காதலிக்க நேரமில்லை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6398
இதற்கிடையில் எம்.கெ.பாறேல் என்ற பெயரைக் கொண்ட ஒரு இளைஞனுடன் எனக்கு அறிமுகம் உண்டானது. அவன் தன்னை ஒரு கல்லூரி மாணவன் என்றும், தற்போது கல்லூரிக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும் சொன்னான். ஆனால், அவன் கல்லூரிக்குப் போய் ஒருநாளும் பார்த்ததே இல்லை. சுருண்ட முடியையும் கடைந்தெடுத்ததைப் போன்ற வெளுத்த தேகத்தையும் கொண்ட இளைஞன் அவன். இலேசாக பெண்வாடை அடிக்கக் கூடிய முக அமைப்பை அவன் கொண்டிருந்தான். எதையுமே பெரிதாக நினைக்காத மாதிரி இருக்கும் அவனின் போக்கு. யாருடனாவது அவன் உரையாடும் போது, கூச்சத்துடன் அவன் இருப்பது மாதிரி தோன்றும்.
அவன் ஒர பெரிய எஸ்டேட் உரிமையாளரின் மகன். கல்லூரியில் படிப்பதாகச் சொல்லி விட்டு வீட்டை விட்டு வந்தவன் அவன். என்னுடைய வெற்றிலைப் பாக்குக் கடைக்கு நேர்எதிரில் இருக்கும் கட்டிடத்தில் ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து அதில் அவன் தங்கியிருக்கிறான். கையிலிருக்கும் பணத்தை கன்னா பின்னாவென்று அவன் இஷ்டப்படி வாரி இறைத்துக் கொண்டிருப்பான். என் கடையில்தான் எப்போதும் வெற்றிலை வேண்டுமென்றாலும்- சிகரெட் வேண்டுமென்றாலும் வாங்குவான். அவனுக்கென்றே நான் தனியாக சிகரெட் வாங்கி கடையில் வைத்திருப்பேன். அவனிடமிருந்து மட்டும் உடனுக்குடன் நான் காசு வாங்குவதில்லை.அவன் வாங்கக் கூடிய பொருட்களுக்கு நான் வெறுமனே கணக்கு எழுதி வைப்பேன். அதை அவன் ஒருநாளும் பார்த்தது கூட இல்லை. நான் எப்போது பணம் கேட்கிறேனோ, அந்த நிமிடத்திலேயே பணத்தை என் கையில் தருவான். அவ்வளவுதான்.
அவனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதுதான் பெண்கள் விஷயம். ஒரு பெண்ணைப் பார்த்து விட்டால் போதும். அந்தக் கணத்திலேயே உலகத்திலுள்ள மற்ற எல்லா விஷயங்களையும் அவன் மறந்து விடுவான். நடந்து போகும் அந்தப் பெண்ணையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருப்பான். இல்லாவிட்டால், அந்தப் பெண்ணுக்குப் பின்னாலேயே தன்னையும் மறந்து அவன் நடந்து போக ஆரம்பித்து விடுவான். கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கும் இளம் பெண்களைப் பார்க்கும்போது, அவனுடைய உடம்பிலுள்ள நரம்புகள் ஒவ்வொன்றும் புடைக்க ஆரம்பித்து விடும். பிச்சைக்கார சிறுவர்கள் தேநீர்க் கடையில் இருக்கும் அலமாரியை உற்றுப் பார்ப்பதைப் போல, அவன் அந்தப் பெண்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.
ஆனால், அவன் இதுவரை ஒரு பெண்ணைக் கூட எனக்குத் தெரிந்து தொட்டதில்லை. ஒரு பெண்ணுடனாவது அவன் வாய் திறந்து பேசி நான் பார்த்ததில்லை. காரணம்- அதற்கான தைரியம் அவனிடம் கொஞ்சமும் இல்லை. கல்லூரி மாணவிகள் யாராவது அவனுக்கு நெருக்கமாக நடந்து போனார்களென்றால், அவனுடைய உடம்பு 'கிடு கிடு'வென நடுங்க ஆரம்பித்து விடும். அந்தப் பெண்கள் வெறுமனே அவனுடைய முகத்தைப் பார்த்தால் கூட போதும், அவன் வாயெல்லாம் வறண்டு போய், உடல் தளர்ந்து நின்றிருப்பான். அவனுடைய இந்த தர்மசங்கடமான நிலையை நான் நன்றாகவே அறிந்து வைத்திருந்தேன்.
