கனவு ராஜாக்கள் - Page 11
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
முழுநேரம் குடித்த கதாநாயக நடிகர் முகவரியை இழந்தார்!
சுரா
கடந்த சில வருடங்களில் என்னை மிகவும் பாதித்தது- நடிகர் விஜயனின் மரணம்தான். செய்தியைப் பத்திரிகைகளில் படித்ததும் ஆழ்ந்த கவலையில் மூழ்கி விட்டேன்.
1978ஆம் ஆண்டு. பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைக்கு வந்தது. அந்தப் படத்தில் 'பட்டாளத்தான்' பாத்திரத்தில் முரட்டுத்தனமான பார்வையுடன் ஒரு புதுமுக நடிகர் அறிமுகமாகியிருந்தார். அவர்தான் விஜயன். நான் அந்தப் படத்தை மதுரை கல்பனா திரையரங்கில் பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்தபோது, படத்தைப் பார்த்தவர்கள் கதாநாயகன், கதாநாயகியைப் பற்றி பேசியதைவிட விஜயனைப் பற்றித்தான் அதிகமாக பேசினார்கள். 'பட்டாளத்தானாக நடித்திருக்கும் இந்த நடிகர் யார்? இவ்வளவு அருமையாக இந்த பாத்திரத்திற்குப் பொருந்தியிருக்கிறாரே!' என்று எல்லோரும் பேசினார்கள். படத்தில் ஐந்தே ஐந்து காட்சிகளில்தான் விஜயன் வருவார். எனினும், காதலர்களை வாழ வைப்பதற்காக தன்னையே தியாகம் செய்யும் அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் சாகா வரம் பெற்று வாழ்ந்தது. அந்த பாத்திரத்தை ஏற்று நடித்த விஜயனும்தான்.
அதைத் தொடர்ந்து விஜயனுக்கு நிறைய படங்கள் ஒப்பந்தமாயின. பாரதிராஜா இயக்கிய 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் சுதாகரும், விஜயனும் கதாநாயகர்களாக நடித்தார்கள். அதுவும் வெற்றிப் படமாக அமைந்தது. புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவலை 'உதிரிப் பூக்கள்' என்ற பெயரில் படமாக இயக்கினார் மகேந்திரன். அதில் விஜயன்தான் கதாநாயகனாக நடித்தார். அந்த கதாநாயகன் பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தினார் விஜயன். குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அஞ்சுவை விஜயன் பாசம் பொங்கும் சிரிப்புடன் ஒரு காட்சியில் பார்ப்பார். விஜயனின் அந்த அழகான சிரிப்பும், ஒளி வீசும் கண்களும் இப்போதுகூட என் மனதில் அப்படியே பசுமையாக நின்று கொண்டிருக்கின்றன.
விஜயன் நடித்த இன்னொரு மிகப் பெரிய வெற்றிப் படம் 'பசி'. துரை இயக்கிய அந்தப் படத்தில் குப்பை பொறுக்கும் ஷோபாவை ஏமாற்றிக் கெடுக்கும் லாரி டிரைவர் பாத்திரத்தில் விஜயன் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு விஜயன் அவ்வளவு அருமையாக பொருந்தியிருந்தார். சப்-டைட்டில் போடப்பட்டு அந்தப் படம் ரஷ்யாவில் கூட திரையிடப்பட்டது.
