காதலிக்க நேரமில்லை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6398
அன்றே என்னுடைய வெற்றிலைப் பாக்குக் கடையை விற்பதற்கான வேலைகளை முடித்தேன். மீனாட்சி பாக்கு விற்பதற்காக என்னிடம் வந்தபோது நான் அவளைப் பார்த்து பாக்கு வேண்டாமென்று சொன்னேன். நான் சொன்ன பிறகும் நீண்ட நேரமாக அவள் கடைக்குப் பின்னாலேயே நின்றிருந்தாள். அவளின் அருகில் சென்று அவளுடைய அழகான புன்னகையை கண்குளிரக் காண வேண்டுமென்றும், அவளுடன் மணிக்கணக்கில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அவள் மீது எனக்குத் தோன்றியிருக்கும் காதலை அவளிடம் இதயத்தைத் திறந்து வெளிப்படுத்த வேண்டுமென்றும் மனப்பூர்வமாக நான் ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கான நேரம் எனக்குக் கிடைத்தால்தானே. நான் ஒவ்வொரு பொருளையும் எடுத்து வைத்து கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்வது? காதலிக்க என் மனதில் விருப்பம் இல்லாமல் இல்லை. காதல் என்ற உணர்வு அங்கு தோன்றாமலும் இல்லை. காதலிக்க எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. நான் என்ன செய்வது?
அதுவரை நான் சம்பாதித்த பணம், பாறேலிடம் நான் வாங்கிய பணம், வெற்றிலைப் பாக்குக் கடையை விற்றதன் மூலம் கிடைத்த பணம்- எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு யாரிடமும் ஒருவார்த்தைகூட கூறிக் கொள்ளாமல் பஸ் ஏறினேன். ஒருவாரம் கழிந்த பிறகு மாவட்ட நீதிமன்றத்தில் அருகில் ஒரு சைக்கிள் கடையை சொந்தத்தில் ஆரம்பித்தேன். சைக்கிளுக்கு ஏதாவது கேடு உண்டாகும் சூழ்நிலை உண்டானால், அதைச் சரி செய்வது எப்படி என்ற விஷயத்தை நான் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால், பழைய சைக்கிள்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றைப் புதிய சைக்கிள்களைப் போல மாற்றி வாடகைக்கு விட்டேன். கேடு உண்டாகக்கூடிய சைக்கிள்களைக் கொண்டு வந்தால், நான் அவற்றை ரிப்பேர் பண்ணிக் கொடுக்கவும் செய்வேன். இரவில் தங்குவது கூட சைக்கிள் கடையில்தான். பக்கத்திலேயே ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கேதான் எனக்கு சாப்பாடு.
வேலை பளு மிகவும் அதிகமாக இருந்ததால் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் குளிப்பேன். குளிப்பதற்காக ஹோட்டலைத் தேடிச் செல்லும்போது, ஹோட்டல் உரிமையாளரின் மகள் சுசீலாதான் எனக்கு குளிப்பதற்காக நீர் மொண்டு கொடுப்பாள். அவளுக்கு வயது கிட்டத்தட்ட இருபது இருக்கும். நல்ல சதைப் பிடிப்பான உடம்பைக் கொண்டவள் அவள். தலையில் அடர்த்தியான கூந்தல் இருக்கும். என்னைக் கண்டுவிட்டால் போதும் தன்னுடைய தலையை நாணத்துடன் கவிழ்த்துக் கொள்வாள். சில நேரங்களில் கடைக் கண்ணால் என்னையே பார்ப்பாள். நீரை மொண்டு வைத்துவிட்டு, சோப்பை எடுத்து வைத்திருப்பாள். நான் குளித்து முடித்தவுடன், கண்ணாடியையும் சீப்பையும் என் முன்னால் வைத்துவிட்டு சற்று தள்ளி மறைவாக நின்றிருப்பாள். வானத்தைப் பார்த்தவாறு சில நேரங்களில் அவள் என்னைப் பார்த்து ஏதாவது கேட்பாள். நானும் வானத்தைப் பார்த்தவாறு அவளுக்கு ஏதாவது பதில் சொல்வேன். அதற்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்தவாறு சிரித்துக் கொள்வோம். ஆனால், இப்படி அவளையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கவோ, அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கவோ, அவளுடன் பேசிக் கொண்டிருக்கவோ நேரம் எங்கே இருக்கிறது? குளித்து முடித்து, தலை முடியை வாரி விட்டால், நான் அங்கேயிருந்து கிளம்பி சைக்கிள் கடைக்கு வந்து விடுவேன்.
