காதலிக்க நேரமில்லை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6398
யாரோ முணுமுணுக்கும் சத்தம் காதில் கேட்கிறது. கிருஷ்ணனும் பரமனுமாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு இப்போது மிகவும் அவசரமான நிலை. உடனடியாக அவர்கள் தங்களின் வீட்டிற்குப் போக வேண்டும். இங்கிருக்கும் ஆர்ப்பாட்டமான விருந்தை விட, அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட, வேறு ஏதோவொன்று அவர்களை ‘வா வா’ என அங்கே இழுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அங்கே அவர்களுக்காகக் காத்திருப்பது வெறும் கஞ்சித் தண்ணீராகக் கூட இருக்கலாம். ஆனால், அந்தக் கஞ்சித் தண்ணீரில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. ஏழைகள் அன்புமயமானவர்கள். நான் ஏன் தேவையில்லாமல் அவர்களைக் கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டும்? தாராளமாக அவர்கள் போகட்டும்.
“கிருஷ்ணா! பரமா! நீங்க ரெண்டு பேரும் தாராளமா புறப்படலாம்... நான் இன்னைக்கு ஒண்ணும் சாப்பிடல. எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கு...”
நான் இப்படிச் சொன்னதும் அவர்கள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவர்கள் அடுத்த நிமிடம் புறப்பட்டார்கள். என்னைத் தனியாக விட்டுவிட்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் கிளம்பினார்கள். அவர்கள் முன் நான் ஒரு சிறு கடுகைப் போல் ஆகிவிட்டேன். ஒரு சிறு துகளைப் போல சுருங்கிப் போனேன். அவர்கள் முன் நான் இதுவரை சம்பாதித்த பணமும், புகழும் கண்ணாடியைப் போல் உடைந்து நூறு துண்டுகளாகச் சிதறிப் போயின.
கேட் திறந்தது மீண்டும் அடைக்கப்பட்டது. அவர்கள் வெளியே போய்க் கொண்டிருக்கிறார்கள். தங்களின் தாய்மார்களையும், மனைவிகளையும், குழந்தைகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் பார்ப்பதற்காக அவர்கள் ஆவலுடன் குதித்தோடி போய்க் கொண்டிருக்கிறார்கள். மற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் காலால் மிதித்துத் தள்ளிவிட்டு அவர்கள் தங்கள் போக்கில் ஆர்வத்துடன் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நான் மட்டும் தனியே அமர்ந்திருந்தேன். நான் ஒரு உப்பு சேர்க்காத காளான். சர்க்கரை இல்லாத பால் பாயசம்...
எனக்கும் ஒரு தாய் இருந்தாள். என் தாய் என் மேல் உயிரையே வைத்திருந்தாள். எனக்கும் என் தாயின் மீது கொள்ளைப் பிரியம். என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் விளைவாக என்னையும் என்னுடைய அண்ணனையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள் என் தாய்.
நிறைய பணம் சம்பாதித்து என் தாயின் கஷ்டங்கள் அனைத்தையும் போக்க வேண்டுமென்றும், என் தாயை அருகிலேயே அமர்ந்து கவனிக்க வேண்டுமென்றும் மனப்பூர்வமாக நான் ஆசைப்பட்டேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நான் என்னுடைய தாயைப் பிரிந்து, இந்த நகரத்தைத் தேடியே வந்தேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடனே இருபத்து நான்கு மணி நேரமும் இருந்ததால், வேறு எந்த விஷயத்திற்குமே எனக்கு நேரம் இல்லாமற் போனது. எதற்காகப் பணம் சம்பாதிக்கிறோம் என்ற விஷயத்தையும் நான் முழுமையாக மறந்தே போனேன்.
ஆரம்பத்தில் நான் ஒரு சைக்கிள் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கப் போனேன். அதற்குப் பிறகு சொந்தத்தில் ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை வைத்தேன். என் வெற்றிலைப் பாக்குக் கடை பஸ் நிலையத்திற்குள் இருந்தது. இரவு -பகல் எந்நேரமும் வியாபாரம் நடந்து கொண்டே இருக்கும். இரவு நேர வியாபாரம் பகல் நேரத்தில் நடக்கும் வியாபாரத்தைவிட லாபகரமானதாக இருக்கும்.
