காதலிக்க நேரமில்லை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6398
அவனுடைய வாய் முழுமையாக வற்றிப் போனதால் 'காசு' என்று கூறுவதற்குப் பதிலாக "காது" என்று கூறினான். அடுத்த நிமிடம் கையை நீட்டினான். அவள் அவனுடைய கையில் காசைத் தந்தாள். அவ்வளவுதான் - நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கைகளில் இருந்து காசு கீழே விழுந்தது. "என்ன, கை இந்த அளவுக்கு நடுங்குது?" - அவள் அவனிடம் கேட்டாள். கீழே விழுந்த காசை எடுத்து மீண்டும் அவனுடைய கையில் தந்தாள். அதை வாங்கியது தான் தாமதம் அவன் என் கடையை நோக்கி ஓடி வந்துவிட்டான். "என்ன, உன் கடிதத்தை அவளின் கையில் தந்தாச்சா?" என்று நான் அவனைப் பார்த்து கேட்டேன். "முதல்ல குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்க" என்றான் அவன். அருகில் இருந்த மரப் பெட்டியின் மேல் அமர்ந்த அவனுக்கு நான் நீர் மொண்டு தர, அவன் படு வேகமாக அதைக் குடித்தான். வெற்றிலையும் புகையிலையும் தருவதற்காக நான் பின்பக்கமாய் சென்றபோது அவள் கேட்டாள். "காசு வாங்குறதுக்கு அந்த ஆள் யார்?" என்று. "அவன் ஒரு வாத நோய் பிடிச்ச ஆள்" என்று பொய் சொன்னேன்.
சைக்கிள் கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த போதே என் மனதிற்குள் நான் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தேன். அது சொந்தத்தில் ஒரு சைக்கிள் கடை கட்டாயம் வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக கையில் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவையும் நான் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வைத்தேன். ஒரு நிமிடத்தைக் கூட வீண் செய்யாமல் நான் பணம் சம்பாதிப்பதிலேயே என்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டேன். இருந்தாலும் சைக்கிள் கடையைச் சொந்தத்தில் ஆரம்பிக்கும் அளவிற்கு என்னிடம் பணம் சேரவில்லை. கடைசியில் நான் தீர்மானித்தேன் - பாறேலை எப்படியாவது கைக்குள் போட்டு, இந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்று. இந்தச் சிந்தனை வந்தபிறகு நான் பாறேலுடன் மேலும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினேன். அவன் மீது மீனாட்சிக்கு காதல் இருக்கிறது என்றும், அவளுடன் அவன் அன்று சரியாகப் பேசாததால், அவன் மீது அவளுக்குக் கோபமும், வருத்தமும் இருக்கிறது என்றும், இதேமாதிரி மேலும் பல பொய்களை அவனிடம் அவிழ்த்து விட்டேன். அதே சமயம் மீனாட்சியின் தந்தை பயங்கரமான மனிதன் என்றும், கண்டபடி பேசக் கூடியவன். இந்த விஷயம் தெரிந்தால் அவன் அவளைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அதனால் கொஞ்ச நாட்களுக்கு மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நான் எல்லா விஷயங்களையும் கட்டாயம் சரிபண்ணித் தருகிறேன் என்றும் அவனிடம் சொன்னேன். இது போதாதா? அவன் நானே கதி என்று இருக்க ஆரம்பித்து விட்டான்.
