கனவு ராஜாக்கள் - Page 30
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
ஏற்கெனவே இரண்டு பேர் எடுத்த கதையை மூன்றாவதாக இயக்கினார் பி.வாசு…
சுரா
திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்பிரமணியத்தை எனக்கு 1990ஆம் வருடத்திலிருந்தே தெரியும். அப்போது அவர் ‘சின்ன பசங்க நாங்க’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
ஆரம்ப காலத்திலிருந்தே அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். காமராஜரை நேரில் பார்த்து பேசியவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி எல்லோரையும் அவருக்கு நன்கு தெரியும். கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் அவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படவுலகின் உச்ச நடிகராக இருந்து கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் ‘அகில இந்திய சிவாஜி ரசிகர்கள் மன்றம்’ மிகவும் செல்வாக்காக இருந்தது. அதன் தலைவராக சின்ன அண்ணாமலை இருந்தார். அவருடன் இருந்து கொண்டு சிவாஜியின் கலையுலக வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் அவரும் ஒருவர். கவியரசு கண்ணதாசனுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர் ஏ.ஜி.எஸ்.
பல வருடங்களாக அரசியல் பணி ஆற்றிக் கொண்டிருந்த ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு படவுலகின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. படவுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. அவரை இயக்குநராகப் போட்டு ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது ஏ.ஜி.எஸ்ஸின் (படவுலகில் அவரை எல்லோரும் இப்படித்தான் அழைப்பார்கள்) ஆசை. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. ‘தாலாட்டு கேக்குதம்மா’ படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது, அந்தப் படத்தால் கவரப்பட்ட இளையராஜா ஏ.ஜி.எஸ்ஸிடம் இயக்குநர் ராஜ்கபூரை வைத்து படம் எடுக்கும்படி சொன்னார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘சின்ன பசங்க நாங்க.’
முரளி, ரேவதி இணைந்து நடித்த அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘என்னை மானமுள்ள பொண்ணுயின்னு மதுரயில பாத்தாக’ என்ற இளையராஜா இசையமைத்த அருமையான பாடலை மறக்கத்தான் முடியுமா? ரேவதியின் மிகச் சிறந்த நடிப்பு, இளையராஜாவின் இனிய பாடல்கள், ராஜ்கபூரின் உணர்ச்சி பூர்வமான இயக்கம் ஆகியவற்றால் ‘சின்ன பசங்க நாங்க’ 100 நாட்கள் ஓடியது. தான் தயாரித்த முதல் படமே வெற்றிகரமாக அமைந்ததில் ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு மிகுந்த சந்தோஷம்.
தொடர்ந்து முரளி, ஷாலி ஜோடியை வைத்து ‘தங்கக் கிளி’ என்ற படத்தை அவர் ஆரம்பித்தார். இளையராஜா இசையமைத்த அந்தப் படத்தை ராஜவர்மன் இயக்கினார். ஊட்டியில் முக்கால் பகுதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, எந்தவொரு காரணமும் இல்லாமலே நடிகர் முரளி ஒரு இரவு வேளையில் ஊட்டியிலிருந்து கிளம்பி சென்னைக்கு காரில் வந்துவிட்டார். முரளியால் பல படங்களுக்கும் பிரச்னைகள் உண்டாகிக் கொண்டிருந்த கால கட்டம் அது. கதாநாயகன் சென்னையில் இருக்க, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டியில் வெறுமனே தங்கிக் கொண்டிருந்தார்கள். கடுப்பாகி விட்ட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். எல்லோரையும் கிளம்பி சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார். ‘ஏன் சார் ஊட்டியிலிருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்பி வந்தீர்கள்?’ என்று முரளியைப் பார்த்து ஏ.ஜி.எஸ். கேட்டதற்கு ‘நான் ஏன் வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்றார் முரளி கூலாக.
