கனவு ராஜாக்கள் - Page 19
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
இசையமைப்பாளரின் பெயரை மாற்றி வைத்தார் மு.மேத்தா!
சுரா
இசையமைப்பாளர் வி.எஸ்.உதயாவை எனக்கு 1984ஆம் ஆண்டிலிருந்து தெரியும். சென்னை மாநிலக் கல்லூரியில் அப்போது அவர் பி.ஏ. (பொருளாதாரம்) படித்துக் கொண்டிருந்தார். ‘ராக தரங்கிணி’ என்ற பெயரில் ஒரு இசைக் குழுவை வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் என்னை வந்து சந்திப்பார். தானே கற்பனை பண்ணி சூழ்நிலைகளை உண்டாக்கி, அதற்கேற்றபடி பல புதுமையான ட்யூன்களை அமைத்து டேப் ரிக்கார்டரை கையோடு கொண்டு வந்து எனக்கு போட்டுக் காட்டுவார். சில நேரங்களில் கிட்டாரை இசைத்து, அவரே பாடியும் காட்டுவார். அவர் போட்டிருக்கும் ட்யூன்கள் இனிமையானவையாகவும், புதுமையானவையாகவும் இருக்கும். படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அப்போதே அவருக்கு இருந்தது.
உதயாவின் நண்பர் தேவதாசன் 1992ஆம் ஆண்டில் ‘மாநகர காதல்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கு உதயாவையே இசையமைப்பாளராகப் போட்டார். உதயாவின் இசையமைப்பில் ஆறு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. எனினும், சுவிட்சர்லாந்தில் இருக்கும் ரெமி ரெக்கார்டிங் நிறுவனம் ‘இரட்டை ரோஜா’ படத்துடன் இணைந்து ‘மாநகர காதல்’ படத்தின் பாடல்களை இசைத் தட்டாகக் கொண்டு வந்தது.
விக்ரம் தெலுங்கில் நடித்த ஒரு படத்தை தமிழில் ‘கண்டேன் சீதையை’ என்ற பெயரில் ‘டப்’ செய்தார்கள். தெலுங்கில் ஆர்.பி.பட்நாயக் இசையமைத்திருந்தார். ஆனால், அந்தப் படத்தில் பாடல்கள் இல்லை. தமிழில் ‘டப்’ செய்யும்போது, வி.எஸ்.உதயாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார்கள். தமிழ் வடிவத்தில் பாடல்கள் இடம் பெற்றன. எல்லா பாடல்களுக்கும் மிகவும் சிறப்பாக இசையமைத்திருந்தார் உதயா. ‘விஞ்ஞானத்தை நம்பி நீ தூங்காதடா தம்பி நீ இரண்டாயிரத்து ஆளு... நான் சொல்றதைக் கேளு’ என்ற பாடலை உதயாவின் இசையமைப்பில் சொந்தக் குரலில் பாடி நடித்தார் விவேக்.
2003ல் திரைக்கு வந்த ரஞ்சித் கதாநாயகனாக நடித்து, இயக்கிய ‘பீஷ்மர்’ படத்திற்கு உதயாதான் இசையமைப்பாளர்.
பல வருடங்களுக்கு முன்னால் ட்யூன்களைப் போட்டு வைத்துக் கொண்டு, டேப் ரிக்கார்டருடன் பல இயக்குநர்களையும் போய்ப் பார்த்தார் உதயா. இயக்குநர் பாரதிராஜாவைப் பார்க்க முயற்சி செய்து, கடைசி வரை பார்க்கவே முடியாமல் போய்விட்டது. நீண்ட காலம் முயற்சி செய்து எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில்தான் ‘இசை ஆல்பம்’ என்ற முயற்சியில் உதயா இறங்கினார். அந்த எண்ணத்தை அவரிடம் உண்டாக்கியது ‘மாநகர காதல்’ இசைத் தட்டை வெளியிட்ட சுவிட்சர்லாந்து, ரெமி ரெக்கார்டிங் நிறுவனம்தான்.
