Category: சினிமா Published Date Written by சுரா Hits: 6816
பல்வேறு குரல்களில் ‘குட்பை’ ‘குட்பை’ என்ற வார்த்தைகள். ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கும் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் ட்ரெயினில் அமர்ந்திருக்கும் பயணிகளைப் பார்த்துக் கைகளை ஆட்டியவாறு ‘குட்பை’ ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கிக் கொண்டிருக்கும் ட்ரெயினில் இருந்து பார்க்கும் போது ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் தெரிகிறது. (Subjective Shot)
ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கும் வண்டியிலிருந்து தெரியும் பெரிய நகரம். அந்தக் காட்சிகளின் பின்புலத்தில் படத்தின் ‘டைட்டில்கள்’.
கம்பார்ட்மெண்டில் தன்னுடைய பெட்டியைத் திறந்து காமிக் புத்தகங்களை எடுத்து பிரிக்கிறான் ராஜேஷ். வெளியே காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வம் குறைந்தவுடன் புத்தகத்தில் அவனின் ஆர்வம் செல்கிறது.
கம்பார்ட்மெண்டில் வர்மா, இந்திரா ஆகியோரும் இருக்கிறார்கள். இந்திரா தலையைச் சாய்த்தவாறு, ஏதோ தலைவலி இருப்பதைப்போல உட்கார்ந்திருக்கிறாள்.
வர்மா தன்னுடைய மனைவியைப் பார்க்கிறான். அவள் அவனைப் பார்க்கவில்லை. பாதி கண்களை மூடிக் கொண்டு அவள் இருக்கிறாள்.
வர்மா: படிக்கிறதுக்கு ஒண்ணும் வாங்கல...
இந்திரா கவனிக்காமல் இருக்கிறாள்.
கணவனும், மனைவியும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். பின்புலத்தில் புகைவண்டியின் சத்தம்.
கம்பார்ட்மெண்டில் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் உண்ணி. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் தங்களின் சொந்த சிந்தனைகளில் மூழ்கிப் போயிருக்கும் வர்மாவும் இந்திராவும்.
பின்புலத்தில் புகைவண்டியின் கூக்குரல்.
தனித்தனி தீவு போல் அமர்ந்திருக்கும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேல் ‘டைட்டில்கள்’ முடிகின்றன.
வண்டியின் தொலைதூர காட்சி-
ஒரு கிராமப் பகுதியில் இருக்கும் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் புகைவண்டி.
வண்டியின் முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட். வண்டியில் அமர்ந்து வெளியே பார்த்தவாறு இருக்கும் உண்ணியின் பார்வையில் மாறிக் கொண்டிருக்கும் இயற்கைக் காட்சிகள்.
கம்பார்ட்மெண்டில் வர்மா, இந்திரா. இந்திரா படுத்திருக்கிறாள். உண்ணிக்கு நேர் எதிரில் அமர்ந்திருக்கும் வர்மா வெளியே பார்க்கிறான். தொடர்ந்து எதிர்பக்கம் திரும்பிப் படுத்திருக்கும் இந்திராவைக் கவனிக்கிறான்.
உண்ணி: அப்பா, ஆறு... ஆறு...!
வர்மா: ம்...
புகை வண்டியின் வேகம் குறைகிறது.
வர்மா எழுந்து விரிப்புகளை மடித்து வைக்கிறான். பிறகு இந்திராவை மெதுவாக அழைக்கிறான்.
“இங்கே பாரு... இந்திரா...”
இந்திரா அப்போது உறங்கிக் கொண்டிருக்கிறாள்.
அவன் அவளைத் தொட்டு அழைக்கிறான்.
“ஸ்டேஷன் வந்திருச்சு...”
உண்ணி: மம்மீ... ஆறு கடந்திடுச்சு...
இந்திரா எழுந்து அமர்கிறாள். களைப்புடன் தலைமுடியைச் சரி செய்து கால்களில் செருப்புகளை மாட்டிக் கொண்டு எழுந்து புடவையைச் சரி செய்கிறாள்.
இந்திரா: ராஜேஷ்... ஷூவைப் போட்டுக்கோ. கெட் ரெடி. இங்கே ஒண்ணு ரெண்டு நிமிஷங்கள்தான் வண்டி நிக்கும். (வர்மாவிடம்) லக்கேஜை இறக்குறதுக்கு நேரம் இருக்குமா?
வர்மா: நேரம் இருக்கும். நான் வாசல் பக்கத்துல எல்லா சாமான்களையும் எடுத்து வைக்கிறேன்.
அவன் லக்கேஜ்களை இருக்கைக்குக் கீழேயிருந்து எடுக்க ஆரம்பிக்கிறான்.
கிராமப் பகுதியில் இருக்கும் சிறு ஸ்டேஷனில் வண்டி மெதுவாக வந்து நிற்கிறது. சில பயணிகள் ஏறுகிறார்கள்.