ஒரு நாள் அவனைப் பார்த்து சொன்னேன் -"நான் இந்த நகரத்தை விட்டு போகப் போகிறேன்" என்று. எனக்கு முன்னூறு ரூபாய் கடன் இருக்கிறதென்றும், கடன் கொடுத்த ஆள் என் மீது புகார் பண்ணி இருக்கிறானென்றும், மிக விரைவிலேயே என்னை போலீஸ் வந்து கைது செய்யப் போகிறதென்றும், என்னுடைய வெற்றிலைப் பாக்குக் கடையை கடன் தொகைக்காக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்றும் நான் என் இஷ்டப்படி அவனிடம் பொய் சொன்னேன். அதைக் கேட்டு ஒருமாதிரி ஆகிவிட்டான் பாறேல். என்னை வருத்தத்துடன் பார்த்தான். என்னை போலீஸ் கைது செய்வதைப் பற்றியோ, என்னுடைய கடையை நான் வாங்கிய கடனுக்காக அவர்கள் ஜப்தி செய்வதைப் பற்றியோ, அவன் வருத்தப்படவில்லை என்பது எனக்குத் தெரியாதா என்ன? அவனுக்கிருந்த ஒரே பயம் நான் இல்லாவிட்டால், அவனுடைய காதல் கைகூடாமல் போய் விடுமே! அது முழுமையாக பாதிக்கப்பட்டு விடுமே என்பதைப் பற்றி மட்டும்தான். பிறகென்ன? நான் மனதிற்குள் நினைத்தது மாதிரியே அவன் நான் வாங்கிய கடன் தொகையை தானே தருவதாகச் சொன்னான்.
'புன்னகை' மீது எனக்கு உண்மையாகவே காதல் இருந்தது. ஆனால், அவளுடன் பேசிக் கொண்டிருக்கவோ, அவளிடம் நான் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தவோ எனக்கு நேரமில்லை. அப்படியே காதல் படிப்படியாக வளரும் பட்சம், அவளை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதும் எனக்குத் தெரியும். எனக்குப் போதும் என்று எப்போது தோன்றுகிறதோ, அதுவரை விடாமல் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றும், அதற்குப் பிறகுதான் திருமணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியும் என்றும் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்திருந்தேன். அப்படி நடக்கும் திருமணம் நிச்சயம் ஒரு காதல் திருமணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் என்னுடைய தீர்மானமாக இருந்தது. நான் மிகப் பெரிய பணக்காரனாக மாறுகிறபோது, மீனாட்சியைவிட இன்னும் பல மடங்கு அழகும், படிப்பும் கொண்ட ஒரு இளம்பெண்ணை சர்வ சாதாரணமாக என்னால் காதலிக்க முடியும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது. அதனால் மீனாட்சி மீது நான் கொண்ட காதலை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
நான் கேட்ட பணத்தை எப்படியோ பாறேல் தயார் பண்ணிக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் கையிலிருந்து பணத்தை வாங்கிய நான், அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தேன். மீனாட்சி அவனுக்கு எழுதிய காதல் கடிதம் அதுவென்றும், அவனிடம் கொடுக்கச் சொல்லி மீனாட்சி என்னிடம் தந்தாளென்றும் சொன்னேன். காதலைப் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அது எல்லாவற்றையும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தேன். "காதல் நதி பாய்ந்தோட வேண்டுமென்றால், அது பலவித தடைகளையும் தாண்டித்தான் வரவேண்டும்" என்று அதில் தத்துவத்தையெல்லாம் உதிர்த்திருந்தேன். என் வழக்கமான கையெழுத்தை நான் சற்று மாற்றி எழுதியிருந்தேன். அவன் கடையில் வைத்தே முழு கடிதத்தையும் படித்து முடித்தான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. அப்போதே நான் நினைத்தது நடந்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். என்மேல் உள்ள வழக்கு விஷயமாக நான் இரண்டு நாட்களுக்கு நீதிமன்றம் வரை போய்வர வேண்டுமென்றும், எல்லா வேலைகளும் முடித்து வந்த பிறகு அவன் தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மீனாட்சியைச் சந்தித்துப் பேச நான் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவனிடம் கூறினேன். தன்னைப் பற்றி நினைத்து நினைத்து மீனாட்சி மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாளென்றும்; தனியாக தான் அவளைச் சந்திக்கும் நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு மேல் தள்ளிப் போடக் கூடாதென்றும் அவன் என்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். நான் அதற்குச் சரியென்று சம்மதித்தேன்.