காதலிக்க நேரமில்லை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6395
இன்று ஓணம் பண்டிகை. மதிய நேரமாகியும், நான் இதுவரை ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. சொல்லப்போனால் இன்னும் குளிக்கக் கூட இல்லை. குளிக்க வேண்டும் என்றோ; சாப்பிட வேண்டும் என்றோ கொஞ்சம் கூட தோன்றவில்லை.
பார்ப்பவர்கள் யாருக்கும் பொறாமை தோன்றக் கூடிய விதத்தில் என்னுடைய குளியலறை இருக்கும். மார்பிளால் ஆன ஒரு குளியல் தொட்டி அதற்குள் இருக்கிறது. அந்தக் குளியல் தொட்டியில் சுத்தமான நீர் முழுமையாக நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
நான் வெறுமனே அதில் இறங்கிக் குளித்தால் போதும். ஆனால், எனக்குத்தான் குளிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. என்னிடம் அன்பான நான்கு வார்த்தைகள் சொல்லி, என்னை வற்புறுத்தி குளிக்கச் செய்ய எனக்கென்று யாருமே இல்லை.
ஒன்றல்ல... இரண்டு பேர் இருக்கிறார்கள் சமையல் பண்ணுவதற்கு, கிருஷ்ணனும் பரமனும். காய்கறிகளை நறுக்கி சமைப்பதில் கிருஷ்ணன் பயங்கர திறமைசாலி. பரமன் வைக்கும் மீன் குழம்பையும் கறி வறுவலையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அவர்கள் தங்களுடைய பணியை முழுமையாகச் செய்து முடித்து, நான் உணவு உட்கொள்வதற்காகக் காத்திருந்தார்கள். ஆனால், எனக்குத்தான் சாப்பிட வேண்டும் என்ற உணர்வே உண்டாகவில்லை. அன்புடன் என்னை வற்புறுத்தி சாப்பிடச் செய்வதற்கு இந்த அகன்ற உலகத்தில் ஒரு உயிர்கூட எனக்கென்று இல்லையே.
நான் சாப்பிட்டு முடித்தபிறகுதான் கிருஷ்ணனும் பரமனும் அவர்களின் வீட்டுக்குச் செல்ல முடியும். அவர்களின் இல்லத்தில் அந்த இருவரையும் எதிர்பார்த்து அவர்களுடைய தாய்களும், மனைவிகளும், குழந்தைகளும் காத்திருப்பார்கள். அவர்கள் வீட்டிற்குப் போன பிறகுதான் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்து சாப்பிடுவார்கள். இங்கு இருப்பதைப் போல ருசியான உணவு நிச்சயம் அவர்களின் வீடுகளில் இருக்கப் போவதில்லை. ஆனால், இந்த இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இங்கு சாப்பிட மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இந்த ஓணம் பண்டிகை நாளில் தங்களின் வீட்டிற்குப் போய் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். இங்கு இல்லாத ஏதோவொன்று அவர்களுக்கு- அவர்களின் வீடுகளில் கிடைக்கிறது என்பதுதானே இதற்கு அர்த்தம்? அந்த ஒரே காரணத்தால் அவர்களின் வீட்டில் இருக்கும் உணவு இங்கிருக்கும் உணவைவிட ருசி அதிகம் கொண்டதாக அவர்களுக்குத் தெரிகிறது. அப்படி இங்கில்லாத எது அங்கே இருக்கிறது? எது எப்படியோ - அவர்களுக்கு அவர்களின் வீட்டில் கிடைக்கிற அது எனக்கு இங்கு கிடைக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது. அந்த ஒரே காரணத்தால்தான் நான் இன்னும் குளிக்காமலும், சாப்பிடாமலும், அவற்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட மனதில் எழாமல் இருக்கிறேன்.
