கனவு ராஜாக்கள் - Page 16
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
பட வாய்ப்பு இல்லாததால், மதுவில் மிதந்த கதாநாயகன்!
சுரா
1984ஆம் ஆண்டில் பாரதிராஜா ‘மண்வாசனை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் பாண்டியன். அப்படத்தின் தயாரிப்பாளர் அப்போது மிகவும் பிரபலமான திரைப்பட மக்கள் தொடர்பாளராகவும், பாதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தவருமான சித்ரா லட்சுமணன். கதாநாயகனே இல்லாமல் தேனிக்குப் படப்பிடிப்பிற்கு துணிச்சலாக தான் கிளம்பிப் போய் விட்டதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான வளையல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பாண்டியனை பாரதிராஜா தன்னுடைய படத்திற்கு கதாநாயகனாக தேர்வு செய்தார் என்றும் அந்தக் காலத்தில் பத்திரிகைகளுக்குச் செய்தி தந்தார்கள். அந்தச் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது பாரதிராஜாவிற்கும் சித்ரா லட்சுமணனுக்கும் மட்டும்தான் தெரியும்.
பாரதிராஜா தமிழ்த் திரைப்பட உலகில் சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை என்று தொடர்ந்து பேசப்படும் படங்களை இயக்கி முத்திரை பதித்திருந்ததால், அவருடைய படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு அப்போது இருக்கும். ‘மண்வாசனை’ படம் தயாரிப்பில் இருந்தபோதே அதற்கு மக்களிடம் ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ரேவதி. பாண்டியன், ரேவதி இருவருமே படவுலகிற்குச் சிறிதும் தொடர்பே இல்லாதவர்கள். தன் திறமையை மட்டுமே நம்பி அவர்களை அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா.
அண்ணாசாலையில் இருந்த ஒரு திரை அரங்கில் நான் ‘மண்வாசனை’ படத்தைப் பார்த்தேன். மக்கள் தங்களை மறந்து அந்தப் படத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். பட்டாளத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பி வரும் பாத்திரத்தில் பாண்டியன் நடித்திருந்தார். சொல்லப் போனால்- அந்தக் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தார் பாண்டியன். பாண்டியன் என்ற நடிகரையே நான் பார்க்கவில்லை. கிராமங்களிலிருந்து பட்டாளத்திற்குப் போய்ச் சேரும் பல இளைஞர்களை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் ஒருவரைத்தான் நான் பாண்டியனிடம் பார்த்தேன்.
பாண்டியன், ரேவதி இருவரையும் மிகவும் அருமையாகக் கையாண்டிருந்தார் பாரதிராஜா. இளையராஜா இசையமைத்த மிகச் சிறந்த பாடல்கள் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. பாடல் காட்சிகளின்போது திரை அரங்கில் மக்கள் ஆரவாரம் செய்ததும், உணர்ச்சிவசப்பட்டு கைகளைத் தட்டியதும் இப்போதுகூட என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
‘மண்வாசனை’ படத்தின் மூலம் மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு முன்னணி கதாநாயகனாக ஆனார் பாண்டியன். அப்படத்தைத் தொடர்ந்து ஏவி.எம். நிறுவனம், ‘புதுமைப் பெண்’ என்ற படத்தைத் தயாரித்தது. மீண்டும் பாண்டியன், ரேவதி இருவரும் நாயகன், நாயகியாக அதில் நடித்தார்கள். பாரதிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை மையமாக வைத்து அந்தப் படத்தை இயக்கி இருந்தார். ‘மண் வாசனை’ படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்த பாண்டியன், இந்தப் படத்தில் நகரத்து இளைஞராக நடித்திருந்தார். சென்னை அலங்கார் திரை அரங்கில் (இப்போது அந்த திரை அரங்கே இல்லை) நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். பாண்டியன், ரேவதி வந்த பல காட்சிகளையும் மக்கள் மெய்மறந்து ரசித்தனர். ஒரு பாடல் காட்சியில் பாண்டியனும் ரேவதியும் கைகளைத் தட்டிக் கொண்டே பாடுவது மாதிரி பாரதிராஜா காட்சி அமைத்திருந்தார். அந்தப் பாடல் காட்சிக்குத்தான் தியேட்டரில் என்ன வரவேற்பு! 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த அந்தப் படத்தை தெலுங்கிற்கும் கொண்டு போனார் பாரதிராஜா.
அந்த இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடியதால், தயாரிப்பாளர்கள் தேடும் கதாநாயகர்களில் ஒருவராக ஆனார் பாண்டியன்... அப்போது கிராமத்துப் பின்னணியில்தான் பெரும்பாலான படங்கள் தயாராகிக் கொண்டிருந்ததால், பாண்டியனைத் தேடி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஓடினர். இராம.நாராயணன், தான் இயக்கிய பல படங்களிலும் கதாநாயகனாக பாண்டியனை நடிக்க வைத்தார். ராமராஜன் இயக்கிய முதல் படமான ‘மண்ணுக்கேத்த பொண்ணு’விலும் பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்திலும் கூட கதாநாயகனாக நடித்தவர் பாண்டியன்தானே! ஒரே நேரத்தில் பத்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார் பாண்டியன். பாண்டியன் கதாநாயகனாக நடித்தால் படத்தை வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக பட வினியோகஸ்தர்கள் கூறுவதை நானே அருகில் இருந்து கேட்டிருக்கிறேன்.
