காதலிக்க நேரமில்லை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6398
அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டு மூன்று காதல் அனுபவங்கள் அவளுக்கு உண்டாயின. ஆனால், அவை எதுவும் திருமணத்தில் போய் முடியவில்லை. இப்போது அவளுடைய அலுவலகத்தில் அவளுக்கொரு காதல் அனுபவம் இருக்கிறதென்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் தயக்கமான விஷயமாகவே இருந்தது. ஆனால், நெற்றியில் அந்த சாந்துப் பொட்டு, கூந்தலில் முல்லை மலருமாக என்னுடைய சைக்கிள் கடைக்கு முன்னால் அவள் நடந்து போகிறபோது, நான் இந்த உலகத்தையே மறந்து போய்விடுகிறேன். அவளை திருமணம் செய்து கொண்டால் என்ன என்று நினைப்பேன். ஆனால், அவளோ என்னுடைய கடை இருக்கும் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஒரு நாள் அவள் என் கடைக்கு முன்னால் வந்தபோது, நான் லேசாக இருமினேன். அடுத்த நாள் நான் தொடர்ந்து மூன்று நான்கு முறை இருமவும், தொண்டையைச் செருமி சரி பண்ணுவதுமாய் இருந்ததைப் பார்த்து அவள் என் கடைப் பக்கமாய் திரும்பிப் பார்த்தாள். திடீரென்று தோன்றிய வெறுப்புடன் அடுத்த நிமிடம் தன்னுடைய தலையை அவள் திருப்பிக் கொண்டாள். கீழே வேகமாக எறியும் ரப்பர் பந்து மேல் நோக்கி எழுவதைப் போல என்னுடைய இதயம் அவளுக்குப் பின்னால் படுவேகமாக பாய்ந்தோடியது. அவள் மீது எனக்கு காதல் மட்டும் உண்டாகவில்லை. அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாத அளவிற்கு ஒருவித வெறியே உண்டாகிவிட்டது.
அவளுக்குப் பின்னால் போனால் என்ன என்று நினைத்தேன். ஆனால், கடையை விட்டு, அவளுக்குப் பின்னால் இங்குமங்குமாய் நான் போய்க் கொண்டிருக்க முடியுமா? என் இதயத்தில் தோன்றிய காதலையும், அவள் மீது எனக்கு உண்டான அளவுக்குமதிகமான ஈடுபாட்டையும் கடிவாளம் போட்டு நிறுத்தி வைத்தேன். மறுநாள் காலையில் அவள் நடந்து சென்றபோது, வழக்கம் போல இருமினேன். அவள் திரும்பிப் பார்த்தாள். அடுத்த நிமிடம் பார்த்த வேகத்திலேயே தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் செய்தாள். ஆனால், அன்று சாயங்காலம் அவள் வேலை முடிந்து திரும்பிப் போனபோதும், நான் அவளைப் பார்த்து இருமினேன். அவள் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் எந்தவித வேறுபாடும் தெரியவில்லை. அதற்குப் பிறகு நான் அவளைப் பார்த்து இருமாவிட்டாலும், அவள் என் கடையை நோக்கி திரும்பிப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் அப்படிப் பார்க்கிறபோது, அவளைப் பார்த்து நான் புன்னகைப்பேன். அவளும் என்னைப் பார்த்து புன்னகை செய்வது போல எனக்குத் தோன்றும். சாயங்காலம் அவள் அலுவலக வேலைமுடிந்து திரும்பிச் செல்கிறபோது, அவளுக்குப் பின்னாலேயே நடந்து சென்று யாருக்கும் தெரியாமல் அவளுடன் சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று ஆசை உண்டானது. ஆனால், நான் கடையை விட்டு வெளியே சென்றிருக்கும் நேரத்தில், யாராவது இங்கு புகுந்து கடையில் இருக்கும் பொருட்களில் ஏதாவதொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு போய் விட்டால் நான் என்ன செய்ய முடியும்? வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு போன யாராவது மீண்டும் சைக்கிளைக் கொண்டு வரும்போது, வாடகை வாங்க கடையில் யார் இருக்கிறார்கள்? அவள் மீது எனக்கு காதல் இல்லாமல் இல்லை. ஆனால், அதை வெளிப்படுத்துவதற்கான நேரமும், சூழ்நிலையும் எனக்கு அமைய வேண்டாமா?
நான் படுப்பதற்கு கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம் ஆகிவிடும். படுத்த பிறகும் கூட, சாலையில் தேவதை என நடந்து போகும் கமலத்தைப் பற்றியே நான் நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால், கொஞ்சம் கூட உறங்காமல் அவளைப் பற்றிய நினைப்புடனே படுத்துக் கிடந்தால், பொழுது விடிந்த பிறகு என்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியுமா? அதனால், அவளைப் பற்றிய நினைப்பை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு, நான் தூங்க ஆரம்பிப்பேன். இருந்தாலும், அவளைப் பற்றிய நினைவு மனதில் வர, அடிக்கொரு தரம் தூக்கத்தை விட்டு நான் எழுந்திருப்பேன். அவள் என்னைப் பார்த்து புன்னகை செய்கிறாள் என்றும், என்னுடைய கடைக்குள் அவள் வருவதைப் போலவும், என்னை இறுகக் கட்டிப் பிடிப்பதைப் போலவும்... இப்படிப் பல மாதிரியும் நான் அவளைப் பற்றி கனவு காணுவேன். காலையில் எழுந்து கடையைத் திறந்து எந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அடிக்கொரு தரம் நான் சாலையையே பார்த்தவண்ணம் இருப்பேன். அவள் சாலையில் நடந்து போகிறாளா என்று பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது.
கடைசியில் ஒரு நாள் நான் அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதுவது என்று தீர்மானித்தேன். அன்று நள்ளிரவு நேரம் வந்தபோது, கதவை மூடினேன். பெஞ்சின் மீது பாயை விரித்து, அதில் அமர்ந்தவாறு என்ன எழுதலாம் என்று யோசித்துப் பார்த்தேன். நான் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று எழுத முடியாது. பெரிய ஒரு பணக்காரனாகாமல் திருமணம் செய்ய நினைப்பதென்பது அவ்வளவு நல்ல ஒரு விஷயமாக இருக்காது. நான் அவளுடைய வீட்டிற்கு வருகிறேன் என்றும் எழுதுவதற்கில்லை. நான் அவளுடைய வீட்டிற்குப் போனால் இங்கு கடையைப் பார்க்க யார் இருக்கிறார்கள்? அவள் மீது எனக்குத் தணியாத காதல் இருக்கிறது என்றும், அவளைப் பற்றிய நினைவாகவே ஒவ்வொரு நிமிடமும் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்றும் தற்போதைக்கு எழுதினால் போதும் என்று நினைத்தேன். அப்போது நீதிமன்றத்தில் இருக்கும் கடிகாரம் இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. சரி.. கடிதத்தை நாளைக்கு எழுதலாம் என்று தீர்மானித்தவாறு படுத்து உறங்க ஆரம்பித்தேன்.
மறுநாள் நள்ளிரவு நேரத்தில் நான் கடையை மூடிவிட்டு, பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக்கொணடு கடிதம் எழுத ஆரம்பித்தேன். அப்போதுதான் அன்றைய கணக்கு எழுதியபோது ஒரு தவறு நேர்ந்துவிட்டது என் ஞாபகத்திற்கு வந்தது. கணக்கு முழுவதும் முடிந்து கையிருப்பில் இருக்கும் காசில் சிறிது தவறு உண்டானதை நான் உணர்ந்தேன். அப்படியொரு தவறு எப்படி நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் இறங்கினேன். செலவினங்களை எழுதும்போது, எதையாவது எழுத நான் மறந்துவிட்டேனா என்று யோசித்தேன். செலவு என்ற ஒன்று எனக்கு இருந்தால்தானே அதைப் பற்றி நான் எழுதும்போது ஏதாவது தவறு உண்டாக வாய்ப்பிருக்கிறது? எனக்கு வர வேண்டிய பணத்தில் எதையாவது ஒரு வேளை எழுத மறந்திருப்பேனா? கணக்குப் புத்தகத்தை எடுத்து ஒவ்வொன்றாக கவனமெடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாம் சரியாகவே இருந்தது.