எம்.ஏ. பட்டதாரியான விஜயன் நடிக்க வருவதற்கு முன்பே பல மலையாளப் படங்களுக்கு கதை எழுதியிருந்தார். அவர் கதை எழுதிய சில படங்கள் நல்ல வெற்றிகளைக் கூட பெற்றன. மலையாளப் பட இயக்குநர் பேபியின் சில படங்களுக்கு கதை எழுதியதன் மூலம் விஜயனுக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது. 'வார்ட் நம்பர் 7' என்ற பெயரில் விஜயன் கதை எழுதிய மலையாளப் படம் கேரளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே கதையை இயக்குநர் துரை 'பாதை மாறினால்' என்ற பெயரில் தமிழில் இயக்கினார். விஜயன் அதில் கதாநாயகனாக நடித்தார். சென்னை அரசு மருத்துவமனையில் பிணங்களை ஏற்றிச் செல்லும் கார் டிரைவராக விஜயன் நடித்திருந்தார். இறந்துவிட்ட தன் தாயையே யாரென்று தெரியாமல், பிணத்தை காரில் ஏற்றிக் கொண்டு செல்வதற்கு பேரம் பேசுவார். படம் பார்ப்போர் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்த காட்சி அது.
'மலர்களே மலருங்கள்' படத்தை விஜயன் சொந்தத்தில் தயாரித்தார். இது நடந்தது 1981ஆம் ஆண்டில். சுதாகர், ராதிகாவுடன் விஜயனும் நடித்திருந்தார். வர்த்தக ரீதியாக படம் ஓடவில்லை.
எனக்கு விஜயன் 1983ஆம் ஆண்டில் அறிமுகமானார். அப்போது 'கண்ணிலே அன்பிருந்தால்' என்ற படத்தில் கதாநாயகனாக அவர் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தை இயக்கியவர் வி.அழகப்பன். வடபழனி விஜயா கார்டனில் நடைபெற்ற படப்பிடிப்பில்தான் விஜயனை முதல் தடவையாக நான் பார்த்தேன். பார்த்த முதல் கணத்திலேயே என் மனதில் அவர் ஆழமாக பதிந்து விட்டார். கேரளத்தில் பிறந்தவன் என்பதாலும், மலையாள இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்டிருப்பவன் என்பதாலும், மலையாள இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்ப்பவன் என்பதாலும் என்னை எப்போதும் விஜயனுக்கு மிகவும் பிடிக்கும். தகழி, பஷீர், பி.கேசவதேவ், எஸ்.கெ. பொற்றெக்காட், எம்.டி.வாசுதேவன் நாயர், எம்.முகுந்தன் போன்ற பல மலையாள எழுத்தாளர்களைப் பற்றி நேரம் போவதே தெரியாமல் நாங்கள் சந்திக்கும் நிமிடங்களிலெல்லாம் பேசியிருக்கிறோம்.
ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்த விஜயன் பின்னர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தன. அதன் விளைவாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. நேரம், காலம் பார்க்காமல் மது அருந்தும் பழக்கத்திற்கு அவர் அடிமையானார். எப்போதும் மது நெடியுடனே அவர் தென்பட்டார். அதனால் அவரை படத்திற்கு ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்கினர்.
நீண்ட காலம் பட வாய்ப்பே இல்லாமலிருந்த விஜயனுக்கு 'ஒரு கைதியின் டைரி' படத்தின் மூலம் மீண்டும் திரியை ஏற்றி வைத்தார் பாரதிராஜா. அதைத் தொடர்ந்து பல படங்கள் அவருக்கு ஒப்பந்தமாயின. எனினும், மதுப் பழக்கத்திற்கு அடிமையான அவருக்கு தொடர்ந்து தொழில் கை கொடுக்கவில்லை.
கோவையில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த விஜயன் மது அருந்தி விட்டு, அறைக்குள்ளிருந்து வெளியே வரவே முடியாது என்று கூறிவிட்டார். கடைசியில் நான் போய் கதவைத் தட்டி, அவரை வெளியே வரும்படி செய்தேன். 'காலை ஆறு மணிக்கு படப்பிடிப்பு குழுவினர் என்னை வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். ஆறரை மணிவரை நான் எதிர்பார்த்தேன். யாரும் வரவில்லை. அதற்குப் பிறகு நான் ‘தண்ணி அடித்து’ விட்டு படுத்து விட்டேன்' என்றார். அதைக் கேட்டபோது எனக்கு விஜயனைப் பார்த்து சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என்றே தெரியவில்லை.