ஒரு நாள் அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்- என்னுடைய கடைக்குப் பின்னால் வந்து நிற்கும் பெண் யாரென்று. அவள் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் என்பதையும், அவளின் பெயர் மீனாட்சி என்பதையும், நான் அவளை 'புன்னகை' என்று அழைப்பேன் என்றும், அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்றும் நான் அவனிடம் சொன்னேன். என்னை அவளுக்குப் பிடிக்கும் என்றாலும், சில நேரங்களில் அவள் பாறேல் வசிக்கும் கட்டிடத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருப்பதை நான் பல நேரங்களில் பார்த்திருப்பதாக அவனிடம் சொன்னேன். நான் இப்படி கூறுவதற்குப் பிறகு அவன் அடிக்கடி என் கடையைத் தேடி வர ஆரம்பித்தான். அப்படி வரும் நேரங்களில், சீக்கிரம் கடையை விட்டு அவன் நகர்வது கிடையாது. நீண்ட நேரம் கடைக்கு அருகிலேயே நின்று கொண்டிருப்பான்.
நான் சில நேரங்களில் அவனிடம் பத்து ரூபாயோ பதினைந்து ரூபாயோ கடனாகக் கேட்பேன். நான் அப்படி கடன் கேட்கிறபோது, மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக அவன் நான் கேட்ட தொகையைத் தரவும் செய்வான். எனக்கு கடன் வாங்கக் கூடிய அளவிற்கு தேவை எதுவும் இல்லையென்றாலும், நான் அடிக்கொரு தரம் அவனிடம் கடன் வாங்கிக் கொண்டிருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அவன் நான் கேட்கும் போதெல்லாம் பணத்தைத் தந்ததற்குக் காரணம் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மீனாட்சி தவறாமல் கடைக்குப் பின்னால் வந்து நிற்பாள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான். மீனாட்சி அவனைப் பற்றி என்னிடம் அடிக்கொருதரம் விசாரிப்பது உண்டு என்றும், அவளின் கேள்விக்குப் பின்னால் ஏதோ ஒரு எண்ணம் மறைந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவனிடம் நான் கூறினேன்.
ஒருநாள் அவன் என்னைப் பார்த்து பயங்கரமாகக் கெஞ்ச ஆரம்பித்து விட்டான். மீனாட்சியுடன் தான் சிறிது நேரமாவது பேச வேண்டுமென்றும்; தான் எழுதித் தரும் கடிதத்தை அவளிடம் நான் சேர்க்க வேண்டுமென்றும் என்னைப் பார்த்து அவன் கேட்டான். நான் அதைச் செய்து தருவதாகச் சம்மதித்தேன். சொன்னதோடு நிற்காமல், அவனிடம் அன்று பத்து ரூபாய் கடனாக வாங்கினேன். அன்றே அவன் மீனாட்சிக்கு எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் கடையில் வந்து உட்கார்ந்து கொண்டான். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு, மீனாட்சி வெற்றிலையும் புகையிலையும் வாங்குவதற்காக கடைக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு, "இங்கே யாருமில்லையா?" என்று கேட்டாள். நான் "என்ன வேணும்?" என்று அவளைப் பார்த்து கேட்டேன். "வெற்றிலையும் புகையிலையும் வேணும்" என்றாள். "என்னால அந்தப் பக்கம் வரமுடியாது. இதோ வர்ற ஆளுக்கிட்ட காசு கொடுத்து அனுப்பு" என்று சொல்லிவிட்டு பறேலிடம் மெதுவான குரலில் சொன்னேன்."அங்கே போ".
அவ்வளவுதான் - பாறேலின் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவனுடைய வாயே வறண்டு போனது மாதிரி ஆகிவிட்டது. "போ அந்தப் பக்கம்... போய் விஷயத்தைச் சொல்லு!" - நான் அவனிடம் சொன்னேன். அவன் மெதுவாக எழுந்து, தயங்கித் தயங்கி பின்பக்கமாய் நடந்து சென்றான். நான் பலகையின் நடுவில் இருந்த இடைவெளி வழியாக என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அவளுக்கு நேராகப் போய் நின்றான். அவள் வழக்கமான தன்னுடைய புன்சிரிப்புடன் நின்றிருந்தாள். அந்தப் புன்சிரிப்பில் அவன் விழப் போவது உறுதி என்று நான் நினைத்துக் கொண்டேன். "காது..."- அவன் அவளைப் பார்த்துச் சொன்னான்.