கனவு ராஜாக்கள் - Page 15
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
சிறையில் 50 நாட்கள் களி சாப்பிட்ட சினிமா கதாநாயகன்!
சுரா
திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைப்பதென்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். எனினும், சிலருக்கு எப்படியோ அந்த வாய்ப்பு கிடைத்து விடும். அப்படி கிடைத்து விட்டது என்பதற்காக வானத்தையே தொட்டு விட்டதைப் போல சந்தோஷப்பட்டு விடக் கூடாது. அதற்குப் பிறகு அந்தக் கதாநாயகன் நடிக்கும் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே அந்தக் கதாநாயகனின் கலையுலகப் பாதை மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாக இருக்கும். இல்லாவிட்டால் பயணம் முழுவதுமே சோதனைகள்தான்.
படவுலகில் நுழைந்திருக்கும் பலரின் வாழ்க்கையில் நடப்பதென்னவோ இதுதான். ஆனால், இந்த உண்மையை படவுலகில் இருப்பவர்களும், படவுலகிற்கு வெளியே இருப்பவர்களும் தெரிந்திருக்கிறார்களா என்ன? தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே என் கலையுலகப் பயணத்தில் நான் பார்த்த ஒரு இளம் கதாநாயகனைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.
நான் எழுதும் கதாநாயகனின் பெயர் விஷ்ணு. சொந்தப் பெயர் அஜய் என்றாலும், சினிமாவிற்காக அவரின் பெயர் விஷ்ணு என்றாகி விட்டது. அவரின் பெயரை மாற்றி வைத்தவர் பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. 1991ஆம் ஆண்டில் நெடுமுடி வேணு 'பூரம்' என்ற பெயரில் ஒரு மலையாளப் படத்தை இயக்கினார். பூரம் என்பது கேரளத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அது. அப்படத்தைத் தயாரித்தவர் 'குட்நைட்' மோகன்.
பூரம் திருவிழாவின்போது ஒரு ஊரில் நாடகம் நடத்துவதற்காக, ஒரு நாடகக் குழு நகரத்திலிருந்து போய் முகாம் இடுகிறது. அந்த நாடகத்தை நடத்துபவர் திலகன். அதில் கதாநாயகனாக ஒரு இளைஞன் நடிக்கிறான். அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்குமிடையே காதல் அரும்புகிறது. சில நாட்கள் கழித்து நாடகக் குழு அந்த ஊரை விட்டுக் கிளம்புகிறது. இளைஞனின் காதலைத் தெரிந்திருக்கும் திலகன் 'நாடகமா, காதலியா?- இந்த இரண்டில் எது வேண்டும் என்று நீயே தீர்மானித்துக் கொள்' என்கிறார்.
நாடக கதாநாயகன் அந்த இளம் பெண்ணின் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்துவிட்டு, 'என்றாவதொரு நாள் நான் மீண்டும் திரும்பி வருவேன். அதுவரை எனக்காகக் காத்திரு' என்று கூறிவிட்டு, நாடகக் குழுவுடன் கிளம்பி விடுகிறான். அவன் போவதையே பார்த்தவாறு மோதிரத்தை அணிந்திருக்கும் அந்த கிராமத்துப் பெண் சிலையென நின்றிருக்கிறாள்.
இதுதான் 'பூரம்' படத்தின் கதை. அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர்தான் அஜய் என்ற விஷ்ணு. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்' படத்தின் வீடியோ கேசட்டை ஓட விட்டு, 'ஒரு நடிகனின் நடை, பாவனை, வசனம் பேசும் முறை, முக வெளிப்பாடு, மிடுக்கு, கம்பீரம்- அனைத்தும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடிகர் திலகத்திடமிருந்து மட்டுமே ஒரு நடிகன் கற்றுக் கொள்ள முடியும்' என்று கூறி, அதை மிகவும் நுணுக்கமாக கவனித்து பின்பற்றும்படி விஷ்ணுவிடம் கூறியிருக்கிறார் நெடுமுடி வேணு.
மிகச் சிறந்த நடிகரான நெடுமுடி வேணு நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு உயரத்தில் வைத்து மதித்திருக்கிறார் என்பதை நினைத்து தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்.
இந்த விஷயத்தை என்னிடம் கூறியதே விஷ்ணுதான். நான் அவரைச் சந்தித்தது 1994ஆம் ஆண்டில். அப்போது அவர் 'வா வா வசந்தமே' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அரசியல்வாதியாக இருக்கும் பழ.கருப்பையாதான் அப்படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தை இயக்கியதும் அவர்தான். விஷ்ணுவிற்கு அதில் ஜோடியாக நடித்தவர் மாது என்ற நடிகை.
அந்தப் படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடித்ததே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். பழ.கருப்பையா யாரோ ஒரு நடிகையைத் தேடி தி.நகருக்கு வந்திருக்கிறார். முகவரி தெரியாமல் ஒரு தெருவில் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் வந்திருக்கிறார் விஷ்ணு. அவரிடம் தான் தேடி வந்த முகவரியைப் பற்றி விசாரித்திருக்கிறார் பழ.கருப்பையா. அப்போது அழகான தோற்றத்துடன் நின்றிருந்த விஷ்ணுவைப் பார்த்து 'தம்பி நீ என் படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தயாரா?' என்றிருக்கிறார் அவர். அதற்கு விஷ்ணு 'நான் ஏற்கனவே நடிகன்தான். நெடுமுடி வேணுவின் 'பூரம்' மலையாளப் படத்தில் நான்தான் கதாநாயகன்' என்றிருக்கிறார்.
அடுத்த நிமிடமே 'வா வா வசந்தமே' படத்தின் கதாநாயகனாக ஆகிவிட்டார் விஷ்ணு. படம் திரைக்கு வந்தபோது, விஷ்ணு எனக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து கட்டாயம் படத்தைப் பார்க்க வேண்டும் என்று என்னை வற்புறுத்த, நான் தேவி பேரடைஸ் திரை அரங்கில் போய் உட்கார்ந்தேன். ஆயிரம் பேர் உட்காரும் அரங்கில் 20 பேர் இருந்தார்கள். படத்தை உட்கார்ந்து பார்க்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு 'படு போராக' இருந்தது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி என்னவென்றால், கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டால் மட்டும் போதாது, அப்படி நடிக்கக் கூடிய படம் நல்ல ஒரு இயக்குநரால் இயக்கப்பட வேண்டும், மிகச் சிறந்த ஒரு கதையை அப்படம் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், விஷ்ணு மாதிரி வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.
'வா வா வசந்தமே' வந்த சுவடே தெரியாமல் திரை அரங்கை விட்டு வெளியே பதறி ஓடியதால்- விஷ்ணுவின் கலைப்பயணமே இருண்டு போய்விட்டது. அதன் விளைவு- வெறுமனே எதற்கு வீட்டில் இருக்க வேண்டும் என்று தொலைக்காட்சித் தொடர்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். நடிகை ஊர்வசி தயாரித்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான 'பஞ்சமி' தொடரில் விஷ்ணு நடித்தார். தமிழ், மலையாளம் என்று சுமார் 30 டி.வி. தொடர்களில் அவர் நடித்தார்.
இதற்கிடையில் விஷ்ணுவிற்குத் திருமணம் நடந்தது. ஒரு குழந்தைகூட பிறந்தது. விதியின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும். விஷ்ணுவிற்கும் அவர் திருமணம் செய்த பெண்ணுக்குமிடையே கருத்து வேற்றுமை. அதன் தொடர்ச்சியாக விஷ்ணு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை.
விஷ்ணுவிற்கு சிறைத் தண்டனை கிடைத்ததைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவிவிட்டார்.
மத்திய சிறைச்சாலையில் 50 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வந்த விஷ்ணுவை நான் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்னால் முதல் தடவையாக நான் பார்த்த அந்த இளைஞனையும், இப்போது பல கசப்பான அனுபவங்களைத் தாண்டி வந்திருக்கும் விஷ்ணுவையும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்தபோது, என் மனம் என்ன காரணத்தாலோ கனத்தது.
கசப்பான விஷயங்கள் நடந்துவிட்டன என்பதற்காக விஷ்ணு வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கவில்லை. அவர் கதாநாயகனாக நடித்த 'ரெயின்' என்ற மலையாளப் படம் திரைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து அவர் படத் தயாரிப்பிலும், விநியோகத்திலும் இறங்கினார். ஹிந்தியிலிருந்து சில படங்களை வாங்கி ‘டப்’ செய்து தமிழில் வெளியிட்டார். படவுலகில் இன்னும் பல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வேட்கையுடனும், இலட்சியத்துடனும் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பமே ஒருவருக்கு நன்கு அமைந்துவிட்டால், சந்தோஷமே. அப்படி இல்லை என்ற சூழ்நிலை இருக்கும்போது, சரியில்லாத பாதையைச் செப்பனிட்டு நடை போட வேண்டும். அதைத்தான் விஷ்ணு செய்திருக்கிறார். அந்த வகையில் அது ஒரு நல்ல விஷயம்தானே!