Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஆரூடம் - Page 10

aaruudam

அவன் ஒரு துண்டு அப்பத்தை எடுத்து அவள் கையில் தந்துவிட்டு, ஆற்றையே பார்த்தவாறு நின்றிருக்கிறான்.

உண்ணி:  உனக்கு வலை போட்டு மீன் பிடிக்க தெரியுமா?

பாரு: (சிரித்தவாறு)ம்... ம்... நான் தூண்டில் போடுவேன். சில நேரத்துல நெறைய மீன் கிடைக்கும்.

தன் தந்தை ஆற்றையொட்டி நடப்பதை உண்ணி பார்க்கிறான். இங்கே தான் இருப்பது தன் தந்தைக்குத் தெரியும். அதனால் இங்கேயே நின்றிருப்பதுதான் சரி என்று அவன் தீர்மானிக்கிறான்.

உண்ணியின் பார்வையில் தூரத்தில் ஒரு எல்லையில் நின்றிருக்கும் வர்மா.

23

ர்மா ஆற்றையே பார்த்தவாறு நின்றிருக்கிறான். அமைதி தவழும் கிராம சூழ்நிலை அவன் மனதில் கடந்த கால நினைவுகளை உண்டாக்கியிருக்கலாம். அவன் மனதில் வருத்தம் கலந்த இனிய நினைவுகள் அலைமோதுகின்றன.

தூரத்தில் மறுகரையில் இருந்து ஒரு நாடோடி பாடல் ஒலிக்கிறது.

பாரு கட்டம் போட்டு விளையாடுவதை உண்ணி பார்த்தவாறு நின்றிருக்கிறான். உண்ணியும் அவளைப் பின்பற்றி ஒரு காலில் கட்டங்களைத் தாண்டி, நொண்டி விளையாட்டு விளையாடுகிறான்.

கடந்து போகும் பாணர்கள் கூட்டத்தில் இருக்கும் வயதான ஆள்:

"நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்!"

வர்மாவை அவன் வாழ்த்துகிறான்.

ஹரிஜன இனத்தைச் சேர்ந்த புராதன கலைஞர்கள் கூட்டம் ஒன்று தன் தந்தையைச் சூழ்ந்து நிற்பதை இங்கிருந்தே உண்ணி பார்க்கிறான். தன் தந்தை அவர்களிடமிருந்த உடுக்கையை வாங்கி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த உண்ணியின் முகத்தில் இனம் புரியாத ஆர்வம் படர்கிறது.

வர்மா உடுக்கையைக் கையில் வைத்து மெதுவாக தட்டி பார்க்கிறான். ஒரு பாடலை வர்மா பாடி பார்க்கிறான்.

சந்தியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலுக்கு ஆற்றின் அழகு மேலும் மெருகு சேர்க்கிறது, பாடலின் முடிவில் தூரத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நீலி. தூரத்தில் நின்று கொண்டிருக்கும் நீலியை வர்மா கவனிக்கவில்லை. ஆனால், உண்ணி பார்க்கிறான்.

24

ரவு நேரம்.

உண்ணியின் படுக்கையறை.

வேலைக்காரி படுக்கையைச் சரியாக விரித்துவிட்டு, வெளியே போனவுடன், உண்ணி சட்டையையும், ட்ரவுசரையும் மாற்றுகிறான். அவனின் தாய் பைஜாமாவை அவனுக்கு அணிவிக்கிறாள்.

இந்திரா:   ஆன்ட்டியோட பேர் என்னன்னு அப்பா சொல்லலியா?

உண்ணி:  ஊஹூம்.

இந்திரா:   அப்பாவுக்கு அப்பம் கொடுத்தாங்களா?

உண்ணி:  ஊஹூம்.

இந்திரா:   அந்த ஆன்ட்டி வயசான ஆன்ட்டியா? இல்லாட்டி வயசு குறைவான ஆன்ட்டியா?

உண்ணி:  (சிந்தித்து) பாபுவோட மம்மி மாதிரி இருந்தாங்க அந்த ஆன்ட்டி. புடவை கட்டியிருக்கல. முண்டு... ஆன்ட்டியோட வீட்டுக்கு என்னை விளையாட வரச் சொன்னாங்க.

இந்திரா அவனுடைய ட்ரவுசரையும், சட்டையையும் மடித்து கட்டிலின் கால்பகுதியில் வைத்துவிட்டு, நிமிர்ந்து நின்றவாறு, என்னவோ சிந்தனையில் ஆழ்கிறாள்.

இந்திரா:   அப்பாக்கிட்ட அதுக்குப் பிறகு ஆன்ட்டி என்ன சொன்னாங்க?

உண்ணி:  (அம்மாவின் இந்தக் குறுக்குக் கேள்விகள் மேல் வெறுப்பு ஏற்பட்டு) என்னவோ சொன்னாங்க. ஆன்ட்டி வீட்டுல ஊஞ்சல் இருக்கு. மம்மி, வர்றீங்களா?

இந்திரா:   (தன்னுடைய பாவத்தை இலேசாக மாற்றிக் கொண்டு, சற்று கடுமையான குரலில்) என்னை யாரும் கூப்பிட மாட்டாங்க. யாரும் கூப்பிடவும் வேண்டாம்.