சைக்கிள்களை வாடகைக்கு விடுவது, ஒவ்வொரு சைக்கிளும் எடுக்கப்பட்ட நேரத்தையும் சைக்கிளை எடுத்த ஆளின் முகவரியையும் ஒரு நோட்டில் எழுதி வைப்பது, சைக்கிள்களைத் திருப்பிக் கொண்டு வந்தபோது அதில் ஏதாவது கோளாறு இருந்தால், அதை மீண்டும் சரிபண்ணுவதற்காக அவர்களிடம் ஏதாவது காசு கேட்டு வாங்குவது, கேடுகள் ஏதாவது இருக்கும் சைக்கிள்களை யாராவது கொண்டு வந்தால், அதைச் சரி செய்து கொடுத்து அதற்கான காசை வாங்குவது - இப்படி தொடர்ந்து வேலைகள் பொழுது புலர்வது முதல் நள்ளிரவு வரை இருந்துகொண்டே இருக்கும். இதற்கிடையில் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போவோரில் சிலர் பயங்கரமாக சட்டம் பேசக் கூடியவர்களாகவும், தில்லுமுல்லு செய்யக் கூடிய மனிதர்களாகவும் இருப்பார்கள். இந்த மாதிரியான ஆட்களிடம் சண்டை போட்டு காசை வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இந்த வேலைகளுக்கு இடையில் நான் ஹோட்டல்காரனின் மகளைப் பற்றியும் மீனாட்சியைப் பற்றியும் மனதில் அசை போட்டுப் பார்ப்பேன். அவர்களைப் பார்க்க வேண்டுமென்றும், அவர்களுடன் பேச வேண்டுமென்றும் ஆசை உண்டாகும். ஆனால், என்னால் என்ன செய்ய முடியும்? அதற்கு நேரம் கிடைக்க வேண்டாமா? சைக்கிளை வாடகைக்கு எடுப்பதற்கு எப்போது ஆட்கள் வருவார்கள் என்றே கூற முடியாதே. வாடகைக்கு எடுத்த சைக்கிள்களை எப்போது திருப்பிக் கொண்டு வருவார்கள் என்பதையும் சரியாகக் கூற முடியாதே. ஏதாவது கோளாறு இருக்கும் சைக்கிளை யாராவது கொண்டு வந்து, நான் அந்த நேரத்தில் கடையில் இல்லாமல் போனால், வேறு கடையைத் தேடி அவர்கள் போய் விட மாட்டார்களா? என் மனதில் காதல் என்ற உணர்வு அரும்பி ஜ்வாலை விட்டு எரிந்தாலும், நான் அதை முழுமையாக அடக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.
ஒவ்வொரு நாள் காலையிலும் ஒன்பது மணி ஆகிறபோது ஒரு இளம்பெண் என்னுடைய சைக்கிள் கடையைத் தாண்டி போவாள். மாநிறத்தைக் கொண்டவள் அவள். அளவான உடலமைப்பு. முகத்தில் பவுடர் பூசியிருப்பாள். நெற்றியில் சாந்துப்பொட்டு இருக்கும். கூந்தலில் முல்லைப் பூ சூடியிருப்பாள். உடம்போடு ஒட்டிக்கிடக்கும் புடவையும் ப்ளவ்ஸும் அணிந்து, காலில் செருப்புகளை அணிந்து கொண்டு அவள் நடந்து போவதைப் பார்க்கலாம். சாயங்காலம் ஐந்தரை மணி ஆகிறபோது, அவள் திரும்பி வருவதையும் பார்க்கலாம். தலையை லேசாக குனிந்தவாறு, இருபக்கங்களிலும் பார்க்காமல், மெதுவாக தயங்கித் தயங்கி அவள் நடந்து போய்க் கொண்டிருப்பாள். எனக்கு அவளைப் பார்த்த நாள் முதல் மனதிற்குள் இனம் புரியாத ஒரு வகையான இன்ப உணர்வு தோன்றியதென்னவோ உண்மை. அந்த உணர்வு நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே இருந்தது.
நான் மட்டுமல்ல... வேறு பலரும் கூட அவளைப் பார்ப்பதுண்டு. அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சில இளைஞர்கள் சாலையோரத்தில் இங்குமங்குமாய் நின்றிருப்பார்கள். சிலர் அவளுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். என்னுடைய சைக்கிள் கடைக்கு வரக் கூடிய சிலரிடம் விசாரித்துப் பார்த்ததில் அவளைப் பற்றிய சில விவரங்கள் எனக்குத் தெரிய வந்தன. அவள் அரசாங்க அலுவலகமொன்றில் டைப்பிஸ்ட்டாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் பெயர் கமலம்.