கனவு ராஜாக்கள் - Page 26
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
தெருவில் மண்ணெண்ணெய் விற்றவர் ரஜினிகாந்த் படத்தின் வினியோகஸ்தராக ஆனார்!
சுரா
வந்தவாசியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆச்சமங்கலம் என்ற கிராமம்தான் தேவேந்திரனின் சொந்த ஊர். அவருடைய தாய், தந்தை இருவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். தேவேந்திரன் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும், அவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதுதான் உண்மை. அதற்குப் பிறகு தங்களுடைய ஆடுகளையும், மாடுகளையும் மேய்ப்பதே அவரின் வேலையாகிவிட்டது.
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னையைத் தேடி வந்த தேவேந்திரன் ஆரம்பத்தில் செய்தது மண்ணெண்ணெய் விற்கும் தொழில். தெருத் தெருவாக மண்ணெண்ணெய் விற்க பயன்படும் வண்டியை கையால் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும். தி.நகரில் இருந்த ஒரு திரைப்பட நிறுவனத்திற்கு நான் சென்றிருந்தபோது, அதன் வாசலில் மண்ணெண்ணெய் விற்கும் வண்டியுடன் நின்று கொண்டிருந்தார் தேவேந்திரன். இது நடந்தது 1989ஆம் ஆண்டில். திரைப்பட நிறுவனத்தில் மண்ணெண்ணெய் விற்பவருக்கு என்ன வேலை என்று நான் நினைத்தேன். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு தான் வந்திருப்பதாக அவர் கூறினார். அந்த நிறுவனம் அப்போது தயாரித்துக் கொண்டிருந்த படத்தின் பெயர் 'போர்க்கொடி' ராஜ்சிற்பி இயக்கிய அந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்க, ஜெயந்தி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்தார் (இவர்தான் பின்னர் விசித்ரா என்று பெயரை மாற்றிக் கொண்டு கவர்ச்சி நடிகையாக படங்களில் வலம் வந்தார்.) இப்போது பிரபல இயக்குநராக இருக்கும் சேரன் (அப்போது இவரின் பெயர் இளஞ்சேரராஜன்) அப்படத்தின் வசனகர்த்தாவாகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். தேவேந்திரனுக்கு அப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மண்ணெணெய் விற்கப் போய் விடுவார் தேவேந்திரன்.
தி.நகர் தெருக்களில் அவ்வப்போது மண்ணெண்ணெய் வண்டியுடன் தேவேந்திரனைப் பார்ப்பேன். வெயில், மழை எதைப் பற்றியும் கவலைப்படாமல் 'அவர் வண்டியை இழுத்துக் கொண்டு ‘கிருஷ்ணாயில்… கிருஷ்ணாயில்…’ என்று கூப்பாடு போட்டவாறு போய்க் கொண்டிருப்பார். அவரைப் பார்த்து நான் புன்னகைப்பேன். அவரும் பதிலுக்குப் புன்னகைப்பார்.
தேவேந்திரன் நடித்த 'போர்க்கொடி' படம் முற்றிலும் முடிவடைந்தும், வியாபாரம் ஆகாததால் திரைக்கு வராமலே நின்றுவிட்டது. அது குறித்து தேவேந்திரனுக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது. அதற்குப் பிறகு தேவேந்திரன் பல திரைப்பட நிறுவனங்களின் படிகளிலும் ஏறி, நடிக்க வாய்ப்புக் கேட்டார். ஆனால், யாரும் தரவில்லை. அழுக்கு லுங்கியைக் கட்டிக் கொண்டு, கருப்பு நிறத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த மண்ணெண்ணெய் வியாபாரியை அவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள்.
அதற்குப் பிறகு நான் தேவேந்திரனை பதினைந்து வருடங்களுக்குப் பிறகுதான் பார்த்தேன். அப்போது அவரை மண்ணெண்ணெய் வியாபாரியாகப் பார்க்கவில்லை. பட வினியோகஸ்தராக பார்த்தேன். இடைப்பட்ட காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் வைத்ததாக என்னிடம் அவர் சொன்னார். வீடுகள் வாங்கவும் விற்கவும் உதவுவது, வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுப்பது, கடன் ஏற்பாடு பண்ணி தருவது என்று பல வேலைகளையும் அவர் பார்த்திருக்கிறார். அப்போது சில நண்பர்கள் அவருக்குப் பழக்கமாகியிருக்கிறார்கள். அவர்கள் படத்துறையைச் சேர்ந்தவர்கள். படங்களை வாங்கி திரை அரங்குகளில் திரையிடும் தொழிலைச் சேர்ந்த அவர்களுடன் தேவேந்திரன் பார்ட்னராகச் சேர்ந்திருக்கிறார். படங்களை வாங்கி வாடகை அடிப்படையில் திரை அரங்குகளில் திரையிடச் செய்திருக்கிறார். 'பாட்சா' படத்தை அபிராமி திரை அரங்கிலும் 'நம்மவர்' படத்தை நாகேஷ் தியேட்டரிலும் 'கல்நாயக்' படத்தை உதயம் தியேட்டரிலும் வாடகை அடிப்படையில் அவர் திரையிடச் செய்திருக்கிறார். அந்தத் தொழிலைப் பற்றிய விஷயங்களை படிப்படியாக தெரிந்து கொண்ட தேவேந்திரன் பட வினியோகத்தில் தீவிரமாக அதற்குப் பிறகு இறங்கிவிட்டார்.
புதிய படங்கள் திரைக்கு வந்து ஒரு சுற்று முடிந்தவுடன், ஒரு தொகையைக் கொடுத்து அதை வினியோகஸ்தர்கள் வாங்குவார்கள். அதற்கு வினியோக வட்டாரத்தில் 'ஷிஃப்டிங்' என்று பெயர். தேவேந்திரன் அந்த 'ஷிஃப்டிங்' முறையில் என் ஆசை மச்சான், சுந்தர புருஷன், படையப்பா, வாலி, நினைத்தேன் வந்தாய், உன்னைக் கொடு என்னைத் தருவேன், வள்ளல், சொன்னால்தான் காதலா என்று பல படங்களையும் வாங்கி வினியோகித்திருக்கிறார். தன் மனைவியின் பெயரில் 'மாரியம்மா பிலிம்ஸ்' என்று பட வினியோகக் கம்பெனிக்கு பெயர் வைத்த தேவேந்திரன், செங்கல்பட்டு மாவட்டத்திலிருக்கும் 134 திரை அரங்குகளில் 100 திரை அரங்குகளில் தான் வாங்கிய படங்களைத் திரையிட்டிருக்கிறார். சிந்தாமணி முருகேசன், கேயார், கே.ராஜன், 'ஆல்பர்ட்' மாரியப்பன், 'கலைப்புலி' ஜி.சேகரன் என்று பலரும் பட வினியோகத் துறையில் இருக்கும் நல்லது கெட்டதுகளை அவருக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். அது தேவேந்திரனுக்கு நன்கு பயன்பட்டிருக்கிறது.
பட வினியோகத்தில் ஈடுபட்டிருக்கும்போது பல பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் தேவேந்திரனுக்குப் பழக்கமாகி இருக்கிறார்கள். 'நான் வாழ்க்கையில் கொஞ்சமும் எதிர்பார்த்திராத விஷயங்கள் இவை. முறையான படிப்பு இல்லாத என் வாழ்க்கையிலா இவையெல்லாம் நடக்கின்றன என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்' என்றார் என்னிடம் தேவேந்திரன்.
அதற்குப் பிறகு தேவேந்திரனை சில மாதங்களுக்கு ஒருமுறை பாண்டியபஜாரில் நான் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்தபோது, பட வினியோகத் தொழிலை தான் விட்டுவிட்டதாகச் சொன்னார். 'ஏன் விட்டு விட்டீர்கள்?' என்று கேட்டதற்கு 'நான் பல படங்களையும் வினியோகம் செய்தேன். எவ்வளவோ இலட்சங்களைக் கடன் வாங்கி தொழிலைச் செய்தேன். சில படங்களில் லாபம் கிடைத்தது. சில படங்கள் பெரிய நட்டத்தையும் தந்தன. பணம் வந்திருக்கிறது போயிருக்கிறது, புரண்டிருக்கிறது. இறுதியில் மீதம் என்ன என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அதனால் 'சொன்னால்தான் காதலா' படத்துடன் அந்தத் தொழிலுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்’ என்றார் தேவேந்திரன்.
பல தொழில்களையும் செய்ததன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தி.நகரில் சொந்தத்தில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் தேவேந்திரனுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மகள் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுவிட்டார். மூத்த மகன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றிருக்கிறார். இரண்டாவது மகன் லயோலா கல்லூரியில் பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து விட்டார். அவருக்கு நடனம், இசை ஆகியவற்றிலும் பயிற்சி பெற தேவேந்திரன் ஏற்பாடு செய்திருக்கிறார். மூத்த மகனை திரைப்பட இயக்குநராகவும், இரண்டாவது மகனை இசை அமைப்பாளராகவும் கொண்டு வர வேண்டும் என்பது அவருடைய ஆசை.
‘எனக்கு என் பெயரை மட்டும்தான் எழுதத் தெரியும். அதற்கு மேல் எதுவும் தெரியாது. அப்படி என் பிள்ளைகள் இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் எப்படியெல்லாம் ஆசைப்படுகிறார்களோ அப்படியெல்லாம் நான் அவர்களைப் படிக்க வைத்திருக்கிறேன்’ என்றார் தேவேந்திரன் என்னிடம் - புன்னகை ததும்ப.
அப்போது 25 வருடங்களுக்கு முன்னால் மண்ணெண்ணெய் வண்டியை இழுத்துக் கொண்டு எனக்கு முன்னால் தெருவில் ‘கிருஷ்ணாயில்… கிருஷ்ணாயில்…’ என்று சத்தம் போட்டு கூவிக் கொண்டே வந்து கொண்டிருந்த தேவேந்திரன் ஒரு நிமிடம் என் மனதில் தோன்றி மறைந்தார்.