எப்போதும் மதுவின் போதையிலேயே இருக்கும் விஜயன் எங்கே படப்பிடிப்பிற்கு வராமல் போய்விடுவாரோ என்று அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் அஞ்சினார்கள். அந்தக் கால கட்டத்தில்தான் அவருக்கு திருமணம் நடந்தது. கேரளத்தின் முதலமைச்சராக இருந்த ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரப் பெண்தான் விஜயனின் மனைவி. அந்தத் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. விஜயனின் அளவுக்கு அதிகமான குடிப் பழக்கத்தைச் சகிக்க முடியாமல், அவருடைய மனைவி சொந்த ஊருக்கே போய்விட்டார்.
அதற்குப் பின்னர் விஜயன் தனியாகவே சென்னையில் வாழ்ந்தார். நினைத்த இடங்களில் எல்லாம் தங்குவார். எந்த நண்பரின் அறையிலும் போய் படுத்துக் கொள்வார். பட வாய்ப்பு இல்லாமலிருந்த ஒரு நாளில் என்னைத் தேடி வந்து 25 ரூபாய் கடன் கேட்டார். நான் 50 ரூபாயை எடுத்து அவர் கையில் தந்தேன். மிகவும் பிஸியான நடிகராக நான் பார்த்த விஜயனையும், மதுவின் வாசனையுடன் எனக்கு முன்னால் நின்றிருந்த விஜயனையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். எனக்கு கண்ணீர் வந்தது.
பட வாய்ப்பு இல்லாமல் வெறுமனே இருந்த ஒரு நாளில் என் அலுவலகத்திற்கு என்னைத் தேடி அவர் வந்தார். “அருமையான ஒரு கதை என்னிடம் இருக்கிறது. ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். ரஜினி என் நெருங்கிய நண்பர். கட்டாயம் சம்மதிப்பார்'' என்றார். 'முத்து' படம் திரைக்கு வந்து புகழின் உச்சியில் ரஜினி இருந்த நேரம் அது. விஜயனின் அப்போதைய நம்பிக்கையை நினைத்து, எனக்கு அவர் மீது பரிதாபம்தான் உண்டானது.
பல வருடங்களுக்குப் பிறகு 'ரமணா' படம் விஜயனுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பிறகு அவருடைய கேரள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு ஆட்டோவில் வந்திருந்தார் விஜயன். அப்போது நான் அங்கு இருந்தேன். 'இப்போது உங்களுக்கு நல்ல ஒரு திருப்பம் உண்டாகியிருக்கிறது. நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்த வரையில் மது அருந்துவதை விட்டு விடுங்கள்' என்று நான் அவரிடம் கூறினேன். 'நான் மது அருந்துவதை விட்டு விட்டேன். இப்போது குடிப்பதே இல்லை' என்றார் விஜயன் என்னைப் பார்த்து. அப்போது 'குப்'பென்று அவரது வாயிலிருந்து மதுவின் வாசனை வந்தது. அது ஒரு பகல் நேரம். அதுதான் விஜயன்!
விஜயன் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு படத்திற்காக விஜயனைத் தேடினேன். அவர் இங்கு இல்லை- கேரளத்திற்குப் போய் விட்டார் என்றார்கள். அவரது முகவரியோ, தொலைபேசி எண்ணோ எங்கெங்கோ முயன்றும் கிடைக்கவில்லை.
இறுதியில் கிடைத்தது அவரைப் பற்றிய மரணச் செய்திதான்.
ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ, அப்படி வாழ்ந்திருக்கிறார் விஜயன். கட்டுப்பாடு இல்லாத குடிப்பழக்கம் ஒரு கலைஞனின் வாழ்க்கையை எந்த அளவிற்கு அழித்துவிடும் என்பதை நாம் விஜயனின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
விஜயனின் மரணத்தால் கலையுலகம் ஒரு திறமை வாய்ந்த நடிகரை இழந்துவிட்டது. நான் ஒரு அருமையான நண்பரை இழந்துவிட்டேன்.