காலையில் ஒரு கப் நிறைய தேநீர் குடித்தேன். மேஜை மேல் பலவிதப்பட்ட பலகாரங்களும் வைக்கப்பட்டிருந்தன. நான் எப்போதும் விரும்பிச் சாப்பிடக்கூடிய பிட்டு கூட தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நான் அதைக் கண்ணால் கூட திரும்பிப் பார்க்கவில்லை. நின்றுகொண்டே தேநீரை எடுத்துக் குடித்தேன். நாக்கில் ருசி என்ற ஒன்றே இல்லாமற் போய்விட்ட மாதிரி இருந்தது. எனக்கு எப்போதும் பிடித்தமான பால் பாயசம் தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. நான் வெறுமனே அதைக் காட்சிப் பொருளைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு விருப்பமான காளான் சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைக் கொஞ்சமாவது எடுத்துச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டானால் தானே. நான் காலங் காலமாக கஷ்டப்பட்டு எவ்வளவோ பணம் சம்பாதித்தேன். இப்போதும் ஓடி ஓடி சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் காதலிக்கவும் என்னைக் காதலிக்கக்கூடியதுமான ஒரு இதயத்தைச் சம்பாதிக்க எனக்கு நேரமே இல்லாமல் போனது.
தேநீர் குடித்து முடித்ததும் மனதிற்குள் நினைத்தேன். வெறுமனே நகரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தால் என்ன என்று! வாசுவை உடனே வரும்படி அழைத்தேன். அப்போதுதான் எனக்கே ஞாபகத்தில் வந்தது. அவனுக்கு இன்று நான் ஏற்கனவே விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டேன் என்று. சொல்லப் போனால் அவனுக்கு நான் விடுமுறை தந்து அனுப்பி வைத்தேன் என்று கூறுவது கூட சரியான ஒன்றாக இருக்காது. அவனே என்னிடம் கேட்டு விடுமுறையை வாங்கிக் கொண்டான் என்பதே உண்மை. அவன் என்னுடைய டிரைவர் என்பதால் அவனுக்கு நான் நல்ல சுதந்திரம் கொடுத்திருந்தேன். என்ன இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் மிகவும் குறியாக இருந்தான். வாரத்தில் ஒருநாள் கட்டாயம் அவன் வீட்டிற்குப் போயே ஆகவேண்டும் அந்த மாதிரியான நேரங்களில் என்னுடைய பஸ் டிரைவர்களில் யாராவது ஒரு ஆளை அழைத்து என்னுடைய காரை ஓட்டுவதற்கு வைத்துக் கொள்வேன். ஆனால் இன்று அதையும் செய்ய முடியாது. இன்று ஓணம் பண்டிகையாக இருப்பதால் எல்லா டிரைவர்களுமே தங்களுடைய வீட்டில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். அதனால், இன்று எந்தவித காரணத்தைக் கொண்டும் விடுமுறை அளிக்க முடியாது என்று வாசுவிடம்
திட்டவட்டமாகச் சொன்னேன். எப்போதும் என்னிடம் மதிப்பும் மரியாதையுடனும் பழகக் கூடிய அவன் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னதுதான் தாமதம்! அடிபட்ட பாம்பைப் போல படமெடுத்து ஆட ஆரம்பித்து விட்டான். “ஓணப் பண்டிகைக்கு என்னோட தாயைப் பார்க்கப் போக முடியலைன்னா, எனக்கு இந்த வேலையே வேண்டாம்...” - அவன் பயங்கர கோபத்துடன் சொன்னான்.
வாசுவிற்கு வயதான ஒரு தாயும், விதவையான ஒரு சகோதரியும் இருக்கிறார்கள். அவனுடைய அந்தச் சகோதரிக்கு மூன்றோ நான்கோ குழந்தைகள் இருக்கிறார்கள். நான் வாசுவிற்குத் தரும் சம்பளத்தை வைத்துத்தான் அந்த மொத்தக் குடும்பமும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு வேலையென்ற ஒன்று இல்லாமல் போனால், அந்தக் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியதுதான். ஆனால், அவன் அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை. வேலை போனால் கூட பரவாயில்லை. வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் பட்டினி கிடந்தால் கூட பரவாயில்லை. ஓணத்திற்குத் தன்னுடைய தாயின் அருகில் இருக்க வேண்டும் - இதுதான் வாசுவின் ஆசை. தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைவிட, சாப்பாட்டைவிட அவனுக்குப் பெரிதாக ஏதோவொன்று தெரிகிறது. எல்லாவற்றையும் வேண்டாமென்று தூக்கியெறிந்து விட்டு, அங்கே போகத் துடிக்கும் அளவிற்கு அங்கிருக்கும் ஏதோவொன்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது.
நான் எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தேன். அவன் தன் விருப்பப்படி போய் விட்டான்.