கனவு ராஜாக்கள் - Page 18
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
சினிமா மக்கள் தொடர்பாளரின் காதலுக்கு உதவினார் விஜயகாந்த்!
சுரா
விஜயமுரளியை எனக்கு 1984ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். அப்போது அவர் முன்னணி திரைப்பட மக்கள் தொடர்பாளராக இருந்த கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சின்னாளபட்டியைச் சேர்ந்த விஜயமுரளியின் உண்மையான பெயர் முரளி. அவருடைய குடும்பம் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. அந்தத் தொழில் சொல்லிக் கொள்கிற மாதிரி கை கொடுக்காததால் முரளியின் தந்தை சென்னையில் ஏதாவது வேலை பார்க்கலாம் என்று ஊரை விட்டுக் கிளம்பி வந்து விட்டார். குடிசை மாற்று வாரியத்தில் சூப்பர்வைசராக அவருக்கு வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து முரளியின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் சென்னைக்கு வந்து விட்டார்கள்.
ஐந்தாம் வகுப்பு வரை சின்னாளபட்டியிலும் வேறு சில ஊர்களிலும் நடந்த முரளியின் படிப்பு சென்னையில் தொடர்ந்தது. எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்தத் துயரமான சம்பவம் நடந்தது. 1975ஆம் ஆண்டில் ஒரு நாள் தன் கண் துடிக்க, ரேஷன் வாங்கச் சென்றிருக்கும் முரளியின் தாய்க்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயந்த முரளியின் தந்தை அவரை உடனடியாக ரேஷன் கடைக்குப் போகச் சொல்லியிருக்கிறார்.
கலைவாணர் அரங்கத்திற்கு எதிரில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திரும்பும் இடத்தில் முரளியின் தாய் ரேஷன் பொருட்கள் வாங்கப்பட்ட பையுடன் நடந்து வந்திருக்கிறார். அப்போது ஒரு வாகனம் வேகமாக வர, அவரைத் தேடி வந்த முரளி தன் தாயைக் காப்பாற்றுவதற்காக அவரைப் பிடித்துத் தள்ளியிருக்கிறார். முரளியும், அவரின் அன்னையும் கீழே விழ, அரிசி சாலையில் கொட்டிக் கிடந்திருக்கிறது. எனினும், விபத்திலிருந்து தப்பித்தாகி விட்டது என்ற நிம்மதியுடன் வீட்டிற்கு வந்தால், முரளியின் வீட்டுக்கு முன்னால் ஒரே கூட்டம். தண்ணீர் வருவதற்காக உதவப் போன முரளியின் தந்தை மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்திருக்கிறார். அரை மணி நேரத்திற்கு முன்னால் துடிப்புடன் உட்கார்ந்திருந்த தன் தந்தை சில நிமிடங்களில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து முரளிக்கு உண்டான சோகத்திற்கு அளவே இல்லை.
முரளியின் தந்தை இறந்து விட்டதால், அவருடைய அண்ணனுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வேலை கிடைத்தது. அவருடைய இரண்டு தங்கைகளுக்கும் அரசாங்கம் 15,000 ரூபாய் வீதம் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்தியது.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த முரளி தன் குடும்ப நிலைமையை மனதில் எடை போட்டு ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று நினைத்தார். திருச்சியைச் சேர்ந்த அவருடைய உறவினர் ஒருவர் மூலம் அடையாறில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்த ஜி.கே.தர்மராஜின் அறிமுகம் முரளிக்குக் கிடைத்தது. அவருடைய அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக முரளி சேர்ந்தார். ‘அக்கரைப் பச்சை’. ‘இளைய தலைமுறை’ ஆகிய படங்களைத் தயாரித்தார் தர்மராஜ். அவர் தயாரித்த ‘வடைமாலை’ என்ற படத்திற்கு முரளி கேஷியராக உயர்ந்தார். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க ‘உன்னை விடமாட்டேன்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தார் தர்மராஜ். அதற்கு இளையராஜா இசையமைப்பாளர். வாலி கதை, வசனம், பாடல்களை எழுதினார். கே.சங்கர் இயக்குவதாக இருந்த அந்தப் படத்தின் பாடல் பதிவு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடந்தது. சில நாட்களில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடவே, அவர் படங்களில் நடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு விட்டது. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
ஜி.கே.தர்மராஜின் அந்த அலுவலகத்திற்கு அப்போது ‘மாலை முரசு’ நாளிதழின் சினிமா பகுதி ஆசிரியராகப் பணியாற்றிய செல்வகணேசன் வருவார். அவர் மிகவும் நெருக்கமாக முரளிக்கு அறிமுகமானார். வேலை எதுவும் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த முரளியை அவர்தான் திரைப் பட மக்கள் தொடர்பாளர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளராகச் சேர்த்து விட்டார். 1975ஆம் ஆண்டு கிளாமரின் உதவியாளராகச் சேர்ந்த முரளி 1985ஆம் ஆண்டு வரை சுமார் 300 படங்களுக்கு உதவியாளராக அவரிடம் பணியாற்றினார்.