இப்படி பலவித பிரச்னைகளையும் தாண்டி எடுக்கப்பட்ட அந்தப் படம் திரைக்கு வந்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அந்தப் படத்தில் ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் உண்டானது. ‘தங்கக் கிளி’ தயாரிப்பில் இருந்த போதே ஏ.ஜி.எஸ்., சரத்குமாரை வைத்து ‘பேண்ட் மாஸ்டர்’ படத்தை ஆரம்பித்து விட்டார். ‘சூரியன்’ படத்தில் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய சரத்திற்கு ‘பேண்ட் மாஸ்டர்’ படத்திற்கு 20 லட்சத்தை சம்பளமாகக் கொடுத்தார் ஏ.ஜி.எஸ். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினார்கள். ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு அந்தப் படத்தில் நல்ல லாபம் கிடைத்தது. கூறிய பட்ஜெட்டைவிட சற்று குறைவாகவே படத்தை முடித்துத் தந்த முறையில் கே.எஸ்.ரவிக்குமார் மீது ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு நல்ல மதிப்பு உண்டானது. விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் படம் ஓடியது.
தொடர்ந்து ஏ.ஜி.எஸ். தயாரித்த படம் ‘கட்டுமரக்காரன்’. பிரபு கதாநாயகனாக நடிக்க, மும்பையைச் சேர்ந்த அஞ்சலி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்தார். பி.வாசு அப்படத்தை இயக்கினார். பிரபு, பி.வாசு இருவரும் படவுலகில் உயர்ந்த சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. முதல் நாள் படப்பிடிப்பு ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றபோது, மொத்த படவுலகமே அங்குதான் இருந்தது. பூஜை போட்ட நாளன்றே அனைத்து ஏரியாக்களும் வியாபாரம் ஆகிவிட்டது. மிகுந்த பொருட்செலவில் ஏ.ஜி.சுப்பிரமணியம் அந்தப் படத்தைத் தயாரித்தார். அதற்கு இசையமைத்த இளையராஜாவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சிறு மோதல் உண்டானதன் காரணமாக, பின்னணி இசையை தேவா அமைத்தார். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் முதல் பிரதி தயாரான மறுநாள் ஏ.ஜி.எஸ்ஸை அவருடைய அலுவலகத்தில் பார்த்த நான் ‘என்ன அண்ணே, படத்தைப் பார்த்து விட்டீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘பார்த்து விட்டேன். ஒரு விஷயம் இப்போதான் சார் தெரிஞ்சது. நான் தயாரித்த ‘தங்கக் கிளி’, ‘பேண்ட் மாஸ்டர்’, ‘கட்டுமரக்காரன்’ மூன்று படங்களிலும் இருப்பது ஒரே கதை. ‘தங்கக் கிளி’ படத்தின் கதாநாயகன் இசைக் கருவிகள் விற்கப்படும் கடையில் வேலை பார்ப்பான். ‘பேண்ட் மாஸ்டர்’ படத்தின் கதாநாயகன் பேண்ட் வாத்தியம் வாசிப்பான். ‘கட்டுமரக்காரன்’ கதாநாயகன் படகு ஓட்டுகிறான். மூன்று படங்களிலும் கதாநாயகர்கள் வேறு. அவர்கள் செய்யும் தொழில் வேறு. ஆனால், கதை ஒரே கதை என்றார் சிரித்துக் கொண்டே. அதுதான் ஏ.ஜி.எஸ்.!
படம் திரைக்கு வருவதற்கு முதல் நாள் ‘இந்தப் படம் ஓடாது சார்’ என்றார் ஏ.ஜி.எஸ். என்னிடம். அவர் சொன்னது மாதிரியே படம் ஓடவில்லை.
தொடர்ந்து அவர் தயாரித்த படம் ‘மாமன் மகள்’. சத்யராஜ் – மீனா நடித்த அந்தப் படத்தை குருதனபால் இயக்கினார். நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த அந்தப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
அடுத்து ஏ.ஜி.சுப்பிரமணியம் தயாரித்த படம் ‘பொன்னு வெளையிற பூமி’. கதாநாயகனாக நடித்த ராஜ்கிரணுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அட்வான்ஸாக 50 லட்ச ரூபாயைக் கொண்டு போய் கொடுத்தார் ஏ.ஜி.எஸ். குஷ்பு, வினிதா இருவரும் கதாநாயகிகளாக நடித்தார்கள். படம் தயாரிப்பில் இருக்கும்போது ராஜ்கிரண் நடித்து திரைக்கு வந்த ‘மாணிக்கம்’, ‘பாசமுள்ள பாண்டியரே’ என்ற இரு படங்களும் தோல்வியைத் தழுவ, அதனால் மிகப் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி விட்டது. ‘பொன்னு வெளையிற பூமி’. படம் முடிவடைத்து பல மாதங்கள் ஆகியும், அதை திரைக்கு கொண்டு வர ஏ.ஜி.எஸ். பட்ட பாடு இருக்கிறதே! மிகவும் கஷ்டப்பட்டு, பலவித போராட்டங்களுக்குப் பிறகு படத்தைத் திரைக்கு கொண்டு வந்தார். ஆனால், மிகப் பெரிய தோல்விப்படமாக அது அமைந்துவிட்டது. அதில் ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் உண்டானது.
எனினும், அடுத்த பட முயற்சியில் ஏ.ஜி.எஸ். கால் வைத்தார். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ‘முதல் முதலாக’ என்ற பெயரில் ஒரு படத்தை மணிரத்னத்தின் உதவியாளர் அழகம் பெருமாள் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிப்பதற்காக மிகவும் பிரம்மாண்டமாக தாஜ் கோரமண்டலில் தொடக்க விழா நடத்தினார் ஏ.ஜி.எஸ். வாழப்பாடி ராமமூர்த்தி அந்தப் படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அதற்காக பல லட்சங்களை கடன் வாங்கி செலவு செய்தார் ஏ.ஜி.எஸ். படத்தின் இயக்குநரான அழகம் பெருமாளுக்கு விலை உயர்ந்த ஒரு காரைக் கூட அவர் வாங்கிக் கொடுத்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் ஆரம்பத்திலேயே நின்று விட்டது. படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவே இல்லை.
முன்னணி நடிகர்களை வைத்து ஆறு படங்களைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். பணம் என்று எதையும் சம்பாதிக்கவில்லை. படங்களை எடுக்கும்போது வந்த பணத்தை நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், டெக்னீஷியன்களுக்கும் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்.
ஜெமினி பார்சன் காம்ப்ளெக்ஸில் பாரதிராஜாவின் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் ஒரு சிறிய அறையில் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஏ.ஜி.எஸ்ஸை அவ்வப்போது நான் போய் பார்ப்பேன். இருவரும் மணிக்கணக்கில் சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்போம்.
கடந்த பல வருடங்களாக படமெதுவும் தயாரிக்காமல் இருக்கும் ஏ.ஜி.எஸ்ஸை சமீபத்தில் அவருடைய அறையில் நான் போய் பார்த்தேன். ‘விரைவில் முன்னணி கதாநாயகன் ஒருவரை வைத்து படமொன்றைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கான வேலைகளில் இப்போது நான் ஈடுபட்டிருக்கிறேன்’ என்றார் ஏ.ஜி.எஸ். என்னிடம்.
23 வருடங்களாக நான் நெருங்கிய நட்பு கொண்டிருப்பவராகவும், பல அனுபவங்களைப் பெற்றிருப்பவராகவும், மலையே இடிந்து விழுந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருப்பவராகவும், நான் உயர்ந்த மரியாதை கொண்டிருக்கும் மனிதராகவும் இருக்கும் ஏ.ஜி.சுப்பிரமணியம் என்ற ஏ.ஜி.எஸ். மீண்டும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.