கனவு ராஜாக்கள் - Page 25
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
சிரமப்பட்ட இயக்குநருக்கு பண உதவி செய்தார் கே.எஸ்.ரவிக்குமார்!
சுரா
சந்திரகுமாரை எனக்கு 1980ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். அப்போது அவர் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். உடன்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரகுமாருக்கு படத் துறையின் மீது தீராத காதல். எப்படியும் இயக்குநராகி விட வேண்டும் என்ற வெறியுடன் சென்னையில் கால் பதித்திருந்தார்.
எப்போது பார்த்தாலும், நின்று என்னுடன் பேசுவார். சந்திக்கும் சில நிமிடங்களில் தன் கை வசம் இருக்கும் கதைகளில் ஒன்றிரண்டைக் கூறுவார். அவர் கதை கூறுவதும், காட்சிகளை விவரிப்பதும் ரசிக்கும்படி இருக்கும்.
பாலு ஆனந்த் இயக்குநரான பிறகு, அவர் இயக்கிய படங்களில் அசோசியேட் டைரக்டராக சந்திரகுமார் பணியாற்றினார். ‘ரசிகன் ஒரு ரசிகை’, ‘நானே ராஜா நானே மந்திரி’ ஆகிய படங்களில் அவர் பணி புரியும்போது அவரை நான் பார்த்திருக்கிறேன். ‘நீங்களும் திரைக்கதாசிரியர் ஆகலாம்’ என்று ஒரு புத்தகத்தை அப்போது அவர் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் பல அருமையான தகவல்களை கூறியிருந்தார்.
அப்போதிருந்தே என் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார். தான் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். படங்களின் காட்சிகளை பிரித்துப் பிரித்துக் கூறி அலசுவார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, தேவ் ஆனந்த், ராஜ்கபூர் ஆகியோர் நடித்த பழைய இந்திப் படங்களைப் பற்றிக் கூறி, அந்தப் படங்களின் கதைகளை நேரம் போவதே தெரியாமல் விவரித்துக் கொண்டிருப்பார். சந்திரகுமாருடன் ஒரு மணி நேரம் பேசினால், எப்போதோ திரைக்கு வந்த பல பழைய படங்களின் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம். பழைய படங்களின் கதைகளைக் கூறுவதுடன் நிற்காமல், கதையை இந்த மாதிரி மாற்றி இப்போது இருக்கும் பாணிக்கு ஏற்றபடி பண்ணினால் வெற்றி பெறும் என்பார்.
சிலருக்கு கதை எழுத வரும். ஆனால், அதை சுவாரசியமாக சொல்லத் தெரியாது. சந்திரகுமாருக்கு மிகவும் அருமையாக கதையை வாயால் சொல்லத் தெரியும். அவர் ஒரு மணி நேரம் தான் தயார் பண்ணி வைத்திருக்கும் கதையைக் கூறுகிறார் என்றால், கதை கேட்டு கொண்டிருப்பவர்களில் ஒருவர் கூட எழுந்து போக மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் ஈடுபாட்டுடன் அவர் கதையைக் கூறுவார். கதையைக் கேட்டு முடித்த பிறகு ‘கதை நன்றாக இருக்கிறதே!’ என்று எல்லோர் மனதிலும் தோன்றும். அப்படியொரு சிறந்த கதை கூறும் மனிதராக சந்திரகுமார் இருந்தார்.
பல படங்களிலும் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய சந்திரகுமார், தனித்து படங்களை இயக்குவதற்காக முயற்சித்தார். பல நிறுவனங்களிலும் ஏறி இறங்கினார். முரளி – குஷ்பு நடிக்க ‘சூரிய நமஸ்காரம்’ என்ற படத்தின் இயக்குநர் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘வருஷம் 16’ திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் குஷ்பு இளவரசியாக உலாவிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்தது. என்ன காரணத்தாலோ ஒருநாள் படம் திடீரென்று நின்றுவிட்டது. பணப் பிரச்னை என்று சிலர் சொன்னார்கள். உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. 80 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்ட ஒரு படம் அப்படியே நின்று போனால், அதை இயக்கிய இயக்குநரின் மனம் என்ன பாடுபடும்? ‘சூரிய நமஸ்காரம்’ ‘திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடும், தமிழ்ப் பட உலகில் நாம் ஒரு இயக்குநராக கம்பீரமாக உலா வரலாம்’ என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்த சந்திரகுமாரின் ஆசையில் மண் விழுந்தது. படத்தை நகர்த்துவதற்காக என்னென்னவோ செய்து பார்த்தார். முடியவில்லை. முதல் படத்தின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்ற மன வேதனையில் உழல ஆரம்பித்து விட்டார் சந்திரகுமார்.
அதற்குப் பிறகு அவரை பல இடங்களிலும் நான் பார்ப்பேன். முன்பிருந்த உற்சாகம் அவரிடம் சிறிது கூட இருக்காது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவரைப் போல இருப்பார்.
எவ்வளவு நாட்களுக்கு தனக்கு ஏற்பட்ட இழப்பையே ஒரு மனிதன் நினைத்துக் கொண்டிருக்க முடியும்? ‘இயக்குநர் வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கலாம். அதற்கு முன்னால் சில கதைகளை உருவாக்கி மற்றவர்களுக்குத் தரலாம்’ என்ற முடிவுக்கு சந்திரகுமார் வந்தார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சந்திரகுமாருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ரவிகுமார் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்திலேயே சந்திரகுமாருக்கும் அவருக்கும் நல்ல பழக்கம். ரவிகுமார் இயக்கும் படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொள்வார் சந்திரகுமார். ராமராஜன் கதாநாயகனாக நடித்த ‘ராஜா ராஜாதான்’ படத்திற்கு சந்திரகுமார் வசனம் எழுதினார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்க, சரவணன் கதாநாயகனாக நடித்த ‘சூரியன் சந்திரன்’ என்ற படத்திற்கு சந்திரகுமார்தான் கதை - வசனகர்த்தா. தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘பேண்ட் மாஸ்டர்’ படத்திற்கு கதை, வசனம் எழுதினார். ‘சூரியன்’ படம் திரைக்கு வந்து, சரத்குமார் மக்களால் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரமது. பிரபல படத் தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்பிரமணியம் அந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திரைக்கு வந்தபோது, வர்த்தக ரீதியாக ஓடவில்லை. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘முத்துக் குளிக்க வர்றீகளா’ படத்திற்கும் சந்திரகுமார்தான் கதை, வசனகர்த்தா. ‘நாட்டாமை’ திரைக்கு வந்து ரவிகுமார் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த நேரமது. ஆனால், ‘முத்துக் குளிக்க வர்றீகளா’ ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்டது.
நேரில் பார்க்கும்போது மிகவும் சுவாரசியமாக கதை சொல்லும் சந்திரகுமார் கதை எழுதிய எல்லா படங்களும் வர்த்தக ரீதியாக ஏன் தோல்வியடைந்தன? அந்தக் கதைகள் மக்கள் மனதில் ஏன் இடம் பிடிக்காமல் போய்விட்டன? இந்த விஷயத்தை நானே தனியாக இருக்கும்போது சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். வாயால் எளிதில் ஒரு கதையைக் கூறி விட முடியும். அதையே படத்தின் கதையாக எடுக்கும்போது அது வெற்றி பெறும் என்று உறுதியாக யாராலும் கூற முடியாது. சந்திரகுமார் கதை எழுதிய படங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான். ரவிகுமார் போன்ற பெரிய இயக்குநர்கள் கூட சந்திரகுமாரின் இந்தக் கதை சொல்லும் ஆற்றலில் மயங்கித்தான் அந்தக் கதைகளைப் படமாக இயக்கத் துணிந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெப்போலியன், சங்கவி ஆகியோரை வைத்து ‘பகவத் சிங்’ என்ற படத்தை இயக்கினார் சந்திரகுமார். நெப்போலியன் நடித்த படங்களிலேயே அதிகமான செலவில் எடுக்கப்பட்ட படம் அது. நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து, திரைக்கு வந்தபோது, எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ஓடவில்லை. சரவணன் கதாநாயகனாக நடித்த ‘செவத்த பொண்ணு’ என்றொரு படத்தையும் சந்திரகுமார் இயக்கினார். ‘யாகவா புரொடக்ஷன்ஸ்’ என்.ஆர்.தனபாலன் அந்த படத்தைத் தயாரித்தார். அதுவும் வர்த்தக ரீதியாக தோல்விப் படமே.
சில படங்களுக்குக் கதைகள் எழுதியிருந்தாலும், ஒரு இயக்குநர் என்ற கோணத்தில் பார்த்தால், சந்திரகுமார் படத்துறையில் சந்தித்தது தோல்விகளைத்தான். அவர் கதைகள் எழுதிய படங்கள் கூட அவருடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு தேவைப்பட்ட பணத்தைத் தந்தனவே தவிர, அவருக்கு பெயரையோ புகழையோ பெற்றுத் தரவில்லை என்பதுதான் உண்மை. இயக்குநராக தோல்வியடைந்த பிறகு, பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டார் சந்திரகுமார். வியர்வை வழியும் முகத்துடன் யாரையாவது பார்ப்பதற்கு வடபழனி, சாலிகிராமம் தெருக்களில் வேகமாக வெயிலில் அவர் நடந்து போய்க் கொண்டிருப்பார். மிகவும் நெருங்கிய நண்பர்கள் யாராவது தென்பட்டால், நூறோ இருநூறோ செலவுக்கு கேட்பார். மனக் கவலையாலோ என்னவோ, குடிப் பழக்கத்திற்கு அவர் ஆளாகிவிட்டார். பகல் நேரத்தில் கூட நல்ல போதையுடன் நின்று கொண்டிருப்பார். நான் பார்க்கும் நேரங்களிலெல்லாம் பெரும்பாலும் அவர் மது நெடியுடன்தான் இருந்திருக்கிறார்.
பொருளாதார ரீதியாக அவர் மிகவும் கஷ்டப்பட்ட காலங்களில் அவருக்குப் பெரிதும் கை கொடுத்தவர் கே.எஸ்.ரவிகுமார். தன் படங்களின் கதை விவாதங்களில் சந்திரகுமாரை பங்குபெறச் செய்து, அவருக்கு பணம் கிடைக்கும்படி செய்திருக்கிறார். ‘முத்து’ படத்தின் கதை விவாதத்தில் சந்திரகுமாரை பங்குபெறும்படி ரவிகுமார் செய்ததையும், அப்போது தனக்கு ஒரு நல்ல தொகையை அவர் வாங்கித் தந்ததையும் மிகுந்த நன்றியுடனும், பெருமையுடனும் சந்திரகுமார் என்னிடம் கூறியிருக்கிறார்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், மனம் தளரமாட்டார் சந்திரகுமார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஒரு தயாரிப்பாளரிடம் பேசியிருக்கிறேன். விரைவிலேயே படத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்’ என்பார். எட்டு வருடங்களுக்கு முன்னால் வடபழனி பேருந்து நிலையத்திற்கு அருகில் என்னைப் பார்த்த சந்திரகுமார் ‘10 நாட்கள் கழித்து உங்களுக்கு ஃபோன் பண்ணுகிறேன். ஒரு படத்தை இயக்க வாய்ப்பு வந்திருக்கிறது’ என்றார்.
அதற்குப் பிறகு 10 நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் வந்தது. சந்திரகுமாரிடமிருந்து அல்ல- ‘மாலை மலர்’ பத்திரிகை அலுவலகத்திலிருந்து. சந்திரகுமார் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை தொலைபேசியில் என்னிடம் சொன்னார்கள். அதிர்ச்சியில் நான் உறைந்து போனேன்.
வருடங்கள் கடந்தோடி விட்டன. இப்போது கூட நான் சந்திரகுமாரை நினைக்கும்போது, அவர் என்னிடம் ஆர்வத்துடன் பல கதைகளைக் கூறியதும், சுவாரசியமான பல சம்பவங்களை அடுத்தடுத்து விவரித்ததும், பழைய இந்தி, தமிழ் திரைப்படங்களின் கதைகளையும், பாடல்களையும் ரசிக்கும் வண்ணம் கூறியதும் என் மனத்திரையில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.