கனவு ராஜாக்கள் - Page 29
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
பின்னர் ‘குடியரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த இளவேனில் பல மாதங்கள் தொடர்ந்து ‘முரசொலி’யில் எழுதிய அரசியல் கட்டுரைகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. அக்கட்டுரைகள் ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ என்ற பெயரில் பின்னர் நூலாக வந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றது.
முப்பது வருடங்களாக திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று இளவேனில் கொண்டிருந்த ஆவல் நான்கு வருடங்களுக்கு முன்பு செயல்வடிவத்திற்கு வந்தது. அவரது இயக்கத்தில் கலைஞர் கதை- வசனம் எழுத ‘உளியின் ஓசை’ படம் திரைக்கு வந்து பரவாயில்லாமல் ஓடியது. ஒரு காதல் காவியமாக அதை இளவேனில் உருவாக்கியிருந்தார். ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக அப்படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞராக, அரசியல் ஆய்வாளராக, ஓவியராக, இலக்கிய விமர்சகராக, சிறந்த சிந்தனையாளராக அனைவரிடமும் நல்ல பெயரைப் பெற்றிருந்த இளவேனில் ஒரு திறமை வாய்ந்த திரைப்பட இயக்குநர் என்பதையும் ‘உளியின் ஓசை’ படத்தின் மூலம் நிரூபித்தார்.
‘உளியின் ஓசை’ திரைக்கு வந்து சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனமே இளவேனிலின் இயக்கத்தில் ‘நீயின்றி நானில்லை’ என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தது. அப்படத்திற்கும் கலைஞரே கதை – வசனம் எழுதினார். அப்படத்தின் தொடக்க விழா ஏவி.எம்.ஸ்டூயோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். தேவா அப்படத்திற்கு இசையமைத்தார். அப்படத்திற்காக சில பாடல்கள் கூட ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
‘நீயின்றி நானில்லை’ படத்திற்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன், இளவேனில், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் ஆகியோருடன் நானும் மூணாறு, பாபநாசம், அம்பாசமுத்திரம், குற்றாலம், புனலூர், தேக்கடி ஆகிய இடங்களுக்குச் சென்றேன். பின்னர் என்ன காரணத்தாலோ இளவேனில் அந்தப் படத்தை இயக்க விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த நிறுவனம் அந்தப் படத்தை நிறுத்தி விட்டு, ‘பெண் சிங்கம்’ என்ற பெயரில் வேறொரு படத்தை, வேறொரு இளைஞர் இயக்கத்தில் ஆரம்பித்தது. அதற்கு கலைஞர் கதை – வசனம் எழுதினார்.
அதற்கு பிறகு இளவேனிலை அடிக்கொரு தரம் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்தியன் காஃபி ஹவுஸில் சந்திப்பேன். ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘ஒரு படத்தை இயக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று என்னிடம் அவர் கூறுவார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று அவரை தொடர்ந்து பார்க்கவே முடியவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்து அவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ‘காருவகி’ என்ற பெயரில் ஒரு சரித்திர நாவலை தான் எழுதிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்நூல் வெளியிடப்பட்டது. அண்ணா சாலையில் உள்ள நூலக அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு நானும் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், சி.மகேந்திரன், மேலாண்மை பொன்னுசாமி, பத்திரிகையாளர் ஜவஹர் ஆகியோர் அந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இளவேனில் ‘காருவகி’ நூலின் ஒரு பிரதியை மறுநாள் எனக்கு வாசிப்பதற்காக கொடுத்தார். இதற்கு முன்பு இளவேனில் எழுதிய அவரின் மற்ற நூல்களை எப்படி ஆர்வத்துடனும், முழுமையான ஈடுபாட்டுடனும் வாசித்தேனோ அதே உற்சாகத்துடன் ‘காருவகி’யையும் வாசித்தேன். அசோகன், சந்திரகுப்த மவுரியன் ஆகியோரின் காலகட்டத்தில் நடைபெற்ற சில சம்பவங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அருமையான நாவல் அது. அந்த நூலை எழுதுவதற்காக ஏராளமான நூல்களை வாசித்து, அவற்றிலிருந்து பல உண்மைத் தகவல்களையும் திரட்டியிருந்தார் இளவேனில். நான் இதற்கு முன்பு எப்போதும் கேள்விப்பட்டிராத பல விஷயங்கள் அந்தப் புதினத்தில் கூறப்பட்டிருந்தன. தமிழனான குடிலன் என்பவன்தான் கெளடில்யர் என்பதும், மாமன்னன் அசோகன் புத்த மதத்திற்கு மாறியதற்கு காரணமே காருவகி என்ற தமிழை தாய் மொழியாக கொண்ட பெண் என்ற உண்மையும் அந்நூலைப் படித்த பிறகுதான் எனக்கே தெரிய வந்தது. இளவேனில் தன்னுடைய அபாரமான எழுத்தாற்றலால் அந்நூலை மிகச் சிறப்பான ஒரு புதினமாக படைத்திருந்தார். இன்றைய நிகழ்கால அரசியல் போக்குகளையும், தந்திரத்தனங்கள் கொண்ட அரசியல்வாதிகளையும், முரண்பாடுகளையும் மையச் சின்னங்களான அரசியல் தலைவர்களையும், அவர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளையும், முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகளையும், துரோகங்களையும், ஏமாற்று வேலைகளையும், நயவஞ்சகங்களையும் மிகவும் அருமையாக உரையாடல்களின் மூலம் அந்நூலில் தோலுரித்துக் காட்டியிருந்தார் இளவேனில். நூலை வாசிக்கும்போதே அவர் யார் யாரையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவற்றை எழுதியிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.
‘காருவகி’ நாவலை மிகவும் உயர்வாக எழுதியதற்காக இளவேனிலை நான் மனம் திறந்து பாராட்டினேன். படம் இயக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், தொடர்ந்து பல அருமையான நூல்களை படைக்க வேண்டும் என்று அவரை ஒரு நெருங்கிய நண்பர் என்ற வகையில் நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு சரி என்று தலையை ஆட்டினார். சமீபத்தில் சந்தித்தபோது மிக விரைவில் ஒரு மாறுபட்ட நூலை எழுத தொடங்கப் போவதாக என்னிடம் கூறினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம் அது. மிகச் சிறந்த தொழிற்சங்க தலைவரும், முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதருமான வி.பி.சிந்தனைப் பற்றி ஒரு ஆழமான நூலை வெகு சீக்கிரமே எழுத வேண்டும் என்று இளவேனிலை நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு காரணம் – பல வருடங்கள் தோழர் வி.பி.சி.யுடன் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தவர் இளவேனில் என்ற விஷயம் எனக்கு தெரிந்திருந்ததுதான்.
வாழ்வில் சிலரால் மட்டுமே தாங்கள் கால் பதிக்கும் துறைகளிலெல்லாம் முத்திரை பதிக்க முடியும். அதற்கான திறமைகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். என் இனிய நண்பர் இளவேனிலுக்கு அந்த வகையில் பல்வேறு திறமைகள் இருக்கின்றன. தன் படைப்புகளில் அவர் தொடர்ந்து அவற்றை வெளிப்படுத்தி ஆழமான பதிவை உண்டாக்குகிறார். திறமைகள் பல கொண்ட, முற்போக்கு சிந்தனை வாய்ந்த ஒரு நல்ல இலக்கியவாதியான இளவேனிலின் நெருங்கிய நண்பனாக நான் இருப்பதற்கு உண்மையிலேயே கர்வத்துடன் பெருமைப்படுகிறேன்.