கனவு ராஜாக்கள் - Page 5
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9315
சித்தாளாக செங்கல் தூக்கியவர் இன்று சிறந்த பாடலாசிரியர்!
சுரா
எம்.ஏ. பட்டம் பெற்று விட்டு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வந்தவர்கள் வைரமுத்து, நா.முத்துக்குமாரைப் போன்றவர்கள். அப்படியெல்லாம் இல்லாமல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஒருவர் கவிஞராகவும், இயக்கியவாதியாகவும், முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் ஆக முடியுமா? முடியும் என்று செயல்வடிவில் காட்டியவர்- கவிஞர் பரிணாமன்.
நான் பரிணாமனை மதுரையில் 1978ஆம் ஆண்டில் சந்தித்தேன். அப்போது அவர் விவசாயத்திற்குப் பயன்படும் பம்ப் செட் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை அங்கு நடத்திக் கொண்டிருந்தார். கடையை அவருடைய அண்ணன் பார்த்துக் கொள்வார். எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் தீவிரமாக மூழ்கியிருப்பார் பரிணாமன். தினமும் நான் பரிணாமனைப் போய்ப் பார்ப்பேன். வண்ணநிலவன், வண்ணதாசன், பொன்னீலன், பா.செயப்பிரகாசம், டி.செல்வராஜ், ஹெப்சிபா ஜெசுதாசன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளையும் நான் பரிணாமன் சொல்லித்தான் படித்தேன்.
ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்ட பரிணாமனின் இயற்பெயர் கிருஷ்ணன். ஆரம்பத்தில் சித்தாளாகவும், கொத்தனாராகவும், கட்டிட கான்ட்ராக்டராகவும் இருந்திருக்கும் அவருக்கு மு.வரதராசனார், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரின் படைப்புகளைப் படித்ததால், இலக்கியத்தின் மீது ஒரு மிகப் பெரிய ஈடுபாடு உண்டாகியிருக்கிறது. தி.க.சி., கே.சி.எஸ். அருணாசலம், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோரின் அறிமுகம் பரிணாமனுக்கு கிடைத்திருக்கிறது. அதன்மூலம் 'தாமரை'யில் இவர் கவிதை எழுதியிருக்கிறார். பரிணாமனின் முதல் கவிதைத் தொகுதியான 'ஆகஸ்டும் அக்டோபரும்' அந்தக் காலகட்டத்தில்தான் வெளியானது.
அப்போது நான் மலையாளத்திலிருந்து பல சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தேன். அதனால் பரிணாமனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். ரஷ்ய இலக்கியங்கள் மீது எனக்கு ஒரு ஆழமான காதல் உண்டானதற்குக் காரணமே பரிணாமன்தான். மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலை என்னைப் படிக்கும்படி தூண்டியதே அவர்தான். லியோ டால்ஸ்டாய், புஷ்கின், துர்கனேவ், மிகயீல் ஷோலக்கோவ் போன்ற பல ரஷ்ய எழுத்தாளர்களின் அருமையான படைப்புகளை நான் படிப்பதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் அவர்தான். அதை நான் எந்தச் சமயத்திலும் மறந்ததில்லை.
நான் சந்தித்த காலகட்டத்தில் பரிணாமன் மதுரை மாவட்டத்தின் கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராக இருந்தார். 'மகாநதி' என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்தார். 1979ஆம் ஆண்டில் நான் மொழி பெயர்த்த ஒரு அருமையான ரஷ்ய சிறுகதையை அவர் மனம் திறந்து பாராட்டியதோடு நிற்காமல், அதை 'மகாநதி'யில் பிரசுரிக்கவும் செய்தார்.
மதுரையில் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பரிணாமன் 1988ஆம் ஆண்டில், ஜெயகாந்தன் ஆசிரியராகப் பணியாற்றிய 'நவசக்தி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்துவிட்டார். மதுரையில் இருந்த வீட்டை விற்றுவிட்டு சென்னைவாசியாக மாறிய பரிணாமன், தன்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுதியாக 'நெஞ்சில் ஆடும் கதிரும் நிஜம் விளையாத பூமியும்' என்ற நூலை வெளியிட்டார். இவருடைய அனைத்துக் கவிதைகளையும் உள்ளடக்கிய 'பரிணாமன் கவிதைகள்' என்ற நூலை செண்பகா பதிப்பகம் வெளியிட்டது.