இப்போதைய எந்த வசதிகளும் அந்தக் காலத்தில் இல்லை. அதிகாலையிலிருந்தே சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகையின் செய்தியாளர் வீட்டிற்கும், அவர்கள் பணியாற்றும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்களுடன் பயணிக்க வேண்டும். முரளி அதைத்தான் செய்தார். எனக்கு படக் காட்சிக்கான அழைப்பிதழ்களைத் தருவதற்காக எத்தனையோ முறை முரளி சைக்கிளில் வந்திருக்கிறார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட முரளியின் சுறுசுறுப்பைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் பணியாற்றியபோது, உதவியாளர் ‘நாகமுரளி’ என்று முரளியின் பெயர் படங்களின் டைட்டிலில் வரும். நாகரத்தினம் என்பது முரளியின் தந்தையின் பெயர்.
கிளாமர் கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளராகப் பணியாற்றியபோது, முரளிக்கும் கிராமரின் மகள் விஜயகுமாரிக்கும் இடையே காதல். ஆனால், அந்தக் காதலை ஏற்றுக் கொள்ள ஆரம்பத்தில் கிளாமர் மறுத்துவிட்டார். அப்போது முரளிக்கு ஆதரவாக கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியவர்கள் இராம நாராயணன், விஜயகாந்த், சந்திரசேகர், ராதாரவி ஆகியோர். அவர்கள் சொன்ன பிறகுதான் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி சம்மதிக்கவே செய்தார்.
திருமண நாளன்று, மண்டபத்தில் மின்சாரமே வரவில்லை. சாதாரண விளக்கு வெளிச்சத்தில் முரளி தாலியைக் கட்டினார்.
அதற்குப் பிறகு முரளி தன் மனைவியின் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்து ‘விஜய முரளி’யாக ஆனார். பல வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றிய முரளி தனித்து படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். ‘இரண்டு மனம்’, ‘ஹலோ யார் பேசுறது’, ‘மருதாணி’, ‘வெற்றிக் கனி’, ‘நான் உங்கள் ரசிகன்’, ‘கோயில் யானை’, ‘குங்குமப் பொட்டு’ ஆகிய படங்களுக்கு அவர் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினார். விஜயமுரளிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் நடிகர் திலகம் சிவாஜியும், ரஜினியும் இணைந்து நடித்த ‘படிக்காதவன்’. அதற்குப் பிறகு ‘நாட்டுக்கொரு நல்லவன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘அவ்வை சண்முகி’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘பாசப் பறவைகள்’, ‘பாடாத தேனீக்கள்’, ‘புயல் பாடும் பாட்டு’, ‘சாமுண்டி’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘வேலை கிடைச்சிருக்கு’, ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று ஏராளமான படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினார்.
தன் பல வருட படவுலக அனுபவங்களைக் கொண்டு விஜயமுரளி 1991ஆம் ஆண்டில் படத் தயாரிப்பாளராக மாறினார். ராமராஜனை கதாநாயகனாகப் போட்டு ‘மில் தொழிலாளி’ என்ற படத்தை பாண்டிச்சேரியைச் சேர்நத தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து அவர் தயாரித்தார். அதற்குப் பிறகு 1992இல் ஆனந்தராஜ் கதாநாயகனாக நடிக்க ‘போக்கிரித் தம்பி’ என்ற படத்தை அதே நண்பர்களுடன் இணைந்து அவர் தயாரித்தார். 2002ஆம் ஆண்டில் விஜயமுரளி மட்டும் தனியே பாண்டியராஜன் நடிக்க ‘வடக்கு வாசல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இப்போது ஒளிப்பதிவாளர் ரவீந்தர் இயக்கத்தில் ‘மூன்றாம் பெளர்ணமி’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். மிக விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. தன் தாய் மகாலட்சுமியின் பெயரைக் கொண்டு ‘மகா மூவி மேக்கர்ஸ்’ என்று தன்னுடைய பட நிறுவனத்திற்கு அவர் பெயர் வைத்திருக்கிறார்.
தன்னுடைய அண்ணன், தம்பி, இரண்டு சகோதரிகள் எல்லோருக்கும் விஜயமுரளியே செலவு செய்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் விஜயமுரளி.
விஜயமுரளிக்கு இரண்டு மகன்கள். தன் கடமைகளை நல்ல முறையில் நிறைவேற்றி இப்போதும் பிஸியான திரைப்பட மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டு வெற்றிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் விஜயமுரளியைப் பார்க்கும்போது, என் மனதில் தோன்றுவது- எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் சினிமா செய்திகளையும், அழைப்பிதழ்களையும் சைக்கிளில் வைத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களை நோக்கிப் பயணித்த அந்த ஒல்லியான உருவத்தைக் கொண்ட முரளி என்ற இளைஞனும், அவருடைய சுறுசுறுப்பும்தான்.