கனவு ராஜாக்கள் - Page 23
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
மு.க.ஸ்டாலினுக்கு வசனம் சொல்லி கொடுத்தவர்!
சுரா
நான் அறந்தாங்கி சங்கரைப் பார்த்தது 1988ஆம் ஆண்டில். அப்போது அவர் ஒரு திரைப்பட இயக்குநரிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன் எறும்பைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த சங்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்ற கனவுடன் எம்.காம். முடித்துவிட்டு சென்னையைத் தேடி வந்தவர் அவர். தினத்தந்தி, தினமலர், இதயம் பேசுகிறது, தாய் என பல பத்திரிகைகளிலும் சிறுகதைகள் எழுதியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.
அதற்குப் பிறகு நான் அவரைப் பார்த்தது வி.சி.குகநாதனின் அலுவலகத்தில். வி.சி.குகநாதன் தயாரித்த 'முதலாளியம்மா', 'முதல் குரல்' ஆகிய படங்களில் வசன உதவியாளராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஏராளமான விளம்பரப் படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். சென்னைத் தொலைக்காட்சியில் மனோரமா நடித்து ஒளிபரப்பான 'அன்புள்ள அம்மா', மு.க. ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கிய நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்', பட்டுக்கோட்டை பிரபாகரின் கதையான 'பரத் சுசீலா' குட்டி பத்மினி தயாரித்த 'வைஷாலி' போன்ற பல தொடர்களிலும் உதவி இயக்குநராக சங்கர் பணியாற்றினார்.
தன்னுடைய பல வருட தொலைக்காட்சித் தொடர் அனுபவங்களை வைத்து விக்கிரமனின் கதையான 'நிம்மதி', ஆர்.வி. எழுதிய ‘வெள்ளிக்கிழமையில் ஒரு கன்னிப் பெண்', வையவன் எழுதிய ‘ஆண்மை’, வல்லிக்கண்ணன் எழுதிய 'அருமையான துணை', கே.பி. நீலமணி எழுதிய 'ஓடும் ரயிலில் ஒரு சரணாகதி' ஆகிய தொடர்களை சங்கர் சொந்தத்தில் தயாரித்தார்.
'மெட்டி ஒலி' திருமுருகனை இயக்குநராகப் போட்டு 1998 ஆம் ஆண்டில் சங்கர் தயாரித்த 13 வார தொடர் 'கோகுலம் காலனி'. அது சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் 33 வாரங்கள் ஒளிபரப்பான 'அப்பு குப்பு' என்ற தொடரை அவர் தயாரிக்க, கே.எம்.பாலகிருஷ்ணன் இயக்கினார். தொடர் முழுக்க வரும் ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் 'மெட்டி ஒலி' திருமுருகனும், பாண்டு என்ற கதாபாத்திரத்தில் சங்கரும் நடித்தார்கள்.
இவை தவிர சில தொடர்களுக்கு கதை, வசனம் எழுதி சங்கரே இயக்கவும் செய்தார்.
நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பல பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் சங்கரை நான் அவ்வப்போது பார்ப்பேன். ஆரம்பத்தில் நான் பார்த்த அதே சுறுசுறுப்பான சங்கராகவே எப்போதும் அவர் என் கண்களில் படுவார்.
தொலைக்காட்சித் தொடர்களில் பிஸியாக இருந்த காலகட்டத்திலேயே 'தமிழரசி' பத்திரிகையில் ரிப்போர்ட்டராகவும் அவர் பணியாற்றினார். ஒரு கவிதைத் தொகுப்பையும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், சிறுவர்களுக்கான இரண்டு புதினங்களையும், ஒரு வாழ்வு முன்னேற்ற நூலையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
எடிட்டர் லெனினை இயக்குநராகப் போட்டு, 'செடியும் சிறுமியும்' என்ற குறும்படத்தை அவர் தயாரித்திருக்கிறார். சங்கர் எழுதிய 'பூச்சி அரித்த கன்று' என்ற சிறுகதை தமிழக அரசு வெளியிட்ட 8ஆம் வகுப்பிற்கான தமிழ்த் துணைப்பாட நூலில் இடம் பெற்றுள்ளது.
நெப்போலியன் கதாநாயகனாக நடித்த 'தாமரை', முரளி கதாநாயகனாக நடித்த 'தொண்டன்' ஆகிய படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் சங்கர் நடித்திருக்கிறார்.
ஏக்நாத்தின் ஆடியோ, வீடியோ நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர் 'விஷன் டைம்' ராமமூர்த்தியிடம் 7 வருடங்கள் மார்க்கெட்டிங் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். அதில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை ஒரு நூலாகவே எழுதலாம். கலைஞரின் 'தென்பாண்டிச் சிங்கம்' தொடரின் மார்க்கெட்டிங்கிற்கு உதவியாக இருந்தவரே சங்கர்தான்.
சென்னைத் தொலைக்காட்சியில் 520 நாட்கள் ஒளிபரப்பான 10 நிமிட நிகழ்ச்சியான 'காமெடி பார்க்-காமெடி ஸ்பெஷல்' எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதைத் தயாரித்தவர் சங்கர்.
இதுவரை சங்கர் எழுதிய சிறுகதைகள் 90. அவை பல்வேறு பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருக்கின்றன.
அவர் நடித்திருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் 45.
பல வருடங்களுக்கு முன்னால் நான் சங்கரை மட்டுமே பார்த்தேன். அதற்குப் பிறகு அவரது மொத்த குடும்பத்தையும் பார்த்து விட்டேன். குடும்பத்தில் சங்கர்தான் மூத்தவர். அவருக்குப் பின்னால் நான்கு தம்பிகளும், ஒரு தங்கையும் இருக்கிறார்கள். சங்கர் தன் கால்களை கலைத் துறையில் சற்று பலமாக ஊன்றிய பிறகு, அவருடைய குடும்பமே சென்னைக்கு வந்துவிட்டது. அவரது முயற்சியால் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தன்னுடைய கடுமையான உழைப்பால் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொந்தத்தில் வீடு வாங்கி, சங்கர் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூத்த மகன் கடுமையாக உழைத்தால், அவனுடைய மொத்த குடும்பமும் நல்ல நிலைமைக்கு வந்துவிடும் என்பதை நான் அவர் மூலம் தெரிந்து கொண்டேன். அதை நான் ஒரு நாள் சங்கரின் தந்தையிடம் சொன்னபோது, அவருடைய முகத்தில் தெரிந்த புன்னகையையும், பெருமிதத்தையும் பார்க்க வேண்டுமே!
தன்னுடைய பல வருட கலையுலக அனுபவங்களை வைத்து எதிர்காலத்தில் சொந்தத்தில் படம் எடுக்கும் எண்ணம் சங்கருக்கு இருக்கிறது. நல்ல திறமையான இளைஞர்களை இயக்குனராகப் போட்டு, படங்களைத் தயாரிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். அதற்கு முன்னால் தொலைக்காட்சி மார்க்கெட்டிங்கில் தனக்கு இருக்கும் பல வருட அனுபவங்களை வைத்து ஒரு பெரிய மார்க்கெட்டிங் நிறுவனத்தை விரைவில் சொந்தத்தில் ஆரம்பிக்கும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. அதன் மூலம் பலருக்கும் உதவ முடியுமே என்ற எண்ணமே அதற்கு காரணம்.
சங்கருக்கு ஆன்மிக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவ்வப்போது தனியாகவும், குடும்பத்துடனும் தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கும் போய்க்கொண்டிருப்பார். மூன்று வருடங்களுக்கு முன்பு என்னை அவர் வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். என்ன அருமையான கோவில்! என் வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவம் அது.
சங்கரும் நானும் அவ்வப்போது நேரில் சந்திப்போம். நேரில் சந்திக்க முடியாத நேரங்களில், தொலைபேசியில் உரையாடுவோம். சங்கர் இப்போது சென்னை நகரத்தின் ரயில் நிலையங்களிலும், தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களின் பேருந்து நிலையங்களிலும் விளம்பர போர்டுகள் வைக்கும் ஏஜென்ஸியைச் சொந்தத்தில் வைத்திருக்கிறார்.
அறந்தாங்கி சங்கரின் தந்தை சமீபத்தில் காலமாகிவிட்டார். அயல்நாட்டிலிருந்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திரு.லேகா ரத்னகுமாரிடம் சங்கரின் தந்தை காலமான செய்தியை நான் கூறினேன். அதற்காக வருத்தப்பட்ட அவர் ‘அறந்தாங்கி சங்கரைப் பற்றி நம் லேகாபுக்ஸ் (lekhabooks.com) இணைய தளத்தில் உடனடியாக பதிவு செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையிட்டார். அதன் விளைவாகவே இந்தக் கட்டுரையை நான் உடனடியாக இங்கு பதிவு செய்கிறேன்.
தொழிலில் மிகுந்த கவனத்துடன், முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நிச்சயம் யாராலும் வெற்றி பெற முடியும். அதற்கு அறந்தாங்கி சங்கரே ஒரு எடுத்துக்காட்டு. தனி மனிதராக வந்து, இன்று ஒரு குடும்பத்திற்கே ஆலமரமாக இருக்கிறாரே! அது எவ்வளவு பெரிய விஷயம்!