அந்நிறுவனம் வெளியிட்ட ‘இனிய காதலர்களே’ என்ற இசை ஆல்பத்தில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனையும் தேவாவையும் இணைந்து பாடும்படி உதயா செய்தார். மனசுக்குள் மழை, விடியல், உறவுகள், ஊஞ்சல் என்ற பல அருமையான இசை ஆல்பங்கள் வி.எஸ்.உதயாவின் இசையமைப்பில் வெளியே வந்து, உலகில் உள்ள தமிழர்களின் வீடுகளிலெல்லாம் ஒலித்தன. உதயாவின் இசைத் திறமையைப் பார்த்து வெளிநாடுகளில் இருந்த தமிழர்கள் அவரைப் பாராட்டினர். ரெமி ரெக்கார்டிங் நிறுவனம் உதயாவின் இசையமைப்பில் இதுவரை பதினைந்து இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறது.
நார்வே நாட்டைச் சேர்ந்த வசீகரன் என்பவரின் அறிமுகம் உதயாவிற்குக் கிடைத்தது. உதயாவின் இசைத் திறமையைப் பார்த்த அவர் ஒரு இசை ஆல்பத்தை தயாரிக்க முடிவு செய்தார். அப்படி உருவான இசை ஆல்பம்தான் ‘காதல் கடிதம்’. அந்த ஆல்பத்தில் இடம் பெற்ற எட்டு பாடல்களையும் வசீகரன் எழுத, உதயா இசையமைத்தார். உலகமெங்கும் அந்த இளமை தவழும் இசை ஆல்பம் நல்ல வரவேற்புடன் விற்பனை ஆனது.
சில வருடங்களுக்கு முன்னால் ‘மார்கழிப் பூவே’ என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. அதற்கு உதயாதான் இசையமைப்பாளர். பாடல் பதிவிற்கு அவர் என்னை அழைத்திருந்தார். சிங்களப் பாடகி நிரோஷாவை ஒரு பாடலைப் பாடுவதற்காக இலங்கையிலிருந்து அவர் வரவழைத்திருந்தார். ‘இன்னிசை மழைதனில் நனைகிறேன் குடை தேடாதே... இயற்கையின் அழகினில் இணைகிறேன் தடை போடாதே...’ என்ற மு.மேத்தாவின் பாடலை மிகவும் இனிமையாகப் பாடினார் நிரோஷா. அந்த பாடல் வரிகளும் நிரோஷாவின் இனிய குரலும் இப்போது கூட என் இதயத்திற்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தப் படம் சில வருடங்களுக்கு முன்னால் ‘காசு’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. ரகுமான், ராஜஸ்ரீ, சங்கீதா நடித்த அந்தப் படத்தை கவுரி மனோகர் இயக்கி இருந்தார்.
‘காதல் கடிதம்’ இசை ஆல்பத்திற்கு பாடல்கள் எழுதி, அதைத் தயாரித்த வசீகரன், உதயாவின் இசையமைப்பில் அடுத்து உருவாக்கிய இசை ஆல்பம் ‘காதல் மொழி’. அதில் இடம் பெற்ற பாடல்களையும் வசீகரனே எழுதினார். ‘காதல் கடிதம்’ இசை ஆல்பம் நார்வேயில் வெளியிடப்பட, அந்த விழாவிற்கு உதயா தன் மனைவியுடன் சென்றிருந்தார். 2004ஆம் ஆண்டில் நார்வே தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் கொண்டாடப்பட, அதற்கு தன்னுடைய இசைக் குழுவினருடன் சென்று, வி.எஸ்.உதயா இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இசை ஆல்பமாக வெளி வந்த ‘காதல் கடிதம்’ பாடல்களை வைத்து ஒரு திரைப் படத்தை உருவாக்கினால் என்ன என்ற சிந்தனை தோன்றவே, அதற்கான முயற்சியில் உதயா இறங்கினார். அவருடைய மனைவி வினோலியா பல பத்திரிகைகளில் கதைகள் எழுதுபவர். ‘காதல் கடிதம்’ என்ற பெயரிலேயே படம் தயாரானது. ஆல்பத்தில் இருந்த பாடல்களே படத்தில் இடம் பெற்றன. இலங்கையில் படமாக்கப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு அப்படம் திரைக்கு வந்தது. அதில் இடம் பெற்ற ‘யாழ்தேவியில் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்...’ என்ற பாடல் எல்லோராலும் பாடப்பட்டது.