எனக்குப் பெரிய செலவு என்று ஒன்றுமில்லை. கடைக்குள்ளேயே அடுப்பு வைத்து சோறு சமைப்பேன். இரவு நேரத்தில் தூக்கம் வராமல் இருப்பதற்காக பால் இல்லாத தேநீர் தயாரித்து குடிப்பேன். வெற்றிலையும் பீடியும் சர்பத்தும் வாங்க ஆட்கள் வராமல் இருக்கிற நேரத்தில் லேசாக சாய்ந்து கண்களை மூடுவேன். இப்படித்தான் இரவு-பகல் எந்நேரமும் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.
என் வெற்றிலைப் பாக்குக் கடைக்குப் பின்னால் ஒரு வீடு இருந்தது. அங்கு இருப்பவர்கள் ஏழைகள்தான். இருந்தாலும் மானம், மரியாதையைப் பெரிதாக நினைத்து வாழ்பவர்கள் அவர்கள். அங்கிருக்கும் கிணற்றில் இருந்துதான் நான் நீர் இறைப்பேன். சில நேரங்களில் அந்த வீட்டிலிருக்கும் மீனாட்சி எனக்கு நீர் இறைத்துத் தருவதும் உண்டு.
மீனாட்சிக்குப் பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும். ‘புன்னகை’ என்றுதான் நான் பொதுவாக அவளைப் பார்த்து அழைப்பேன். அவளின் புன்சிரிப்பில் ஏதோ ஒரு காந்தசக்தி இருப்பதாக நான் உணர்ந்தேன். அப்படி மனதை ஈர்க்கக்கூடிய விதத்தில் புன்னகை செய்கிற வேறொரு இளம் பெண்ணை என் வாழ்க்கையில் இதுவரை நான் சந்தித்ததே இல்லை.
சில நேரங்களில் பாக்கு விற்பதற்காக என்னுடைய கடைக்குப் பின்னால் வந்து நிற்பாள். சில நேரங்களில் வெற்றிலையோ புகையிலையோ வாங்குவதற்காக வந்து நிற்பாள். நான் பின்னால் போய் பார்க்கும்போது, யாரிடமும் இல்லாத ஒரு அழகான புன்னகை தவழும் முகத்துடன் அவள் அங்கு நின்றிருப்பாள். அவள் கொண்டு வந்திருக்கும் பாக்கை நான் காசு கொடுத்து வாங்குவேன். வெற்றிலையும் புகையிலையும் நான் அவளுக்குத் தந்தால், அப்போதே அவளிடம் அதற்கான காசை வாங்கி விடுவேன். யாருக்கும் கடன் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை.
அவளின் புன்சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றும் அவளுடன் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் ஆசை உண்டாகும். ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கு எனக்கு நேரம் கிடைத்தால்தானே? என்னுடைய கடையில் எப்போது பார்த்தாலும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். பீடி வாங்குவதற்கோ- வெற்றிலை வாங்க வேண்டுமென்றோ சர்பத் குடிக்க வேண்டுமென்றோ ஆட்கள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். என் கடையில் வாடிக்கையாகப் பொருட்கள் வாங்கக் கூடிய யாரும் வேறொரு கடையைத் தேடிப் போகும் அளவிற்கு நான் ஒருபோதும் நடக்க மாட்டேன். கடையில் பொருள் வாங்க வருபவர்களின் நலம்தான் எனக்கு முக்கியம். என்னுடைய கடைக்குப் பக்கத்திலேயே மூட்டை தூக்குபவர்களின் குழந்தைகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருப்பார்கள். லேசாகக் கண்ணை மூடினால் போதும், கையில் கிடைக்கும் ஏதாவதொரு பொருளை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடி விடுவார்கள். அதனால் கடைக்குப் பின்னால் புன்னகை தவழ நின்று கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்ப்பதற்கோ; அவளுடன் ஆசையாக நான்கு வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதற்கோ எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் மீண்டும் அழுத்திச் சொல்கிறேன் - அவளைப் பார்க்கவும், அவளுடன் பேசவும் என் மனதின் அடித் தளத்தில் ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், அதைச் செயலில் காட்டுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.