கவிதைகள் எழுதுவதுடன் நிற்காமல், கடந்த 30 வருடங்களாக கம்பூனிஸ்ட் மேடைகளில் மெட்டுடன் கவிதைகளைப் பாடுவதிலும் பரிணாமன் முன்னணியில் இருக்கிறார். அவருடைய 'பத்து தலை ராவணனை ஒத்தைத் தலை ராமன் வென்றான்; மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா' என்ற பாடலையும், 'பாரதி பிடித்த தேர் வடம் நடு வீதியில் கிடக்கிறது; அதைப் பற்றிப் பிடித்து இழுப்பதற்கு ஊர் கூடி தவிக்கிறது' என்ற பாடலையும் தமிழகத்தில் கேட்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நூற்றுக்கணக்கான மேடைகளில் சிங்கமென உணர்ச்சி பொங்க பரிணாமன் பாடுவதை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். அப்போது பரிணாமன் மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாடு மேலும் அதிகமாகும்.
பத்திரிகை, அரசியல் மேடை ஆகியவற்றைத் தொடர்ந்து பரிணாமன் கால் வைத்த இன்னொரு இடம் படவுலகம். முரளி கதாநாயகனாக நடித்த 'நானும் இந்த ஊருதான்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அவர் மாறினார். அதில் இடம் பெற்ற 'பொண்ணு சிரிக்குது பூவாட்டமா' என்ற பாடலை எழுதியவர் பரிணாமன்தான். தொடர்ந்து 'என் பொட்டுக்கு சொந்தக்காரன்' என்ற படத்தில் தேவா இசையமைப்பில் ஒரு பாடலை எழுதினார். இளையராஜா இசையமைப்பில் சங்கிலி முருகன் தயாரித்த 'நாடோடி பாட்டுக்காரன்' படத்தில் 'தென்பாண்டிச் சீமை தமிழ் கொடுத்த தாயே தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே' என்ற பாடலை எழுதினார் பரிணாமன். எடிட்டர் பி.லெனின் இயக்கிய 'ஊருக்கு நூறு பேர்' படத்தில் இடம் பெற்ற 'சத்திய வேள்வியில் சிந்திய குருதியில் புத்துயிர் பெற்றவர் நூறு பேர்' என்ற பாடலை எழுதிய பரிணாமனுக்கு மிகச் சிறந்த பெயரைப் பெற்றுத் தந்த படம் ஜனநாதன் இயக்கிய 'ஈ'. 'வாராது போல் வந்து வீழ்ந்தானடா' என்று பரிணாமன் எழுதிய பாடலை ஜேசுதாஸ் பாடினார். அதற்குப் பிறகு பரிணாமனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த படம் 'வியாபாரி'. தேவா இசையமைப்பில் அப்படத்தில் இடம் பெற்ற 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்- அம்மாவை வாங்க முடியுமா?' என்ற பரிணாமனின் பாடலைக் கேட்காதவரும் உண்டோ?
பரிணாமன் சமீபத்தில் ‘எனது இந்தியா’ என்ற பெயரில் ஒரு நூலை எழுதியிருக்கிறார். அது தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வர இருக்கிறது.
பரிணாமனுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகள் உஷா டாக்டராக இருக்கிறார். சரத்சந்திரன் (சரத்சந்திரரின் நூற்றாண்டின் போது பிறந்தவர்) என்ற மகன் டி.வி. தொடர்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இன்னொரு மகனான ஜெயகாந்தன் எஞ்சினியராகப் பணிபுரிகிறார். 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' என்பார்கள். அதற்கு சரியான எடுத்துக்காட்டு பரிணாமனின் குடும்பம்தான்.
நானும் பரிணாமனும் சில மாதங்களுக்கு ஒரு முறை எங்காவது சந்திப்போம். இலக்கியம் குறித்து ஆர்வத்துடன் பேசுவோம். சிறந்த இலக்கியப் படைப்புகளை நான் மொழி பெயர்ப்பது குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னைப் பாராட்டுவார். சமீபத்தில் நானும் அவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான 'பாலன் இல்ல'த்தில் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பல இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் அலசினோம். அப்போது 1978ஆம் ஆண்டில்- என்னுடைய 22வது வயதில் முதல் தடவையாக மதுரையில் பரிணாமனை நான் சந்தித்த சம்பவம் என் மனத்திரையில் ஓடியது.
பல வருடங்களுக்கு முன்பு சித்தாளாக வேலை பார்த்த பரிணாமன் இன்று கவிஞராகவும் இலக்கியவாதியாகவும். திரைப்படப் பாடலாசிரியராகவும் ஒளி வீசுகிறார் என்றால், அதற்குப் பின்னால் மறைந்திருப்பது அவருடைய ஆர்வமும், உழைப்பும்தான் என்பதை நான் கூறவேண்டுமா என்ன?