கனவு ராஜாக்கள் - Page 31
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9294
இவர் அறிமுகப்படுத்திய கதாநாயகியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்!
சுரா
அழகன் தமிழ்மணியை எனக்கு 1980ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். அப்போது அவர் அழகன் தமிழ்மணி அல்ல. வெறும் தமிழ்மணி.
நான் அப்போது ‘பிலிமாலயா’ பத்திரிகையின் இணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். தமிழ்மணி ‘நயனதாரா’ என்ற பெயரில் ஒரு மாத நாவலை நடத்திக் கொண்டிருந்தார். நாவல் போக, எஞ்சியிருக்கும் 20 பக்கங்களிலும் நான் பல விஷயங்களையும் எழுதுவேன். அப்படித்தான் எனக்கு அவர் அறிமுகம். இப்போது கதர் வேட்டி, கதர் சட்டையுடன் காட்சியளிக்கும் தமிழ்மணி, அப்போது பேண்ட், சட்டை அணிந்திருப்பார். ஸ்கூட்டரில் அவர் முன்னால் உட்கார்ந்து ஓட்ட, அவருக்குப் பின்னால் நான் உட்கார்ந்து பல இடங்களுக்கும் போயிருக்கிறோம். கதாசிரியர் தூயவனின் அலுவலகம், அவரின் வீடு, தேவர் பிலிம்ஸ் அலுவலகம் என்று பல இடங்களுக்கும் என்னை அவர் அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்தே எனக்கும் அவருக்கும் மிகவும் நெருங்கிய நட்பு உண்டாகி விட்டது. அவருடைய வீட்டிற்கு நான் செல்வேன். அவருடைய மனைவிகள், மகன்கள், மகள்கள் எல்லோருமே எனக்கு நல்ல பழக்கம்.
தூயவன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தைத் தயாரிக்க, அதன் இணைத் தயாரிப்பாளராக தமிழ்மணி இருந்தார். திடீரென்று அவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆனதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தில் தமிழ்மணிக்கு கணிசமான அளவில் பணம் கிடைத்தது. அதை வைத்து கருப்பு நிறத்தில் ஃபியட் கார் ஒன்றை அவர் விலைக்கு வாங்கினார். ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்த தமிழ்மணி காரில் போக ஆரம்பித்தார்.
அதற்குப் பிறகு கார்த்திக் – ஜீவிதாவை வைத்து, அமீர்ஜான் இயக்கத்தில் ‘தர்மபத்தினி’ என்ற படத்தை தமிழ்மணி தயாரித்தார். மாறுபட்ட ஒரு கதையைக் கொண்டிருந்த அப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து கார்த்திக்கை கதாநாயகனாகப் போட்டு ‘சோலைக்குயில்’ என்ற படத்தை தமிழ்மணி தயாரித்தார். அப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக தோடர் இனத்தைச் சேர்ந்த ராகிணி என்ற புதுமுக நடிகையை தமிழ்மணி அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, கார்த்திக்கிற்கு கதாநாயகி ராகிணியின் மீது உண்மையான காதல் பிறந்து விட்டது. ‘சோலைக்குயில்’ திரைக்கு வந்த சில நாட்களிலேயே கார்த்திக் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
அடுத்து தமிழ்மணி தயாரித்த படம் ‘சித்திரைப் பூக்கள்’. கவியரசு கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு அந்தப் படத்தை இயக்கினார்.
அந்தப் படத்தின் மூலம் வினோதினி கதாநாயகியாக அறிமுகமானார். சரத்குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக வருவார். மிகவும் அருமையான கதாபாத்திரம் அது. மூணாறு, ஊட்டி ஆகிய இடங்களில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஊட்டியில் டிசம்பர் மாத கடும் குளிரில் ‘சித்திரைப் பூக்கள்’ படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு இரவு நேரத்தில் தமிழ்மணியும் நானும் அரசுப் பேருந்தில் ஊட்டியிலிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த குளிர் சாதன வசதி கொண்ட காரில் அதே படப்பிடிப்பை முடித்து விட்டு எஸ்.எஸ்.சந்திரனும் கோவை சரளாவும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். என் மீதும், தமிழ் மணியின் மீதும் பேருந்தின் கூரையிலிருந்த ஓட்டையிலிருந்து மழை நீர் தொடர்ந்து சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது தமிழ்மணி ‘என்னிடம் பணம் வாங்கி நடிப்பவர்கள் ஏ.சி. காரில் போகிறார்கள். தயாரிப்பாளரின் நிலைமையைப் பார்த்தாயா, சுரா?’ என்றார். அப்போது மட்டுமல்ல – இப்போதும் கூட தயாரிப்பாளர்களின் நிலைமை அப்படித்தானே இருக்கிறது?
‘சித்திரைப் பூக்கள்’ ப்ரிண்ட் டெலிவரியின்போது ஜெமினி லேப்பில் தமிழ்மணியின் அருகில் நான் நின்றிருந்தேன். வினியோகஸ்தர்கள் தாங்கள் கூறியபடி பணத்தைக் கொடுத்து படத்தை வாங்கவில்லை. அதனால் அந்தப் படத்தில் தமிழ்மணிக்கு மிகப் பெரிய இழப்பு உண்டானது. கையில் ஒரு காசு கூட இல்லாமல் வெறும் கையுடன் தமிழ்மணி நின்றிருந்தார். அப்படம் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவியது.
