Lekha Books

A+ A A-

ஆரூடம் - Page 8

aaruudam

அதைக் கேட்டு உண்ணிக்கு சிரிப்பு வருகிறது.

இந்திராவுடன் சேர்ந்து கோபாலன் நாயர் நடக்கிறார்.

வீட்டின் ஒரு பக்கத்தில் இந்திரா நின்றவாறு:

"அங்கே பார்த்தீங்களா என்ன சத்தமும் ஆர்ப்பாட்டமும்னு! இந்த மாதிரி சத்தமே இருக்கக்கூடாதுன்னுதான் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் இந்த இடத்தைத் தேடி ராஜேஷோட அப்பா வர தீர்மானிச்சதே..."

கோபாலன் நாயர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

இந்திரா:   அவளைப் பார்த்து எல்லோருக்கும் பயமா என்ன? இங்கேதான் அவ இருக்கணும்னு சட்டம் ஏதாவது இருக்கா என்ன?

கோபாலன் நாயர் சிரிக்க முயற்சிக்கிறார்.

இந்திரா:   பகல்லதான் இப்படித்தான்னா ராத்திரியிலயும் ஒரே பிரச்னையா இருக்கு. இவளை முதல்ல விரட்டி விட்டாத்தான் சரியா இருக்கும்.

கோபாலன் நாயர்:    கண்டங்கோரன்... அவனோட அப்பா... மூணு நாலு தலைமுறையாகவே இவங்க இங்கேதான் வேலை செஞ்சிக்கிட்டு வர்றாங்க.

இந்திரா:   வேற எங்கேயாவது போகட்டும்.

கோபாலன் நாயர்:    அந்தக் காலத்துல மாதிரி அவ்வளவு இலேசா இதை செஞ்சிட முடியாது. வேலை வெட்டி இல்லாத பசங்க பலரும் இப்போ அரசியல் கட்சிகள்ல இருக்காங்க. ஏன் அந்த அளவுக்கு போகணும்? சாயங்கால நேரத்துல நமச்சிவாயம் சொல்ல வேண்டிய நேரத்துல இப்போ சின்னப் பிள்ளைங்க கூட சிந்தாபாத்துல்ல சொல்லுது!

உண்ணியின் முகபாவம், கையில் இருந்த காற்றாடியை ஊதி ஓட விட முயற்சிக்கும் உண்ணிக்கு, கோபாலன் நாயர் பேசிய விதம் பிடிக்கிறது.

இந்திரா:   வேற எங்கேயாவது இடம் தரவேண்டியதுதான். சட்டம் அது இதுன்னு பேசுறது சரியா இருக்காது. மரியாதையா போக முடியுமான்னு கேளுங்க. இல்லாட்டி...

கோபாலன் நாயர் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

காற்றாடியை ஓட விட்டவாறு முன்னால் வந்து நிற்கிறான் உண்ணி. கோவிலில் பூஜை செய்யும் நம்பூதிரி தயங்கியவாறு சற்று தூரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து-

கோபாலன் நாயர்:    வாங்க நம்பூதிரி... இவர்தான் நம்ம கோயில்ல பூஜை செய்றவரு...

நம்பூதிரி அருகில் வந்து இலையில் கட்டியிருக்கும் பூவையும் பிரசாதத்தையும் இந்திராவிடம் தருகிறார். இந்திரா அதை வாங்கியதை உண்ணி பார்க்க, நம்பூதிரி அவனிடமும் தருகிறார்.

நம்பூதிரி:  மூணு நேரமும் பூஜை இருக்கு. இதுவரை ஒரு நாள்கூட நின்னது இல்ல. எல்லாம் கடவுளோட அருள். நீங்க ஒருநாள் கோயிலுக்கு வரணும்.

இந்திரா:   (முன்பு பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மாற்றாமல்)சரி... தேவைப்பட்டால் ஒரு வக்கீலைப் பார்த்து பேசுங்க. (முக பாவத்தை சிரித்தவாறு) கட்டாயம் வர்றேன்... அங்கே நான் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், வெள்ளிக் கிழமையும் கட்டாயம் கோயிலுக்குப் போவேன்.

நம்பூதிரி அந்த இடத்தை விட்டு நீங்கிய பிறகு, கோபாலன் நாயரும் இந்திராவும் மெதுவான குரலில் ஏதோ பேச முயற்சிக்க, உண்ணி அவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கிறான். பிறகு என்ன நினைத்தானோ, காற்றாடியைப் பறக்க விட்டவாறு விமானம் கிளம்புகிற ஒலியை வாயால் உண்டாக்கியவாறு அவன் வீட்டிற்குள் ஓடுகிறான்.

18

காமிக் புத்தகத்தில் ஒரு வீர சாகச படம்.

உண்ணியின் அறை.

காமிக் புத்தகங்கள் மூன்று, நான்கு விரிக்கப்பட்டு கிடக்கின்றன. உண்ணி ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்து பார்க்கிறான். பல தடவை அவன் படித்து ரசித்த புத்தகம் தான் என்றாலும், இப்போதும் அதன் மீது அவன் கொண்ட ஆர்வம் குறைந்தபாடில்லை.

