கனவு ராஜாக்கள் - Page 20
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
பட தயாரிப்பாளரை பொய் சொல்லி ஏமாற்றினார்கள் உறவினர்கள்!
சுரா
‘ஒரு வார்த்தை பேசு’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பவர் ஏ.ஜி.மெய்யப்பன். பொறியியல் பட்டம் பெற்றிருக்கும் விமல் என்ற புதுமுக கதாநாயகனையும், ‘காதல்’ படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யாவை கதாநாயகியாகவும் வைத்து படத்தை அவர் தயாரிக்கிறார்.30 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏ.ஜி.மெய்யப்பன் எனக்கு அறிமுகமானார். காரைக்குடிக்கு அருகில் இருக்கும் கல்லுப்பட்டி அவரின் சொந்த ஊர். பரமக்குடியில் ‘நித்யா டிரைவிங் பள்ளி’ என்ற பெயரில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அதன் மூலம் இதுவரை 22,000 பேருக்கு அவர் ஓட்டுனர் பயிற்சி அளித்திருக்கிறார். அவரிடம் ஓட்டுனர் பயிற்சி பெற்ற 1600 பேர் தற்போது பேருந்துகளை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் அரசாங்கத்தின் அனுமதி பெற்று லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யும் தொழிலையும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மெய்யப்பனின் தந்தை முல்லை கணேசன் நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேவராஜ் – மோகன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். அவர் வெளியே வந்து தனித்து இயக்கிய ஒரு படம் பாதியிலேயே நின்று விட்டது. அதற்குப் பிறகு அவர் தன்னுடைய சொந்த ஊருக்குப் போய் விட்டார். 1997ஆம் ஆண்டில் தேவகோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு மெய்யப்பனின் தந்தை பாத யாத்திரை சென்றிருக்கிறார். திருச்செந்தூர் கோவிலுக்குப் போய் விட்டு திரும்பி வரும் போது, தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்த ஒரு தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டார்.
தன் தந்தை படவுலகம் பற்றிய பல விஷயங்களையும் கூற, மெய்யப்பனுக்கு கலைத் துறை மீது மிகுந்த ஈடுபாடு உண்டாகி விட்டது. தன்னுடைய தந்தை மேலே வராமற் போன படவுலகில், தான் எப்படியும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் மெய்யப்பன் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.
உதயம் ராஜரிஷி என்பவர் இயக்கும் ‘ஒரு வார்த்தை பேசு’ படத்தின் கதை- வசனத்தையும் மெய்யப்பனே எழுதியிருக்கிறார். ‘சின்னத்தம்பி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஒளிப்பதிவு செய்யும் அப்படத்தில் செல்வராஜா என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். அப்படத்தில் ஒரு பாடலையும் மெய்யப்பன் எழுதியிருக்கிறார். ‘பித்துப் பிடிச்ச மாமனுக்கு என் மேல கண்ணோட்டம் முத்துப் போல வந்து நின்னா நிக்கிறியே கல்லாட்டம்... தம்புராட்டி அம்மனுக்கு காலமெல்லாம் கொண்டாட்டம்’ என்று தொடங்கும் அவர் எழுதிய பாடல் படத்தில் ஒரு கோவில் திருவிழா காட்சியின்போது இடம் பெறுகிறது.
அண்ணன் – தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் அப்படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் மெய்யப்பன். அவர் நடித்த பல காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டு விட்டன. படங்களில் நடித்த அனுபவம் எதுவும் இல்லையென்றாலும், மிகவும் இயல்பாக நடித்த மெய்யப்பனை அவருடன் நடித்த ‘நிழல்கள்’ ரவி, வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர் என்று பலரும் பாராட்டி இருக்கின்றனர்.
‘ஒரு வார்த்தை பேசு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சில வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய ஊருக்குச் சென்ற மெய்யப்பனின் வாழ்க்கையில் விதி விளையாடிய விளையாட்டை என்னவென்று கூறுவது?
ஊராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, ஊருக்குச் சென்ற மெய்யப்பன் ஒரு அதிகாலைப் பொழுதில் மோட்டார் பைக்கில் தன் மனைவி, மூன்று வயதே ஆன கடைசி மகன் ஆகியோருடன் பரமக்குடியிலிருந்து கல்லுப்பட்டிக்கு பயணம் செய்திருக்கிறார். எதிரில் வந்த சைக்கிள் மீது மோதி விடப் போகிறோமே என்று நினைத்து பைக்கை வலது பக்கம் திருப்பியிருக்கிறார். சைக்கிளில் பயணம் செய்தவர் தப்பித்து விட்டார். ஆனால், மெய்யப்பனின் பைக் இடது புறமாக கீழே சாய்ந்து, சாலையில் கிடந்த கல் ஒன்று மெய்யப்பனின் இடது பக்க நெற்றிக்குள் போய் விட்டது. சம்பவம் நடந்த இடத்திலேயே மெய்யப்பன் தன் சுய நினைவை இழந்து விட்டார். அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறி விட்டார்கள். ஆனால், உறவினர் ஒருவர் கையைத் தொட்டுப் பார்த்தபோது நாடித் துடிப்பு இருந்திருக்கிறது.
உடனடியாக மெய்யப்பனை மதுரையில் உள்ள ஜவஹர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மெய்யப்பனின் உயிர் மீது நம்பிக்கை இல்லாமலிருந்த மருத்துவர்கள், அவருடைய மனைவி அழுவதைப் பார்த்து இரக்கப்பட்டு ஆப்பரேஷன் செய்ய சம்மதித்திருக்கிறார்கள்.
ஆப்பரேஷன் செய்து, நெற்றிக்குள் இருந்த கல்லை எடுத்து விட்டார்கள். ‘ஆனால், இடது கண்ணில் பார்வை தெரியாது. ஞாபகங்கள் இருக்காது, பேசும் சக்தி இருக்காது’ என்று அங்கிருந்த மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டதும், மெய்யப்பனின் மனைவிக்கும், உறவினர்களுக்கும் உண்டான அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
எனினும், பல நாட்கள் மெய்யப்பன் மருத்துவமனையிலேயே இருந்திருக்கிறார். விபத்து நடந்த விஷயம் அவருக்கு ஞாபகத்திலேயே இல்லை. ‘நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?’ என்று அவர் கேட்டதற்கு ‘மும்பையில் படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்காக வந்திருக்கிறோம்’ என்றிருக்கிறார் அவருடைய சித்தப்பா கருப்பன் செட்டியார். அவர்தான் மெய்யப்பனை அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டவர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகும், அதே பொய்தான் மெய்யப்பனுக்குக் கூறப்பட்டிருக்கிறது. விபத்து நடந்து பல நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் சாலையோரத்தில் அமர்ந்திருந்தபோது, ‘மதுரை’ என்ற பெயர் பலகையுடன் ஒரு பேருந்து போயிருக்கிறது. வலது கண் மூலம் மங்கலாக அதைப் பார்த்த மெய்யப்பன் ‘தமிழில் பெயர் பலகை இருக்கிறதே?’ என்று தன் சித்தப்பாவிடம் கேட்டிருக்கிறார். தொடர்ந்து கம்பம், திருச்சி, குமுளி என்று பல பேருந்து பெயர் பலகைகளையும் பார்த்து, அதே கேள்வியை திரும்பவும் அவர் கேட்டிருக்கிறார். ‘அவை எல்லாமே மும்பையிலிருந்து தமிழகத்திற்குச் செல்லும் பேருந்துகள் தான்’ என்றிருக்கிறார் அவருடைய சித்தப்பா. அப்போது மெய்யப்பன் இடது பக்கத்தில் பார்க்க, ‘பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்’ என்று இருந்திருக்கிறது. அதற்கு எதிரில்தானே நமக்குச் சொந்தமான டிரைவிங் பள்ளி இருக்கிறது என்ற எண்ணத்துடன் அவர் திரும்பிப் பார்த்தால், ‘நித்யா டிரைவிங் ஸ்கூல்’ என்ற பெயர் பலகை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு எல்லா உண்மைகளையும் மெய்யப்பனின் சித்தப்பா அவரிடம் கூறி விட்டார். மெய்யப்பனுக்கு விபத்து நடந்த விஷயமே அப்போதுதான் தெரிந்திருக்கிறது.