அந்தப் படத்திற்குப் பிறகு எட்டு வருடங்கள் தமிழ் மணி படத்துறை பக்கமே காலடி எடுத்து வைக்கவில்லை. வைக்க முடியாத நிலை… தன் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு அவர் படாத பாடுபட்டார். பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கும், வளர்ப்பதற்கும் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவர் பட்ட சிரமங்களுக்கு ஒரு நாள் விடிவு உண்டானது. சன் தொலைக்காட்சி அவருடைய வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றி வைத்தது. ‘மங்கை’ என்ற நெடுந் தொடரை சன் டி.வி.க்காக அவர் தயாரித்தார். தமிழ்மணி பொருளாதார ரீதியாக வளர்ந்தார். அவருடைய புகழும் வளர்ந்தது. அந்தத் தொடர் 400 நாட்கள் ஒளிபரப்பானது.
தொடர்ந்து சன் டி.வி.யில் ‘அம்மா’, ‘அம்பிகை’, ‘அவளும் பெண்தானே’ ஆகிய மெகா தொடர்களை தமிழ்மணி தயாரித்தார். சன் குழுமத்தைச் சேர்ந்த ஜெமினி டி.வி.யிலும் பல மெகா தொடர்களை அவர் தெலுங்கில் தயாரித்தார். அவரை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்தன. நூற்றுக் கணக்கான நடிப்புக் கலைஞர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் தமிழ்மணி உதவியாக இருந்தார். 10 வருடங்கள் தொடர்ந்து சன் டி.வி.யில் பல மெகா தொடர்களைத் தயாரித்த தமிழ்மணி, அப்போதுதான் அழகன் தமிழ்மணியாக மாறினார். தமிழ்மணி என்ற தன்னுடைய பெயருக்கு முன்னால் தன் தந்தையான அழகப்ப தேவரின் பெயரில் இருந்து ‘அழகன்’ என்ற பதத்தை எடுத்து ஒட்டிக்கொண்டார். தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் மத்தியில் தமிழ்மணி புகழ் குன்றின் உச்சியில் பொன்னொளி வீசினார்.
அப்படியே அவர் தன் பயணத்தை தொடர்ந்திருக்கலாம். விதி அவரை விட்டால்தானே! பல வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படத் தயாரிப்பாளராக மாறினார். ஆர்.பாலுவை இயக்குநராகப் போட்டு ‘அன்பே உன் வசம்’ என்ற படத்தை அவர் தயாரித்தார். அந்தப் படத்தை வாங்க ஒரு விநியோகஸ்தர் கூட முன் வரவில்லை. 30 பிரிண்டுகள் போட்டு தமிழ்மணியே தமிழகமெங்கும் வெளியிட்டார். படம் ஒருவாரம் கூட ஓடவில்லை. 10 வருடங்கள் தொலைக் காட்சித் தொடர்கள் தயாரித்ததன் மூலம் அவர் சம்பாதித்த பணம், சொத்து அனைத்தும் அந்த ஒரே படத்தின் மூலம் காணாமல் போயின. தமிழ்மணி மீண்டும் கடனாளியாக ஆனார். பல கார்கள் நின்று கொண்டிருந்த அவருடைய அலுவலகத்தின் முன்னால் ஒரு கார் கூட இல்லாமற் போனது.
மீண்டும் தமிழ்மணி பல மாதங்களுக்குப் பிறகு டி.வி. தொடர் தயாரிப்பில் இறங்கினார். ராஜ் டி.வி.யில் ‘முந்தானை முடிச்சு’ என்ற மெகா தொடரைத் தயாரித்தார்.
தமிழ்மணிக்கு மீண்டும் ஒரு அதிர்ஷ்டம் அடித்தது. இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் கதாநாயகன் ஆர்யாவின் தந்தையாக தமிழ்மணி நடித்தார். அதற்குப் பிறகு சுமார் பத்து படங்களில் தமிழ்மணி நடித்தார். நடிப்பில் பெரிய அளவில் அவரால் முன்னுக்கு வர முடியவில்லை.
பின்னர் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராக தமிழ்மணி சில வருடங்கள் இருந்தார். அதன் மூலம் அவருக்கு நிறைய தொடர்புகள் கிடைத்தன. தெரியாதவர்களுக்கும் தெரிந்தவராக அவர் ஆனார்.
தமிழ்மணியும் நானும் அவ்வப்போது சந்திப்போம். மனம் விட்டு பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம். அவருடைய வீட்டிற்குச் சென்று நான் சாப்பிடுவேன். அவருடைய குடும்பத்தில் நடக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் எல்லாவற்றிலும் நான் கட்டாயம் கலந்து கொள்வேன்.
தமிழ்மணி தன் மகன் அஜய்யை கதாநாயகனாகப் போட்டு ‘மீன் கொத்தி’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். அது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மீண்டும் மெகா தொடர் தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
மேடுகள், பள்ளங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், வீழ்ச்சிகள் என்று பலவற்றையும் பார்த்துவிட்ட தமிழ்மணியின் கையில் சொல்லிக் கொள்கிற அளவிற்கு சம்பாத்தியம் எதுவும் இல்லை. எனினும், இப்போது பல அனுபவங்களையும் பெற்றிருக்கும் பக்குவப்பட்ட மனிதராக அவர் ஆகி விட்டிருக்கிறார். அந்த அனுபவங்களைக் கொண்டு அவர் மீண்டும் உயரத்தை நோக்கி பயணிப்பார், நிறைய பணத்தையும் சம்பாதிப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்மணியின் வாழ்க்கையை மிகவும் அருகிலேயே இருந்து பார்த்து வந்திருப்பவன் என்ற முறையில் என்னால் அதை உறுதியுடன் கூற முடியும்.