கனவு ராஜாக்கள் - Page 24
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
மஞ்சள் நிற பைக்குள் கதைகளை வைத்துக் கொண்டு சாலைகளில் அலையும் இயக்குநர்!
சுரா
1980ஆம் ஆண்டில் 'கரை கடந்த ஒருத்தி' என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. அப்படத்தை இயக்கியவர் மாந்துறை பாபுஜி. வனிதாஸ்ரீ என்ற புதுமுகம் அதில் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார். குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காதல் கதை அது. ஆரம்பத்தில் 'கரை கடந்த குறத்தி' என்றுதான் அதற்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைக்குழு அந்தப் பெயரை அனுமதிக்க மறுத்துவிட்டது. அதனால் படம் திரைக்கு வருகிற நேரத்தில் 'கரை கடந்த ஒருத்தி' என்று பெயரை மாற்றி விட்டார்கள். படத்தில் இடம் பெற்ற, எம்.ஜி.வல்லபன் எழுதிய 'ஓடத்துல தண்ணீரு...' பெண்ணொருத்தி கண்ணீரு' என்ற அருமையான பாடலை எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மால் மறக்கத்தான் முடியுமா?
அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏதோ பெரிய ஒரு சாதனையை அந்தப் படம் செய்யப் போகிறது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். தணிக்கைக் குழுவினர் பல இடங்களில் குதறிவிட்டிருந்ததாலோ என்னவோ, அந்தப் படம் திரைக்கு வந்தபோது சரியாக ஓடவில்லை. எனினும், மாந்துறை பாபுஜி என்ற இயக்குநரின் பெயர் என் மனதில் அப்போதே ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், அவரை நான் நேரில் பார்த்ததில்லை.
தான் இயக்கிய முதல் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனதால், அடுத்த வாய்ப்புக்காக மாந்துறை பாபுஜி பலமாக முயற்சி செய்து பார்த்திருக்கிறார். வாய்ப்புதான் கிடைக்கவில்லை. இந்த முயற்சிகளில் ஐந்து வருடங்கள் மிகவும் வேகமாக ஓடிவிட்டன. 1985ஆம் வருடத்தில் அவர் ஒரு முயற்சியில் இறங்கினார். தஞ்சாவூர் பகுதியில் உள்ள சில இளைஞர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கினார். 16 எம்.எம்.மில் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தின் பெயர் 'சக்சஸ்'. இந்தத் தகவலை அப்பகுதியில் இருக்கும் என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்து சொன்னான்.
அப்போது நான் 'வண்ணத்திரை' வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். மாந்துறை பாபுஜி பல இளைஞர்களிடமும் பணம் வசூல் செய்து படத்தை இயக்கும் விஷயத்தை மூன்று பக்கங்கள் வரக்கூடிய ஒரு கட்டுரையாக நான் எழுதிவிட்டேன். என் பெயருக்குப் பதிலாக புனைப்பெயர் ஒன்றைப் போட்டிருந்தேன். இறுதியில் கட்டுரையை முடிக்கும்போது 'மாந்துறை பாபுஜி தான் இயக்கும் படத்திற்கு 'சக்சஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார். பலரிடமும் பணம் வாங்கிய விஷயத்தில் தான் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இவர் அந்தப் படத்திற்கு 'சக்சஸ்' என்று பெயர் வைத்திருப்பாரோ?' என்று எழுதியிருந்தேன்.
அந்தக் கட்டுரை வெளியாகி பல வருடங்களுக்குப் பிறகு நானும் மாந்துறை பாபுஜியும் ஒரு ஸ்டூடியோவில் சந்தித்தோம். என்னிடம் மிகவும் அன்பாக பேசினார் பாபுஜி. அந்த முதல் சந்திப்பிலேயே என் மனதில் பாபுஜி நல்ல ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.
'கரை கடந்த ஒருத்தி' படத்திற்குப் பிறகு, தான் படவுலகில் காலை ஊன்றுவதற்காக மிகவும் சிரமப்பட்டு போராடிக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். உள்ளுக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடனேயே பேசுவார் பாபுஜி என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்து நான் புன்னகைத்தேன். என் புன்னகைக்கு காரணத்தை அவர் கேட்டார். நான் அவரைப் பற்றி 'சக்சஸ்' படம் எடுக்கும்போது பத்திரிகையில் எழுதியதைக் குறிப்பிட்டு, 'அதை எழுதியது நான்தான்' என்றேன்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாபுஜி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் என்னைப் பார்த்து 'அந்தக் கட்டுரையால் எனக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு உண்டாகிவிட்டது தெரியுமா? எனக்கு மிகப் பெரிய அவமானத்தை அது தேடித் தந்துவிட்டது. அந்தக் கட்டுரை வந்தபிறகு, படம் வளராமல் அப்படியே நின்றுவிட்டது' என்றார். அதைக் கேட்டு எனக்கு வருத்தம் உண்டானது. 'இவ்வளவு நல்ல மனிதரான உங்களைப் பற்றியா நான் அப்படி எழுதினேன் என்பதை நினைக்கும்போது எனக்கும் மனதில் சங்கடமாகத்தான் இருக்கிறது' என்றேன் நான்.