மருத்துவமனையில் இருந்தபோது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டதற்கு, ‘என் பெயர் செபஸ்தியார்’ என்றிருக்கிறார் மெய்யப்பன். நினைவுகள் வந்து பேச ஆரம்பித்த பிறகு, அவரை விபத்து நடைபெற்ற காயா ஓடை என்ற கிராமத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மரணத்தின் மடியிலிருந்து திரும்பி வந்த மெய்யப்பன் மீது அந்த ஊர் மக்கள் பொழிந்த அன்பிற்கு அளவே இல்லை. அப்போது விசாரித்தபோது, ஒரு உண்மை தெரிய வந்தது. விபத்து நடந்த இடத்திற்குச் சற்று தள்ளி ‘செபஸ்தியார் திருக்கோவில்’ என்ற கிறிஸ்தவ ஆலயம் இருந்திருக்கிறது. விபத்து நடைபெறுவதற்குச் சற்று முன்பு பைக்கில் வரும்போது அந்தப் பெயரை மெய்யப்பன் பார்த்திருக்கிறார். அதனால்தான் அந்தப் பெயர் அவருடைய மனதில் ஆழமாக பதிந்து விட்டிருக்கிறது.
கல்லுப்பட்டியில் வேலாயுதசுவாமி திருக்கோவிலையும், ராஜகோபுரத்தையும் தன் சொந்தச் செலவில் 1998இல் கட்டியிருக்கும் மெய்யப்பன் தன்னுடைய 10வது வயதில் இருந்து கல்லுப்பட்டியிலிருந்து பழனிக்கு 167 கிலோ மீட்டர் கால் நடையாக நடந்து, கடந்த 35 வருடங்களாக ஒவ்வொரு தைப் பூசத்தின்போதும் பாத யாத்திரை சென்றிருக்கிறார். தன்னுடைய மகன்கள் மூவருக்கும் பழனியப்பன், கார்த்திகேயன், சிவசுப்ரமணியன் என்று பெயர் வைத்திருக்கிறார்.
அவருக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள், ‘நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம். நன்றி சொல்ல வேண்டியது கடவுளுக்குத்தான்’ என்று கூறினார்களாம். தன்னை உயிருடன் இருக்கச் செய்தவர்கள் தான் வணங்கும் முருகப் பெருமானும், விபத்து நடந்த இடத்தில் இருந்த தேவாலயத்தில் குடியிருக்கும் இயேசுவும்தான் என்று நம்பும் மெய்யப்பனுக்கு நினைவுகள் வந்து விட்டன. பேச்சாற்றல் வந்து விட்டது. வலக்கண் பார்வை மட்டுமே தெரிகிறது. இடக் கண் பார்வை முற்றிலுமாக இல்லாமற் போய் விட்டது. அதுவும் தான் வணங்கும் கடவுளின் அருளால் சீக்கிரமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் மெய்யப்பன்.
மெய்யப்பனைப் பற்றி நான் எழுதிய இந்தக் கட்டுரை பிரசுரமான ‘வண்ணத்திரை’ வார இதழைப் படித்த ‘கொடைக்கானல்’ படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன், சொந்த ஊரிலிருந்த மெய்யப்பனைத் தொடர்பு கொண்டு, அவரை நேரில் சென்னைக்கு வரவழைத்து பேசியிருக்கிறார். ‘உங்களுடைய சோகக் கதையை வாசித்தேன். மிகவும் வருத்தப் பட்டேன். மிகப் பெரிய தொகையை படத்தில் முதலீடு செய்துவிட்டு மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் உதவ வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் தயாரித்த ‘ஒரு வார்த்தை பேசு’ படத்தை நானே ஏற்று நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக இருங்கள். நீங்கள் முதலீடு செய்த பணத்தை இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கூறியிருக்கிறார் ராஜேந்திரன்.
அதைத் தொடர்ந்து ‘ஒரு வார்த்தை பேசு’ படத்தின் படப் பிடிப்பு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமானது. அய்யப்பன் தாங்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ரகஸியா பங்கு பெற்ற கவர்ச்சி நிறைந்த ஒரு பாடல் காட்சி அது. அந்த காட்சியில் மெய்யப்பனும் கலந்து கொண்டு ஆடினார். அதற்குப் பிறகு தியாகராய நகரில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருக்கிறது.
‘வாழ்க்கையில் சோதனைகளைத் தாண்டித்தான் சாதனைகளா?’ – மெய்யப்பனின் வாழ்க்கையை கூர்ந்து பார்க்கும்போது நமக்கு இந்த கேள்வியைத்தான் கேட்க தோன்றுகிறது.