கனவு ராஜாக்கள் - Page 28
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
கலைஞரின் கதையை இயக்கிய கம்யூனிஸ்ட்!
சுரா
கலைஞர் எழுதிய ‘சாரப்பள்ளம் சாமுண்டி’ என்ற கதையை ‘உளியின் ஓசை’ என்ற பெயரில் இயக்கினார் இளவேனில்.
இளவேனிலை நான் நேரில் சந்திப்பதற்கு முன்பே, அவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் படித்திருக்கிறேன். 77ஆம் வருடமாக இருக்க வேண்டும். அப்போது ‘கணையாழி’ மாத இதழ் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக அசோகமித்திரன் பணியாற்றிக் கொண்டிருந்தார். யாருக்குமே புரியாமல், சம்பந்தமே இல்லாத சொற்களையும் வார்த்தைகளையும் போட்டு கவிதை என்று எழுதினால், அதை கட்டாயம் கணையாழியில் பிரசுரிப்பார்கள் என்றிருக்கிறார் இளவேனில். அதை நிரூபிப்பது மாதிரி, தன்னுடன் உட்கார்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு வார்த்தையைக் கூறுமாறு இளவேனில் கூறியிருக்கிறார். அவர்கள் கூறிய தொடர்பே இல்லாத வார்த்தைகளை இங்குமங்குமாக போட்டு, அர்த்தமே இல்லாத ஒரு கலவையை கவிதை என்ற பெயரில் ‘அரூபசொரூபன்’ என்ற புனைப் பெயருடன், ‘கணையாழி’க்கு அனுப்பினார். அடுத்த மாதமே அது ‘கணையாழி’யில் பிரசுரமாகி வந்தது. அதை நானும் படித்தேன். அதைத் தொடர்ந்து வேறொரு பத்திரிகையில் இளவேனில் அந்தக் கவிதை பிரசுரமான கதையை வெளிப்படுத்தினார். அர்த்தமே இல்லாத, புரியவே புரியாத ஒன்றை கவிதை என்று அனுப்பினால் ‘கணையாழி’யில் அதை மிகச் சிறந்த படைப்பு என்று நினைத்து பிரசுரிப்பார்கள் என்ற உண்மையை வெளியே போட்டு உடைத்தார். இளவேனிலைப் பற்றி நான் படித்த முதல் செய்தியே அதுதான். அப்போதே இளவேனில் என்ற பெயர் என் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது.
1980ஆம் ஆண்டு சென்னையில் அவரை நான் சந்தித்தேன். நான் அப்போது ‘பிலிமாலயா’ மாத இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘ஜனசக்தி’ அலுவலகத்திலிருந்து வெளிவரும் ‘தாமரை’ இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்த சோமுவைப் பார்க்கப் போனபோது, அங்கு இளவேனில் இருந்தார். ‘தாமரை’ இதழின் மேலட்டையை இளவேனில்தான் உருவாக்குவார். அத்துடன், உள்ளே படங்கள் வரைவது, தலைப்புகள் எழுதுவது எல்லாமே அவர்தான். சிறந்த கவிஞரான இளவேனில் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட என்பதை நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஆழமான சிந்தனையாளரான இளவேனில் மிகுந்த நகைச்சுவையுடன் உரையாடுவார். பல கம்யூனிஸ்ட்காரர்களைப் போல இல்லாமல், நெருங்கிய தோழமையுடன் பழகுவார். பார்த்த கணத்திலேயே எனக்கு இளவேனிலை மிகவும் பிடித்துவிட்டது. அவரை வாரம் ஒரு முறையோ இரு முறையோ ‘ஜனசக்தி’ அலுவலகத்தில் சந்திப்பேன். காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாக்ஸிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் ஆகியோரைப் பற்றி ஏராளமான தகவல்களை அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன்.
இப்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராகவும் இருக்கும் அழகன் தமிழ்மணி 1981ஆம் ஆண்டில் ‘நயனதாரா’ என்ற மாத நாவலை சொந்தத்தில் நடத்தினார். அதற்கு அட்டை வடிவமைப்பு, உள்ளே தலைப்புகள் ஆகியவற்றை இளவேனில்தான் அமைத்துக் கொடுத்தார். தியாகராய நகரில் இருந்த அந்த அலுவலகத்தில் நான், இளவேனில், தமிழ்மணி மூவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.
