கனவு ராஜாக்கள் - Page 17
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
கும்பலில் நின்றவர் இயக்குநர் ஆனார்!
சுரா
நடிக்கும் ஆசையுடன் 1978ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து சென்னை மண்ணைத் தேடி வந்தவர் நல்லதம்பி. பல திரைப்பட நிறுவனங்களுக்கும் போய் அவர் வாய்ப்பு கேட்டார். தான் ஏறாத சினிமா கம்பெனி படிகளே இல்லை என்கிற அளவிற்கு வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் அவர் வாய்ப்புகளுக்காக அலைந்தார்.
நல்லதம்பிக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், சொல்லிக் கொள்கிற மாதிரியான பெரிய கதாபாத்திரங்கள் இல்லை. ஒரு சில படங்களில் ஒன்றோ இரண்டோ காட்சிகளில் வருவார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றிரண்டு வரிகள் வசனம் பேசுவதற்கான வாய்ப்புகள் கூட கிடைப்பதுண்டு. சில படங்களில் வெறுமனே கூட்டத்தில் ஒருவராக அவர் நின்று கொண்டிருப்பார். நாளடைவில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் சேர்ந்து விட்டார். வடபழனியில் இருக்கும் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கத்திலும் அவர் உறுப்பினராக ஆனார்.
அதன் விளைவாக படங்களில் ஏஜெண்ட்களாக பணியாற்றுபவர்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளை நல்லதம்பிக்கு வாங்கிக் கொடுத்தனர். டாக்டராக, வக்கீலாக, ஆசிரியராக, கம்பவுண்டராக, காவலாளியாக, திருடனாக, கற்பழிப்பவனாக, கயவனாக, கைதியாக, வேலைக்காரனாக, விவசாயியாக... இப்படி பல படங்களில் ‘துக்கடா’ வேடங்களில் நடிக்க நல்லதம்பிக்கு வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் ஆலமரத்திற்கு அடியில் நடக்கும் பஞ்சாயத்துக் காட்சிகளில் வேடிக்கை பார்க்கும் கிராமத்து மக்கள் கூட்டத்தில் ஒருவராக நல்லதம்பி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருப்பார். எத்தனையோ படங்களில் ஒரு வார்த்தை கூட வசனம் பேசாமல் அவர் வந்திருக்கிறார்.
சிவாஜிகணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், முரளி, சரத்குமார், கார்த்திக் என்று பலர் நடித்த படங்களிலும் நல்லதம்பி சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், அல்லது தோன்றியிருக்கிறார்.
எனக்கு நல்லதம்பியை 15 வருடங்களாக தெரியும். கோடம்பாக்கம், வடபழனி சாலைகளில் அமைதியாக ஒரு ஓரத்தில் அவர் எப்போதும் நடந்து போய்க் கொண்டிருப்பார். நேரில் பார்க்கும்போது ‘ஒரு படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க கூப்பிட்டிருக்காங்க அண்ணே... அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்பார். என்னை எப்போதும் ‘அண்ணே’ என்றுதான் நல்லதம்பி அழைப்பார். மதுரையிலிருந்து நடிப்பதற்காக வந்து, கலை தாகத்துடன் சென்னைத் தெருக்களில் கனவுகளை மனதிற்குள் வைத்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருக்கும் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டு நான் பல நேரங்களில் நின்றிருக்கிறேன்.
எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே நூறு ரூபாய்க்கும், நூற்றைம்பது ரூபாய்க்கும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றிக் கொண்டிருப்பது என்று ஒருநாள் முடிவெடுத்த நல்லதம்பி, படங்களுக்கான கதை விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். இயக்குநர் ஏ.சி.சந்திரகுமார் அவருடைய நண்பர். ஏ.சி.சந்திரகுமார் ‘பேண்ட் மாஸ்டர்’, ‘முத்துக் குளிக்க வர்றீகளா’ ஆகிய படங்களுக்கு கதைகளை உருவாக்கியபோது, அவருடன் நல்லதம்பியும் சேர்ந்து பணியாற்றினார். கதை அறிவும், நகைச்சுவை உணர்வும் கொண்ட நல்லதம்பியின் பங்களிப்பு சந்திரகுமாருக்கு பயனுள்ளதாக இருந்தது. அந்தக் கதைகளுக்காக கிடைத்த பணத்தில் நல்லதம்பிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை சந்திரகுமார் தந்தார்.
கிட்டத்தட்ட நூறு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த நல்லதம்பி இனிமேல் படங்களில் சிறு பாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கு பதிலாக, இயக்குநர் ஆவது என்ற முடிவுக்கு அவர் வந்தார். சந்திரகுமார் இயக்கிய ‘பகவத்சிங்’ என்ற படத்தில் அசோசியேட் இயக்குநராக நல்லதம்பி பணியாற்றினார். நெப்போலியன், சங்கவி நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நல்லதம்பியைப் பார்ப்பேன். வசனங்கள் அடங்கிய பேப்பர்களைக் கையில் வைத்துக் கொண்டு நடிகர்கள், நடிகைகள் பக்கத்தில் அவர் நின்றிருப்பார். என்னைப் பார்த்ததும் புன்னகைப்பார். வசனமே பேசாமல் வெறுமனே சிலையைப் போல பல படங்களில் வந்து நின்று கொண்டிருந்த அவருக்கு வாழ்க்கையில் ஒரு உயர்வு கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைவேன். அதை வெளிப்படுத்தும் விதத்தில் அவரைப் பார்த்து நானும் புன்னகைப்பேன்.
வருடங்கள் கடந்தன. சில வருடங்களுக்கு முன்னால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நல்லதம்பி ‘நான் இயக்குநராகி விட்டேன். ‘ஆசை பறவை’ என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறேன். நாளைக்கு ஏவி.எம்.ஸ்டூடியோவில் நான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்று கூறி, என்னை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார். மறுநாள் நான் ஏவி.எம். ஸ்டூடியோவிற்குச் சென்றேன். துணை நடிகராக நான் பல வருடங்கள் பார்த்த நல்லதம்பி இயக்குநராக வளர்ச்சி பெற்று அங்கு நின்று கொண்டிருந்தார். தன் பெயரை ‘ஆசியன் நல்லதம்பி’ என்று வைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். செந்தில், சார்லி, மனோரமா ஆகியோர் நடிக்க, கேமரா, ஆக்ஷன் என்று கூறிக் கொண்டிருந்தார் நல்லதம்பி. படத்தின் தயாரிப்பாளர் இளங்கோவனை எனக்கு அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். தான் நினைத்த லட்சியத்தை நல்லதம்பி அடைந்து விட்டதற்காக அவருடைய கையைப் பிடித்து நான் குலுக்கினேன்.
இருபது நாட்கள் மிகவும் வேகமாக வளர்ந்த படம் பொருளாதார பிரச்னைகளால் திடீரென்று நின்று விட்டது. மறுபடியும் வடபழனி ஆற்காடு சாலையில் ஒரு ஓரத்தில் கனவுகளுடன் நல்லதம்பி நடந்து போய்க் கொண்டிருப்பார். சில மாதங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் இளங்கோவன் பணத்தைத் தயார் பண்ணிவிட, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆசை பறவை’ மீண்டும் படப்பிடிப்பில் இறங்கியது. புதிய உற்சாகத்துடன் நல்லதம்பி ‘ஸ்டார்ட், கட்’ கூற தொடங்கினார்.
படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து, டப்பிங்கும் முடிந்து விட்டது. அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தி.நகர் தேவிஸ்ரீ தேவி ப்ரீவ்யூ தியேட்டரில் நடைபெற்றது. பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் நல்லதம்பி பேட்டிகள் கொடுத்தார். அனைத்தும் முடிந்த பிறகு நானும், நல்லதம்பியும், ‘ஆசை பறவை’ படத்தின் எடிட்டரும் ஒரு ஆட்டோவில் வடபழனிக்குச் சென்றோம். ஆட்டோவில் பயணிக்கும்போது, நான் கேட்க, நல்லதம்பி தன்னுடைய கடந்த காலங்களை கதை கூறுவதைப்போல என்னிடம் கூறிக் கொண்டு வந்தார்.
அதற்குப் பிறகு ஐந்து நாட்கள் கழித்து, நான் நல்லதம்பிக்கு ஃபோன் பண்ணினேன். அவருடைய செல்ஃபோனை வேறு யாரோ ஒருவர் எடுத்தார். ‘நல்லதம்பியின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்’ என்றார் அவர். தூங்கும்போதே ஹார்ட் அட்டாக்கில் இறந்திருக்கிறார் நல்லதம்பி. அந்தச் செய்தியைக் கேட்டு, நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். இப்படியும் ஒரு மரணமா?
படத்தில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த நல்லதம்பி, மதுரையில் இருந்த தன் சகோதரர்களை எத்தனையோ வருடங்களாக போய் பார்க்கவே இல்லை. சரியான வருமானம் இல்லாததால் தன் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் மேலூரில் இருக்கும் தன் மாமனார் வீட்டிலேயே இருக்கும்படி அவர் கூறிவிட்டார். மாமனார்தான் அவர்களைத் காப்பாற்றி இருக்கிறார்.
நல்லதம்பி இறந்தது அதிர்ச்சியளித்தது என்றாலும், அவர்மீது அவர்களுக்கு பாசம் வரவில்லை. இல்லாவிட்டால் அவருடைய சொந்த சகோதரர்களே ‘இறந்த உடலை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டாம். நேராக சுடுகாட்டுக்கே கொண்டு போய் விடுங்கள்’ என்று கூறியிருப்பார்களா? நல்லதம்பிக்காக கண்ணீர் விட்டது அவருடைய மனைவியும் மகளும் மட்டும்தான். மகன்கள் கூட இல்லை.
தன்னுடைய இயக்குநர் பணியை முழுமையாக முடித்துக் கொடுத்து விட்டே நல்லதம்பி இறந்திருக்கிறார். இயக்குநர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நல்லதம்பி இயக்குநர் என்று தன் பெயர் படத்தில் வருவதைப் பார்க்காமலே இறந்துவிட்டார்.
நல்லதம்பி மரணத்தைத் தழுவி ஐந்து வருடங்கள் கடந்தோடிவிட்டன. ‘ஆசை பறவை’ வியாபாரம் ஆகாததால், இந்த நிமிடம் வரை திரைக்கு வரவில்லை. இயக்குநர் ஆகவேண்டும் என்று பல வருடங்களாக பாடுபட்டு எங்கோ பறந்து சென்றுவிட்ட ‘ஆசை பறவை’யான நல்லதம்பியை இப்போது கூட என்னால் மறக்கவே முடியவில்லை. எப்படி மறக்க முடியும்?