அதற்குப் பிறகு பாபுஜிக்கும் எனக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு உண்டானது. பாபுஜியை நான் 'அண்ணன்' என்றுதான் அழைப்பேன். ஆரம்பத்தில் 'வாங்க... போங்க... ' என்று மரியாதையுடன் என்னை அழைத்துக் கொண்டிருந்த அவர் காலப்போக்கில் 'நீ... வா... போ...' என்று ஒருமையில், உரிமையுடன் அழைக்க ஆரம்பித்தார். அவர் அப்படி அழைப்பது எனக்குப் பிடித்திருந்தது.
எப்படியோ ஒரு தயாரிப்பாளரை வலை வீசிப் பிடித்து விட்டார் பாபுஜி. முரளி-சித்தாராவை வைத்து 'வழி பிறந்தது' என்ற பெயரில் ஒரு படத்தை அவர் இயக்கினார். முக்கால் பகுதி முடிவடைந்துவிட்ட அந்தப் படம் என்ன காரணத்தாலோ, அப்படியே நின்றுவிட்டது.
சில வருடங்களுக்குப் பிறகு மாந்துறை பாபுஜியின் வலையில் இன்னொரு தயாரிப்பாளர் மாட்டினார். நெப்போலியனைக் கதாநாயகனாகப் போட்டு 'கிழக்குப் பக்கம் காத்திரு' என்ற படத்தை பாபுஜி இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்தப் படத்தின் கதாநாயகி ரேகா. படப்பிடிப்பின்போது அடிக்கடி பாபுஜியை நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன். பாதி வரை வளர்ந்த அப்படம், பணத்தட்டுப்பாட்டால் அப்படியே நின்றுவிட்டது.
அதற்குப் பிறகு கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி தெருக்களில் மாந்துறை பாபுஜியை அவ்வப்போது பார்ப்பேன். மஞ்சள் பையைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் வெயில், மழை பார்க்காமல் அவர் நடந்து போய்க் கொண்டிருப்பார். அந்தப் பைக்குள் பல கதைகளும், திரைக்கதைகளும் இருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாள் ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு எதிரில் அவரைப் பார்த்தேன். ஒரு துணிப் பையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். 'உன்னை நான் தேடிக்கிட்டு இருக்கேன்பா... ஒரு தயாரிப்பாளர் கிடைச்சிருக்காரு. என்கிட்ட ஒரு அருமையான கதை இருக்கு. திரைக்கதை, வசனம் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். இந்தக் கதைக்கு சத்யராஜ்தான் பொருத்தமா இருப்பாரு. அவரை நான் சந்திக்க நீ உதவ முடியுமா?' என்றார் பாபுஜி. 'வால்டர் வெற்றிவேல்', 'அமைதிப்படை', 'தாய்மாமன்', 'மாமன் மகள்' என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து சத்யராஜ் புகழின் உச்சியில் இருந்த நேரமது. மாந்துறை பாபுஜி மீது எனக்கு அப்போது பரிதாபம்தான் உண்டானது. அது சிறிது கூட நடக்காத விஷயம் என்பதால், நான் அதில் ஆர்வம் காட்டவில்லை.
அதற்குப் பிறகு வருடங்கள் பல கடந்தோடி விட்டன. மாந்துறை பாபுஜி என் கண்களிலேயே படவில்லை. காலப் போக்கில் வேலை நெருக்கடியில் நானும் அவரை மறந்துவிட்டேன்.
ஆறு வருடங்களுக்கு முன்பு அமைந்தகரை லட்சுமி திரை அரங்கிற்கு முன்னால் பாபுஜியை நான் பார்த்தேன். அது ஒரு இரவு நேரம். நான் எதிர்த்திசையில் ஆட்டோவில் அவசரமாகப் போய்க் கொண்டிருந்ததால், அவருடன் என்னால் பேச முடியவில்லை. பாலித்தீன் பையில் பிரியாணியோ, புரோட்டாவோ எதோவொன்றை பார்சலாக வாங்கிக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். அவருடைய வீடு அந்தப் பகுதியில் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு பாபுஜி ஒரு நாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கே.கே.நகரில் உள்ள ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின் அலுவலகத்தில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். ‘படம் இயக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன்பா... தயாரிப்பாளர் ஒருத்தர் கூட மாட்டல... குடும்பச் செலவுக்கு ஏதாவது சம்பாதிச்சு ஆகணுமே! நம்மால, வீட்டுல இருக்குறவங்க ஏன் தேவையில்லாம சிரமப்படணும்? அதனால இந்த வேலையில வந்து சேர்ந்துட்டேன். மாசாமாசம் ஏதோ கொஞ்சம் பணம் வருது. அதை வச்சு குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்’ என்றார் பாபுஜி என்னிடம்.
அதற்குப் பிறகு பாபுஜி என் கண்களில் தென்படவில்லை. எனினும், விஜய்க்காகவோ, அஜீத்திற்காகவோ, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, பரத், ஜெயம் ரவி, விஷால், விமல், விஷ்ணு, விக்ரம் பிரபு ஆகியோருக்காகவோ பல கதைகளை தயார் பண்ணி, தன் கையில் இருக்கும் மஞ்சள் நிற பைக்குள் அவர் வைத்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.