‘இளவேனில் கவிதைகள்’ என்ற பெயரில் அவர் எழுதியிருந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த கவிதைகளைப் படித்தபோது, அவர் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டானது. முற்போக்கு சிந்தனைகள் கொண்ட அந்தக் கவிதைகளுக்கு இலக்கிய வட்டாரத்தில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ‘எனது சாளரத்தின் வழியே’ என்ற பெயரில் இலக்கிய விமர்சனங்கள் கொண்ட ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார், இலக்கியம் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை தன் பார்வையில் அவர் எழுதியிருந்தார். அந்த நூலையும் நான் ஆர்வத்துடன் படித்தேன். இளவேனிலில் மாறுபட்ட பார்வையை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. ’25 வெண்மணித் தெரு’ என்ற அரசியல் விமர்சனக் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டார். மிகவும் துணிச்சலாக எழுதப்பட்ட அந்த நூலில் முரண்பாடான பல கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அந்நூலில் இடம் வெற்றிருந்த சில கட்டுரைகள் எனக்கு உடன்பாடாக இல்லையென்றாலும், அது ஒரு சிறந்த நூல் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நூலை மூன்று நாட்கள் ஊண், உறக்கம் எவை பற்றியும் கவலைப்படாமல் நான் படித்தேன். அதற்குப் பிறகு என்னை முற்றிலும் மறந்துவிட்டு, நான் படித்த புத்தகம் இளவேனில் எழுதிய ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ தான். கலைஞர் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தார். கலைஞர்தான் அந்நூலை வெளியிடவும் செய்தார். நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். அண்ணா அறிவாலயத்தில் அது நடந்தது. இளவேனிலின் எழுத்துத் திறமையை மிகவும் உயரத்தில் வைத்து கலைஞர் பாராட்டினார்.
அன்று இரவே நான் ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ நூலை வாசிப்பதற்காக உட்கார்ந்தேன். உணவு, தூக்கம் எதுவுமே ஞாபகத்தில் வரவில்லை. நூலை கீழே வைக்கவே முடியவில்லை. தொடர்ந்து அதைப் படித்துக் கொண்டே இருந்தேன். மறுநாளும் வாசிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு தகவலையும் மிகவும் சுவாரஸ்யத்துடன் இளவேனில் எழுதியிருந்தார். அந்த நூல் வெளியாகி இருபது வருடங்கள் கடந்தோடி விட்டன. இப்போது கூட அதில் வரும் கதாபாத்திரங்கள் என் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அந்தப் பெருமை அந்தப் புத்தகத்தை எழுதிய இளவேனிலுக்குத்தான்.
கவிதை, இலக்கியக் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், ஓவியம் என்று பல திறமைகளைக் கொண்டிருந்த இளவேனிலுக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற ஆவல் பல வருடங்களாகவே இருந்தது. 70களின் இறுதியில் ‘நூறு பூக்கள் மலரும்’ என்ற பெயரில் ஒரு படத்தை அவர் இயக்க முயற்சித்தார். அது ஆரம்ப கட்டத்திலேயே நின்று விட்டது. பிறகு ‘வீரவணக்கம்’ என்ற பெயரில் ஒரு படம் ஆரம்பமாகி இரண்டு பாடல்கள் கூட அதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்தப் படமும் தொடங்கிய வேகத்திலேயே நின்றுவிட்டது. பின்னர் ‘நெஞ்சில் ஓர் தாஜ்மகால்’ என்றொரு படத்தை அவர் இயக்க திட்டமிட்டார். சிவாஜி ராஜா இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. எல்லா பாடல்களையும் இளவேனிலே எழுதினார். எனினும், படம் வளராமலே நின்று விட்டது. அதற்குப் பிறகு சில திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். ‘நந்தன்’ பத்திரிகையில் இளவேனில் ஆசிரியராக இருந்தபோது நான் அதில் திரைப்படத்துறை பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன்.