அறுபது வயதை நெருங்கியிருக்கும் கோபாலன் நாயர் ஸ்டேஷனில் காத்து நிற்கிறார். அவருடன் உதவிக்கு வந்த ஆளும் தயாராக நிற்கிறான். எந்த பக்கம் பார்ப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்தவாறு நின்றிருக்க, இறங்கிக் கொண்டிருக்கும் வர்மாவைப் பார்த்து மன நிம்மதி அடைந்த கோபாலன் நாயர் உதவியாளரிடம், “இந்தா அங்கே” என்று விரலால் சுட்டிக் காட்டுகிறார். வேகமாக ஓடி கம்பார்ட்மெண்டை நெருங்கி நிற்கிறார்.
உண்ணியைப் பிடித்தவாறு கீழே இறங்கும் வர்மாவின் கையில் வாசலில் நின்றிருக்கும் இந்திரா ஒரு பெட்டியை நீட்டுகிறாள். அதை வாங்கி கீழே வைத்து விட்டு இந்திராவிடம் கோபாலன் நாயர்:
“எறங்குங்க... எறங்குங்க... நான் சாமான்களை எறக்கிக்குறேன்’ (உதவியாளரிடம்) எல்லாத்தையும் எடு... சீக்கிரம்...”
ப்ளாட்ஃபாரத்தில் இறங்கிய இந்திரா:
“மொத்தம் ஒன்பது லக்கேஜ்...”
கோபாலன் நாயர் சாமான்களை இறக்கியவாறு:
“எல்லாத்தையும் எறக்குன பிறகுதான் வண்டி கிளம்பும். (வர்மாவிடம்) நேரம் தாராளமா இருக்கு!”
இந்திரா: (ஒரு பெட்டியை வைக்கும்போது) மெதுவா... அதுல உடையிற சாமான்கள் இருக்கு. மெதுவா... (லக்கேஜ்களை விரலைக் கொண்டு எண்ணுகிறாள்)
உண்ணியும் வேகமாக எண்ணுகிறான்.
“ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவ் சிக்ஸ் ஸெவன் எய்ட் நைன் டென்... மம்மீ... டென்!”
இந்திரா: (மெதுவாக) ஷட்டப்!
இரண்டு பெரிய பெட்டிகளை கூலிக்காரனின் தலையில் ஏற்றிவிட்டு கையில் ஒரு குடையையும் சிறிய பெட்டியையும் பிடித்தவாறு கோபாலன் நாயர் இரண்டு சிறு பொருட்களை கையிலெடுக்கிறார். மீதி சாமான்கள் வர்மாவின் கையிலும் இந்திராவின் கையிலும் இருக்கின்றன.
கோபாலன் நாயர்: ம்... போகலாம்.
ப்ளாட்ஃபாரத்தில் ஆர்வத்துடன் எதையோ பார்க்கும் உண்ணி மெதுவாக நடக்கிறான். கூடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோழிகளையோ வேறு எதையோ ஆர்வத்துடன் அவன் பார்க்கிறான்.
இந்திரா: (கையைப் பிடித்து இழுத்தவாறு) நட...
ரெயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே நடந்து போய்க் கொண்டிருக்கும் கூட்டம்.
கோபாலன் நாயர் லக்கேஜைப் பற்றிய கவலைகள் தீர்ந்து அமைதியாகி விட்டதால், குசல விஷயத்தில் இறங்குகிறார்.
கோபாலன் நாயர்: (இந்திராவிடம்) பெரியவர் இறந்து விசேஷம் நடக்குறப்போ இங்கே பார்த்தது. நேரம் கிடைக்கிறப்போ ஒரு நாளாவது இங்கே வந்துட்டுப் போகலாமே?
வர்மா: (இந்திராவிடம்) கோபாலன் நாயர் இப்போ நம்மளோட கணக்குப் பிள்ளை மட்டுமில்ல... ஊருக்கு முக்கியமான ஆளும்கூட.
கோபாலன் நாயர்: (நடந்தவாறு) எல்லாம் அலங்கோலமா கிடக்குது. பாகம் பிரிச்சு வீட்டை எடுத்தப்பவே நான் சொன்னேன். ஏன்... எழுதக்கூட செஞ்சேன். வருஷத்துல பத்து நாளாவது இங்கே வந்து தங்கினா வீடும் நிலமும் நல்லா இருக்கும்னு (வேலையாளிடம்) வேகமா நட...
வர்மா: பத்து நாளென்ன பத்து நாளு... நிரந்தரமாவே இங்கே தங்கிட வேண்டியதுதான்.
கோபாலன் நாயர்: வர்றப்போ இப்படித்தான் சொல்வீங்க. நாலு நாள் ஆயிடுச்சுன்னா, ஊருக்குப் போகலாம்னு தோண ஆரம்பிச்சிடும்.
வர்மா: இனி போறதா இல்ல. கோபாலன் நாயர், நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன்.
கோபாலன் நாயர்: (வியப்புடன்) அப்படி ஒரு எண்ணம் எப்படி வந்துச்சு?
வர்மா: கொஞ்ச நாளாவே அப்படி செஞ்சிடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் தைரியமா வேலையை விட்டுட்டேன்.
கோபாலன் நாயர்: (இந்திராவிடம்) விளையாட்டுக்குச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். மூவாயிரமோ நாலாயிரமோ சம்பளம் வருதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே –