கனவு ராஜாக்கள் - Page 21
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
வெறுத்து ஊருக்குச் சென்ற நடிகரை, திரும்ப நாசர் அழைத்துக் கொண்டு வந்தார் !
சுரா
‘அவதாரம்’ படத்தில் நடித்ததன் மூலம் ‘இவர் யார்?’ என்று எல்லோரையும் கேட்க வைத்த பாலாசிங்கை எனக்கு 1980ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவர்.
நாகர்கோவிலிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அம்சிகாகுழி பாலாசிங்கின் சொந்த ஊர். மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டம் பெற்ற பாலாசிங்கிற்கு ஆரம்ப நாட்களிலேயே நடிப்பு மீது தீவிர ஈடுபாடு உண்டு. அந்த வேட்கையில் திண்டுக்கல் காந்தி கிராமத்தில் தேசிய நாடகப் பள்ளி நடத்திய நாடகப் பட்டறையில் கலந்து கொண்டு நடிப்பு சம்பந்தப்பட்ட பல அரிய பாடங்களை அவர் தெரிந்து கொண்டார். பி.வி.காரந்த், எம்.எஸ்.சத்யு, பத்மா சுப்ரமணியம் போன்ற பலரும் அந்தப் பட்டறையில் கலந்து கொண்டு பல விஷயங்களையும் கற்றுத் தந்தனர்.
அந்த அனுபவங்களுடன் பாலாசிங் சென்னை மண்ணில் 1979ஆம் ஆண்டில் கால் வைத்தார். தாம்பரத்திற்கு அருகில் தன்னுடைய உறவினர் வீட்டில் பல மாதங்கள் அவர் தங்கியிருந்தார். அங்கிருந்து மின்சார ரயிலில் தினந்தோறும் கிளம்பி வந்து பலரையும் சந்திப்பார். அதன் மூலம் பல முக்கியமான தொடர்புகள் அவருக்குக் கிடைத்தன. அதற்குப் பிறகு கண்ணம்மா பேட்டையில் 90 ரூபாய் வாடகையில் நண்பர் ஒருவர் குடியிருந்த ஓலைக் குடிசையில் போய் ஒட்டிக் கொண்டார். அவர்கள் இருவரும் மண்ணெண்ணெய் அடுப்பில் எதையாவது சமைத்து சாப்பிடுவார்கள். பல நேரங்களில் பட்டினி கிடப்பதும் உண்டு. மழை பெய்யும் நாட்களில், ஒரே அறை கொண்ட அந்த குடிசைக்குள் மழை நீர் நுழைந்து விடும். அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த பாலாசிங் மழை நீரில், மின்சாரம் இல்லாத இரவில் தான் மூழ்கிக் கிடப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து கண் விழித்த அனுபவம் கூட இருக்கிறது.
அந்தக் கால கட்டத்தில் ஞாநியின் அறிமுகம் பாலாசிங்கிற்கு கிடைத்தது. அவருடைய ‘பரீக்ஷா’ நாடகக் குழு அப்போது பல வித்தியாசமான நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது. அருமையான சோதனை நாடகங்கள்! பாதல் சர்க்காரின் ‘பிறகொரு இந்திரஜித்’ விஜய் டெண்டுல்கரின் ‘கமலா’ போன்ற பல நாடகங்களை அக்குழு நடத்தியது. அவற்றில் பாலாசிங் நடித்தார். அந்நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் எனக்கு பாலாசிங் அறிமுகமானார்.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலாசிங் படங்களில் நடிக்கவும் முயற்சி செய்தார். இயக்குநர் மெளலி அப்போது அவருக்கு அறிமுகமானார். மெளலி இயக்கிய ‘வா இந்தப் பக்கம்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் வாய்ப்பு பாலாசிங்கிற்கு கிடைத்தது. தொடர்ந்து ‘மற்றவை நேரில்’, ‘ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’, ‘நன்றி மீண்டும் வருக’ ஆகிய படங்களிலும் பாலாசிங்கிற்கு சிறு சிறு வாய்ப்புகளைத் தந்தார் மெளலி.
ரகுவரனின் முதல் படம் ‘ஏழாவது மனிதன்’. அதில் அவருடைய நண்பராக பாலாசிங் நடித்தார். ராஜன் சர்மா இயக்கிய ‘யாரோ அழைக்கிறார்கள்’ படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக பாலாசிங் நடித்தார். கண்ணம்மாபேட்டையில் பாலாசிங் தங்கியிருந்த ஓலைக் குடிசையை அவருடைய நண்பர் ஒருநாள் திடீரென்று காலி செய்து விட்டார். அப்போது பாலாசிங் ஊரில் இல்லை. நண்பர் அந்த விஷயத்தை கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். ஊரிலிருந்து திரும்பி வந்தபோது, பாலாசிங்கின் ஆடைகள் வைத்திருந்த சூட்கேஸ் பக்கத்து வீட்டில் இருந்தது. அதை வாங்கிய பாலாசிங் அடுத்து போய் தங்கியது எழுத்தாளர் ஞாநியின் வீட்டில். அங்குதான் பல வருடங்கள் அவர் தங்கியிருந்தார். பகல் நேரத்தில் நடிப்பு வாய்ப்புக்காக அலைவது, இரவு நேரத்தில் சில நேரங்களில் மது அருந்திவிட்டு பன்னிரண்டு மணி... ஒரு மணிக்குக் கூட வந்து கதவைத் தட்டுவது... அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கூட சிறிதும் முகம் கோணாமல் நட்பு பாராட்டிய ஞாநியையும், அவருடைய மனைவி பத்மாவையும் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார் பாலாசிங்.
‘பரீக்ஷா’ வின் மாறுபட்ட நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, டாக்டர் ருத்ரனின் ‘முத்ரா’ நாடகக் குழு நடத்தும் நாடகங்களிலும் நடிக்க பாலாசிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் குழு நடத்திய இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒளரங்கசீப்’ நாடகத்தில் ஒளரங்கசீப்பாக நாசர் நடிக்க, அவரின் தம்பி தாராவாக பாலாசிங் நடித்தார். அந்தக் கால கட்டத்தில் பாலாசிங்கிற்கு அறிமுகமானவர்தான் நாசர்.
மலையாளத்தில் பிரபல இயக்குநராக இருந்த பி.என்.மேனன் இயக்கிய ‘மல முகளிலே தெய்வம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு பாலாசிங்கிற்குக் கிடைத்தது. அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அர்ச்சனா. அந்தப் படத்திற்கு விருது கிடைத்தது.
தொடர்ந்து ‘தூரம் அதிகமில்லை’ படத்திலும், ‘உயரும் ஞான் நாடாகெ’, ‘தடவறையிலே ராஜாக்கன்மார்’, ‘ஜங்கில் ராணி’ படங்களிலும் அவர் நடித்தார். ஞாநி சென்னைத் தொலைக்காட்சிக்காக இயக்கிய ‘விண்ணிலிருந்து மண்ணுக்கு’ வார தொடருக்கு பாலாசிங் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணி புரிந்திருக்கிறார். ‘ஜாதிமான்’ என்ற படத்திற்கும் ‘மானச மயினே வரூ’ என்ற மலையாளப் படத்திற்கும் பாலாசிங்தான் தயாரிப்பு நிர்வாகி. பி.எஸ்.தரன் இயக்கி, நாசர் கதாநாயகனாக நடித்த ‘மிஸ்டர் பிரசாத்’ படத்திலும் பாலாசிங் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தோள் பையுடன் அலைந்து கொண்டிருக்கும் பாலாசிங்கை நான் பார்த்திருக்கிறேன்.
இப்படியே பன்னிரெண்டு வருடங்கள் ஓடி விட்டன. நாடகங்களிலும், படங்களிலும் அவ்வப்போது நடித்தாலும், ஒரு பெரிய நிலைக்கு தன்னால் வர முடியவில்லையே என்ற மனக்குறை பாலாசிங்கிற்கு இருந்தது. பல வருடங்களுக்கு முன்னால் சுமார் ஒரு மணி நேரம் தி.நகர் பாண்டிபஜாரில் நடந்து கொண்டே தன்னுடைய நிலையை மிகவும் கவலையுடன் என்னிடம் வெளிப்படுத்தினார் பாலாசிங்.
திருவல்லிக்கேணியில் தன்னுடைய ஊரைச் சேர்ந்த போலீஸ்காரர்களுடன் மேன்ஷனில் தங்கிக் கொண்டு, பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்த அனுபவமும் பாலாசிங்கிற்கு உண்டு.
சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத பாலாசிங் சொந்த ஊருக்கே ஒருநாள் சென்று விட்டார். 1992ஆம் ஆண்டில் அவருக்கு திருமணம் நடந்தது. குழந்தையும் பிறந்தது. மூன்று வருடங்கள் ஊரிலேயே இருந்தார். அப்போது நாசரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அடுத்த சில நாட்களில் நாசரே அங்கு வந்து விட்டார். தான் இயக்க இருக்கும் ‘அவதாரம்’ படத்தில் வில்லனாக நடிக்கும்படி அவர் பாலாசிங்கிடம் கூறினார். எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் சென்னைக்கு மீண்டும் வந்த பாலாசிங், ‘அவதாரம்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் திரைக்கு வந்தபோது எல்லோராலும் பேசப்பட்டார். பாலுமகேந்திரா நாசருக்கு ஒரு பெரிய பாராட்டுக் கடிதமே எழுதினார். பாலாசிங்கின் நடிப்பை ரேவதி, ஸ்ரீவித்யா ஆகியோர் மனம் திறந்து பாராட்டினர். நடிகர் சிவகுமார் படத்தைப் பார்த்து விட்டு பாலசிங்கை ஒரு தெருக்கூத்து கலைஞன் என்றே நினைத்திருக்கிறார்.
‘பொற்காலம்’, ‘இந்தியன்’, ‘முனி’, ‘ரெண்டு,’ ‘ராமன் அப்துல்லா’, ‘ஆனந்தப் பூங்காற்றே’, ‘புதுப்பேட்டை’, ‘தங்கம்’, ‘பீமா’, ‘பிரிவோம் சந்திப்போம்’ என்று தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார் பாலாசிங். ‘சூலம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’ டி.வி. தொடர்களில் நடித்த பாலாசிங் இளையபாரதி இயக்கிய கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ டி.வி தொடரில் நடித்தார். அதில் அவர் நடித்த ‘உறங்காப் புலி’ என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததாக கலைஞரே அவரைப் பாராட்டியிருக்கிறார்.
அழகப்பன் சி. இயக்கிய ‘வண்ணத்துப்பூச்சி’ படத்தில் மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் பாலாசிங். ‘உளியின் ஓசை’ படப்பிடிப்பின்போது நானும் பாலாசிங்கும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அதில் பிரம்மராயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் பாலாசிங். முப்பது வருடங்களுக்கு முன்னால் நான் பார்த்த பாலாசிங் அப்போது என் ஞாபகத்தில் வந்தார்.
பாலாசிங்கின் குடும்பம் இப்போது அவருடைய ஊரில்தான் இருக்கிறது. வடபழனியில் ஒரு வாடகை வீட்டில் இருந்து கொண்டு பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலாசிங். ‘ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்கள் அனுபவிக்க வேண்டிய வயதில் நடக்க வேண்டும். காலம் கடந்து நடக்கும்போது அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமலே போய் விடுகிறது’ என்றார் பாலாசிங்- என்னிடம். அந்த வார்த்தைகளில்தான் எவ்வளவு பெரிய உண்மை மறைந்திருக்கிறது!