அப்போது வெளியே- தூரத்தில் செண்டை ஒலி கேட்கிறது. அவன் காதுகளைத் தீட்டிக் கொண்டு அதைக் கேட்கிறான்.

தாயின் குரல்:   "ஸ்விட்ச் உடைஞ்சு போயிருக்கு. எப்போ வேணும்னாலும் ஷாக் அடிக்காதா?"

இந்திராவும் எலெக்ட்ரீஷியன் இளைஞனும் வாசலில் நின்றிருக்கிறார்கள்.

இந்திரா:   இதுக்கு ஷேட் கிடையாது. பையன் படுக்குற அறை. ஒரு சின்ன பெட்ரூம் விளக்கு வேணும்.

எலெக்ட்ரீஷியன்: அதை வாங்கணும்னா திருச்சூருக்குத்தான் போகணும்.

அவர்கள் வெளியே போகிறார்கள். உண்ணி புத்தகம் படிப்பதைத் தொடர்கிறான். செண்டை ஒலி மிகவும் அருகில் கேட்கிறது.

19

வாசலில் செண்டை ஒலிக்கேற்ப ஆடுகிறார்கள். உண்ணியும் வர்மாவும் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்ணியின் முழு கவனமும் ஆடும் மனிதனின் மீதே இருக்கிறது. ஆடிக் கொண்டிருக்கும் மனிதர் கையால் உண்ணியை நோக்கி சைகை செய்தவாறு ஆடுகிறான்.

வீட்டிற்குள்ளிருந்து குறிப்பு எழுதிய பேப்பருடன் வெளியே வருகிறான் எலெக்ட்ரீஷியன். அவனுடன் இந்திராவும் வருகிறாள். எலெக்ட்ரீஷியன் வெளியே செல்கிறான்.

ஆடிக் கொண்டிருப்பவர்கள் இந்திராவைப் பார்த்ததும் புதிதாக ஆடத் தொடங்குகிறார்கள்.

இந்திரா:   இவுங்களுக்கு என்ன கொடுக்கணும்? ஒரே சத்தம்... தாங்க முடியல (வர்மாவுக்கு நெருக்கமாக வந்து) போதும்னு நிறுத்தச் சொல்லுங்க. காதே செவிடாயிடும் போல இருக்கு.

வர்மா அவள் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ஆடி முடித்தவுடன், அவன் அவர்கள் கையில் இரண்டு ரூபாய் எடுத்து தருகிறான். 

உண்ணி:  (ஆடும் மனிதர்களைக் காட்டி) இவரோட கண் எங்கே அப்பா? கண்ணு...

அந்த மனிதன் முகமூடியைக் கழற்றி தன்னுடைய முகத்தைக் காட்டுகிறான். உண்ணிக்கு அவனுடைய செயல் மிகவும் பிடிக்கிறது.

வர்மா:    (மனைவியிடம்) ரிச்சுவல் ஆர்ட்ஸ். நம்மோட பாரம்பரிய கலைகளில் ஒண்ணு. என்னோட தீஸிஸில் இது ஒரு சேப்டர். தெரியும்ல?

இந்திரா:   டி.வி.யில பாத்திருக்கேன்னு நினைக்கிறேன்.

உண்ணி:  அப்பா, நானும் வர்றேன்.

இந்திரா:   வேண்டாம். அப்பா வர்றப்போ ஒருவேளை தாமதம் ஆனாலும் ஆகும்.

வர்மா:    (வியப்புடன்) நான் சும்மா நடந்து போயிட்டு வரலாம்னு பார்க்குறேன்.

இந்திரா:   (கிண்டலை சாமர்த்தியாக மூடிய புன்னகையுடன்) நண்பர்களோட, தெரிஞ்ச ஆளுங்களோட வீடுகளுக்குப் போறப்போ ஒருவேளை நேரம் ஆகலாம். அதுனாலதான் சொல்றேன். எப்படி இருந்தாலும் தாமதம் ஆகுமா இல்லியா?

வர்மா:    (அவளை அமைதியாகப் பார்த்தவாறு) ப்ளீஸ்... இங்கேயும் ஆரம்பிச்சிடாதே.

இந்திரா:   (உண்ணியிடம்) உண்ணி... இங்கே வா. அந்த புள்ளி போட்ட சட்டையை எடுத்து போட்டுக்கோ. தலையை நல்லா வாரிக்கோ.

வர்மா வாசலில் நின்றிருக்கிறான். உள்ளே ஓடிய உண்ணி அதே வேகத்தில் கால்களில் செருப்பை அணிந்து, கையில் காற்றாடியுடன் வெளியே வந்து தன் தந்தையுடன் சேர்ந்து நடக்க ஆரம்பிக்கும்போது-

இந்திரா:   ராஜேஷ்... புட் ஆன் யுவர் ஷூஸ்.

அதைக் கேட்காமலே உண்ணி தன் தந்தையுடன் சேர்ந்து நடக்கிறான்.

20

கிராமத்துப் பாதை.

எதிரில் வந்து கொண்டிருக்கும் கால்நடைகளுக்கு வழிவிட்டு வர்மாவும், உண்ணியும் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறார்கள். ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஒரு பெரிய எருமை மீது அமர்ந்து சவாரி செய்து கொண்டிருக்கிறான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel