேஷ். ஜெய்கணேஷின் உதவியாளராக அதில் தங்கவேல் வருவார். நடிகர் திலகத்தைப் பார்த்து 'அரசாங்கத்தை எதிர்த்து மனம் போனபடி எழுதும் உன் கையை ஒடிப்பதற்குத்தான் நான் வந்திருக்கிறேன்' என்று தங்கவேல் வசனம் பேசி நடிக்க வேண்டும். அந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்னால் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த சிவாஜியைப் பார்த்து, மரியாதை நிமித்தமாக பணிவுடன் 'வணக்கம்' கூறியிருக்கிறார் தங்கவேல். ஆனால் சிவாஜியோ 'நீ எனக்கு வணக்கம் சொல்லாதே' என்று கூறியிருக்கிறார். தங்கவேலுக்கு ஒரே அதிர்ச்சி! நாம் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து குழம்பியிருக்கிறார். அப்போது சிவாஜி 'கதைப்படி நீ என்னை அடிக்க வந்திருக்கும் ஆள். நீ என்னைப் பார்த்து வணக்கம் சொன்னால் எப்படி?' என்றிருக்கிறார்- சிரித்துக் கொண்டே. அப்போதுதான் தங்கவேலுக்கு நிம்மதியே உண்டானதாம். நடிகர் திலகத்தின் நகைச்சுவை உணர்வைப் பார்த்து, அங்கு இருந்த எல்லோரும் தங்களை மறந்து சிரித்திருக்கிறார்கள். அஜீத், சூர்யா போன்ற இளம் தலைமுறை கதாநாயகர்கள் நடித்த படங்களிலும் தங்கவேல் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தற்போது நடிப்பு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் யோகா வகுப்புகளையும் தங்கவேல் நடத்திக் கொண்டிருக்கிறார். முறைப்படி யோகா கற்றிருக்கும் அவருடைய யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு பலரும் பயன்பெற்று வருகிறார்கள். ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், வலிப்பு போன்ற எல்லா வகையான நோய்களையும் தன்னுடைய யோகா பயிற்சிகளின் மூலம் குணப்படுத்தி வரும் தங்கவேல் தன்னுடைய யோகா கலை மூலம் எய்ட்ஸ் நோயை இல்லாமற் செய்ய முடியும் என்று சவால் விட்டுக் கூறுகிறார்.
படவுலகில் அவர் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில் நான் சந்தித்த தங்கவேல், இப்போதும் என்னை எங்கு பார்த்தாலும் நட்புடன் மனம் விட்டுப் பேசுவார். முரட்டுத்தனமான உடலமைப்பைக் கொண்டிருக்கும் அவருடைய எளிய குணமும், குழந்தைத்தனமான பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தன்னுடைய நான்கு தங்கைகளுக்கும் தான் சம்பாதித்த பணத்தில் திருமணம் செய்து வைத்து, ஒரு நிறைவான மனிதராக தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 'ஹெர்குலிஸ்' தங்கவேல், நான் மிகவும் விரும்பி பழகும் நண்பர்களில் ஒருவர் என்பதை பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன்.