மு.மேத்தா, பழனிபாரதி, விவேகா, அறிவுமதி, நந்தலாலா என்று பல பாடலாசிரியர்களும் உதயாவின் இசை ஆல்பங்களுக்கும், படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அனைத்து பிரபல பாடகர்களும், பாடகிகளும் அவரின் இசையமைப்பில் பாடியிருக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த ஜாக்சன் பாஸ்கோ, டென்மார்க்கைச் சேர்ந்த ஜனனி, சாம் பி.கீர்த்தன், பாடகர் கிருஷ்ணராஜின் மகள் ஜீவரேகா என்று பலரையும் அவர் பாட வைத்திருக்கிறார்.
பாட வாய்ப்புகள் பெரிய அளவில் இங்கு தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் சிறிது கூட இல்லை உதயாவிற்கு. உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் ரசிக்கக் கூடிய இசை ஆல்பங்களுக்கு இசையமைப்பதில் அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். நான் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தபோது ‘காதல் வானம்’ என்ற இசை ஆல்பத்திற்கு அவர் இசையமைத்துக் கொண்டிருந்தார். ஆல்பங்களில் இடம் பெற்ற பாடல்களை எனக்கு போட்டுக் காட்டினார். விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, பரத், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி போன்ற முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் இடம் பெறும் அளவிற்கு மிகவும் அருமையாக இருந்தன அந்தப் பாடல்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகள் உதயாவைத் தேடி வந்தன. அவர் இசையமைத்த ‘பரவசம்’ என்ற திரைப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. உதயாவின் இசையில் ‘மன்னாரு’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து, பேசப்படும் படமாக இருந்தது.
சமீபத்தில் அவருக்கு ஒப்பந்தமாகியிருக்கும் படம் ‘பேருந்து தினம்’. மிகவும் மாறுபட்ட இளமை ததும்பும் கவித்துவம் நிறைந்த அந்தப் படத்தில் உதயா தன்னுடைய திறமையைக் காண்பிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன என்பதை அந்தப் படத்தின் விளம்பரங்களிலிருந்து என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.
வி.எஸ். உதயா என்ற தன்னுடைய பெயரை இப்போது அவர் உதயன் என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பெயர் மாற்றத்திற்கு மூல காரணமாக இருந்தவர் கவிஞர் மு.மேத்தா. “உதயா என்றால் உதயமாகாது என்ற அர்த்தம் வருகிறது. அதனால் உங்களுடைய பெயரை இனிமேல் ‘உதயன்’ என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார் கவிஞர் மேத்தா.
இசைத் திறமை இருக்கும் பட்சம், எந்த வடிவத்திலாவது செயல்பட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதற்கு உதயா என்ற உதயனே எடுத்துக்காட்டு. 1984ஆம் ஆண்டில் ஒரு கல்லூரி மாணவராக என்னை வந்து சந்தித்த உதயாவையும், இப்போது உலகமெங்கிலும் உள்ள தமிழர்களின் இதயங்களில் இசை அருவியைப் பொழியச் செய்து கொண்டிருக்கும் உதயனையும் நினைத்துப் பார்க்கும்போது, அவருடைய தளராத முயற்சிகளும், கடின உழைப்பும், இசைத் திறமையும், புதுமை செய்ய வேண்டும் என்ற வெறியும்தான் என் மனதில் தோன்றுகின்றன.
உதயன் என்று தன்னுடைய பெயரை பாசிட்டிவ்வாக மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் வி.எஸ்.உதயாவின் இனி வரும் நாட்கள் உதயமானவையாக இருக்கட்டும் என்று ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் நான் வாழ்த்துகிறேன்.