எனக்கு பாண்டியன் மிகவும் நெருக்கமாகப் பழக்கமானது 1988ஆம் ஆண்டில் தயாரான ‘சங்கு புஷ்பங்கள்’ என்ற படத்தின்போதுதான். அன்புக்கனி என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி விஸ்வநாத் நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது நானும் பாண்டியனும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். நான் படித்த மதுரை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்தான் பாண்டியன் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவருக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த மன்னார்சாமி என்பவர் நான் படிக்கும்போது எனக்கு சரித்திர ஆசிரியராக இருந்திருக்கிறார். எனக்கு நான்கு வருடங்கள் கழித்து அங்கு படித்தவர் பாண்டியன். இந்த விஷயம் எங்களை மேலும் நெருக்கமாக்கியது.
அதற்குப் பிறகு ‘காதலெனும் நதியினிலே’ என்ற படத்தின்போதும் நானும் பாண்டியனும் அடிக்கடி சந்திப்போம். பாசிலிடம் உதவியாளராகப் பணியாற்றிய எம்.கே.ஐ. சுகுமாரன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சீதா. பாண்டியனுடன் இன்னொரு கதாநாயகனாக நடித்தவர் ‘ஒரு தலை ராகம்’ சங்கர். மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட அப்படம் திரைக்கு வந்தபோது, மக்களால் பேசப்பட்டது. 50 நாட்களைக் கடந்து அப்படம் ஓடியது.
பல வருடங்கள் தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களிலும் நடித்தார் பாண்டியன். அதன்மூலம் நன்கு சம்பாதிக்கவும் செய்தார். அதற்குப் பிறகு படவுலகில் பல மாற்றங்கள் உண்டாயின. திரைப்படக் கல்லூரி மாணவர்களின் நுழைவால், பிரம்மாண்டமான ஆக்ஷன் படங்கள் உருவாயின. அந்த சூழ்நிலையைத் தொடர்ந்து பாண்டியனைப் போன்றவர்களை படவுலகம் மறந்து விட்டது. பாண்டியனைத் தேடி யாரும் போகவில்லை. தனக்குத் தெரிந்த மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவரைத் தயாரிப்பாளராக்கி, ‘பந்தயக் குதிரைகள்’ என்ற பட முயற்சியில் பாண்டியன் ஈடுபட்டார். அதில் ஆக்ஷன் ஹீரோக்களாக பாண்டியனும், ‘ஒரு தலை ராகம்’ சங்கரும் நடித்தார்கள். ‘வைகாசி பொறந்தாச்சு’ பட நாயகி காவேரிதான் அதில் கதாநாயகி. பாண்டியன் பெரிதாக அந்தப் படத்தை எதிர்பார்த்தார். ஆனால், படம் வியாபாரம் ஆகாததால், திரைக்கே வர முடியாமற் போய்விட்டது. அதில் மனம் ஒடிந்து போனார் பாண்டியன்.
பல வருடங்கள் பட வாய்ப்பு எதுவும் இல்லை என்ற சூழ்நிலை வந்ததும், தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் பெரிய அளவில் அவரால் வர முடியவில்லை. மிகவும் சாதாரண சம்பளத்திற்கு அங்கு பலரும் நடிக்கத் தயாராக இருக்கும்போது, பாண்டியனை யார் தேடுவார்கள்? பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் தன்னுடைய சாலிகிராமம் வீட்டில் வெறுமனே அமர்ந்திருக்கும் பாண்டியனை நான் பல நேரங்களில் சென்று பார்த்து பேசியிருக்கிறேன். பட வாய்ப்பு இல்லாத கவலை காரணமாக மது அருந்திவிட்டு சோர்வடைந்த கண்களுடன் பகல் நேரத்திலேயே உட்கார்ந்திருப்பார். நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த பாண்டியனையும், இப்போது நான் பார்க்கும் பட வாய்ப்பில்லாத பாண்டியனையும் என் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. இதுதான் படவுலகம் என்று அப்போது நான் மனதில் நினைத்துக் கொண்டேன்.
பட உலகில் நுழைவது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படிப்பட்ட வாய்ப்பு யாரோ ஒருவருக்குத்தான் கிடைக்கும். அதுவும் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிப்பது என்றால்...? மிகப் பெரிய அந்த வாய்ப்பைப் பெற்ற பாண்டியன் அரசியல் கட்சி, பிரச்சாரம் என்றெல்லாம் தடம் புரண்டு போகாமல் படத்துறையிலேயே கவனம் செலுத்தியிருந்தால் இரண்டாவது கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்திருக்கலாம்.
‘நிழல்கள்’ ரவி இயங்கிக் கொண்டிருக்கவில்லையா?
வாழ்க்கையின் கடுமையைப் புரிந்து கொள்ளாமல் வெகுளியாகவே வாழ்ந்துவிட்ட பாண்டியன் தன்னுடைய 47வது வயதில் மரணத்தைத் தழுவி விட்டார் என்பது எவ்வளவு பெரிய சோகச் செய்தி! பட வாழ்க்கையில் இருப்பவர்கள் உடலையும், தொழிலையும் எவ்வளவு அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே பாண்டியனின் மரணம் உணர்த்தும் பாடம்.