சொல்லிவிட்டு வெளியே நடக்கிறாள். உண்ணி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறான்.

25

காலை நேரம்.

வர்மாவின் புத்தகம் படிக்கும் அறை. பரணில் பயன்படுத்தாமல் கிடந்த பழைய, நிறம் மாறிப்போன புத்தகங்கள் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. அவற்றை எடுத்து பார்த்தவாறு அவசியம் தேவை என்பதை மட்டும் ஒரு பக்கம் வர்மா எடுத்து வைக்கிறான். அவனின் தந்தை காலத்திலிருந்தே சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் அவை. புத்தகங்களுடன் ஓலைச் சுவடிகளும் இருக்கின்றன. உண்ணி அருகில் வருகிறான். புத்தகத்தில் ஒன்றை எடுத்துப் பார்த்துவிட்டு அங்கேயே வைக்கும்போது சிரித்தவாறு வர்மா:

"நீ படிக்கிற மாதிரி புத்தகம் ஒண்ணுமில்லடா, உண்ணி"

உண்ணி அறைக்குள்ளேயே ஒரு சுற்றி சுற்றிவிட்டு, வெளியே ஓடுகிறான்.

வெளியே வந்த உண்ணி பெரிய படுக்கையறையின் வாசலில் நின்று பார்க்கும்போது, மேஜைமேல் ஏறிநின்று எலெக்ட்ரீஷியன் சுவரில் வயர்களை மாட்டிக் கொண்டிருக்கிறான். அவனின் தாய் அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாள். எலெக்ட்ரீஷியன் தரையில் போட்ட ப்ளாஸ்டிக் வயர், டெஸ்ட்டர், மற்ற பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்த உண்ணி குனிந்து எதையோ எடுக்க முயல-

இந்திரா:   நோ, டோன்ட் ப்ளே வித் தேட்.

உண்ணி எடுத்த பொருளை அங்கேயே வைக்கிறான். பிறகு வெளியே செல்கிறான்.

வேலிக்கு அருகில் நின்று உண்ணி பார்க்கிறான். நீலி குடிசைக்கு முன்னால் அமர்ந்து பனையோலைகளால் கூடை செய்து கொண்டிருக்கிறாள்.

உண்ணி வீட்டுப் பக்கமிருந்து தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று பார்க்கிறான். இல்லை- யாரும் பார்க்கவில்லை. அவன் சாய்ந்து கிடக்கும் வேலியை மாற்ற முயலும் போது, ஓசையைக் கேட்டு, நீலி திரும்பிப் பார்க்கிறாள். உண்ணியைப் பார்த்து புன்னகைத்தாவறு-

"அய்யோ... கையில் முள்ளு குத்திடப் போகுது. நான் வேலியைத் திறந்து விடுறேன்..."

அவள் அருகில் வந்து வேலியை மாற்றி அவன் உள்ளே வரும்படி செய்கிறாள்.

உண்ணியும் நீலியும் குடிசையின் வாசலை நோக்கி நடக்கும் போது நீலி:

"இன்னிக்கு ஆத்துல குளிக்க போகலியா?"

உண்ணி:  ஊஹூம்...

நீலி: விளையாடுறதுக்கு யாரும் துணைக்கு இல்லாமப் பொழுதே போக மாட்டேங்குது. இல்லே?

உண்ணி பாதி வரை பின்னப்பட்ட கூடையை எடுத்து பார்க்கிறான்.

நீலி: இந்தக் கூடை வேலை முடிஞ்ச பிறகு உண்ணி தம்புரான், உங்களுக்கு ஒரு கிளிக்கூடு செஞ்சு தர்றேன்...

உண்ணி:  கிளி எங்கே கிடைக்கும்?

நீலி: கிளி வேணுமா? நாம பிடிச்சிட்டாப் போகுது. (சிறிது நேரம் என்னவோ யோசனையில் ஆழ்ந்துவட்டு பாதி உண்ணியிடமும் பாதி தன்னிடமும் என்பது மாதிரி) உட்கார்ந்து கொஞ்சம் வேலை செஞ்சா கூட தலைவலி வந்துருது... முன்னாடி மாதிரி ஓடி நடந்து என்னால வேலை செய்ய முடியல...

உண்ணி:  உடம்புக்கு சரியில்லையா?

நீலி: ம்...

உண்ணி:  டாக்டரை அழைச்சுப் பார்த்தா என்ன?

அவனின் கள்ளங்கபடமில்லாதகேள்வியைக் கேட்டு நீலி மெதுவாக சிரித்துக் கொள்கிறாள்.

நீலி: சரியாப் போச்சு! (விஷயத்தை மாற்றுவதற்காக முகத்தில் பிரகாசத்தை வரவழைத்துக் கொண்டு) உண்ணி தம்புரான், உங்களுக்கு என்ன வேணும்? (சிறிது யோசித்தவாறு) வெள்ளரிக்காய் உங்களுக்குப் பிடிக்குமா?

உண்ணி என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் விழிக்கிறான்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version