கனவு ராஜாக்கள் - Page 22
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
இந்த இசையமைப்பாளர் முன்னால்... ஹாரிஸ் ஜெயராஜ் பின்னால்...
சுரா
திருவாரூருக்கு அருகில் இருக்கும் அணக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் அமுதபாரதி. ஆனால், அப்போது அவருடைய பெயர் மோகன். பள்ளியில் படிக்கும்போதே இசையிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகம். பள்ளி விழாக்களில் பாடுவார். கட்டாயம் முதல் பரிசு அவருக்குத்தான். அதனால் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர். மிகவும் அருமையாக பாடல்களைப் பாடியதற்காக அவர் பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.
பி.எஸ்ஸி. வேதியியல் பட்டதாரியான அவர் 1986ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். சென்னைக்கு வந்ததற்கு முக்கிய காரணமே படவுலகில் இசையமைப்பாளராக வர வேண்டும் என்ற நோக்கம்தான். அவருடைய உறவினர்களும், நண்பர்களும் சென்னைக்கு சென்றால்தான் மனதில் நினைக்கிற மாதிரி பெரிய ஆளாக வர முடியும் என்று அவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். அந்த ஆர்வத்துடன் சென்னை மண்ணில் கால் வைத்த அவர் கர்நாடக இசையை முறைப்படி கற்க வேண்டும் என்று நினைத்தார். அப்போது கர்நாடக இசையைக் கற்றுக் கொடுப்பதில் மிகவும் பிரபலமாக இருந்த திருவையாறு கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ஆறு ஆண்டுகள் கர்நாடக இசையை அவர் முறைப்படி கற்றார்.
கர்நாடக இசையுடன் நின்றுவிடக் கூடாது, மேற்கத்திய இசையையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். மைலாப்பூரில் இளையராஜா மேற்கத்திய இசையைக் கற்ற தன்ராஜ் மாஸ்டரின் பெயரில் ஒரு இசை கற்பிக்கும் பள்ளியை அப்துல் சத்தார், ஜெகதீசன் என்ற இருவர் நடத்திக் கொண்டிருந்தார்கள். லண்டன் ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்கிற்காக அங்கு அவர் மேற்கத்திய இசையைக் கற்றார். அவருடைய இசைத் திறமையைப் பார்த்து அவ்விருவரும் மிகவும் ஆச்சரியப்பட்டனர். ஆரம்பத்திலேயே இரண்டாவது கிரேடில் தேர்ச்சி பெற்ற அவர் அடுத்து நான்காவது கிரேடிற்குத் தாவினார். அப்துல் சத்தாருக்கு அவர் மீது முழுமையான நம்பிக்கை. இருந்தாலும், ஜெகதீசனுக்கு அது பிடிக்கவில்லை. படிப்படியாக போவதுதான் சரி என்றார் அவர். வேகமாக தாவி, தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியாது என்றார் ஜெகதீசன். ஆனால், தான் நிச்சயம் மற்றவர்களைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குவேன் என்றார் அமுதபாரதி. சொன்னதைப் போலவே, தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினார். தன்னுடைய சவாலில் வெற்றி பெற்றதைக் கூற வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஜெகதீசனைத் தேடிப் போனார் அமுதபாரதி. ஆனால், அதற்கான வாய்ப்பை ஜெகதீசன் தரவில்லை. அதற்கு முந்தைய நாள்தான் ஹார்ட் அட்டாக்கில் அவர் மரணத்தைத் தழுவியிருந்தார். அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துவிட்டார் அமுதபாரதி. அவர் மேற்கத்திய இசை கற்ற இடத்தில், இசை கற்க வந்தவர்தான் இப்போதைய பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.
தொடர்ந்து ஜேக்கப் ஜான் என்பவரிடம் பியானோ இசைப்பதையும் அமுதபாரதி கற்றார்.
கர்நாடக இசை, மேற்கத்திய இசை, பியானோ ஆகியவற்றைக் கற்றாகிவிட்டது- இனிமேல் திரைப் படங்களுக்கு இசையமைக்க முயற்சிக்கலாம் என்று களத்தில் இறங்கினார். ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் எப்படி இசையமைக்கிறார் என்று அமுதபாரதி அருகில் இருந்து கொண்டு பார்த்தார். எம்.எஸ்.வி.யிடம் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போதே எம்.எஸ்.வி.க்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. அதற்குப் பிறகு பல முறைகள் அவர் எம்.எஸ்.வி.யைப் பார்த்திருக்கிறார். அமுதபாரதியை மெட்டுகள் போடச் சொல்லி எம்.எஸ்.வி. கேட்டிருக்கிறார். மிகவும் அருமையாக அவர் ட்யூன்கள் போடுவதை, மனம் திறந்து எம்.எஸ்.வி. பாராட்டியிருக்கிறார்.
இளையராஜா ‘நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் அவர் நுழைய முயற்சித்திருக்கிறார். ஆனால், வெளியே இருந்த காவலாளி உள்ளே விடவில்லை. அதற்காக அவர் மனம் தளரவில்லை. வெளியே வந்த இளையராஜாவிடம், பாடல் பதிவு நடப்பதை தான் பார்க்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார். இளையராஜா உள்ளே போய் உட்காரச் சொல்லியிருக்கிறார். இளையராஜாவின் அந்தப் பண்பு தன்னை மிகவும் கவர்ந்து விட்டது என்கிறார் அமுதபாரதி.
அவருக்கு திரைப்படத்திற்கு இசையமைக்கும் முதல் வாய்ப்பைத் தந்தவர் பியாரிலால் ஜெயின் என்ற தயாரிப்பாளர். 1998ஆம் ஆண்டில் அவர் தயாரித்த ‘ரத்னா’ என்ற படத்திற்கு அவர் இசையமைத்தார். அப்போது மோகன் என்ற தன் பெயரை சினிமாவிற்காக ஜெயசூர்யா என்று மாற்றி வைத்துக் கொண்டார். முரளி, சங்கீதா, ரேவதி ஆகியோர் நடித்த அந்தப் படத்தில் ‘வாடிப்பட்டி வடுகபட்டி’ என்ற பாடலை அவர் எழுதவும் செய்தார். தொடர்ந்து அதே தயாரிப்பாளர் தயாரித்த ‘முள்ளில் ரோஜா’ என்ற படத்திற்கும் அவர் இசையமைத்தார்.
மோகன் என்ற தன் பெயரை ஜெயசூர்யா என்று மாற்றி வைத்துக் கொண்டிருந்தவர் மூன்றாவதாக அமுதபாரதி என்று இப்போது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அமுதபாரதி என்ற பெயரைச் சூட்டியவர் நியூமராலாஜி நிபுணர் சி.வி.ராஜராஜன். டி.ராஜேந்தரை விஜய டி.ராஜேந்தராக மாற்றியவர் இதே ராஜராஜன்தான்.
கடந்த வருடம் அமுதபாரதி ‘கண்ணா நீ எனக்குத்தான்டா’ என்ற படத்திற்கு இசையமைத்தார். ஒளிமாறன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அவற்றில் ஐந்து பாடல்களை அமுதபாரதியே எழுதியிருக்கிறார். செந்தில்நாதன் இயக்கும் ‘காதல் மொழி’ என்ற படத்திற்கு அவர் தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்திற்குப் பிறகு ராஜகுமாரன் இயக்க, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருந்த படத்திற்காக அமுதபாரதி எல்லா ட்யூன்களையும் போட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால், லட்சுமி மூவி மேக்கர்ஸ் அந்தப் படத்தைத் தயாரிக்கவில்லை. அதே கதையை ‘காதலுடன்’ என்ற பெயரில் சொந்தமாக தயாரித்தார்கள் தேவயானியும், ராஜகுமாரனும். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். ஆனால், அமுதபாரதியின் நான்கு பாடல்களின் ட்யூன்களையும், பாடல் வரிகளையும் அப்படியே பயன்படுத்திக் கொண்டாராம் ராஜகுமாரன். போட்ட மெட்டுகளை அப்படியே கையாண்ட ராஜகுமாரன் வெறுமனே பாடல்கள் எழுதியவர் என்று மட்டும் தன்னுடைய பெயரை இடம் பெறச் செய்தது குறித்து அமுதபாரதி வருத்தப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
‘ரத்னா’ படத்தின்போது எனக்கு அறிமுகமான அமுதபாரதியிடம் இன்றைய முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களைத் தரும் அளவிற்கு அபார திறமை இருக்கிறது. படவுலகம்தான் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.